நான் என்னவெல்லாம் கற்றுக்கொண்டேனோ அவற்றை திரைப்படங்களிலிருந்து தான் கற்றுக்கொண்டேன்.
-ஆட்ரே ஹெபர்ன்
ஏ.ஆர்.முருகதாஸ் தீனா, ரமணா மற்றும் கஜினி ஆகிய படங்களை வரிசையாக ஹிட் தந்தவர். அவர் எழுதி இயக்கிய துப்பாக்கி படம் ஆரம்பக் காட்சி முதல் படத்தின் முடிவுவரை விறுவிறுப்புக் குறையாமல் சென்று நிறையும் படம். விஜய் எல்லோர்க்கும் இனியவராக முன்வருவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த படமென்றும் சொல்லலாம்.
கதை என்ன?
ஜெகதீஷ் ஒரு ராணுவ வீரன். அதைத் தவிர தீவிரவாத எதிர்ப்புச் சங்கிலி ஒன்றின் ஊரறியா ரகசியக் கண்ணியும் அவன். விடுமுறைக்காக மும்பையிலிருக்கும் குடும்பத்தைக் காண வருபவன் திருமணத்துக்குப் பெண் பார்க்கும் படலம் பார்த்த பெண்ணை வேண்டாமென மறுப்பது அதன்பின் அவளையே விரும்புவது என ஒரு இழை அவனது காதலுக்கானது. அடுத்த இழைதான் முக்கியமே அது தற்செயலாக பஸ் ஒன்றில் பிக்பாக்கெட் திருடனைத் தேடித் துழாவுகையில் சம்மந்தமின்றி ஒருவன் தப்பி ஓடுகிறான். பர்ஸ் கிடைத்தப் பிறகு இவன் ஏன் ஓடுகிறான் என்று ஜெகதீஷ் துரத்துகிறான். சற்றைக்கெல்லாம் அந்தப் பஸ்ஸில் அந்த மனிதன் வைத்திருந்த பை வெடித்துப் பலரும் பலியாகின்றனர்.
அந்த மனிதன் போலீஸ் பிணையிலிருந்து மருத்துவமனையில் இரண்டொரு பேரைக் கொன்றுவிட்டுத் தப்புகிறான். அவனைக் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. அவனைப் பிடித்து வைத்திருக்கும் ஜெக்தீஷ் அவன் மூலமாக அவனுக்கு உதவிய மருத்துவமனை செக்யூரிடி அலுவலர் வீட்டுக்குச் சென்று தனக்கு உண்மை தெரிந்துவிட்டது என்று கூறி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறான். வீடு திரும்புகிறவன் தன்னிடம் பிடிபட்டவனிடமிருந்து கிடைக்கும் வெறும் புள்ளிகளாலான வரைப்படத்தின் புதிரை அவிழ்க்க முயலுகிறான். இதற்கு இடையில் நிஷா எனும் அவன் பெண் பார்த்து மறுத்த நாயகிக்கும் அவனுக்கும் காதல் பூக்கிறது.
தாங்கள் யாருக்காக வேலை பார்க்கிறோம் என்றே தெரியாமல் பணத்துக்காகவும் மூளைச்சலவை செய்யப்பட்டதன் உந்துதலினாலும் என்ன கட்டளையானாலும் கீழ்ப்படிந்து அவற்றை நிறைவேற்றுவதற்குத் தங்கள் உயிரையே தரும் ஸ்லீப்பர் செல்ஸ் எனும் இதுவரை அருகே சென்று பார்த்திடாத மனிதர்களைத் துப்பாக்கி படம் நெருங்கிப் பார்க்க உதவியது.
மும்பை நகரின் பல இடங்களில் பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய வெடிகுண்டுகளைத் தனது ஸ்லீப்பர் செல்கள் மூலமாக கொண்டு சேர்த்து ஒரே தினம் பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி இந்தியாவின் அமைதியைக் குலைப்பதற்காக சதி செய்து அதனை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிறான் வில்லன். அவனுக்குக் கொஞ்சமும் தெரியாமல் அத்தனை பேரையும் தன் நண்பனான மிலிட்டரிக்காரன் திருமணத்துக்கு வந்திருக்கும் சகவீரர்களைக் கொண்டு தொடர்ந்து செல்ல வைக்கும் ஜெகதீஷ் அத்தனைப் பேரையும் ஒரே நேரத்தில் சுட்டு வீழ்த்துகிறான். செத்தவர்களில் ஒருவனிடமிருந்து கைப்பற்றும் ஸாடிலைட் ஃபோனில் அவனைத் தொடர்பு கொள்கிறான் வில்லன். நீ யார்னு எனக்குத் தெரியாது. நீ எங்கே இருக்கேன்னும் தெரியாது. ஆனா நான் உன்னைத் தேடி வருவேன். உன்னை என் கையால கொல்லுவேன் என்று தணிந்த குரலில் சொல்கிறான். அதற்கு ஜெகதீஷின் பதில் ‘நான் காத்திட்டிருக்கேன் வா’ என்பதாகிறது.
வில்லனின் கைக்கு ஆட்டம் போவது படத்தின் இரண்டாம் பகுதி. கொல்லப்பட்டவர்களில் ஒருவன் வில்லனின் உடன் பிறந்த தம்பி என்பது அவனுக்குக் கூடுதல் குருதிவெறியைத் தராமலா போகும். ஜெக்தீஷ் யார் என்ன என்பதை எல்லாம் தவிர்த்துவிட்டு என்ன உளவியலில் அவன் அத்தனைப் பேரைக் கொன்றான் என்பதை அழகாகக்த் துப்புத் துலக்கி திருமணமான நண்பனின் வீட்டைக் கண்டறிந்து வரிசையாக அந்த ஆபரேஷனில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவரையாகப் பார்த்துப் பார்த்து தன் கையால் கொல்ல ஆரம்பிக்கிறான் வில்லன். அவனுடைய பிடியில் ஜெக்தீஷின் தங்கைகளும் சிக்குகின்றனர். வில்லனைக் கொன்றழிப்பது மட்டும்தான் அவனுக்குக் கீழே இருக்கக்கூடிய எண்ணற்ற ஸ்லீப்பர் செல்களை முடக்க ஒரேவழி என்று அதனை நிறைவேற்றி நாடு காக்கிறான் ஜெக்தீஷ். நிறைகிறது துப்பாக்கி படம்.
துப்பாக்கி தமிழில் இரண்டாயிரத்துக்கு அப்புறம் எடுக்கப்பட்ட முழுமையான ஹீரோயிஸப் படம். அது நல்ல முறையில் பலிதமானது என்பதுதான் விஷயம். விஜய் தன்னை ஒரு மக்கள் அபிமான நாயகனாக நிலைநிறுத்திக்கொண்ட பிறகு எல்லாம் வல்ல நாயகனாக தோன்ற முயன்ற சிலபல படங்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை. ஆனால் துப்பாக்கி அத்தனை காயங்கள் மீதும் குளிராய் வருடியது.
இந்தப் படத்தின் அனேக பாத்திரங்கள் நன்றாக வார்த்தெடுக்கப் பட்டிருந்தன. நடிகர்களின் உறுத்தாத நேர்த்திக் காட்சி அனுபவத்தை வசீகரம் செய்தது. மனோபாலா, சத்யன், ஜெய்ராம் மூவருக்கும் இந்தப் படம் முக்கியமானது என்று சொல்லத் தகும். ஜெய்ராம், விஜய், காஜல் ஆகியோரது எபிஸோட் படத்தின் மைய விறுவிறுப்பைத் துண்டாடாமல் அதே சமயம் இயல்பான நகைச்சுவைத் தூறலாக நனைத்தது. கதை நகர்ந்த விதமும் குன்றாத சுவாரசியப் பரவலும் துப்பாக்கியின் தோட்டாக்களாகவே திகழ்ந்தன.
காஜல் அகர்வால் நிஷாவாக துல்லியம் நிகழ்த்தி நல்லதொரு நடிப்பை வழங்கினார். ஹார்ஸ் ஜெயராஜின் இசையும் பின்னணி ஸ்கோரும் துப்பாக்கியின் பலங்கள் என்றால் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்வருடும் கலையானது. வசனங்களும் கதை நகர்ந்த நதியும் துப்பாக்கி படத்தை உயர்த்தி நிறுத்தின. காஜல் ஜெய்ராம் விஜய் மூவருக்குமிடையிலான நகைச்சுவை கதைக்குள் கதையாக உறுத்தாமல் அதே நேரம் ரசிக்கத்தக்க பகுதியாகவும் இருந்தது.
வித்யுத் ஜம்வால் இந்தப் படத்தின் எதிர்நாயகன். அலட்டாத எவ்விதமான மிகை கொனஷ்டைகளும் இல்லாத சன்னமான குரலும் தெளிவான கண்களுமாக வெகு நாட்களுக்கப்பால் முழுமையான தனித்துவமான வில்லனுக்குண்டான கூறுகளோடு தெரிந்தார். ஆர்ப்பாட்டமில்லாத அமைதி என்பதே வில்லத் தனமான குணாம்சம் தான் இல்லையா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் வணிக எல்லைகளுக்குள் முழுவதுமாக இயங்கிய மற்றுமொரு படம்.
துப்பாக்கி சூப்பர் நாயக சாகசம்