பாதங்கள் வரை தழையத் தழைய பாவாடைத் தாவணியில் பள்ளிச் செல்லும் பருவத்தில் கீழ் வீட்டில் ஆயிஷா குடிவந்து நெருங்கியத் தோழியாகி, சுற்றுப்புறமே கம்மென்று மணக்கும் மட்டன் பிரியாணியை அறிமுகப் படுத்திய கால கட்டத்தில் வாத்தியும் என் ரசனைகளுக்குள் காலடி வைத்தார்.
பிரியாணி ருசியும் வாத்தியின் எழுத்துச் சுவையும் கலந்து கட்டி சம்மணம் போட்டு மனசிலேறி அமர்ந்த காலங்கள் என் டீன்ஏஜ் பட்டாம்பூச்சிக் காலங்கள். விகடன் குமுதம் மங்கையர் மலர் சாவி என அத்தனை வார மாத இதழ்கள் மூலம் வாத்தியாரின் சிறுகதை தொடர்கதை துணுக்குகள் கட்டுரைகள் அறிமுகமாகியது.
பாய் வீட்டு பிரியாணியில் ஒரு நேர்த்தி இருக்கும்..அத்தனை மசாலாக்களும் அளவளவாய், ஆனால் ருசி மட்டும் ஆளைப் போட்டுத் தாக்கும். வாத்தியாரின் எழுத்தும், நேர்த்தியின் மறுபெயர் தான். வார்த்தை மசாலாக்களை வீணாய் விரவி வைக்காமல் அளவாய் தெளித்து வைத்திருப்பார்.
ஆயிஷா வீட்லருந்து பிரியாணி வந்ததும், பாத்திரத்தை திறந்து தட்டுல போட்டு ஒரு வாய் அள்ளி போடறதுக்குள்ள மனசு தவியா தவிச்சிரும். அப்படித்தான் விகடன் தொடர்கதைகளை வெறித்தனமாய் படித்த காலங்களில், புத்தகம் வீட்டுக்குள் வந்ததும் பரபரவென்று பக்கங்களை புரட்டி தொடரை படித்தவுடன் தான் மூச்சே விட முடியும்.
ஒரு பிடி நெய்யூத்தி பிரியாணிக்கு தம் வைச்சு இறக்கினா பளபளன்னு சாதம் மின்னுரத போலத்தான், வாத்தியாரு எந்தக் கதையையும் அசத்தலா முத்தாய்ப்பு வைச்சு முடிக்கிர விதமும். பூவா வெந்துருக்கர கறித்துண்டும், அப்பப்ப வாகாக் கடிக்க அகப்படற எலும்புத் துண்டும், குழையாம பொலபொலன்னு வெந்து உதிரிப் பூவாட்டம் விரல்ல பிசுபிசுப்போட தாராளாமா அள்ளி வாயில வைச்சா ருசி உள்நாக்கில இறங்கி உச்சந்தலை வரைக்கும் ஏறும். கதைக்கரு பரவி இருக்கும் தன்மையும், நகைச்சுவை இழையாய், தேவைக்கேற்ப அறிவியல் தொழில்நுட்பம், தமிழ் சுவை என நடுமனசில் நங்கூரம் பாய்ச்சி உட்கார்ந்து கொள்ளும் இவர் எழுத்துக்கள்.
ருசிங்கறது ஒரொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா மனசோட ஒன்றிப் போயிருக்கும். அது பார்த்து ரசித்த படமாகட்டும், ருசித்த உணவாகட்டும், படித்த புத்தகமாகட்டும், கேட்ட பாட்டாகட்டும்…எல்லாமே ருசியின் வெவ்வேறு வர்ணங்கள் தானே. அப்படித்தான் சுஜாதாவின் எழுத்துக்களும். பிரியாணி சாப்பிட்டு கைய கழுவினதுக்கு அப்புறமும் அதன் மணம் கைல படர்ந்திருக்கும்…அப்படித்தான் வாத்தியின் எழுத்தும் படர்ந்திருக்கிறது மனதில்.
எங்கெங்கோ எத்தனையோ வகை பிரியாணிகளை ருசி கண்டாலும், என் தோழி வீட்டு பிரியாணிக்கு இணையா வேறெதுவும் இப்பவரை சாப்பிடலை. கதைகள் வந்து போகும்…அதை எழுதுபவர்கள் வந்து போவார்கள்…ஆனால் வாத்தியார் ஒருவரே…♥️