நீங்கள் எப்போது மக்களை வண்ணத்தில் படம் பிடிக்கிறீர்களோ அவர்களது ஆடைகளைத் தான் படமாக்குவதாக அர்த்தம்.
ஆனால் எப்போது நீங்கள் அவர்களை கறுப்பு வெள்ளையில் படமெடுக்கிறீர்களோ உங்களால் அவர்களது ஆன்மாக்களைப் படமெடுக்க முடியும்
-டெட் க்ராண்ட்
முதலில் படமென்றாலே புராண இதிகாசப் படங்களாய்த் தான் வந்தன. அதிலும் எடுத்த கதையையே சுற்றிச் சுற்றி எடுத்து வெட்டி ஒட்டி வேறாக்கி எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் தமிழ்த் திரை மட்டுமல்ல இந்தியத் திரைப்பட உலகமே ஒருவழியாக சமூகப் படங்களின் பக்கம் மையம் கொண்ட பிறகு தான் ரசமான படங்கள் வரலாயின. ஆனாலும் பக்திப் படங்களுக்கான உலகளாவிய சந்தை இங்கே குறிப்பிட வேண்டியதாகிறது. ஆடிவெள்ளி துர்கா எங்கவீட்டுவேலன் பாளையத்து அம்மன் போன்றவை தொண்ணூறுகளுக்கு மத்தியிலும் கரம் கூப்பி வெற்றி கண்ட கடவுள் பக்திப் படங்கள். புராணக் கதைகள் பக்திப் படங்கள் மூட நம்பிக்கைப் படங்கள் சூன்யம் போன்றவற்றை தூக்கிப் பிடிக்கும் படங்கள் என ஒவ்வொன்றும் வெவ்வேறு வகைமையைச் சேர்ந்த படங்கள் தான். இன்று நாமிருக்கக் கூடிய காலம் பேய்ப்படங்களுக்கும் ஆக்சன் படங்களுக்குமானது என்று பொதுவில் வகைமைப் படுத்த வேண்டியதாக உருமாறி இருக்கிறது.முன்பிருந்தது வேறு சினிமா
தமிழ் திரைப்படம் தெலுங்கு திரைப்படங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு வித்யாசம் நாம் அவ்வப்போது கைவிட்ட வகைமைகளையும் விடாமல் அவர்கள் இன்றளவும் பிடித்துக் கொண்டிருப்பது தான் இதுவே அவ்விடத்து பாயிண்ட் ஆஃப் வியூவில் இருந்து பார்த்தால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான படங்களை தமிழில் முயல்வதாகவும் நாங்கள் அப்படி இல்லையாக்கும் எங்கள் படங்களெல்லாம் வெரைட்டியோ வெரைட்டி என்று சொல்கிறாற் போல் இருக்கும் இக்கரைக்கு அக்கரை உண்மை.
ஒரு காலம் இருந்தது பாடல்களில் பிடியிலிருந்து சமூகப் படங்களுக்கு மக்களின் ரசனை மாறினாலும் கூட மாய மந்திர தந்திர நம்பிக்கைகளை விதந்தோதிய படங்கள் பெருமளவு நின்று போனாலும் கூட புராண இதிகாச சமயம் சார்ந்த படங்கள் வரவேற்கப் படுவது தொடர்ந்தபடி இருந்தது 80களில் ஏன் 90களில் கூட அப்படியான சாமி படங்கள் வருகை நிகழ்ந்தன ஆனால் எல்லாமே பொற்காலம் என்று சொல்லிவிட முடியாது அல்லவா.கிட்டத் தட்ட சமூகப் படங்களின் பிடிக்கு ஒட்டுமொத்தமாய்த் தமிழ் சினிமா சென்றுவிட்டது என்று அறிவிக்காதது மட்டும் தான் பாக்கி என்ற சூழலில் தான் வந்து நின்று வென்று மாபெரும் ஆட்டமொன்றை நிகழ்த்திற்று திருவிளையாடல்.
ஏபி நாகராஜன் திருலோகச்சந்தர் போன்றவர்கள் உருவாக்கிய பல படங்கள் இன்றளவும் மக்களின் அபிமானம் குன்றாமல் தொடர்வது நிதர்சனம்
சிவாஜி கணேசன் பரமசிவனாகவும் சாவித்திரி பார்வதியாகவும் கேபி சுந்தராம்பாள் நாகையா பாலையா டி.ஆர்.மகாலிங்கம் தேவிகா மனோரமா ஓஏ.கே தேவர் நாகேஷ் முத்துராமன் உட்படப் பலரும் நடித்த திருவிளையாடல் இன்றளவும் போற்றுதலுக்குரிய தமிழ் புராண படங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது வெளிநாடுகளில் கூட புதிய திரையரங்கங்கள் திறப்புவிழா காண்கையில் உரையாடலை ஒட்டிவிட்டு புதுப்படம் ரிலீஸ் செய்வது இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது ஒரு சம்பிரதாயம் அந்த அளவு சினிமாவுக்கு உள்ளும் புறமும் திருவிளையாடல் படத்தின் செல்வாக்கு அதிகம்.பதின்மூன்றாவது தேசிய விருதுகளில் தமிழுக்கான படமாகவும் 1965ஆமாண்டுக்கான சிறந்த தமிழ்ப்படமாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டது. இருபத்தைந்து வார காலம் ஓடி வெள்ளிவிழாக் கண்டது.இன்றளவும் ரசிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பெருமை உடையது
பாடல்களின் பேழை தவறவிட முடியாத இசை செல்வந்தம் என்றால் தகும்
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா எனும் பாடல் சுந்தராம்பாள் பாடியது. பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா எனும் பாடல் கேட்பவரைக் கரைந்து போகச் செய்யும் வல்லமை மிக்கது.இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை என்ற பாடலை டி.ஆர்.மகாலிங்கம் தன் தனித்துவக் குரலால் ஒளிரச்செய்தார்.பார்த்தால் பசுமரம் எனும் பாடலையும் பாட்டும் நானே பாவமும் நானே என்ற பாடலையும் டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். பாடல்களும் பின்னணி இசையும் இப்படத்தின் பெருவெற்றிக்குப் பாதிக் காரணமென்றாலும் பொருத்தமாய்த் தானிருக்கும்.அப்படி ஒலித்துக் காற்றைப் பலகாலம் ஆண்ட பாடல்கள் இவை.
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தன்னையே தடுத்துப் பேசி உண்மை வழுவாத நக்கீரரை சுட்டெரித்துப் பிறகு மீண்டும் எழுப்பி தருமிக்குப் பொன் கிடைக்கச் செய்து பாண்டியனை ஆசீர்வதித்தது முதற்கதை.தட்சணின் மகள் தாட்சாயணியை மணம் முடித்த சிவனார் தன் பேச்சை மீறித் தந்தை நடத்திய யாகத்துக்குச் சென்று தகப்பனால் அவமானப் பட்டுச் சிவலோகம் திரும்பும் தாட்சாயணியை முதலில் கண்டித்து பிறகு தாண்டவமாடிப் பின் மீண்டும் இணைவது அடுத்த கதை.கயல்கண்ணியாக அவதரிக்கும் பார்வதியைத் தேடிச் சென்று மணமுடிப்பது மூன்றாவது கதை பாணபத்திரர் எனும் நற்பாடகரை வம்பிழுக்கும் ஹேமநாத பாகவதரைத் தன் பாடலொன்றால் விரட்டி அடித்து பக்தருக்கு அருள்வது அடுத்த கதை இவற்றின் மூலம் தன் தந்தையின் மகத்துவத்தை தமிழ்க்கடவுள் முருகன் அறிந்துகொள்வது தான் கதைகளினூடான மையச்சரடு.
திருவிளையாடல் பாடல் கேஸட் மட்டுமல்ல. வசன கேஸட்டாகவும் சக்கை போடு போட்ட படம். இது யூட்யூப் காலம்.முந்தைய ரேடியோ காலத்தில் இதனைக் கேளாதவர்க்கு காதுகள் இராது என்று கூறத்தக்க அளவுக்கு படம் படுபிரபலம்.மேலும் நாகேஷ் காமெடியில் முதல் பத்து இடங்களில் இன்றும் நின்று ஆடும் திருவிளையாடல் படம். தருமி என்று தனக்குத் தானே பேசிக்கொள்கிற கதாபாத்திரத்தில் புலவனாகவே கண்வழி மனங்களைக் களவெடுத்து வென்றார். அவருடைய பேருருவுக்கு அப்பால் தான் அந்தச் சிவசிவாஜியே என்று சொல்லியாக வேண்டும். அந்த அளவுக்கு நாகேஷின் டயலாக் டெலிவரி முகத்தோற்றம் முகமொழி உடல்வாகு வழங்கிய விதம் என சொல்லிக்கொண்டே செல்லலாம்.
பதினோரு பாட்டு அவற்றின் மொத்த ஓட்டகாலம் முக்கால் மணி நேரம்.படம் மொத்தம் ரெண்டு மணி நேரம் முப்பத்தி ஐந்து நிமிடம் ஓடியது.ஆனால் ஆப்ரேட்டர் தொடங்கி சைக்கிள் டோக்கன் தருபவர் வரை யாருக்கும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம் எனத் தைரியமாகச் சொல்லக் கூடிய வெகு சில அற்புதங்களில் ஒன்று திருவிளையாடல்.
திருவிளையாடல் மொழியும் இசையும் பெருகும் கடல்.