கறுப்பி சுமதியின் முகில்கள் பேசட்டும்: உடலின் வேட்கை
“வாழ்வில் இனிமேல் ஒருபோதும் கிடைக்காத சந்தர்ப்பம் என்று எதுவோ இயக்கிக் கொண்டிருந்தது. ஆடி அடங்கி நித்திரையில் மூழ்கி நான் கண் விழித்துக் கொண்டபோது அதிகாலையாகியிருந்தது. பக்கத்தில் சயன் சீரான மூச்சோடு நித்திரையாயிருந்தான். நிர்வாணமாய் இரு உடல்கள். நான் எழுந்து உடுப்பை போட்டுக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எனது அறையை நோக்கி ஓடிப் போனேன். நண்பிகள் விழித்துக் கொள்ளு முன்னர் போய்விட வேண்டும் அவர்களுக்கு இரவு நான் எங்கு தங்கினேன் என்று சொல்லப் போகிறேன் ? தெரியவில்லை. ஆனால் உண்மை சொல்லப் போவதில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”
ஒரு ஆடவனோடு உறவுகொண்டுவிட்டுக் களிப்புடன் வெளியேறும் பெண்ணொருத்தி தான் தங்கியிருக்கும் – நண்பிகளோடு தங்கியிருக்கும் இன்னொரு அறைக்கு ஓடிப்போவதைச் சொல்லும் கதாபாத்திரம் பெண். ஓடிப்போய் தன் நண்பிகளிடம் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் சொல்கிறாள். அப்படிச் சொல்லக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் சொல்கிறாள்.
யாரும் பார்க்கும் முன் ஓடிப்போய்விட வேண்டும் எனவும், யாருக்கும் தெரியக்கூடாது எனவும், நினைக்கும்போது அந்த உறவைத் தகாத உறவு எனச் சமூகம் வகைப்படுத்தும் என்பதையும் அறிந்திருக்கிறாள். முறைப்படியான – அங்கீகரிக்கப்பட்ட திருமணத்தின் வழியாகக் கணவனான ஆணோடு மட்டுமே உடலுறவு கொள்ளச் சமூகம் அனுமதிக்கிறது. இந்தக் கட்டுப்பாடு பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் கட்டுப்பாடு. அந்த உறவை மட்டுமே தக்க உறவு – தகுதியான உறவு என்கிறது. அதைத் தாண்டிய எல்லாவகை உறவையும் தகாத உறவு என்று வகைப்படுத்தித் தண்டிக்கிறது சமூக நடைமுறை. சமூக நடைமுறைகள் ஒத்துக்கொள்ளாத உறவில் ஈடுபட்ட பெண் – அதைப் பெரும் சாபமாகக் கருதி விமோசனத்திற்காகக் காத்திருந்ததை நமது புராணக் கதைகளும் தொன்மக் கதைகளும் சொல்லியிருக்கின்றன.
பத்தினிப் பெண்களின் கதைகளாகவும், தெய்வக்கற்பின் வெளிப்பாடுகளாகவும் சொல்லப்பட்ட கதைகளைத் தாண்டி நவீனத்துவம் நுழைந்த பின் எழுதப்பெற்ற கதைகளும் கூடப் பெண்ணின் மனம் எப்போதும் குற்றவுணர்வுக்குள் தவித்தது என்றே எழுதியிருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு ஒருவனைக் காதலித்துவிட்டு – உடல்சார்ந்த தொடுதல்களும் உறவுகளும் நடந்த நிலையில் அவனைக் கல்யாணம் செய்துகொள்ள முடியாத சூழலில் பெரும் குற்றவுணர்வோடு தனது உடலைச் சுமந்து திரியும் பெண்களை இலக்கியங்களும் நாடகங்களும் சினிமாக்களும் காட்டியுள்ளன. இன்னொரு பெண்ணோடு கணவன் கொண்ட தகாத உறவை ஏற்றுக் கொண்டு கொண்டாடியவர்களை உதாரண மனுசிகளாகவும் முன்வைத்துள்ளன பழைய இலக்கியங்கள். இதன் எதிர்நிலையில் ஆண்கள் வாய்ப்புக்கிடைத்தபோது இன்னொரு பெண்ணிடம் உறவுகொண்டதைப் பெரும் குற்றமாகக் கருதாமல் பெருமையாகச் சொல்லிக் கொள்வதையும்கூட இலக்கியங்கள் எழுதிக் காட்டியுள்ளன. தனது மனைவியிருக்கும்போது இன்னொரு பெண்ணை முறைப்படியாகத் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆணுக்குப் பெண் அனுமதி தரலாம்; அவள் அனுமதியோடு செய்யப்படும் இரண்டாவது மூன்றாவது திருமண உறவுகள் சட்டப்படி செல்லும் என்பதுதான் நடைமுறை. இத்தகைய நடைமுறைகள் பெண்ணுக்கு இல்லை.
ஒரு பெண் உடல் ஒரேயொரு ஆணுடலோடு மட்டுமே உறவுகொள்ளவேண்டும்; அதுவே கற்புநிலை என்ற வரையறையின் பேரில் உருவாக்கப்பெற்ற தக்க உறவுX தகாத உறவு என்ற எதிர்நிலையை ஆண்கள் எழுதிய பனுவல்கள் பெரும்பாலும் கேள்விக்குட்படுத்தவில்லை. அப்படியான உறவுகளை மையப்படுத்திக் கதைகளை எழுதியிருந்தாலும் பெண்கள் தொடர்ச்சியாகக் குற்றவுணர்வில் தவித்ததாகவே எழுதியுள்ளனர். விதிவிலக்காக ஜெயகாந்தனின் கதைகளை மட்டுமே சொல்லமுடியும். தமிழில் கவிதைகள், கதைகள் எழுதிய பெண்களும் பெரிதாக விவாதிக்கவில்லை.
கற்புநிலை என்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அதனைப் பொதுவில் வைக்க வேண்டும் என்ற சொல்லாடலிலிருது உருவாகும் பெண்ணெழுத்துகளில் இவையெல்லாம் விவாதப்பொருளாக ஆகவேண்டியவை. பாலியல் விருப்பம், பாலியல் தெரிவு, பாலியல் கொண்டாட்டம், பாலியல் விடுதலை போன்றன ஆண்களுக்கானவை மட்டுமல்ல; பெண்களுக்குமானவை என்கிறது தீவிரநிலைப் பெண்ணியம். எதிர்ப்பாலினரின் மீதான் ஈர்ப்பும் உடல்களின் உரசல்களும் சேர்க்கையும் அன்றாட நிகழ்வுகளைப் போன்றவையே. வழக்கமான உணவுக்குப் பின்னும் புதிதாகப் பார்க்கும் ஒரு கனியையோ, குடிபானத்தையோ ருசித்துப் பார்க்கும் ஆசைபோன்றது எனக் காட்ட முயல்கிறது.
வெகு இயல்பாக ஏற்படும் பாலியல் விருப்பத்தைக் கற்போடு சேர்த்துப் புனிதமாக்கியதின் விளைவாகவே தக்க உறவு; தகாத உறவு என்பதான சொல்லாடல்கள் உருவாகின. அதன் தொடர்ச்சியாகக் குற்றவுணர்வு கொண்ட மனத்தின் தவிப்புகளை எழுதிக்காட்ட வேண்டியதாகியது என்பது அவ்வகைப்பெண்ணியவாதிகளின் நிலைப்பாடு.இந்நிலைப்பாட்டைக் கவிதைகளில் நீண்ட காலமாகச் சொல்லிவருகின்றனர் பெண்கள். கவிதை வடிவம் வெளிப்படையாக எதனையும் காட்டாது என்பதால் அதற்குள் செயல்படும் பெண் மனத்தை வாசிப்பவர்களின் நிலைப்பாட்டிற்கேற்ப விளக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் புனைகதை அப்படியான பூடகத்தை அனுமதிப்பதில்லை. அதற்கு ஒருவித வெளிப்படைத் தன்மை உண்டு. கதையின் மைய விவாதத்தை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காட்டிக்கொள்ளாமல் கதையை முடித்துவிட முடியாது.
தீவிரவாதப் பெண்ணிய நிலைபாட்டைத் தொடர்ச்சியாகத் தனது கதைகளில் எழுதிப் பார்க்கும் தமிழ்ப் புனைகதையாளராக இருக்கிறார் கறுப்பி சுமதி அண்மையில் வந்துள்ள உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும் .(கறுப்புப்பிரதிகள், 2018)என்ற சிறுகதைத் தொகுதியில் இருக்கும் 13 கதைகளுமே பெண்ணியம் என்னும் கோட்பாட்டு நிலையை உள்வாங்கிப் பெண்களையும் ஆண்களையும் முன்வைக்கும் கதைகளாக இருக்கின்றன. 13 கதைகளில் மூன்றாவது கதையாக இருப்பது முகில்கள் பேசட்டும் என்ற கதையின் மையவிவாதமே தொடக்கத்தில் தரப்பட்ட விவரிப்பு. விவரிக்கப்படும் அந்த நிகழ்வில் இடம்பெறும் அந்தப் பெண் என்னவகையான மனநிலையில் இருந்தாள் என்பதையும் அவளது மனவோட்டம் என்னென்ன முடிவுகளை எடுத்தது என்பதையும் கதையில் எழுதிக் காட்டுகிறார் கறுப்பி சுமதி:
அதன் பின்னர் பெட்டிகளை அடுக்குவதும், ஓய்வெடுப்பதும், இந்தியப் பயணத்தை மீட்டுப் பார்த்து சிரித்து மகிழ்வதுமாக இரண்டு நாட்களையும் கழித்து கனடா திரும்பினோம்.அந்த இரண்டு நாட்களும் நான் தனியே இருப்பதை தவிர்த்தேன்.
என் நினைவு சயனைச் சுற்றி வருவதை தவிர்ப்பதற்குத்தான் அப்படிச் செய்தேன் என்பதை நானே ஒப்புக்கொள்ள மறுத்துக் கொண்டிருந்தேன். என் சந்தோசத்தை அமுக்கி குற்ற உணர்வு மேலோங்கி மேலோங்கி என்னை அவஸ்தைக்குள் தள்ளி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்
உண்மைக் காதலுக்குத் துரோகம் செய்துவிட்டேன் என்று அவஸ்தைப் படவோ, இல்லாவிட்டால் நியாயப்படுத்தவோ நான் விரும்பவில்லை. “யு நோ வாட்?” உங்களுக்கு இதெல்லாம் விளங்காது. எனக்கும் சயனுக்கும் ஒரே அலைவரிசை, இரண்டு பேரும் டிக்கன்ஸ்சை விழுந்து விழுந்து வாசிப்போம். கொரோசாவாவின் திரைப்படங்கள் என்றால், அம்மாடியோவ் சாப்பாடுகூட வேண்டாம். வீட்டில் எப்போதுமே கசல் மியூசிக்தான். இத்யாதி இத்யாதி நான்சென்ஸ் எல்லாம் அவிழ்த்து விடப் போவதில்லை அந்த இரவு ஐ வாஸ் லுக்கிங் ஃபார் எ குட் கெம்பெனி. அவ்வளவுதான் அந்த இடத்தில் சயனுக்குப் பதிலுக்காக வேறு ஒரு ஆண் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்குமா என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை .இருக்கலாம் இல்லாமலும் இருந்திருக்கலாம் சம்திங் அபொட் சயன்.. என்னை அவனிடம் இழுத்துச் சென்றது அவ்வளவுதான்.
அந்த நிகழ்வை மறக்கத் தக்க நிகழ்வாகச் சொல்லும் அவள் இதையெல்லாம் தனது கணவனிடம் சொல்லிப் பாவ மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறாள். இந்தத் தெளிவு நடைமுறை வாழ்க்கையில் பலரும் கொண்டிருக்கும் தெளிவுதான். ஆண்கள் ஒவ்வொரு கணத்திலும் வெவ்வேறு குற்ற நடவடிக்கைகளைச் செய்துவிட்டு மறந்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்; ஆனால் பெண்கள் மட்டும் குற்றவுணர்வுக்குள் தவிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏன் பெண்கள் மட்டும் தங்கள் வாழ்க்கையை இழக்க வேண்டும் என்ற கேள்வியாக இருக்கிறது. அதனையும் கதையின் நிறைவுப்பகுதியில் சொல்லிவிடுகிறார்:
அவனோடுடனான எனது வாழ்க்கையை எதற்காகவும் இழக்க நான் தயாராயில்லை. இந்திய பயணத்தில் அனைத்தையும் நான் ஜேயிற்குச் சொல்லிக் குதூகலிக்க போகின்றேன்.ஆனால் ஒன்றை மட்டும் மறைக்கப் போகிறேன். என் மும்பை பயணம் மறக்க முடியாத ஒன்று அதில் சயன் ஒரு துளி மட்டுமே.
விமானம் முகில்களுக்குள் நுழைந்து சென்று கொண்டிருந்தது நான் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டேன். எனக்கு ஜே விமான நிலையத்தில் காத்திருப்பான்( ஜெ. அவளது கணவன்)
சயனோடு ஏற்பட்ட உறவு ஒருதுளி எனச் சொல்லும் அவள், அவனைச் சந்தித்ததையும் ஈர்க்கப்பட்டதையும் பெரும் தயக்கத்தோடு நடந்ததாகவோ, குற்றச் செயலில் ஈடுபடப்போகிறோம் என்ற தவிப்போடு செய்ததாகவும் காட்டவில்லை. இந்தக் கூறுகளே அந்தக் கதையைத் தீவிரநிலைப் பெண்ணியக் கதையாக முன்வைக்கிறது.
முகில்கள் பேசட்டும் கதையின் விவாதப்பொருள் இதுதான். ஆனால் கதையின் கட்டமைப்பில் இந்நிகழ்வின் இடம் ஐந்தில் ஒரு பங்குதான். மற்ற நான்கு பங்கு அவர்களின் பயண ஏற்பாடு, மும்பையில் சுற்றித்திரிதல், அங்கே நினைவுப் பொருட்களை வாங்கிப் பெட்டிக்குள் நிரப்புதல், இரவில் தங்குதல் எனப் பயணத்தையே விரிவாக எழுதியிருக்கிறார். இந்தப் பயணம் வழக்கமாகப் போகும் பயணமல்ல. கணவன் இல்லாமல் நண்பிகளாகச் சேர்ந்து திட்டமிட்டுக் கனடாவிலிருந்து வந்த இந்தியப் பயணம். மற்றவர்களுக்குக் கணவர்களின் நெருக்கமும் அன்பும் இப்போது உடைமைப்படுத்தும் நிலையில் இல்லை. ஒருவிதமாக விடுபட்ட பறவைகள். நால்வரில் இவள் இலங்கைத் தமிழ்ப்பெண்.இவளை விட்டுவிட்டு அவளது கணவன் ஜெயக்குமார் பல பயணங்களை மேற்கொள்வான் . கசன்ரா,டோனா, ஜனிபர் ஆகிய மூவரும் அவளோடு உடன் பணியாற்றுபவர்கள். வெவ்வேறு மொழிப்பின்னணியிலிருந்தும் தேசப்பின்னணியிலிருந்தும் கனடாவிற்கு வந்தவர்கள். தனியாக நான்கு பெண்கள் மேற்கொண்ட அந்நிய நாட்டுப் பயணத்தைச் சொல்வதாகவே கதையின் பெரும்பகுதி இருக்கிறது. ஆனால் கதை எழுப்பும் விவாதம் கடைசிப்பகுதியில் தான் விவரிக்கப்படுகிறது. இருவார காலப் பயணத்தின் போக்கில் அதுவும் நிகழ்வதாகச் சொல்ல வேண்டும் எனத் திட்டமிட்டு எழுதியுள்ள கவனம் முக்கியமானது. இப்படியானதொரு நிகழ்வு நடக்கப்போகிறது என்றொரு முன் குறிப்புகள் எதுவும் கதையில் இல்லாமல் திடீரென்று அந்தச் சந்திப்பு நிகழ்ந்ததாகவும் தங்கள் இணைகளைப் பிரிந்திருந்த இருவருக்கும் அந்த இரவு தேவைப்பட்ட து; அதில் ஈடுபட்டார்கள் என்பதாக எழுதுகிறார்.
அவன் தமிழில் கேட்டான் கனடா வா என்று. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவன் ஹிந்திக்காரன் என்று நான் நினைத்திருந்தேன்.நான் ஓம் என்பதாய் தலையை அசைத்தேன். தான் ஒஸ்திரேலியாவிலிருந்து விடுமுறைக்கு வந்திருப்பதாக சொன்னான்.மீண்டும் மௌனம். புன்னகை, பார்வைகள் சுழன்றன எனது ரிங்க் முடிந்திருந்தது . வெயிட்டரிடம் கைகாட்டி எனக்கு இன்னுமொரு ரிங்க் ஓடர் செய்தேன். தனக்கும் ஒன்று என்றான். ரிங்க்ஸ், நடனம், உரையாடல் என்று சில மணித்தியாலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தச் சில மணித்தியாலங்களில் நான் அவனைப் பற்றி தெரிந்து கொண்டவை. சயன் திருமணம் ஆனவன் இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தகப்பன். மனைவியும்,குழந்தைகளும் மனைவியின் பெற்றோரோடு விடுமுறையை கழிக்க லண்டன் போய்விட்டார்கள். பையனுக்கு லண்டன் பிடிக்காது. அவன் கனவுகளில் ஒன்று இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது. மும்பையைச் சுற்றி பார்க்கும் ஆவலோடு சில நண்பர்களோடு வந்திருக்கிறான்.
பாலியல் விருப்பங்களும் தெரிவுகளும் திட்டமிட்டு நிகழ்வன அல்ல; அதன் போக்கில் உடல்கள் அவாவுகின்றன என எழுதிக்காட்டியுள்ள கறுப்பு சுமதி இந்தக் கதையில் கவனிக்கத் தவறிய ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். தனது விருப்பத்தைத் தெரிவு செய்து ஈடுபாடு காட்டும் கதாபாத்திரத்திரத்திற்குப் பெயரிடாமலேயே கதையைச் சொல்கிறார். மற்றப் பாத்திரங்கள் எல்லாம் புனைவுப்பெயர்களோடு இருக்கின்றன. ஒருவேளை சயன் உள்பட அனைத்துப் பெயர்களும் உண்மையான பெயர்களாக இருக்கலாம். ஆனால் முகில்கள் பேசட்டும் கதையின் கதைசொல்லியாகவும் மையவிவாதத்தைத் தாங்கும் பாத்திரமாகவும் இருக்கும் அவளுக்குப் பெயர் இல்லை. அத்தோடு எப்போதும் ‘நான்’ என்று தன்மைக் கூற்றாகவே நிகழ்வுகளையும் மனவோட்டங்களையும் உரையாடல்களையும் சொல்கிறார். கதைக்குள் இருக்கும் இவ்விரண்டு கூறுகளும் சேர்ந்து புனைகதையைக் கட்டுரையாக மாற்றிவிடும் வாய்ப்புகளே அதிகம். கட்டுரையாக வாசிப்பதற்குக் கறுப்பி சுமதியின் கனடா வாழ்க்கை, தொடர்ச்சியான பயண ஈடுபாடு, கலை இலக்கியச் செயல்பாடுகளில் அவரது சார்புநிலை போன்றனவும் சேர்ந்துகொள்ளும் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தத் தொகுப்பிலிருக்கும் பெரும்பாலான கதைகளில் இந்தக் குறைபாடு இருக்கிறது. தன்மைக் கூற்றில் சொல்லப்படும் புனைவுகள் எழுதுபவரின் இரண்டகமற்ற மனநிலையையும் பெண்ணியம் போன்ற கருத்துநிலையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டையும் காட்டலாம். அது ஒருவித பலம்தான். ஆனால் புனைகதையின் அழகியலைக் குறைத்து விடும் ஆபத்துக் கொண்டது. இந்தக் கதையை மட்டுமல்லாமல் அந்தத் தொகுப்பில் உள்ள கதைகளைப் படர்க்கை கூற்றில் எழுதியிருந்தால் அவை உண்டாக்கக் கூடிய தாக்கம் கூடுதலாக இருக்கும் என்பது எனது கணிப்பு.