வெளிகளில் விளையும் மரபுகள்: காவேரியின் இந்தியா கேட்
எழுத்திலக்கியங்கள் தோன்றாத காலகட்டத்தில் பெண் தலைமை தாங்கிய சமூக அமைப்பு இருந்ததாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வேட்டைப் பொருட்களை உண்டு வாழ்ந்த சமூகத்தின் தொடர்ச்சியாக ஓரித்தில் தங்கி வேளாண்மை செய்வதையும் மீன் பிடித்தலையும் கற்றுக்கொண்போது இனவிருத்தியின் பொருட்டுப் பிள்ளை சுமத்தல் வினைக்காகப் பெண்கள் ஓரித்தில் தங்கவேண்டியவர்களாக ஆக்கப்பெற்ற நிலையில் பெண் தலைமை தாங்கிய சமூகம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில்தான் ஆண்மையச் சமூகம் உருவானது என்றும் மானிடவியல் கருத்துகள் சொல்கின்றன. ஆனால் தமிழின் இலக்கியப்பிரதிகள் பெரும்பாலும் பெண் தலைமைக்காலத்தைத் தாண்டி ஆண் தலைமைக்காலமான அரசுருவாக்கக் காலகட்டத்தையே நமக்குக் காட்டுகின்றன.
இல்லறம், மனையறம் என்ற சொற்களைத் திருக்குறள் போன்ற தமிழின் பழைய இலக்கியங்கள் திரும்பத்திரும்பச் சொல்கின்றன. திருக்குறளில் கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்து முதலில் இடம்பெற்றுள்ள இல்லறவியலின் மூன்று அதிகாரங்களும் குடும்ப அமைப்பு உருவாக்கத்தையும் அதன் தேவையையும் சொல்லும் அதிகாரங்கள் மட்டுமல்ல. அவ்வமைப்பில் ஆணின் இடத்தையும் பெண்ணின் இடத்தையும் வரையறை செய்து தரும் அதிகாரங்களாகவும் இருக்கின்றன என்பதை அவற்றின் வைப்பு முறைகொண்டு அறியலாம்.
இல்லறவியல் என்னும் இயலின் தொடக்க அதிகாரமாக இருப்பது இல்வாழ்க்கை. ‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை’ (41) எனத்தொடங்கி,“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என முடியும் அதன் பத்துக்குறள்களும் இல்வாழ்க்கையை -குடும்ப வாழ்க்கையை ஆணின் வாழ்க்கையாகவே சொல்கின்றன. அவ்வதிகாரத்தை அடுத்து இடம்பெறுவது வாழ்க்கைத்துணை நலம். ஆண் என்னும் கணவனின் வாழ்க்கைத் துணைநலமாகப் பெண்ணை நிறுத்தி, ‘மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை’ (51) என இல்லறவாழ்வின் துணைக் கதாபாத்திரமாகப் பேசுகிறது. அவ்வதிகாரத்தின் கடைசிக்குறளில் குடும்ப அமைப்பை முழுமையாக்கும் மூன்றாவது பாத்திரத்தின் – குழந்தைகளின் தேவையை வலியுறுத்தும், “ மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” (60) என்னும் குறளை எழுதி அதிகாரத்தை நிறைவுசெய்கிறது. அங்கே தொடங்கும் குழந்தைப் பேறு,தொடர்ச்சியாக அமைந்துள்ள மக்கட்பேறு அதிகாரத்தில் விரிவடைகிறது. “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற (61) எனத் தொடங்கி, ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல் (70) என நிறைவு செய்துள்ளது.
திருக்குறள் முழுமையாகக் குடும்ப அமைப்பு உருவாகி நிலைபெற்ற காலத்து இலக்கியம். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தலின் தேவை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குச் சங்கப் பெண்கவி பொன்முடி ‘ஈன்று புறந்தருதல்’ என்கிறாள். மனையறம் படுத்துதலின் தொடர்ச்சியாகவே இல்லற வாழ்க்கை தொடங்கியதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தலின் பயனாக இனவிருத்தி நிகழ்கிறது. மனிதப் பெருக்கம் உலகை உருவாக்குகிறது.
கடவுள் உலகத்தைப் படைத்தார் எனச் சொல்லும் சமயங்கள் கூட மனிதர்கள் தொடர்ச்சியாக மனிதர்களை உற்பத்திசெய்வதின் வழியாகவே உலகம் இருப்பதாகவும் இயங்குவதாகவும் முன்வைக்கின்றன. மனித உற்பத்தி தொடர்ந்து நடந்துகொண்டே இருக்க வேண்டும். இந்தக் காரணமே குடும்பங்களை உருவாக்குகின்றன. கணவன் – மனைவி சேர்ந்து வாழும் குடும்ப வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கை என்பதன் அடிப்படையில் தான் அதனைக் குறிக்கும் சொற்களில் அறம் என்ற சொல் பின்னொட்டாகச் சேர்த்தே சொல்லப்பட்டு வந்துள்ளது. அறம் என்ற சொல்லுக்குரிய பொருளாக நிலையான ஒன்றை எந்த இலக்கியமும் இலக்கணங்களும் உருவாக்கித் தரவில்லை. கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்பொழுது பெண்களும் ஆண்களும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் வாழ்க்கையை முன்னெடுத்ததாகத் தெரிகிறது. சார்ந்து வாழ்தலில் ஒருவர் மேல் இன்னொருவர் கீழ் என்பதான படிநிலைகள் பாரதூரமாக இருந்ததாக இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. குடும்ப அமைப்பு உருவாக்கத்திற்கும் இருப்புக்கும் மனித உற்பத்தியை ஒரு காரணமாகச் சொன்னதிலும் நம்ப வைத்ததிலும் மரபான சமய வாழ்க்கைக்கு முக்கியமான பங்கிருக்கிறது.
மனித உற்பத்தியில் முதன்மைக் காரணியாக இருப்பது ஆணாக இருந்த போதிலும் பாரதூரமான பங்களிப்புச் செய்பவராக இருப்பவர் பெண்ணே. பெண்ணே கருவைத் தாங்கி உடல் வடிவத்தையும் அதற்குள் உறையும் உயிர்த்தன்மையையும் தருகிறாள். அதனால் பெண்ணே இனவிருத்தியில் புனிதமான பங்களிப்புச் செய்பவளாகக் கருத்தியல் உருவாக்கப்பட்டு தெய்வத்தன்மையை வழங்கியது சமய நம்பிக்கை. உலகம் இருப்பதிலும் இயங்குவதிலும் பெண்கள் மேன்மையைப் பேசும் சமயநெறி, நடப்பு வாழ்க்கையில் இரண்டாம் நிலையில் இருக்கவேண்டியவள் என்பதை நியாயப் படுத்தவும் செய்கிறது. இதனை வலியுறுத்தும் செய்திகளைத் தமிழின் பக்தி இலக்கியக்காலம் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பெரும்புலவர்களான மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மாயூரம் வேதநாயக சாஸ்திரியார் வரை அனைத்துப் பிரதிகளிலும் வாசிக்கலாம். அதன் மீதான முதல் கேள்வியை எழுப்பும் பெண்களைத் தனது கவிதைகளில் உலவவிட்டவன் கவி பாரதி. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால், செம்மை மாதர் திறம்புவதில்லையாம் என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண்களை அவனிடத்தில் வாசிக்கிறோம். அந்தப் பெண்கள் தங்களுக்கான உரிமைகளைப் பிறந்த வீட்டில் கேட்கத் தொடங்கி, புகுந்த வீட்டில் நிலைநாட்டத் நினைத்தபோது முன்னிறுத்தப் பட்ட கருத்தியல்களே மரபுகள். நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் என்னும் மரபுகளைத் தக்கவைக்கும் சமூக அமைப்பாக இந்தியச் சமூக அமைப்பும் இறுக்கம் பெற்றிருந்தது.பிறந்தகத்தில் காட்டப்படும் வேறுபாடுகளுக்காகப் பெற்றோர்களோடு வாதாட முடியும். தந்தையின் அடையாளத்தால் அழைக்கப்படும் பிள்ளைகளுக்கிடையே வேறுபாடுகள் காட்டப்படுவதில் ஆண் – பெண் அடையாளங்கள் முன் நிற்கின்றன. ஆண் பிள்ளை பெறுவதை மகிழ்ச்சிக்குரியதாகவும், பெண் பிள்ளை பெறுவதைத் துயரநிகழ்வாகவும் உருவாக்கி வைத்திருக்கிறது சமூக நடைமுறைகள். என்றாலும் அந்த வேறுபாடுகள் காட்டப்படாத குடும்பங்களும் உருவாகிக்கொண்டிருக்கின்றன. பெற்ற பிள்ளைகளில் பாலினம் சார்ந்து வேறுபாடுகள் காட்டப்படக்கூடாது என்ற புரிதலோடு இந்தியக் குடும்பங்கள் நகரத்தொடங்கி அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. அப்படி நகர்ந்த முன்னோடி நகர்வுகளும் கூட இந்திய சாதியச் சமூகத்தின் மேல் நிலையில் இருக்கும் பிராமண சமூகங்களிலேயே நடந்தன.
பெண் உரிமை, பெண் சமத்துவம், பெண்விடுதலை போன்ற சொற்றொடர்கள் கருத்தியல் சார்ந்த சொற்களாகவே விவாதிக்கப்படுகின்றன. கருத்தியல் சார்ந்த விவாதங்களில் தெளிவு கிடைக்கும்போது கொள்ள வேண்டியனவும் தள்ள வேண்டியனவும் முடிவாகிவிடும். கருத்தியல் சார்ந்தவை மனத்தடைகள். விடுதலை பற்றிய எண்ணங்களும் சிந்தனைகளும் கருத்தியல் சார்ந்தவையாக மட்டுமே ஐரோப்பிய வாழ்க்கையில் வெளிப்படுகின்றன. ஆனால் இந்திய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் முழுமையும் கருத்தியல் தடைகள் என்று சொல்லிவிட முடியாது. இங்கு தடைகள் புழங்குவெளிகளோடும் புழங்குபொருட்களோடும் தொடர்பு கொண்டிருக்கின்றன.
சமூகத்தைக் கூறுகட்டிப் பிரித்துப் பேசும் சாதியத்தன்னிலைகளின் அடையாளமே வெளிசார்ந்த தடைகளால் தீர்மானமாகின்றன. குறிப்பிட்ட மனிதக்கூட்டம் நுழைவதற்குரிய வெளிகள், நுழையக்கூடாத வெளிகள் என உருவாக்கி வைத்திருக்கிறது வாழ்க்கை முறை. தீண்டுதல், விலக்குதல் என்ற சொற்றொடர்கள் இங்கு புழங்குபொருட்களைக் கையாள்வதில் கவனம் செலுத்தும்படி கோருகின்றன. பொதுத்தளத்தில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் அனைவரும் எந்தவிதத் தடைகளுமின்றித் தொட்டுவிட முடியாது. மரபான வாழிடங்களில் ஊரும் சேரும் பிரிக்கப்பட்ட வெளிகளாக இருக்கின்றன. நீர்நிலைகள் இங்கே பல குழுக்களுக்குத் தடைசெய்யப்பட்ட வெளிகளாக அறியப்படுகின்றன. ஊர்த்தெருக்கள், வழிபாட்டிடங்கள், கல்விச்சாலைகள் போன்றனவும் தடைகளைக் காக்கும் / பின்பற்றும் வெளிகளாக இருக்கின்றன. வெளிகளே பெண்களின் சுதந்திரத்திற்கும் வளர்ச்சிக்கும் தடைகளாக இருக்கின்றன என்பதை உணர்ந்த ஒரு பாத்திரத்தை முன்வைக்கும் ஒரு கதைக்குத் தலைப்பாக ‘இந்தியா கேட்’ என வைத்து ஒரு கதையை எழுதியிருக்கிறார் காவேரி. அந்தக் கதையை வாசிக்கும்போது பெண்களின் நகர்வைக் கட்டிப்போடும் வெளிகளை அம்பலத்தும் தன்மையை நாம் புரிந்துகொள்ள முடியும். அக்கதையின் தலைப்பாக – மையமாக இருக்கும் இந்தியா கேட்டைப் பற்றிக் கதையின் மையப்பாத்திரமான பத்மினியின் நினைவு அலைகள் இப்படி விரிக்கின்றன:
இந்தியா கேட்டின் பிரம்மாண்டமான, வளைந்த ‘ஆர்ச்’ அதற்கு எதிர்மாறாக ஒரு சின்னப் பழுப்பு நிற ‘ஆர்ச்’ மரக்கதவின் வளைவு. ஒரு புழக்கடைக் கதவு. திருச்சியின் பின்கட்டு முற்றத்தில் கதவு. அழுந்த சாத்தப்பட்டுக் கிடந்தது. அதை ஏன் ஒரு மதனியும் இரவில் திருட்டுத்தனமாகத் திறந்து கொண்டு வெளியே எங்கேயாவது ஓடிப்போகவில்லை. கிளிக்குக் கூடு பழகிப் போய்விட்டதா? கூண்டு சிறையாகவில்லை கூண்டு ஒரு வீடாயிற்று. பிறகு அது ஒரு சின்ன உலகமாகவே மாறிவிட்டது .
ஒரு பெண்ணுக்குப் பிறந்தவீடு, புகுந்தவீடு என்ற இரண்டு அடையாளங்களை உரிமையாக்கி, புகுந்தவீட்டில் அவள் வாழவேண்டியவள் என்கிறது இந்தியச் சமூகம். அதை நிறைவேற்றவே திருமணம் என்னும் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தம் ஓராணின் வாழ்க்கைத்துணையாகப் பெண்ணைச் சேர்க்கும் ஒப்பந்தம். ஆனால் நடைமுறையில் அந்த ஒப்பந்தம் ஒருவித வியாபார ஒப்பந்தம் போல நடக்கிறது என்பதை முன் நிகழ்வாகச் சொல்லிக் கொஞ்சம் கோபம் கொண்ட பத்மினியைக் காட்டுகிறார் காவேரி.
நான்கு பகுதிகளாக எழுதப்பெற்ற இந்தக் கதையின் நிகழ்வெளிகள் நான்கு. முதல் வெளி பத்மினியின் பிறந்தகமான சென்னை. இரண்டாவது வெளி புகுந்தகமான திருச்சி. மூன்றாவது வெளி கணவனும் மனைவியுமாகப் பணி நிமித்தம் செல்லும் டெல்லி. நான்காவது பத்மினி தனக்கு மட்டுமாக உருவாக்கிக் கொள்ளப்போகும் தனி வீடு. ஒன்றிலிருந்து நான்காவது வெளியை நோக்கிப் பத்மினியை விரட்டும் வாழ்க்கைச் சட்டகங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் இருக்கும் மரபுகளையும் அதன்வழி அடக்கப்படும் பெண்ணையும் வாசித்துக்கொண்டே நகர முடிகிறது கதையில். பத்மினிக்கும் பலராமனுக்கும் இருந்த மற்ற பொருத்தங்களைவிட பார்க்கும் வேலை சார்ந்த பொருத்தமே இருவரையும் கணவன் – மனைவியாக மாற்றுகிறது என்பதை முதல் பகுதியில் சொல்லித் திருமணத்தை முடித்துவைக்கிறார். பலவற்றையும் பேசி அழித்துவிட்டு அவளது தந்தை வந்து சேர்ந்த முடிவைச் சொல்லும் இந்த வாக்கியங்களே அதற்கான சான்றுகள்:
“மாப்பிள்ளையும் நம்ம பத்மினியைப் போல பாங்கில் வேலைப் பார்ப்பதினால் ஜோடி நல்ல பொருத்தம். ஆஹா அம்பாளுக்குத்தான் நன்றி செலுத்தனும் “ என்றார் பத்மினியின் அப்பா.
சென்னையில் கல்யாணம் முடிந்து பத்மினி திருச்சியில் இருக்கும் புக்ககத்திற்குப் போனாள். அங்கு இன்னும் நிறைய உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு வீடு நிரம்பி வழிந்த து. எல்லோரும் பலராமன் பக்கத்து உறவினர்கள். சென்னைக் கல்யாணத்திற்கு வந்த உறவினர்கள் எப்படி நடந்துகொண்டார்களோ, அப்படியே இங்கும் சொல்லி வைத்தாற்போல ஒரு பக்கம் தலை சாய்த்து கண்ணை மூடிக்கொண்டு பேசினார்கள் பிள்ளை வீட்டார்கள். ஆணே குடும்பத்தின் மையம். அவனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் பணிவிடைகள் செய்யவேண்டியவன் பெண் என்பதைத் திருச்சியின் இருந்த சில நாட்களின் காட்சிகளே காட்டிவிடுகின்றன.
காலையில் நாலரை மணிக்கு எழுந்து மூதாட்டிகளை வணங்கி, புளித்த தயிரைக் கடைந்து, காப்பி கலந்து பழைய காப்பியை விழுங்கி, சமையல் செய்து,பரிமாறி, பிறகு மதனிகளுடன் பழைய சோற்றை ரஸ வண்டலுடன் விழுங்கி, கிணற்று மேட்டில் வெறுங்காலுடன் நின்று, பிறகு புழக்கடையில் உட்கார்ந்து..
வடிகட்டின முட்டாளே.. பாங்க் வேலையில் ஆணுக்கு நிகராய்க் கைநிறையச் சம்பாதிக்கிறாயே, பிறகு மங்கு மங்குன்னு கழுதை சுமை தாங்குவதுபோல நிறைய வேலையைச் சுமந்து கொண்டு செய்யறே. ஆனால் இங்கு வந்தவுடன் உன் மதிப்பு கடுகளவாகச் சுருங்கிப் போகிறது. பின்னே, ஏன் திருச்சிக்கு வருகிறாய்,ஏன்?
இவையெல்லாம் பத்மினியின் மனவோட்ட வாசகங்களே. ஆற்றாமையின் வெளிப்பாடுகள். அந்த ஆற்றாமையின் ஆறுதலாக இருவருக்கும் பிரமோஷனோட தில்லிக்கு மாறுதல் கிடைக்கிறது. அதிலும் கூடப் பலராமனின் உறவினர்கள் அவளை விலக்கிவைத்து அவனையே மையப்படுத்திப் பேசுகின்றனர்.
” ஏண்டாப்பா பலராமா. உனக்கு நல்ல காலம் வரது. கல்யாணம் நடந்த கையோட பிரமோஷனும் கிடைத்துவிட்டது” என்றார்கள்
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு விட்டால் போதும்; இந்தக் கூட்டத்தையும் அவர்களின் மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் விட்டு வெளியேறினால் போதும் என நினைத்துத்தான் தில்லிக்குக் கிளம்புகிறாள் பத்மினி. அவளது நினைப்பு இப்படி இருக்கிறது:
தில்லிக்குப் போவோம். தில்லி ஒரு தலைநகரம். அங்கு போனவுடன் எல்லாமே ஒரு சுற்று விரியும். பலராமன் உள்பட. ஒருவேளை பலராமனும் தன்னைத் திறந்து விட்டுக்கொண்டு விரியலாம்.வளரலாம்.
ஆனால் அவளது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அங்கும் அதே மனநிலைதான் தொடர்ந்தது. ஆரம்பத்தில் பத்மினி தான் தில்லியில் இருப்பது போலவே உணரவில்லை. இதுவும் ஒரு பெரிய அளவிலான திருச்சிராப்பள்ளியோ என்பதுபோல இருந்தது. அவளைச் சுற்றி இருந்த சூழல். அது கரோல்பாகில் ஒரு சின்ன ப்ளாட். கணவன் தன்னை ஆணாக – திருச்சியின் மரபைக் கையோடு கொண்டுவந்த ஆணாக நினைத்துக்கொண்டு வேலைக்குப் போய்வந்து கொண்டிருந்தான். ஆனால் பத்மினிக்குக் கடமைகள் இருந்தன. அந்தக் கடமைகள் அவள் மட்டுமே முடிக்கவேண்டிய கடமைகள்:
காலையில் கண் விழித்ததிலிருந்து பத்மினி ஓயாமல் வீட்டு வேலைகளை முடிப்பதில் மூழ்கியிருந்தாள். இப்போதெல்லாம் ஆபிஸிலும் வேலையின் நெருக்கம் அதிகரித்துக்கொண்டே போயிற்று.
இந்த நெருக்கடியிலிருந்து விடுபடல்கள் அருகில் இல்லை என்பது தெரியும்போது கலங்கிப் போகிறாள். அவனது முடிவையும் கருத்துகளையும் சொல்லவேண்டிய நேரங்களில் எல்லாம் மௌனியாகவே இருக்கும் பலராமனுக்குள்ளும் இருப்பது ஆண் என்னும் அகம்பாவமே. ‘நான் ஆண்; எது செய்வதாயிருந்தாலும் என்னைக் கேட்கவேண்டும்; என் வீட்டிலிருக்கும் பெரியவர்களைக் கேட்கவேண்டும் என இருக்கும் தடைகள் ஒவ்வொன்றையும் நினைவூட்டுவதன் மூலமே பலராமன் என்னும் ஆணின் இருப்பு உறுதிசெய்யப்படுகிறது. ஒருபாடு அழுது தீர்க்கிறாள். தனக்கென ஒரு வீடு வாங்குவது என முடிவெடுக்கிறாள். அதைத் தெரிந்துகொள்ளும் கணவன் காட்டிய கடுமையும் கோபமும் அவனை விட்டுப் பிரிவது என்ற முடிவுக்குத் தள்ளுகிறது அவளை. அவளது அந்த முடிவை அவள் அறிவிக்கும் முறை பலராமன் நினைத்துப் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அமைதியாக ஆனால் ஆணித்தரமாகச் சொல்லிவிடுகிறாள்:
”ஏனென்றால் என் பெயரை உங்கள் பெயருடன் அனாவசியமாக ஒட்டை வைத்துக் கொண்டிருக்கேன். அதை இப்போது நான் எத்தனை வலித்தாலும், வலிக்க வலிக்க பெயர்த்தெடுத்து எறியப்போகிறேன். மீண்டும் தனியாக, முன்போலவே ‘பத்மினி ஐயர்’ என்ற என் குமரிப்பெண் பெயருடன் இருக்கப் போகிறேன். அதற்கு எனக்கென்று ஒரு தனிவீடு சௌகரியமாக இருக்குமல்லவா?”
திரும்பவும் பழையவளாக – தனக்கான வெளியொன்றை உருவாக்கிக் கொண்டவளாக அவள் வெளியேறுகிறாள். இந்த வெளியேற்றம் இந்திய மரபுகளைக் காக்கவேண்டும் என நினைக்கும் ஒரு பெண் எடுக்கும் முடிவு அல்ல. மரபுகள் காலகாலத்திற்கும் உரியவையல்ல; காலதேச வர்த்தமானங்களுக்கேற்ப மாறவேண்டியவை. அப்படி மாறாமல் இருக்கும் என்றால், அதை மீறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நிகழ்த்திக் காட்டுகிறாள் பத்மினி.
இந்தியச் சாதிமரபும், ஆணாதிக்க மரபும் அதை ஏற்றுக்கொண்ட இயைந்து வாழும் பெண்களின் கூட்டத்தையும் சகிக்க முடியாத ஒரு பெண்ணாகப் பத்மினியை எழுதிக் காட்டியுள்ளார் காவேரி. இந்தக் கதையை வாசிக்கும்போது தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பெற்ற அழுத்தத்தால் வீட்டின் முன்வாசல் கதவைப் பின்காலால் எத்திவிட்டுக்கிளம்பிய, இப்சனின் பொம்மை வீட்டு நாயகி நோரா ஹெல்மரை நினைவூட்டுகிறாள் பத்மினி. நோரா ஹெல்மரே பெண்ணியத்தின் முதல் நாயகி. அவள் உதைத்த கதவுகள் இன்னும் ஐரோப்பாவில் நிற்கமுடியாமல் ஆடிக்கொண்டே இருக்கின்றன. நிற்காது ஆடும் வாசல் கதவுகளைத் தாண்டிப் பெண்கள் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள். அவளின் வளர்ச்சி அடைந்த பிம்பமாக பத்மினி தனக்கான வீட்டில் குடியேறுகிறாள் இந்தியத் தலைநகர் தில்லியில்.