ஒரு திரைப்படத்திற்கான ரகசியமென்பது என்னவென்றால் அது ஒரு மாயை என்பதே
-ஜார்ஜ் லூகாஸ்
மணிச்சித்திரதாழு படம் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்றது. இந்த வாக்கியத்தில் உள்ள பெரும் என்ற வார்த்தை அதனளவில் ஒரு நிலத்தில் ஒரு திரைப்படம் என்னமாதிரி பெரிய வரவேற்பைப் பெறுமோ அதனைக் குறிக்கலாம். ஆனால் அதன் மையக் கதையை வாங்கி பி.வாசுதான் உருவாக்கிய ஆப்தமித்ரா கன்னடமும் அதன் மறுவுருவான சந்திரமுகி தமிழ்ப் படமும் பெற்ற வெற்றிகளுக்கு முன்னால் முன் சொன்ன மலையாள மூலத்தின் வெற்றி ஒரு சொல்லளவுதான்.
ரஜினி எனும் சூப்பர் பிம்பம் பாபா படத்தின் பெருந்தோல்விக்கு அப்பால் இன்னொரு சூப்பர்ஹிட்டோடு திரும்பி வரவேண்டும் என்கிற முனைப்பில் பார்த்துப் பார்த்து உருவாக்கப் பட்ட படம் சந்திரமுகி. முந்தைய நிராகரிப்பால் மனம் சோர்ந்த சூப்பர்ஸ்டார் அதனை வெளிப்படுத்தி விடாமல் அதிரிபுதிரியான வெற்றி ஒன்றின் மூலமாகப் பதிலெழுத விழைந்தபோது பெரும் கூட்டமாக நட்சத்திரங்களோடு களம் இறங்காமல் அழுத்தமான கதை மற்றும் அதன் தேவைக்கேற்ப முகங்களும் மனங்களுமாக படம் செய்தது நன்மை பயத்தது.
பி.வாசு திரைக்கதை அமைப்பதில் நகைச்சுவைக் காட்சிகளைத் தனி ட்ராக்காகவும் கதையின் உப இழையாகவும் இரண்டுமாகச் செய்துவிடுவதில் சமர்த்தர். சந்தானபாரதியின் இணையிலிருந்து வெளியேறி வாசு தனியே இயக்கிப பல படங்கள் கதைக்காகவும் நகைச்சுவைக்காகவும் இன்றளவும் நினைவுகூரப் படுவது மெய். அந்த வகையில் சந்திரமுகி படத்தில் வடிவேலு அதுவரை தான் தாண்டியிருந்த எல்லா உயரங்களையும்தானே தகர்த்தார். வடிவேலு, ரஜினி, நாஸர் ஆகியோரிடையில் அமைந்த காமெடி நன்றாக பலிதமானது. திரை அரங்குகளில் குழுமிய யாரையும் வடிவேலு வசீகரித்தார். அவரை நீக்கிவிட்டு சந்திரமுகி பற்றிப் பேசவே முடியாது என்ற அளவில் வடிவேலுவின் பங்கேற்பு அமைந்திருந்தது.
ரஜினி எந்த சைகையும் சமிக்ஞையும் இல்லாமல் நடித்த படமாயிற்று சந்திரமுகி. அவர் அரசியல் நகாசுகள் எதுவும் இல்லாமல் தன் படத்தை உருவாக்கினார் பி.வாசு. கதைக்குக் கட்டுப்பட்டு நடித்ததே ரஜினியின் பங்கேற்பாக அமைந்தது. வடிவேலு தன் நிழலாலும் நடித்தார். தனக்குத் தானே பேசிக் கொள்வதாகட்டும் தான் மனதில் நினைப்பதை எல்லாம் அறிந்து தன்னிடமே சொல்லும் டாக்டர் சரவணன் முன்பாக மனதிலும் எதையும் நினைக்கமுடியாமல் தவிப்பதிலாகட்டும் எந்நேரமும் தயங்கி மயங்கித் திரிவதிலாகட்டும் அவருடைய அசைவுகளும் சப்தங்களும் அழுகையும் சிரிப்பும் மௌனமும் ஆவேசமும் என எல்லாமே நகைக்க வைத்தன. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களின் வரிசையில் வடிவேலு என்கிற மறக்க முடியாத பெயரின் தகர்க்க முடியாத படமாக சந்திரமுகியை எப்போதும் சொல்லலாம். தகும்.
கதையைப் பொறுத்தமட்டில் பலவிதமான பழையகால நம்பகங்களை உயர்த்திப் பிடிப்பதா? நிராகரிப்பதா? என்ற குழப்பத்தோடு சுற்றிவளைத்து அமைக்கப்பட்டிருந்தாலும் அறிவியலும் தொன்மமும் அடுத்தடுத்த கிண்ணங்களில் வார்த்தெடுத்து மொத்தக் கதைக்கு உடன்வரும் வகையில் பயனாக்கம் செய்யப்பட்டிருந்தது. பழைய ஜமீன் பங்களாவை விலைக்கு வாங்கி அங்கே குடியேறுகிற தன் நண்பனின் குடும்பம் அங்கே ஒரு மறைவறையில் இருப்பதாக நம்பப் படுகிற சந்திரமுகி என்கிற முன் காலத்து நாட்டிய நங்கையின் ஆவி நண்பன் செந்திலின் மனைவி கங்காவின் உடலில் புகுந்து அவள் மூலமாக அத்தனை பேரையும் படுத்தி எடுக்கிறது. உளவியல் நிபுணரான டாக்டர் சரவணன் எப்படி அந்தக் குடும்பத்தைப் பேய்வசத்திலிருந்து காப்பாற்றுகிறார் என்பதே கதை. சொல்ல வந்த கதைக்குள் பழையகாலக் கதை ஒன்று வசீகரமாகத் தோன்றியது.
வேட்டையன் மகாராஜா என்ற பேரில் பழைய வில்லத்தனத்தை நினைவுபடுத்தி ரஜினி ஸ்டைலாகத் தோன்றியதை எல்லோரும் ரசித்தார்கள். கடைசியில் பல சூழ்ச்சிகளை வென்று சுபம் என்றாகும் சந்திரமுகி படம் கதை சொன்ன விதத்துக்காகவும் காமெடிக்காகவும் இசை மற்றும் பாடல்கள் பாந்தமான ஒளிப்பதிவு என எல்லா ப்ளஸ் பாயிண்டுகளும் சேர்த்த அதன் விருந்தோம்பலுக்காகவும் எல்லாக் காலங்களுக்குமான நற்படமாக மாறியது.
நயன்தாரா, நாஸர், ஷீலா, ஸ்வர்ணா, மனோபாலா, விஜயகுமார், வினீத், கே.ஆர்.விஜயா போன்றவர்களோடு பிரபுவும் நடித்திருந்தார். ரஜினிக்கு சமமான கதாபாத்திரத்தில் ஜோதிகா தன் கண்களால் சந்திரமுகி என்கிற முன் காலப் பெண்ணாகத் தத்ரூபம் காட்டினார். மனப்பிறழ்வு என்பதைத் திரையில் பரிணமித்த நடிகவரிசையில் ஜோதிகா இந்தப் படத்துக்காக மெனக்கெட்டதன் பலன் என்றென்றும் அவரை இடம்பெறச் செய்யும் என்பதில் கருத்து மாற்றமில்லை.
வித்யாசாகரின் இசை எல்லாப் பாடல்களுமே மழை என்றானது. வருடக்கணக்கில் ஓடிய தமிழ்ப் படங்களின் வரிசையில் இந்தப் படம் இடம்பெற்றதற்கு இசை உட்பட எல்லாமே காரணங்களாயின. தான் மட்டுமே அறிந்த சபதத்தில் வென்றெழுந்தார் ரஜினி எனும் சூப்பர்ஸ்டார்.
சந்திரமுகி நிலாச்சோறு