நம்பிக்கை ஊற்று தேவைப்படும் பெண்கள்: லக்ஷ்மியின் ஏன் இந்த வேகம்
பெண்ணெழுத்து பல தளங்களில் விரிந்துள்ளது. தமிழ்ப் புனைகதையில் பலகட்டங்களைக் கடந்துள்ளது. பெண்களை எழுத வேண்டும் என்பதற்காகவே பெண்கள் எழுதத் தொடங்கினார்கள் எனச் சொல்ல முடியாது. ஆண்கள் செய்யும் வினைகளைப் போலவே பெண்களும் ஆற்றமுடியும் என்று காட்டுவதற்காகப் பெண்களும் எழுதத் தொடங்கினார்கள். இருபாலாரின் எழுத்திலும் வரும் ஆண்களும் பெண்களும் ஒன்றுபோல் எழுதப்படவில்லை என்ற உணர்வு தலைதூக்கிய நிலையில் பெண்ணெழுத்து – பெண்கள் எழுதிய பெண்ணெழுத்து உருவாகியிருக்கிறது.
மொத்தமாகவே தமிழ்ப் புனைகதையின் தொடக்கக் கவனம் பெண்களை எழுதுவதிலேயே குவிந்திருந்தது. பாரதியின் சந்திரிகையும் வேதநாயகம் பிள்ளையின் ஞானாம்பாளும் ராஜம் அய்யரின் கமலாம்பாளும் மாதவைய்யாவின் பத்மாவதியும் சரித்திரங்களாக்கப்பட்டனர். விரிவான நாவல் வடிவம் மட்டுமல்ல. சிறுகதையின் தொடக்கநிலைகூட மங்கையர்க்கரசியின் காதலையும் குளத்தங்கரையில் சந்தித்துக்கொண்ட பெண்ணின் கதையையும்தான் சொல்ல முயன்றன. ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் லட்சியவாதமும் நல்லொழுக்கமும் தியாகத்தின் வடிவமும் கொண்டவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறியாதவர்கள். அறிய விரும்பாதவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லது அனுப்பப்பட்டவர்கள் என்பதாகக் கதையெழுதிய ஆண்கள் எழுதிக் காட்டினார்கள். ஆண்கள் எழுதியதைப் போலவே தொடக்ககாலப் பெண்களும் எழுதிக்காட்டினார்கள்.
இந்தப் புனைவுகளில் இருக்கும் பெண்கள் சமூகத்தின் நடப்பில் இருக்கும் பெண்கள் அல்ல என்ற பார்வை உருவானபோது நடப்பியலில் உலவும் பெண்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. தன் தவறுகளாலும், உருவாக்கப்பட்ட கருத்தியல் நடைமுறைகளாலும், சமூகத்தின் நெருக்கடிகளாலும் தன்னை அழித்துக் கொள்வதையும், தன் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்று முடிவு செய்வதையும் நோக்கிப் பெண்கள் நகர்ந்தார்கள் அல்லது நகர்த்தப்பட்டார்கள் என்பதைப் புனைகதைகள் சொல்லத் தொடங்கின. தமிழ்ப் புனைகதைப் பரப்பில் வஞ்சிக்கப்பட்ட பெண்களை ஆண்களும் எழுதினார்கள் என்றாலும் அவற்றில் பெண்களைத் தண்டித்துவிடும் ஆண்நோக்கு வெளிப்பட்டது. பெண்கள் செய்த தவறுகள் அல்லது குற்றங்களை மன்னிக்கும் ஆண்களின் கருணையையும் இரக்கத்தையும் எதிர்பார்த்து நிற்கும் பெண்களையே ஆண்கள் அதிகம் எழுதிக் காட்டினர். ஆண்களின் கருணை அல்லது இரக்கத்தைத் தாண்டிப் பெண்கள் வாழவேண்டும் என்ற நம்பிக்கை ஊட்டும் எழுத்துகள் தேவையை ஆண்கள் உணரவில்லை. அதை உணரும் இடத்தில் ஆண்கள் இல்லை என்பதை உணர்ந்த நிலையில்தான் லக்ஷ்மி போன்ற புனைகதை ஆசிரியர்களின் தோற்றம் தமிழில் நிகழ்ந்தது. ரத்த உறவுகள், குடும்ப உறுப்பினர்கள், சொந்த பந்தங்கள் என்ற எல்லைக்குள் நின்று அவர்கள் உருவாக்கும் நெருக்கடிக்குள் தனிமனிசியாகப் பெண்ணொருத்தி படும் பாடுகளை விரிவாகத் தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் எழுதிக்காட்டியவர் லக்ஷ்மி.
டாக்டர் திரிபுரசுந்தரி என்னும் பெயர் கொண்ட மருத்துவரான லக்ஷ்மி, படிப்புக்காகவே எழுதத் தொடங்கியவர். பெற்றோரின் துணையில்லாமல் பாட்டியின் அரவணப்பில் வளர்ந்த லக்ஷ்மி, சொந்த வாழ்க்கையில் தன் விருப்பம்போல முடிவுகள் எடுத்தவர். மருத்துவக் கல்விக்குப் பின் தென்னமெரிக்கா சென்று பணிபுரிந்தபோது கலப்புத் திருமணம் செய்துகொண்டவர். இந்தியா திரும்பிய பின் பகுதிநேரத் தொழிலாக மருத்துவத்தைக் கைக்கொண்ட அவர் முழுநேர எழுத்தாளராக இயங்கினார். அவரது கதைகளில் வரும் பெண்களில் அவரது சாயலை நாம் தேட முடியாது. லக்ஷ்மியின் வாழ்க்கையை அவரது புனைகதைகளுக்குள் தேடினால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது ஏமாற்றமே. ஆனால் முடிவு எடுத்தல், தனித்து வாழ்தல், சார்பற்ற வாழ்க்கைக்குப் பெண்கள் தயாராதல் போன்றவற்றை முன்மொழியும் கதைகளின் வழியாகத் தன்னைக் கதைகளுக்குள் கொண்டுவந்தவர் அவர். அவரது ஒரு கதையை – ஏனிந்த வேகம் என்னும் ஒருகதையை வாசிப்பதின் மூலம் அவர் முன்வைக்க நினைத்த வகைமாதிரிப் பெண்களை நாம் உணரலாம்.
“வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் -சாவதற்கல்ல. உனக்கு எங்கள் பள்ளியில் மூலம் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். இது ஊனமுற்றோர் ஆண்டல்லவா.. ஒருவருக்கு உடம்பில் எந்த பாகத்தில் ஊனம் இருந்தாலும் அதைத் திருத்தியமைத்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டியது.. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் கடமையாகும்.
பாவிகள் – புண்ணியம் செய்தவர்கள் என்று மனிதர்கள் மனிதர்களைக் கணிப்பு செய்ய முடியாது. ஆண்டவனின் கருணைக்கு முன்னால் தீர்மானிக்கப்பட வேண்டிய விஷயம் அது.
பாதிக்கப்படுதலும் பாதிக்கப்பட்டதிலிருந்து விடுபடுதலும் மனிதர்களுக்குத் தேவையான ஒன்று. இதில் ஆண் – பெண் பாகுபாடுகள் தேவையில்லை. ஆனால் இந்திய சமூகம் தொடர்ச்சியாகப் பெண்களுக்குப் பாகுபாடுகள் காட்டுவதையே தனது நிலைபாடாகக் கொண்டுள்ளது. பாகுபாடுகள் காட்டுவதை அந்நியர்களே செய்கிறார்கள் என்பதில்லை. குடும்ப கௌரவம், சமூகச் சூழல் போன்றவற்றை முன்வைத்துப் பெண்ணின் இருப்பு எப்போதும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.இத்தகைய சூழலில் பெண்ணுக்கு நம்பிக்கை ஊட்டும் ஒரு குரல் அல்லது கைப்பிடித்து உதவும் ஒரு கரம் தேவைப்படுகிறது என்பதைச் சொல்லும் எழுத்தும் பெண்ணெழுத்தின் பாற்பட்டதாகவே அமையும்.
தாரணி என்னும் பெண்ணுக்கு உதவும் கரமாகவும் அவள் வாழ வேண்டியவள் என்பதைச் சொல்லும் மனமாகவும் அமைப்பாகவும் இருக்கும் அவள் முன்பு வேலை பார்த்த பள்ளியையும் அதன் முதல்வரையும் முன்வைக்கிறார் லக்ஷ்மி. பெண்கள் மற்றும் பாதிக்கப்படுவோர் நலனில் அக்கறை கொண்ட உலகமாக மாறிக் கொண்டிருந்த – மனிதநேய உலகமாக மாறிக் கொண்டிருந்த உலகம் 1980 -களின் உலகம். உலகப் பெண்கள் ஆண்டைப் போலவே ஊனமுற்றோர் மறுவாழ்வுக்கான ஆண்டொன்றை முன்வைத்து அமைப்புகளும் கொடையாளிகளும் பலருக்கும் உதவினார்கள். அப்படியான உதவியைத் தாரணிக்கு வழங்க முன்வந்தது அந்தப் பள்ளி. அதனால் தாரணி மறுவாழ்வு பெற்றாள் எனக் கதையை அமைத்துள்ளார் . இதற்காகவே – இதனை முன்வைக்கவே கதை நிகழ்வுகளை அமைத்திருந்தால் அது கதையாக இல்லாமல் ஒரு கட்டுரையாகவோ, உண்மைச் சம்பவ விவரிப்பாகவோ முடிந்து போயிருக்கும். அதை உணர்ந்த புனைகதையாளரான லக்ஷ்மி தாரணி ஏன் பாதிக்கப்பட்டாள்; எப்படிப்பாதிக்கப்பட்டாள்; பாதிக்கப்பட்ட தில் அவருடைய பங்களிப்பு என்ன? மற்றவர்களின் நோக்கங்கள் என்ன என்பதை எழுதுவதின் மூலமே புனைகதையின் நுட்பங்களைத் தருகிறவராக மாறுகிறார். கதை தாரணியின் அன்றாடப் பாடுகளை முன் வைப்பதாகத் தொடங்குகிறது:
ஒரு மூட்டைத் துணி. அப்பா, அம்மா, பெரிய அண்ணன், சின்ன அண்ணன், அண்ணி அத்தனை பேரும் காலைக் குளியலுக்குப் பின்னர் களைந்து போட்டுவிட்டுப் போன அழுக்கு துணிகள்
சோப்புத் தூள் போட்டு இரும்பு வாளிகளில் நனைத்து நனைத்து வைத்துவிட்டு வீட்டைப் பெருக்கி, துடைத்து எல்லோருக்கும் மதிய உணவு தயாரித்து விட்டு கிணற்றடியில் தோய்க்கத் போனவள்… அவைகளைத் தோட்டத்து வேப்ப மரங்களுக்கிடையே கட்டப்பட்டு இருந்த கொடியில் பிரித்து உலர்த்திவிட்டு உள்ளே வருவதற்குள் பொழுது உச்சியை எட்டி விட்டிருந்தது. தாகம் நாக்கை விரட்டியது
இந்தப்பாடுகள் படும் தாரணி அந்த வீட்டின் வேலைக்காரியோ வீட்டிற்கு மருமகளாகவோ வந்தவள் அல்ல. அந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்து திருமணத்திற்குக் காத்திருந்தவள். அவள் உடலில் கடுமையான வேலைகளைச் செய்வதைத் தடுக்கும் இதய நோய் இருந்தது. அதனாலேயே வீட்டு உறுப்பினர்களின் வெறுப்புக்கு ஆளானவளாக ஆகியிருந்தாள். அத்தோடு அந்த நோய் காரணமாகவே அவள் மனம் தவறான முடிவொன்றை எடுத்தது. தனது நோயினால் இறந்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் அவள் திருமணமான ஒருவனோடு நட்பு கொள்கிறாள். நட்பாகப் பழகியவளைத் தன் இச்சைக்குப் பயன்படுத்துகிறான் அந்த ஆண். அது வெளிப்படும்போது இனி எதற்காக வாழவேண்டும் என்ற கேள்வி அவள் முன் நிற்கிறது இந்நிகழ்வுகளை அவளது நினைவோட்டமாகச் சொல்லும் லக்ஷ்மியின் கதைகூறல் முறை வாசிப்புச் சுவையுடயதாக இருக்கிறது:
“நான் செய்தது தவறுதான் அதுக்காக வீடே கூடி எனக்கு தானே சாவு வரும் முன் மரண தண்டனை வழங்கிட்டீங்களே? மாசம் என் செலவுக்குன்னு கொஞ்சம் உதவி வந்த சம்பளத்தில் மண்ணைப் போட்டு- அந்தப் பள்ளிக்கூடத்து வேலையிலிருந்து என்னை நிறுத்தி… இப்படி வீட்டில் அடைச்சு வெச்சிருக்கீங்களே..? நான் யார் கிட்ட போய் முறையிட முடியும்
சிட்டுக் குருவிக்கும்- காற்றில் தலையசைக்கும் போகன்வில்லா விற்கும் நீண்ட காலம் வாழ உரிமை இருந்தது. அவளுக்கு..?
மேலே பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு உணவுப் பாத்திரங்களை மேசை மீது வைத்து விட்டு வந்து ஒதுங்கிக்கொண்டாள்.
அவள் விரும்பிய கேசவனும் – அவளை விரும்பிய கேசவனும் ஒருநிலைப்பட்டவன் அல்ல. இவள் விரும்பிய கேசவன் கவிஞன்; ஆங்கிலப்புலமையில் வசீகரம் கொண்டவன். ஆனால் அவளை விரும்பிய கேசவன் காமத்தை – உடலை நோக்கிய வசீகரம் கொண்டவன் என்பதையும் தாரணியின் சொற்களாலேயே முன்வைக்கிறார்
கேசவன் தோற்றத்தில் மட்டும் வசீகரமானவை அல்ல. மனதைக் கவரும் வகையில் பேசும் அளவுக்கு கெட்டிக்காரன்கூட என்பதை சில தினங்களிலேயே புரிந்து கொண்டு விட்டிருந்தாள். அந்தத் தனியார் பள்ளியில் வேலை செய்ததாலோ என்னவோ அவளுள் ஒரு பலவீனம் உருவாகிவிட்டிருந்தது.
ஆங்கில மொழி மீது அபார மோகம்! யாராவது அதை அழகாகப் பேசுவதை கேட்டால் போதும் அவர்கள் வாயையே பார்த்துக் கொண்டிருப்பாள் தாரணி
“இதய நோயாளி. விரைவில் சாகப் போகிறவள். மனதுக்கு பிடித்தவனைக் காதலித்தால் என்ன மோசம் வந்துவிடப் போகிறது என்று தனக்குள்ளேயே சமாதானம்.
வேறுபட்ட இருவரது வசீகரமும் மோதிக்கொண்ட தின் விளைவு? அவள் உயிர் வாழ வேண்டியவள் தானா? என்ற கேள்வியை எழுப்புவதாக முன் நிற்கிறது. அவன் மீது கொண்ட நட்பும் வசீகரமும் உண்மையானது என நம்பி அவள் எழுதிய நாட்குறிப்புகளைப் பறித்துக் கொண்டு அவன் பேசிய பேரம் அருவெறுப்பானது.
இரகசியமான சந்திப்புகள்.. பேச்சுக்கள்.. மனதைக் கவர அவன் புனைந்த கவிதைகள். இவைகள் அவள் மறக்க விரும்பவில்லை.
கேசவன் ஒரு கவிஞன் அல்ல. பெண்களை ஏமாற்றும் கயவன் என்பது பின்னர்தான் முழுவதும் புரிந்தது
“என்னை தனியே சந்தித்தால் தான் திருப்பித் தருவேன். இல்லாவிடில் உன் அப்பாவிடம் கொடுத்து விடுவேன்” என்று அவன் பயமுறுத்தியதும்.. உண்மையில் தாரணி பயந்துவிட்டாள்.
பயம் உண்டாக்கிய தடுமாற்றம் அவளை அவனிடம் ஒப்படைத்துவிட்ட து. அவன் அவளைப் பயன்படுத்திக் கொண்டான். பயன்படுத்திக் கொண்டதோடு முடியாமல் அவனது மனைவி மூலம் பெரிய அவதூறும் பரவி விடுகிறது. தற்செயலாகச் சென்னைக்குச் சென்ற பயணத்தைக் கருவைக் கலைப்பதற்கான பயணமாக மாற்றி விடுகிறது. அந்த அவதூறே அவளைத் தற்கொலைக்கு அருகில் நிறுத்துகிறது. தற்கொலைக்கு அருகில் இருந்தவளுக்கு வந்த ஆறுதலே பள்ளியின் முடிவு. ஊனமுற்றோர் ஆண்டிற்காக ஒருவருக்கு உதவு என்ற முடிவின் படி அவளைத் தேர்ந்தெடுத்து அவள் நோய்க்கு – இதயநோய்க்கு வைத்தியம் செய்வதாகச் சொல்கிறார். அந்த முயற்சி, தனது மனதில் இருக்கும் தவறான எண்ண ஓட்டங்களுக்கும் மருத்துவம் பார்த்துப் புது வாழ்வை வழங்கும் என்ற நம்பிக்கையில் பள்ளியின் முதல்வரிடம் அனைத்தையும் கூறி மன்னிப்பு கிடைக்குமா? என்று கேட்டு ஏங்குகிறாள். அந்தச் சந்திப்பை – ஆறுதலும் நம்பிக்கையும் தரும் அந்தச் சந்திப்பை இப்படி எழுதுகிறார் :
தாரணி மட்டுமே தனியே வீட்டிலிருந்தாள். கதவு லேசாக தட்டப்பட்டது. திறந்த போது அந்த தனியார் பள்ளியின் தலைவி வந்து கொண்டிருந்தாள்.
“அம்மா! தாயினும் மேலான அன்பைக் காட்டும் தங்களிடம் சொல்லுகிறேன் நான் கருச்சிதைவு செய்து கொள்ளவில்லை. ஆனால் கேசவனிடம் பெண்மை அழிந்து போனவள்.தலைவி செல்லம்மாள் அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறிவிட்டு அகன்றார்.
பள்ளித் தலைவியின் ஆறுதலும் நம்பிக்கை ஊட்டும் செயல்களும் மறு உயிர்ப்பைத் தருகின்றன. திரும்பவும் வாழ்வேன் என்று முடிவு செய்துவிட்டாள் என்பதைக் கதாபாத்திரக் கூற்றாகச் சொல்லாமல் ஆசிரியர் கூற்றாகச் சொல்கிறார் முடிவில்:
அவள் அறுவை சிகிச்சை செய்துகொண்டு நீண்டகாலம் ஒரு நல்லவனின் மனைவியாக வாழப்போகிறாள்
தாரணி !நீ நம்பிக்கையை இழக்காதே!
இந்திய சமூகத்தில் ஆண்கள் செய்யும் தவறுகளும் குற்றங்களும் கண்டுகொள்ளாமல் தவிர்க்கப்படுகின்றன. அவர்களே கூட எளிதில் மறந்துவிட்டு இன்னொன்றில் நுழைந்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் தாங்கள் அறியாமல் செய்த சிறு தவறுக்கும் – அறிந்த நிலையில் சூழலால் நேரும் விபத்துகளுக்கும் தண்டனையாகத் தற்கொலை முடிவுகளை எடுக்கின்றனர். தற்கொலைகளும் மரணங்களும் பிறப்புக்கு எதிரானது. பிறந்து வளர்ந்தவர்கள் வாழ்ந்துதான் ஆகவேண்டும் எனச் சொல்லவேண்டியதும் நம்பிக்கையை ஊட்ட வேண்டியதும் இலக்கியத்தின் வேலை. அதிலு பெண்களுக்கு தேவையான நேரத்தில் நம்பிக்கை ஊட்டுதல் முக்கியமானது. அந்த வேலையைச் செய்த எழுத்தாக லக்ஷ்மியின் எழுத்துகளை வகைப்படுத்துவதின் மூலமாகவே தமிழ்ப் புனைகதைப் பரப்பில் அவரது இடத்தை உறுதி செய்ய முடியும்.
முந்தைய தொடர்:https://bit.ly/32hPDNr