கலை சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. திரைப்படம் எப்போதும் கட்டளையிடுவதில்லை. சமூகத்திற்கு எது தேவை என்பதை நீங்கள் சித்தரிக்கிறீர்கள்.
-சோனம் கபூர்
அந்தந்த நிலத்துக்கென்று நம்பகங்கள் உண்டு. அவற்றைப் பெரும்பாலும் தகர்க்கிற துணிச்சல் திரைப்பட உருவாக்கங்களில் இருப்பதில்லை. படத்தின் பின்னால் இருக்கக்கூடிய வணிக நிர்ப்பந்தங்கள் அதன் சிறகுகளின்மீது கட்டப்படுகிற கற்களைப்போல் கனப்பவை. எல்லாருக்கும்தான் நினைத்த படங்களை எடுத்துவிடுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. அதைமீறி படம் வாய்த்தவர்களுக்கும் ஆயிரமாயிரம் தடைகள் இருந்தவண்ணமே ஒரு சினிமா நிகழும்.
காதலைப் போலவே நட்பும் அதீதமாக ஏற்றித்தரப்பட்ட புனிதங்களுடனே எப்போதும் படமாக்கப்பட்டு வருவது சினிமாவின் இயல்பு நட்பு என்பது ஒரு உணர்வு சாகசம். இயல்பு வாழ்க்கையில் நட்பு அதன் இல்லாச்சிறகுகள் உதிர்ந்து இருகால்களால் நடை போடுவது அதன் நிசம். சினிமாவில் நட்புக்குச் சிறகுகள் உண்டு. அதீதம் அதன் வானம்.
அடுத்துக் கெடுத்தல் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் உப்புத் துரோகம் ஆகியவை காலம் காலமாக உயிர் குடித்துச் செடி வளர்த்த பல கதைகள் இங்குண்டு. ஆனால் சொற்பமாகவே படங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஹானஸ்ட் ராஜின் கதை என்று சொல்வதைவிட வரதனின் கதை எனத் தொடங்குவதுதான் சிறப்பாக இருக்கும். அதுவே நிசமாகவும் அமையும்.
வரதன் தன் தந்தை வாங்கிய கடன்களை எப்படி அடைப்பதென்று தெரியாமல் திகைப்பவன். ஒரு வழியுமற்றவனுக்கு வாழ்வை முடித்துக் கொள்வது தானே வழியாக அமையும் அப்படித் தற்கொலையைத் தேடுகிற சமயத்தில் நானிருக்கிறேன் என்று அவனைக் காப்பாற்றுகிறான் அவனது நெடுங்கால நண்பன் ராஜ் எனும் பெயரிலான நேர்மையின் சின்னமாய் விளங்குகிற காரணத்தால் காக்கிச்சட்டைகளின் உலகத்தில் ஹானஸ்ட் ராஜ் என்று அழைக்கப்படுகிற நாயகன்.
ராஜின் அம்மாதான் பெறாத மகனாகவே வரதனைத் தேற்றுகிறாள். ராஜின் மனைவி புஷ்பாவுக்கு வரதன் உடன்பிறவாத அண்ணன். மெல்லத் தேறித் தன் பழைய பிரிண்டிங் ப்ரஸ் தொழிலில் மீண்டும் நுழையும் வரதன் இந்த முறை தோற்பதாயில்லை. அவனுக்குத் தெரியாமல் அவன் ப்ரஸ்ஸில் கள்ள நோட்டுக்களை அடிப்பதைத் தெரிந்து கொள்பவன் தானும் அதே தொழிலை செய்யத் தொடங்குகிறான். குறுகிய காலத்தில் தன் பழைய பின்புலத்திலிருந்து மீண்டு எழுகிறான். தற்போது அவனொரு பிரமுகன். ஐபிஎஸ் அதிகாரியாகத் திரும்பித் தன் குடும்பத்தோடு வருகிற ஹானஸ்ட் ராஜ் தன் நண்பன் செல்வந்தனாக மாறி இருப்பதை நினைத்து உண்மையிலேயே மகிழ்கிறான்.
சட்டவிரோதிக்கும் நேர்மைக்கும் முரண்படுவது இயல்புதானே தன் உயிரைக் காப்பாற்றியவன் என்றும் பாராமல் ராஜின் குடுபத்தை அழிக்கிறான் வரதன். ராஜ் நெடுங்காலம் கோமாவில் தான் யாரென்றே தெரியாமல் இருக்கிறான். அவனுடைய ஒரே நம்பிக்கை அவனது சிறுமகன். இந்த நிலையில் அவனுக்கு டாக்டர் அபிநயா உதவுகிறார். மீண்டெழும் ராஜ் வரதை அழித்துத் தன் மகன் பப்லூவோடு சேர்வது கதையின் நிறைபகுதி.
இசை, எடிடிங், ஒளிப்பதிவு ஆகிய மூன்றும் ஒரு படத்திற்குள் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு சிறப்பான உதாரணமாக இப்படத்தை சொல்லமுடியும். ரவி.கே.சந்திரனின் ஒளிப்பதிவு உள்ளும் புறமும் நிசத்தின் சாட்சியங்களாகவே பல காட்சிகளை வசீகரப்படுத்தின. தேவையற்ற ஒளியைக் குவித்தலைத் தன் படத்தின் ஒரு ஃப்ரேமில் கூட அனுமதிக்காத ரவி.கே.சந்திரனின் பிடிவாதம் இயல்பான இருளும் குன்றிய ஒளியுமாக ஒரு கவிதைபோலவே பல காட்சிகளை அமைத்திருந்தன. நெடியதொரு சண்டைக்காட்சிக்கு முன் பப்லூவும் விஜயகாந்தும் சேருகிற காட்சி ரவியின் கேமிராவுக்கு மட்டுமல்ல அனில் மல்நாடின் எடிட்டிங்குக்கும் சான்றுகளாயிற்று. மதுவின் வசனங்களும் கே.எஸ்.ரவியின் இயக்கமுமாக ஹானஸ்ட்ராஜ் எல்லோரையும் கவர்ந்தது. முக்கியமாக இப்படத்தின் கதைக்கலவை சொன்ன விதத்தாலும் காட்சியனுபவத்தை வித்யாசமாக்கித் தந்தது.
இளையராஜா இந்தப் படத்தின் பின்னணி இசையில் நட்பின் வலியை துரோகத்தின் வஞ்சகத்தை இயலாமையின் கேவலை பழியின் உக்கிரத்தை பாசத்தின் கண்மறை கணங்களை எல்லாம் மீட்டித் தந்தது. வானில் விடிவெள்ளி மின்னிடும் மின்னிடும் நேரம் என்ற ஒரு பாடல் அதற்குள் பலவிதமான இசை சங்கமித்தலை உணர்வுக்குழைதலை சம்பவக் கோர்வைகளை எல்லாம் பிரதிபலித்தது. இதனை வெவ்வேறு தொனியில் ஜானகியும் மனோவும் பாடிய வித்யாசமும் குறிப்பிடத்தக்கதாகிறது
தனக்கு வேறு வழியே இல்லை என்றாற் போலவே குற்ற உணர்வும் கெஞ்சுமொழியுமாக ஒரு இடமும் வேறு வழியே இல்லை நான் வாழ்ந்தாக என்னவேண்டுமானாலும் செய்வேன் என்றாற் போல் கொன்றழிக்கும் ஆவேசமாக அடுத்த இடமுமாக வரதன் என்ற முன்னாள் தோல்வியுற்றவனாகவும் இன்னாள் செல்வந்தனாகவும் நன்றிக்கடனை விடத் தன்னலம் மிக முக்கியம் என்ற அளவில் பொது நியாயங்களைத் திருத்தி எழுத முற்படுகிற தனக்குண்டான சாதகங்களைத் தீர்ப்பாக்கி விடுகிற உச்சபட்ச வஞ்சக மனிதனாக வரதனாக தேவன் இந்தப் படத்தில் அதுவரை யாரும் பார்த்திடாத பேருருவாய்த் தோற்றமளித்தார். ஆனஸ்ட்ராஜ் நிச்சயமாக ஒரு தேவன் படம்.
மேலோட்டமாகப் பார்த்தால் எளிதாகக் கடந்து விடக் கூடிய சாதாரணக் கதை. ஆனால் தேவன் மற்றும் விஜயகாந்த் எனும் இருவரின் கதாபாத்திரமாக்கல் அவற்றிற்கிடையேயான சமரசம் செய்துகொள்ள முடியாத முரண் அதன் பின்னதான கதாநியாயம் இவற்றால் ஹானஸ்ட் ராஜ் படம் தமிழின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகிறது.