பால்ய காலத்தைப் பற்றியான யோசனைகளை இரவு தூங்குவதற்காக படுக்கையில் விழுந்த பிறகு யோசிக்கையில் ஒரு திரைக்காட்சி வடிவில் கறுப்பு வெள்ளை நிறத்தில் நகருகிறது. எவ்வளவு நேரம் தொடர்ந்தாலும் அதுவரையிலுமே தூக்கம் வராது போலிருக்கிறது.

ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகிலான குடியிருப்பைப் பெற்றவர்கள் தடதடத்தோடும் விரைவு ரயில்களின் ஒலியோடு தங்களை முற்றிலுமாக பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு இரவிலும் விரைவு ரயில்களின் ஓட்டம்தான் அவர்களை தூங்க வைப்பதற்கான தாலாட்டு. எப்படி நகர்ப்புறங்களில் கொசுவின் ரீங்காரத்தில் தூங்கிப் பழகிய உடல்களைக் கொண்டவர்கள் வாழ்கிறார்களோ அப்படித்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும். தோட்டம் துறவுகளில் மரத்தடியில் கட்டில்போட்டு தூங்குபவர்களைத் தாலாட்ட பறவை வகைகள் இருக்கின்றன.

என்னைத் தேடிவரும் நண்பர்கள் இரவு நேரங்களில் தூங்குகையில் நான் விழித்துப் பார்க்கையில் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருப்பார்கள். ‘ஏன்?’ என்று நான் வினவுகையில் விரைவு ரயிலானது தலைமீதே தடதடத்து ஓடுவதுபோல் உள்ளது! என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படியானவர்கள் குடிப்பழக்கமற்றவர்கள். குடிவிரும்பிகளுக்கு இந்தத் தொந்தரவுகள் என் அறையில் இல்லை. போதையில் உருளும் அவர்கள் தலைமீது ஆஸ்பட்டாஸ் கூரை விழுந்தால்கூடத் தெரியாது. ஆனால் எனக்கு சில துன்பங்கள் இருக்கும். அறையில் ரவுண்டு கட்டி உருளுவார்கள். டேபிளை டமீரென ஒலி எழும்பும் விதமாய் உதைப்பார்கள். சுவற்றின்மீது இரண்டு கால்களையும் உயர்த்தி வைத்துக்கொண்டும் தூங்குவார்கள்.

இப்படியான நண்பர்களிடம் காலையில் விசாரிக்கையில் அவர்கள் சொல்வது இதுதான், ‘எங்க தல, எங்குளுதெல்லாம் வாடகை வீடு தல! துக்கிளியூண்டு ரூமுக்குள்ள தூங்கிப் பழகிட்டோம். இப்படி விஸ்தாரமா இருக்கிறதால தூக்கத்துல உருண்டிருப்பேன்.’

சிறார் வாழ்வு துவங்குகையில் தண்டவாளங்கள் பக்கமாகச் செல்ல சிறார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டே வந்தது. இருந்தும் பள்ளி விடுமுறை தினத்தை வீட்டினுள் கழிப்பதற்கு அன்றெல்லாம் தொலைக்காட்சிகள் இல்லைதானே! வாரத்தில் ஒரு நாள் உள்ளூரில் சந்தை கூடும். அன்று சிறார்களுக்கு அவர்களின் பெற்றோர் எழுபதுகளில் பத்துப் பைசா கொடுப்பது வழக்கம். எனக்கும் என் தாயார் பத்துப் பைசா கொடுப்பார். சந்தைக்கடையில் விரும்பிய இனிப்பு வகையை வாங்கிச் சுவைக்கலாம். ஆனால் என் தாயார் கையில் பத்துப் பைசாவைக் கொடுத்ததும் என் சிவந்த நிற தாமரைப்பூ வடிவிலான உண்டியலை நோக்கி ஒரு பார்வையை வீசுவார். அவ்வளவுதான். நேராக உண்டியலை நோக்கிச் செல்வேன். அதன் சிறுவாய் வழியாக பத்துப் பைசாவை உள்ளே வாங்கிக்கொள்வது  நடந்துவிடும்.

என் வகுப்பில் பம்பாய், டில்லி என்கிற புனைப்பெயர்களைப் பெற்ற நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களுக்கு ஏன் அப்பெயர்கள் புனைப்பெயராக அமைந்தது? என்றால் அந்த ஊரில்தான் பிறந்ததாக சொல்வார்கள். பம்பாய் என்றால் என் அப்பா ஆசிரியப்பணிக்குச் செல்லும் ஊத்துக்குளிக்கு அருகில் இருக்கலாம் என்ற அளவில் அப்போது யோசனை ஓடியிருக்கிறது. நான்கைந்து வருடம் முன்பாக நண்பரின் வீட்டில் கிரிக்கெட் விளையாட்டை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது அவரது மனைவி எங்களுக்கு தேநீர் கொண்டுவந்து கொடுக்கையில், ‘தேனுங்கொ, இப்பிடி சாமத்துல லைட்டு போட்டு ஆடுறாங்களே.. தெங்கீங்கொ பந்தாட்டம் போட்டுட்டு இருக்காங்கொ?’ என்று வினவினார். அதற்கு நண்பர்  ‘சிட்னில நடக்குது!’ என்றார். ‘அது எங்கீங்கொ இருக்குது?’ என்று அவரது மனைவி வினவ, ‘இதென்னடி சென்னிமலைக்கி அந்தப் பக்கமா இருக்குது! அங்கியே நேராப் போயிப் பாக்கலாம்னுதான் இவனுங்ககிட்ட சொன்னேன்! டிக்கிட்டுக்கு குடுக்குர விலைக்கி தண்ணியப் போட்டுக்கலாம்னு சொல்லிட்டானுங்க!’

பம்பாயும் டில்லியும் தண்டவாளத்தில் தங்களுடைய பத்துப் பைசாவை வைத்து இரண்டு காசுகளாக மாற்றிக் காட்டுவதாய் சபதமிட்டார்கள். ரயில் வரும் சமயத்தில் இருவரது காசுகளும் தண்டவாளத்தில் வீற்றிருந்தன. இரண்டு பத்துப் பைசாக்கள் கிடைத்தால் பின்பாக தாங்களும் தண்டவாளத்தில் வைக்க பைசாக்களோடு ஓரிருவர் நின்றிருந்தனர். ரயில் தாண்டிப் போனதும் டில்லியும் பம்பாயும் ஓடிப்போய் தண்டவாளத்தில் பார்த்தார்கள். சப்பளிந்து போன பைசாவானது பைசாவிற்கு பிரயோசனமின்றி கிடந்தன. பம்பாயும் டில்லியும் தங்கள் காசுகளை இழந்ததற்காக பெரிதாக வருத்தப்படவுமில்லை. கடைசிவரை அவர்கள் இருவரும் வருத்தப்பட்டோ. அழுதோ நான் கண்டதுமில்லை.

என் வீட்டின் முன்பாக மின்சாரக் கம்பம் ஒன்று நின்றிருக்கிறது. 1968-ல் பிறந்தது அது. நான் 69-ல் பிறந்திருக்கிறேன். அப்போது மின்சார விளக்குப் பற்றி எதுவும் தெரியாது. கம்பங்கள் ஊருக்குள் நின்றிருந்தாலும் அவைகள் வெறுமனே நின்றிருந்தன. சிம்னி விளக்கிலான படிப்பு எனக்கு ஐந்தாவதுவரை தொடர்ந்தது. தண்டவாளங்களில் ரயில்கரி பொறுக்க சிறார்கள் கையில் பையுடன் அலைவோம். அப்போது கரி இஞ்சின் ரயில்கள் ‘குச்சு குச்சு குச்சு… கூஊஊ…’ என்றே சென்று கொண்டிருந்தன. என் தாயார் கோவையைச் சேர்ந்தவர். அந்தக் காலத்திலேயே 12-ம் வகுப்பை முடித்தவர். மாமா பொண்ணை கார்போட்டு தூக்கி வந்து மணம் முடித்தவர் என் தந்தையார்.  கோவைக்கு சிறுவயதில் பேசஞ்சர் ரயிலில் செல்வது வழக்கம். கரி இஞ்சின் என்பதால் ஜன்னல்வழியாக வெளியே பார்க்க இயலாது. கரித்துகள்கள் கண்களில் விழுந்துவிடும். அப்புறமென்ன? தேய் தேயென தேய்த்து கண்களைச் சிவப்பாக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

இருபுறமும் மலைகள் சார்ந்த அமைவில் ஊர் இருப்பதால் அந்தக் காலத்தில் விலங்கினங்கள் பல இருந்தன என்றே முன்னைய பெருசுகள் சொல்வார்கள். கரட்டினுள் கழுதைப்புலியைக் கொன்று தானும் இறந்தவருக்கு அதே இடத்தில் ஒரு நினைவுக்கல்லும், அவரை ஞாபகப்படுத்தும் விதமாக அம்மன் கோவிலில் ஒரு நடுகல்லும் நடப்பட்டிருக்கின்றன. அவருக்கிருந்த வீரம் தங்களுக்கும் வேண்டுமென சனம் கற்பூரம் வைத்து கும்பிட்டு பொட்டும் இன்றுவரை இட்டுக்கொள்கிறார்கள். ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்ட பிறகு இரவில் வரும் ரயில்களில் பல விலங்கினங்கள் அடிபட்டு இறந்ததாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதில் புலிகளும் இருந்தன!

கடந்த ஐந்தாண்டுகளாக இங்கே மான்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. மான்களின் வரவுக்கு முன்பாகவே மயில்களின் வரவும் பெருத்துவிட விவசாயம் நாசமானது. நூற்றுக்கணக்கிலிருக்கும் மான்களில் ஒன்றுகூட ரயில்வே தண்டவாளத்தில் இரவு நேரத்தில் அடிபடவில்லை. சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிலர் சாலையை திடீரெனக் கடக்கும் மான்களின்மீது வண்டியைவிட்டு கீழேவிழுந்து பற்களை இழந்திருக்கிறார்கள். ரயில்வே தண்டாவாளத்தில் கரிகள் பொறுக்கிக்கொண்டு வந்தால் கரிஅடுப்புக்கு பயன்படுமென சிறுவயதில் தண்டவாளங்களில் அலைந்திருக்கிறோம். கறி அடுப்பைத்தான் வெளியில் குமுட்டி அடுப்பு என்கிறார்கள்.

போக தெல் ஆட்டம் அப்போது பிரசித்தி பெற்ற ஆட்டம். தரையில் பெரிய வட்டமிட்டு அதனுள் சிகரெட் அட்டைகளை வைத்து (பணம்) குறிப்பிட்ட தூரத்திலிருந்து தப்பட்டையான வட்ட வடிவ கல்லால் வீசி கோட்டுக்கு வெளியே அட்டைகளை நகர்த்துதல். ஒரு ஆட்டத்தில் வெளிவந்த சிகரெட் அட்டைகள் அனைத்தும் அடித்தவனுக்குச் சொந்தம். (அதிகம் அடித்தவன் பணக்காரன்) சிகரெட் அட்டைகள் பனாமா, சிசர்ஸ், கோல்டு ஃப்ளாக் என்று எளிதாக சாலையில் இறைந்துகிடப்பன அனைத்தும் குறைவான தொகையுள்ள பணமதிப்பு உடையன. தண்டவாளங்களில் பயணப்படுகையில் வில்ஸ், ஃபைவ் ஸ்டார் என பெயர் அறியா காலி சிகரெட் பெட்டிகள் கிடைக்கும். அப்படியானவைகள் தொகை மதிப்பில் உயர்ந்தவைகள். இதற்காக தண்டவாளங்களில் வேகாத வெய்யலில் சிறார்களாகிய நாங்கள் வெகு தொலைவு பிரயாணம் செய்வதுண்டு.

தற்கொலைகள் பலவிதங்களில் அரங்கேறுகின்றன. கிராமங்களில் அரளிக்கொட்டைகள் அரைத்துக் குடித்து தற்கொலை செய்துகொள்வது பிரசித்தம். ஆனால் விசயம் தெரிந்து விட்டால் நாய்க்கழிவு கொண்டு கரைத்து குடிக்க வைத்து விடுவார்கள். அப்புறமென்ன ‘உவ்வே’தான். அப்படி நாய்க்கழிவு கரைசல் குடித்தவர்கள் இன்றும் வாழ்கிறார்கள் ஊருக்குள். குடித்தவரும் மறந்திருப்பார், குடிக்கவைத்தவரும் மறந்திருப்பார். கால ஓட்டத்தில் எதுவும் நினைவில் தங்குவதுமில்லை. நாய்க் கரைசலை குடிக்கப் பயந்தவர்கள் தூக்கிட்டுக்கொள்ள முயற்சிப்பார்கள். இத்தனை இருக்க கண்மூடி கண்திறக்கும் முன்பாக விரைவு ரயிலில் அடிபட்டு மரிப்பது. இதில் தப்பித்தவர்களை நான் கண்டதேயில்லை. ‘தண்டவாளத்தில் நசுங்குவதற்காகவே ஒரு தலையை வைத்திருந்தான்!’ என்றொரு கவிதை எழுதியதாக நினைவிருக்கிறது.

தண்டவாளத்தில் அடிப்பட்டவர்கள் பற்றிய சேதிகளை கேட்கும் சமயம் அதைக் கண்கூடாக சென்று சிறுவயதில் காணமுடியாமல் போயிற்று. ஒன்று பள்ளிவிட்டு வரும் முன்பாகவே அரங்கேறியிருக்கும் அல்லது இரவில் நடந்து முடிந்து காலையில் பள்ளி செல்லும்போது தகவல் கிட்டும்.

இப்படியாக நான் முதலாக கேள்விப்பட்டு பார்க்கமுடியாத சம்பவங்களில் ஒன்று உண்டு. இரவு பாசஞ்சர் ரயில் ரயில்வே ஸ்டேசனில் நின்றிருக்க உள்ளூர் குடிமகன் போதையில் தலை கொடுத்த நிகழ்வு. கூடவே நின்றிருந்த சக போதையாளர் அந்த இறப்பை நேரில் கண்டவர். அவரும் இன்று இல்லை. குடிமகன் வண்டி கிளம்பும் சமயம் சரியாக தன் கழுத்தை தண்டவாளத்தில் வைத்துப் படுத்துக்கொண்டாராம். கிளம்பிய ரயிலின் இஞ்சின் தலையை துண்டாக்கிவிட்டு கடந்து சென்ற பிறகு, கூட இருந்த குடிமகன் அவர் தலையைத் தூக்கிக்கொண்டு ஊருக்குள் நுழைந்தாராம். ‘கண்ணுக்கு முன்னாடி தலையை ரயில்ல குடுத்துட்டான் குமரன்!’ சொல்லிக்கொண்டே வீதி வீதியாய் சென்றவரை சிலர் தடுத்து நிறுத்தி, ‘வக்காலி கொண்டுபோயி எடுத்த எடத்துலயே போட்டுட்டு வந்துடுடா! ரயில்வே போலீஸ் வந்தா உன்னியத் தூக்கிட்டு போயிடுவாங்க!’ என்று எடுத்து இயம்ப, தலையோடு மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் வந்து… எடுத்த இடத்திலேயே தலையை வைத்த கதையை இன்று எல்லோருமே மறந்து போய்விட்டார்கள்.

அது ஒரு விடிகாலை நேரம். ஊருக்குள் தகவல் பரவி கிழக்கு வீதியிலிருக்கும் எனக்கு தகவல் கிட்ட தாமதமாகி விட்டது. இருந்தும் அது ஒரு சாவுச் செய்திதான். எப்படியும் தண்டவாளத்தில் அடிபட்ட உடலைக் கண்டுவிடலாம்! நண்பர்கள் சிலரோடு கிழக்கே தண்டவாளத்தில் பயணித்தேன். ‘அதா அந்தப் பாலத்துக்கும் தள்ளி மேற்கேதான்’ நண்பர்கள் சொன்ன தூரத்தில் காகங்கள்தான் குழுமியிருந்தன. இத்தனை காகங்கள் ஊருக்குள் சுற்றுகின்றன என்பதே அன்றுதான் தெரிந்தது. போக நாங்கள் செல்லும் பாதையெங்கிலும் கறித்துணுக்குகள். பக்கத்து ஊர் பெண் தன் குழந்தையுடன் விரைவு ரயிலில் மோதிவிட்டதாக! உடலை எங்கும் காணமுடியாத அளவு பீஸ் பீஸாக கறித்துணுக்குகள்தான் தண்டவாளங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. சம்பவம் நடைபெற்ற இடத்திலும் துணுக்குகள். தண்டவாளத்தை தாண்டி கீழே கிடத்தப்பட்டிருந்த தண்டவாள இரும்பு அடுக்கில் குழந்தையின் தலை சதக்கெனப் போய் நடு மண்டையில் வெட்டி நின்றிருந்தது. பக்கத்து ஊரிலிருந்து மலைக்கரட்டுப் பாதை வழியாக ஓடி வந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணின் கணவரை பாதியிலேயே நிறுத்தியவர் முன்பாக நண்பரின் தலையை மட்டும் ஊருக்குள் தூக்கிச் சென்றவர்தான்.

“புள்ளை உசுரோட இருந்தாச் செரி! புள்ளை உசுரோட இருந்தாச் செரி” என்றவருக்கு இவர் உதட்டைப் பிதுக்க, அப்படியே திரும்பிப் போனவர் வீடு சென்று தூக்குக் கயிற்றோடு கரட்டுக்குள் நுழைந்து கிலுவைமர விழுதில் தூக்குப்போட்டு செத்ததும் அன்றே!

சமீபத்தில் உள்ளூரில் பெண் கட்டி இங்கேயே வாழ்ந்த நண்பர் விரைவு ரயிலின் எதிர்க்கே நடந்து சென்றே மோதி பீஸ் பீஸாகியிருக்கிறார். அந்தக் கொடுமையை நான் பார்க்கச் செல்லவில்லை. அவர் மிக தைரியமான மனிதர். பல சந்தர்ப்பங்களில் அவர் தைரியம் தெரிந்திருக்கிறது. அன்பு மனைவி, பத்தாவது முடித்த பையன், அழகான வீடு, அன்பான வாழ்க்கை என்றிருந்தவர். அவர் தைரியங்களில் ஒன்று ரயில்வே டவரின் உச்சிக்கு மிகச் சாதாரணமாக கீழே நண்பர்களைப் பார்த்து கையசைத்தபடி செல்வார். பலர் நான்கைந்து அடுக்குகள் மட்டுமே மேலே சென்று கீழே பார்த்து கால் வியர்க்க பயத்துடன் கீழே இறங்கி விடுவார்கள். நான் சொன்ன தைரியம் இதுதான்.  அதே தைரியத்துடன்தான் விரைவு ரயிலை தூக்கி வனப்பகுதியில் எறிந்துவிட முயற்சித்தாரோ என்னவோ! அவரின் இறுதிச் சடங்கிற்கு ஏனோ என்னால் செல்ல முடியவில்லை.

முப்பது வருடங்களுக்கும் முன்பாக கூட்ஸ் வண்டியொன்று ஊரில் நின்றுவிட்டது. அப்போது கிட்டத்தட்ட பலரிடம் டி.வி.எஸ். 50. வண்டி இருந்தன. கிராமப்புறங்களில் மளிகைக் கடைகளில் சீமெண்ணெய் கலந்த பெட்ரோல் ஐந்து ரூபாய் அதிகமாக கிடைத்துக் கொண்டிருந்தன. நின்றிருந்த கூட்ஸ் டேங்கர்களுடன் நின்றிருக்க, அதில் ஒரு டேங்கரில் பெட்ரோல் ஒழுகிக் கொண்டிருந்தது. ஒழுகியது என்றால் ஊற்றியபடி இருந்தது. முப்பதாயிரம் லிட்டர் பெட்ரோலை தாங்கியிருந்த டேங்கர். முப்பது டேங்கர்களை இழுத்து வந்திருந்த இஞ்சின் கிழக்கே கடைகோட்டில் நின்றிருந்தது.

தகவலறிந்த உள்ளூர் சனம் முதலாக தண்ணீர் பிடிக்க பைப்படிக்கு காலிக் குடங்களோடு ஓடுவதுபோல ஓடின. கிட்டத்தட்ட நான்குமணி நேரம் போராடி ரயில்வேகாரர்களால் அந்த ஒழுகலை நிறுத்த ஆயிற்று. அதுவரை சனம் குடங்களோடு தண்டவாளங்களில் நடந்தார்கள். தகவல் கசிந்து பக்கத்து ஊரிலிருந்தும் வாகனங்களில் கேன்களோடு வந்து பிடித்துப் போனார்கள். ஒழுகுமிடத்தில் குனிந்து சென்று குடம்வைத்தவர்கள் தொடர்ந்து அதைச் செய்ய இயலவில்லை என்றார்கள். வாசம் நேரடியாக மூக்கில் சென்று மயக்கத்தை உருவாக்க முயற்சிப்பதாக. இதில் பீடி பற்றவைக்க முயன்றவரை காதோடு ஒரு அப்பு அப்பினார் ஒருவர். “தாயோலி! உன்னால எல்லாரும் சாவுறதாடா? ஊரே எரிஞ்சிடும்டா!” எல்லோரும் பிடிக்கிறார்கள் என்பதற்காக பிடித்தவர்கள் அனைவரும் தண்ணீர் குடத்தைக் கொண்டு வைப்பது போன்று பெட்ரோலை வைத்து வெறும் குடத்தை எடுத்து ஏமார்ந்த கதையெல்லாம் இங்கே கிராமத்தில்தான் நடக்கும்.

ரயில்வே கேட் என்று ஒன்றிருந்தது. மிகவும் பழைய முறையிலான திறப்பு அது. மிகநீண்ட காலம் அது இருந்தது. எந்த நேரமும் பூட்டிக்கிடக்கும் கேட்டில் ஓரத்தில் டி.வி.எஸ்., சைக்கிள் மட்டும் எப்படியோ ஜாலம் செய்து மறுபுறம் சென்றுவிடலாம். கேட்டிலிருந்து கிழக்கே ரயில்வே பாலம். ஊரில் ஓடும் இரண்டு பேருந்துகளும் அதன் வழியேதான் செல்லும். போக லாரிகள், கார்கள் என மற்ற வாகனங்களும். மழைக்காலங்களில் தண்ணீர் பாலத்தினுள் தங்கிவிட்டால் திண்டாட்டம்தான். கேட் திறக்கப்பட காத்திருக்க வேண்டும். சிலசமயங்களில் அரைமணி நேர காத்திருத்தல்களும் நடக்கும். இதற்கெல்லாம் தீர்வாக கேட்டை தகர்த்து பெரிய பாலம் அமைத்தது தற்போதுதான். மிகச் சிறப்பான இஞ்ஜினியரின் கட்டுமானம் அது. பாலத்திற்குள் செல்ல ஐந்துவழிகள். ஐந்துவழிகளிலும் மழைக்காலத்தில் தண்ணீர் ஆறாய் ஓடி தங்கிவிடும். இதை தனியே இஞ்சின் வைத்து மோட்டார் போட்டு உறிஞ்சி வெளியே ஊற்ற வேண்டும். இதுதான் இப்போது நடக்கிறது இங்கே! என்ன வெளியூர் ஆட்கள் பாலத்தினுள் கிடக்கும் தண்ணீரைக் கண்ணால் பார்த்துவிட்டால் ஒன்று சொல்கிறார்கள். “இந்த ஊர்லதான் செம மழை! பட்டையக் கிளப்பியிருக்குமாட்ட இருக்குது!”

என் சிறுவயதில் கள்ளுக்கடை இருந்த இடம் இன்றும் கள்ளுக்கடை ஸ்டாப்பிங்தான். சிறுவயதில் அங்கு தொங்கும் முறுக்கு காரமாக நன்றாக இருப்பதால் வாங்கிவர ஓடுவேன். கள்ளுக்கடை ஐயன், ‘ஒரு டம்ளர் கள்ளு குடிச்சாத்தான் முறுக்கு குடுப்பேன்’ என்று ஆரம்பித்திருக்கிறார். இரண்டு டம்ளர் இரண்டு முறுக்கு ஓடியிருக்கிறது. தரை இருக்கிறது என்று எல்லா இடத்திலும் கால்வைத்து நான் விழுந்த கதையை ஒருவர் பழைய எலக்சன் சமயத்தில் எனக்குச் சொன்னார். அவரே மேலும் ஒரு தகவல் கொடுத்தார். அது வேடிகையானதுதான்.

அந்தக் கள்ளுக்கடைக்காரர் கரி இஞ்சின் டிரைவராக பணியிலிருந்து ஓய்வுபெற்றவர். காசில்லாமல் மதிய நேரத்தில் கடைப்பக்கம் வருபவர்கள் அமர்ந்து ஊர் நாயம் பேசிக்கொண்டே, “என்ன இருந்தாலும் நம்ப மாமன் ரயிலோட்டுனவரு தெரியுமா! அதென்ன சின்னத்தான காரியமுன்னா நினைச்சே? நம்மளப்போல ஆளுங்க சூட்டுல நிக்க முடியுமுங்குறே?” என்று பேசி அவரை குளிர வைப்பார்களாம். மாமன் கடைசியில் உச்சி குளிர்ந்து “டேய் பையா! மாப்பிள்ளைகளுக்கு ரெண்டு சொப்பு கள்ளு ஊத்து!” என்று ஆர்டர் போட்டுவிடுவாராம். அந்தக் காலத்திலேயே சரியான கல்லாய்ப் பொறுக்கி வீசி மாங்காய் அடித்திருகிறார்கள் பாருங்கள்!

-வா.மு.கோமு