இன்று அவள் வந்திருக்கவில்லை. இனியும் வருவாளா? நிச்சயமில்லை. ஆனால் அவளுக்கான வகுப்புத் தொடங்கி 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எதிர்பார்த்து, ஏமாறுவதைத் தவிர வேறென்ன தெரியும் எனக்கு. அவளிடமே தொலைப்பேசியில் கேட்டுவிடலாமா? இதுவரை அவளிடம் இப்படித் திடீர் கேள்விகள் கேட்டதில்லையே? அல்லது “செங்காந்தள் வந்துவிட்டாளா” என்று அவள் வகுப்புத் தோழன் தோழிகளிடம் கேட்டுவிடலாமா? ஆனால் ஜூனியர்ஸ் எப்படியும் இதைக் கிண்டல் செய்யக்கூடும். இதுவரை என் உயிர் நண்பர்களிடம்கூட அவளைப் பற்றியும், என் காதலைப் பற்றியும் சொல்லியிருக்கவில்லை. அந்த வழக்கமானத் தவறை நான் செய்யவில்லை, செய்யப் போவதுமில்லை.

ஆனால் இன்று அவளிடம் எப்படிப் பேச வேண்டும், அவள் என்னைக் கடந்து செல்லும்போது பதட்டப்படாமல் நிதானமாக இருப்பதுபோல் எப்படி காட்டிக்கொள்வது, அவள் ‘அண்ணா’ என்று கூப்பிடும் போதெல்லாம் அவளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், அவள்மீதுள்ள என் காதலை வார்த்தைகள் இல்லாமல் எப்படி உணர்த்த வேண்டும் மற்றும் எனது நண்பர்களின் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பார்வையிலிருந்து எப்படித் தப்பிக்க வேண்டும் என்று நேற்று அரங்கேறிய அற்பத்தனமான ஆயிரம் ஒத்திகைகளுக்கு என்ன பதில் சொல்வேன்.

நேற்றிரவு அமாவாசையையும் மின்வெட்டையும் மீறி அவள் நினைவுகள் பிரகாசமாய் எரிந்தது. இன்று அவள் இல்லாத பல்கலைக்கழகம் நேற்றைய இரவைவிடவும் இருட்டாக இருந்தது எனக்கு. செங்காந்தள் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கிறாள். தினமும் இதோ இந்த வராந்தாவில் தான் உணவு இடைவேளையில், அவளைப் பார்ப்பதற்கு நிதானமாக பதட்டப்படாமல் நிற்பதுபோல நடிப்பேன். நான் ஒரு நல்ல நடிகன். நம்மை அத்தனைப் பேர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள், நம்மீது ஏற முயற்சித்து முடியாமல் போனவர்கள் சபித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்த வியாபாரியும், இந்த அரசியல் வாதியும் நம்மை நாசம் செய்ய பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எல்லாம் தெரிந்தும் துளியும் கவலையின்றி ஆசுவாசமாய் நின்று கொண்டிருக்கும் அந்த மலையைப்போல நானும் நின்று கொண்டிருப்பேன்.ஒருவேளை என்னைப்போல அந்த மலைகளுக்குள்ளும் அவ்வளவு புழுக்கம் இருக்குமோ? அடுத்தமுறை ஒரு மலைக்குச் சென்றால், அவசரப்படாமல் நிதானமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு வர வேண்டும். என்னால் முடிந்தது அவ்வளவே.

செங்காந்தளுக்கு வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது எதார்த்தமாக அந்த வகுப்பறையைக் கடந்து செல்வதுபோல அவளைப் பார்ப்பேன். இதுவரை நான் தோற்றதில்லை, எப்படியும் முதல் நடையிலேயே அவளைப் பார்த்துவிடுவேன். இல்லையென்றாலும் ஆயிரம்முறை எதார்த்தமாக நடந்துசெல்லவும் நான் தயார். நான்கு, ஐந்துமுறை நடந்தபிறகு அவள் இன்னும் வந்திருக்கவில்லை என்பதை யார் மூலமாகவோ அறிந்தேன். பைத்தியக்கார மனம் நம்ப மறுத்து இன்னும் கொஞ்சம் நடந்துதான் பார்ப்போமே என்று சொன்னது.
இப்படி இவளை வகுப்பறையில் பார்ப்பதைவிடவும் இதோ இந்த வராந்தா இருக்கிறதே, ஒரு பக்கம் முழுக்கத் தொடர்ச்சியாகப் பூந்தொட்டிகள் வைக்கப்பட்ட வராந்தா, இங்கே அவளை உணவு இடைவேளையில் பார்ப்பதில்தான் எனக்குக் கொள்ளை பிரியம்.

பிறந்த நாள் அன்று புது கலர் துணி போட்டுக்கொண்ட சிறுவன், பள்ளிக்குச் சென்று தன் நண்பர்களிடம் தன்னைக் காட்ட எப்படி அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு செல்வானோ. அதுபோலத்தான் நானும் அவசர அவசரமாக சாப்பிட்டிவிட்டு அவளிடம் என்னைக் கட்டுவதற்காக இல்லை… இல்லை அவள் மூலமாக என்னை எனக்குக் காட்டுவதற்காக எங்கள் வகுப்பறைக்கு வெளியே ஒரு பூந்தொட்டியின் ஓரம் பெரிய பூவாய் ஒட்டிக்கொண்டு நிற்பேன்.

எந்தவித அறிவிப்புமின்றி செங்காந்தல் அந்த வராந்தாவில் நடந்து வருவாள். நான் இருக்கும் இடத்திலிருந்து மூன்று அடிக்கு வரும்வரை என்னைப் பார்க்காதபடி அல்லது பார்ப்பதைத் தவிர்த்தபடி வருவாள். அருகில் வந்ததும் என்னைப் பார்த்து அவசரமின்றி தாராளமாக சிரிப்பாள். இரண்டு கண்களையும் விளையாட்டாய் மூடித் திறப்பாள். என்னை கடந்து செல்வாள், எந்த ஒரு சலசலப்பும் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மும்முரமாய் இருக்கும், இந்த அழகான மலையைக் கடந்து செல்வாள். நான் பதிலுக்குச் சிரித்தேனா என்பதுகூட எனக்கு நினைவிருக்காது. நான் வகுப்பிற்குள் மிதந்து செல்வேன். ஆனால் உள்ளே சென்றிருக்கும்போது சிரித்துக் கொண்டுதான் இருப்பேன், அது நிச்சயம். அவள் திரும்ப வகுப்பறைக்குச் செல்லும்போது நான் அந்த வராந்தாவில் இருப்பதில்லை. ஏன், என்று கேட்காதீர்கள் எனக்குத் தெரியாது. நான் யோசித்ததுமில்லை அங்கே நின்றதுமில்லை. ஒருவேளை பேராசிரியர் உணவு இடைவேளையில் கூடுதலாகப் பத்து நிமிடம் எடுத்துக்கொண்டால், அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆயிரம் சாபங்கள் கொடுப்பேன் அல்லது என் தவிர்க்க முடியாது தோழர்கள் “வாடா மச்சான்… ஒரு ஐஞ்சு நிமிஷம் முக்கியமான வேலை இருக்கு போயிட்டு வந்துடலாம்” என கூட்டிச் சென்றால், அந்த ஐந்து நிமிடத்தில் அவர்களை ஆயிரம்முறை கொன்றிருப்பேன். காதலைவிட என்ன முக்கியமான வேலையோ. அவர்களுக்கு இது தெரிய வேண்டாம். பாவம் அவர்கள் ரொம்ப நல்லவர்கள்தான்.

செங்காந்தள் எந்நேரமும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் அதுவும் என்னால் மட்டும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு அவளிடம் ஐந்து நிமிடமாவது பேசிட வேண்டும். நீங்கள் ஒரு விஷத்தை வேண்டிக்கொண்டு, அந்தப் பச்சை கார் உங்களைத் தாண்டுவதற்குள்ளாக அந்த மின்கம்பத்தை தாண்டிவிட வேண்டும் அப்போது வேண்டிய விஷயம் நடந்துவிடும் என்று நினைப்பதுபோல என் பைத்தியக்கார மனதிற்கும் ஒரு ஐதீகம் உண்டு. காலை பத்து மணி முதல் பனிரெண்டு மணிக்குள்ளாக சில விஷயங்ககளை அவளுடன் செய்துவிட வேண்டும் என்று. பின்பு இந்த வராந்தாவில் நடக்கும் அந்த சாதாரண நிகழ்வு. இவ்வளவுதான் நான். இதில்தான் நான் பிழைத்து வருகிறேன். என் குறுஞ்செய்தியை நம்பியோ, என் குறுஞ்செய்திக்கு அவளின் பதிலை நம்பியோ நான் இல்லை. குறுஞ்செய்திகளையும் சமூக வலைதளங்களையும் நான் என் இருப்பை அவளிடம் நிரூபிப்பதற்காகத்தான் பயன்படுத்துகிறேன்.

ஆனால் இன்று இது எதுவும் நடக்க போவதில்லை. அவளது விழி சிரிப்பையும் இதழ் சிரிப்பையும் கண்டுகொண்டாலாவது இன்றைக்குப் பிழைத்துக் கொள்வேன் என்றே தோன்றியது. இப்போதுதான் புரிந்துகொண்டேன், நம்மை நாள்தோறும் பரிதவிக்கவைக்கும் ஒரு நபரின் சிரிப்பு எவ்வளவு அசாதாரனமான விஷயங்களைச் செய்துவிடுகிறது. அவளின், அவர்களின் சிரிப்பின் முன் வலிமை அற்றவர்களாகவும் இந்த உலகின் முன்பு வலிமை மிக்கவர்களாகவும் அந்தச் சிரிப்பு மாற்றிவிடுகிறது. அவளின் சிரிப்பு ஒரு மாயாஜாலம். இதை நான் யாரிடம் போய் புலம்புவது? அந்தப் பெண்ணா என்று கதைகள் வரக்கூடும், அறிவுரை வரக்கூடும், ‘எம்.ஏ படிக்கிற டா… படிப்புல கவனம் சொலுத்து’ வகையறாக்கள் வரலாம். ஆனால் எனக்குப் புலம்புவதற்கு எனக்குள் பெயரிடபடாத ஒரு பெண் இருக்கிறாள்.

தொட்டியில் உறங்கும் மீன் ஒன்று கடலில் குதித்து அதற்கு மூச்சுமுட்டினால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தேன். எல்லையற்று நீந்துவதுதானே மீனின் இயல்பு. அப்படித்தானே இந்த உலகில் மீன் படைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களை நேசிப்பதும் காதலிப்பதும்தானே மனிதனின் இயல்பு. இருந்தும் நம்மை நாம் ஏன் சுருக்கிக்கொள்கிறோம் வேறு வழியேயில்லாத அந்த தொட்டில் மீன்போல.

ஒவ்வொருமுறையும் நாம் காதலிக்கும்போது நம்முள் ஒரு புதிய மனிதன் பிறந்துவிடுகிறான் அல்லது பிறந்துவிடுகிறாள். எனக்குள்ளும் ஒருவன் இப்போது பிறந்திருக்கிறான், முற்றிலும் என்னில் இருந்து மாறுபட்டவனாய், எனக்கு மிகவும் பிடித்தமானவனாய் ஒருவன் பிறந்திருக்கிறான். அவளிடம் காதலைச் சொன்னால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. புதிதாய் பிறந்த இவன் இறக்கவும் கூடம். இப்படி ஒருவன் இருந்ததே அவளுக்குத் தெரியாமல் போகலாம். இதனால்தான் என் காதலை அவளிடம் சொல்வதற்கு ஏக தயக்கம் எனக்கு. ‘இருந்துவிட்டு போகட்டுமே என்ன கெட்டுவிடப் போகிறது.’ இருந்தும் எதோ ஒருநாள் அவளுக்குத் தெரிய வரும். இத்தனை நாள் நான் அவளைக் காதலித்தேன் என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் திடீரென என் காதல் அவளை அச்சுறுத்தலாம், அன்றும் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.

நினைவுகள் தாறுமாறாய் ஓடிக்கொண்டே இருந்தது. வேறு வழியின்றி பெருமூச்சு விட்டபடி என் துறையின் கான்பரென்ஸ் அறைக்குச் சென்றேன். எம்.ஏ.வின் படிப்பின் கடைசி செமஸ்டர் என்பதால் எல்லாத் திங்கட்கிழமையும் ஆராய்ச்சிக்கான வேலைகளைப் பார்க்க வேண்டும், அன்று மட்டும் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்காது. கான்பரென்ஸ் அறையில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டுத் திறந்திருந்த ஜன்னல் வழியே வெளிச்சம் கஞ்சத்தனமாக உள்ளே வழிந்தது கொண்டிருந்தது. ஒரு மூலையில் பவா செல்லத்துரை எழுதிய ‘நட்சத்திங்கள் ஒளியும் கல்லறை’ புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தைத் திறந்து அரைமணிநேரம் செங்காந்தலின் நினைவுகளைப் புரட்டினேன். ஆம், அவள் நினைவுகள் என்னையும் புரட்டின.

இப்படித்தான் ஒருமுறை, பெரும்பாலும் எவரும் இல்லாத தனிமையிலேயே மூழ்கி இருக்கும் எம்.பில் வகுப்புக்கான அறையில், அவள் நினைவுகளைப் படித்துக்கொண்டிருக்கையில் எதிர்பாராதவிதமாக என்னுடன் பேச உள்ளே வந்தவள்.

“அய்யயோ படிக்கிறீங்களா சாரி, படிங்க… படிங்க…” என்றபடி திருப்பினாள்.

அவளை “இல்லை மா… உள்ள வா..” என்றழைக்கும் தைரியம் எனக்கில்லை..

புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு சொற்களும் என்னைச் சபித்தது. அந்த மின்விசிறி எனக்காக வீசிய கொஞ்சம் காற்றை நினைத்து வெட்கப்பட்டது.

இன்று நான் கனவுலகில். அவள் நினைவுகளில் மூழ்கித் தத்தளிப்பதை உணர்ந்துகொண்டேன். என்னைவிட்டு நான் வெகுதூரம் வந்து விட்டிருந்தேன். இப்பொது எப்படியேனும் என்னை நான் மீட்டாகவேண்டும். கான்பரென்ஸ் அறையைக் கொஞ்சமாய் கசிந்த வெளிச்சம் என்னைக் கண்டு, மிரண்டு எனது நிலையை வெளியே கசிய… வெளிச்சங்கள் உள்ளே வர தயங்கத் தொடங்கின. அறை கொஞ்சம் இன்னும் இருட்டானது. என் மனதைப் பிரதிபலித்த அறை என்னை அச்சுறுத்தியது. இந்த ஐந்து மாதத்தில் அவள் வராத எல்லா நாட்களும் இப்படி இருள் படரும் நினைவுகள்தான். அவள் இன்று வந்து சிரித்துவிட்டாவது போயிருக்கலாம்.

நான் வெளியே செல்லவேண்டும். ஏற்கனவே வழக்கமாக நான் சேர்ந்து சுற்றும் நண்பர்கள் அந்த அறையின் மறு ஓரத்தில் வந்திருப்பதை உணர்ந்தேன். நான் படித்துக் கொண்டிருப்பதாக நினைத்து என்னைத் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று நினைத்திருப்பார்கள்போல. அவர்களுக்குக் கோடி புண்ணியம். வழக்கம்போல் பல வன்முறை கலந்த நகைச்சுவைகளையும் கேலிகளையும் சொல்லிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே சென்று என் நிலையை இன்னும் மோசமாக்க நான் விரும்பவில்லை. நானே எதிர்பார்க்காதபடி எந்த ஒரு அறிவிப்புமின்றி சட்டென அந்த அறையைவிட்டு வெளியேறினேன்.

கடற்கரை காற்றும், சூரியனை வழிமறித்த இருள் மேகங்களும் எனக்கு ஆறுதல் சொல்வதாய் அமைந்திருந்தது. சென்னை பல்கலைக்கழகம் எதிரே கடற்கரை அமைந்திருப்பதே எனக்காகத்தான் என்பதாய் நான் அதிகம் உணர்வேன். வெளியே ஒரு சின்ன சாலையின் கடைசியில் இருக்கும் ஒரு சின்ன ‘டீ’க்கடையை நோக்கி நடந்தேன். என்னைப் பார்த்ததும் டீக்கடை அக்கா லைட்ஸ் சிகரெட்டை எடுத்து கையில் கொடுத்தாள், அவளுக்குத்தான் என்மேல் எவ்வளுவு பிரியம். என் நன்பர்களுக்காக கிங்ஸ் சிகெரெட் பாக்கெட்டை வழக்கம்போல் எடுத்தவள், எட்டிப் பார்த்து அவர்கள் வரவில்லை என்றதும் ஏமாற்றம் அடைந்தாள். டீக்கடை அண்ணன் எனக்கு காபி போட்டு கொடுத்தார். சிகரெட் பிடிப்பதற்கென்றே அந்தக் கடையின் பக்கவாட்டில் நான்கு சுவர்கள் கொண்ட திறந்த வெளி ஒரு அமைப்பு இருக்கும்.

அந்தச் சுவர்களுக்குப் பின்பக்கத்தில் இருக்கும் அலுவலத்தில் இருந்தும் சில ஆட்கள் அந்த டீ கடைக்கு வருவதுண்டு. அவர்கள் கடைக்குள் வர வேண்டும் என்றால் குறைந்தது ஆறநூறு மீட்டராவது சுற்றி வரவேண்டும் அல்லது தன் நெஞ்சளவுக்கு இருக்கும் அந்தச் சுவர்களை எகிறிகுதிக்க வேண்டும் அல்லது அமைதியாக அங்கிருந்தே வேண்டியதை வாங்கிக்கொள்ளலாம். சுவர்களுக்கு அந்தப் பக்கத்தில் இருந்தே அவர்கள் அக்காவிடமும் அண்ணனிடமும் வேண்டியதைக் கேட்பார்கள், சாமர்த்தியவாதிகள். இருவரும் முன்பக்கமும் பின்பக்கமும் மாறி மாறி போர் வீரர்கள்போல ஆக்ரோஷமாய் பரிமாறுவார்கள். பின் பக்கத்தில் நிற்பவர்களுக்குத் தனியாக அந்தச் சுவரில் கம்பெனி தண்ணீர் வைக்க பட்டிருக்கும். இந்த அக்காவிற்கும் அண்ணனுக்கும்தான் இந்த மனிதர்கள்மீது எவ்வளவு அன்பு.

பாதிக்குமேல் காபியைக் குடித்துவிட்டு உள்ளே சென்று சிகரெட்டைப் பற்றவைத்து ஸ்டூல் போட்டு அமர்ந்தேன். அந்த நேரம் அதைப் புகைக்கும் அறையில் யாரும் இல்லை. நான்கு சுவர்களும் என்னைக் கவலையோடு வினோதமாகப் பார்த்தன. என்னை இதுவரை தனியாகப் பார்க்காத சுவர்களுக்கு… இது மிகவும் புதிதாக இருந்தது. எனக்காக அவைக் கைகோர்த்து வருந்தின. கடைசி காபியை குடித்துவிட்டு சிகரெட்டை இழுத்துதுது…. பொறுமையாக என் எல்லாக் கவலைகளும் பறந்துவிடும்படியான, பெருமூச்சுடன் உள் சென்ற புகையை வெளியே தள்ளினேன். என் மனப்புழுக்கத்தை என் கவலைகளை என் காதலை எல்லாம் இரண்டு நொடிகளில் தெரிந்துகொண்ட புகை, அலறி தெரித்துக்கொண்டு வட்ட வட்டமாக வெளியேறியது. ஒருவேளை அந்தப் புகை என்னை புரிந்துகொண்டு கண்ணீர் சிந்தியதுபோல் நினைத்துக்கொண்டேன்

எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கும் இந்த சுவர்கள் எனக்காகவும் வருத்தப்பட்டது. என் நிலையைக் கண்டு எனக்கு உதவமுடியாத குற்றயுணர்ச்சியோடு அசையாதபடி என்னையே கருணையுடன் பார்த்துக் கொண்டிருந்தன அந்த சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்கள். அடுத்த சுற்றுக்கு தன்னைத் திடப்படுத்திக் கொண்டது மீதமிருக்கும் சிகரெட்.

இன்னொருமுறை இழுத்து ஊத்தினேன். பாரம் தாங்காமல் சிகரெட்டின் மேல் பகுதி சாம்பலாகி இடிந்து விழுந்தது. திடீரென எனக்கு அழைப்பு வந்தது. அந்த அமைதியை நாசம் செய்த அழைப்பைச் சபித்தேன். விருப்பமேயில்லாமல் கைப்பேசியை எடுத்துப் பார்த்தேன். அவள்தான். செங்காந்தள்தான் அழைக்கிறாள். அவரசப்பட்டு சலித்துக்கொண்டேனே!

எத்தனை ஆயிரம்முறை அவளிடமிருந்து எதுவுமே வரப்போவதில்லை என்று தெரிந்தும் என் கைபேசியையே உற்றுப் பார்த்து நின்றிருப்பேன். எத்தனை ஆயிரம்முறை கேட்கும் கைபேசியின் மணியோசைக்கு அவளாக இருக்கக்கூடும் என பௌர்ணமி அலைகளைவிடவும் மோசமாக சீறிப்பாய்ந்து மொபைலைப் பார்த்து ஏமார்ந்திருப்பேன். எதிர்ப்பார்த்து ஏமாறுவதைத் தவிர வேறென்ன தெரியும் எனக்கு.

குற்ற உணர்ச்சியில் இன்றும் தூக்கம் வரப்போவதில்லை. சரி இருக்கட்டும். செங்காந்தள்தான் அழைக்கிறாள்.

பதட்டம்.

என்னைவிடவும் என் கையில் இருக்கும் சிகரெட்டும் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் சுவர்களும் அதிகம் பயந்தன. பொறுமையாக அவள் காதுகளுக்கு எந்தப் பாதிப்பும் வராதபடி எடுத்து ” ஹலோ,வணக்கம் ” என்றேன்.

“ஹாய்… வணக்கம் அண்ணா… எப்படி இருக்கீங்க…”

“சூப்பர் மா, நீ எப்படி இருக்க…”

“நல்லா இருக்கேண்ணா, அண்ணா நாளைக்கு வரும்போது அந்த ரூமி புக் சொன்னீங்கள்ள… அத எடுத்துட்டு வரமுடியுமா?”

“ஹாஹா… நீ சொன்ன என் இதயத்தையே தருவேன். மா… புக் என்ன. எடுத்துட்டு வரன் மா…”

“ஹாஹா… தேங்க்ஸ் அண்ணா…”

இதற்குமேல் சிகரெட் தாங்காது. கீழே போட்டுவிட்டேன்.

“ம்ம்ம்… அண்ணா வா…”

சில நேரம் வார்த்தைகள் அர்த்தங்ககளின் கணம் தாங்காமல் வெற்று பொருள் பொதிந்த சொற்களாகத் தென்படுகின்றன. அதனால்தான் என்னவோ சில நேரம் எனக்கு வார்த்தைகள்மீது நம்பிக்கை வருவதே இல்லை, சில நேரம்.

கீழே போட்ட சிகரெட் துண்டை மிதிக்காமல் அதைத்தண்டிச் சென்றேன் இருண்ட என் பல்கலைக்கழகம் நோக்கி நடை போட்டேன்.

அத்தனை வேதனையும், கவலைகளையும் காதலையும் சுமந்து இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது மீதமிருக்கும் சிகரெட் துண்டு.