” காலம் என்பது கற்பனை. அதில் இன்னொரு கற்பனை மனிதன் “
– கள்ளம்.. ( நாவல் )
எப்போதும் இரண்டு ரவுண்டிற்கு மேல் செல்லாது. இன்று கொஞ்சம் தடுமாறும் நிலைக்கு ஆளானது தான் மிச்சம். கணேசனுடன் பைக்கில் ஏறியது தான் ஞாபகம் . கொஞ்சம் கண் திறந்து பார்க்க முயற்சிக்கிறேன்.மறுபடியும் மூடிக் கொள்கிறேன். பின் கண் திறக்க முயற்சிக்கையில் ஒரு கை என்னைத் தூக்கி கட்டிலின் முன் பகுதியில் சாய உதவி செய்ததை மங்கலான கண்ணால் பார்க்க முடிந்தது. இங்கிட்டும் அங்கிட்டும் என ஒரு உருவம் நகர்கிறது. பின் அது என்னைக் கன்னத்தில் தட்டுவதை உணர்ந்தேன்.வாமிட் வருது என நான் உளறியவுடன் பக்கத்தில் ஓடிப் போய் ஒரு டப்பாவை எடுத்து வந்து கையில் கொடுத்ததும் மதியம் சாப்பிட்ட எல்லாம் வெளியேறின, இப்போதுதான் நிதானம் கண்வசமாகியது. ஒரு விசாலமான அறை தான். இரண்டு, மூன்று விளக்குகள் தன்னை ஒளிபடுத்திக்கொண்டிருந்தன. . நேற்று அவள் பிறப்புறுப்பில் கை வைத்தது மட்டுமே ஞாபகம் .அருகில் வந்த அவள் சேரை என் எதிரில் போட்டு உட்கார்ந்தாள். தலையை அந்த ஜன்னல் பக்கம் திருப்பி எதையோ பார்த்து கொண்டிருந்தாள்.
கண்களை திறக்க முற்பட்டவன் சரிவர செய்ய முடியாமல் தனக்கான ஆதியை கண்டடைய முற்பட்டுக்கொண்டிருக்கிறான்.அது அவனின் போதையால் கூட இருக்கலாம். இப்போதெல்லாம் அவன் வீட்டின் பாதையை மறந்து விடுகிறான். அவனால் அதை ஞாபகப்படுத்த முடியவில்லை. அப்போது சிறிது ஓய்வு தேவைப் படும். ஆனால் நிழல் தேடி எங்கு போவது? சுற்றிப் பார்க்கிறான். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை ஏதோ வளைவுகளாலான நெருக்கங்களை கொண்டப் பாறைகள் தான் இருக்கின்றன. அவன் இருக்கும் நிலம் அவனை மீண்டும் கேள்வி எழுப்ப தூண்டியது வெறும் மணலாகிப் போன பாறையின் பிம்பங்களை உணரத்தொடங்கினான். அது அவனின் மனவெளியை விரிவுபடுத்தியது.
மணல் அப்பி இருக்கும் நிலத்தில் கால்கள் சுடுவதை ஆரம்பத்தில் உணர்ந்தவன் பின் அது மரத்துவிட்டது போன்ற உணர்வாகத்தான் மாறியது .பாறை மீது படுத்துக் கொண்டான். அது வெயிலுக்கு அனல் கொண்ட மேடு ! . ஒரு முறை தன் வீட்டை நினைத்துப் பார்த்தான். அது அவனுக்கு மறந்திருக்கக்கூடும். இந்த பாறைகலுடன் வந்து சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அவன் பல வருடங்களை அங்கேயே கடந்திருந்தான். கையால் முகத்தை மூடிக் கொண்டான். தூங்க முற்பட்டவனை சிறு ஓசை எழுப்பி விட்டது. அது எங்கிருந்து வருகிறது? அதன் உருவம் எது? எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. அது எப்போதும் அவனது தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்தது.
அவன் அந்த ஓசையை கேட்டு மறுபடி மறுபடி எழுந்து கொண்டே தன்னை அயர்ச்சியாக்குகிறான். அவனுக்கு தான் எப்போதோ இறந்து விட்டோம். நாம் இல்லை என்பதில் ஒரு உறுதி . அவனுக்கு தாகமோ, பசியோ எடுக்க வில்லை. அப்படி எடுத்தாலும் அங்கு பாறைகளைத் தவிர எதுவும் இல்லை அதனால்தான் எந்த விஷயத்திலும் அவனுக்கு ஒரு ஈடுபாடு இல்லை .அவன் அடிக்கடி தன்னுடைய சடலத்தைத் தேட முற்படுவான். அவனின் தொடர்ச்சி என்று எண்ணி !
அவனின் உடல் இங்கு தான் எங்கோ இருக்க கூடும் என்பதில் முழு நம்பிக்கையோடு அந்த அறையில் இப்போதிருந்த மனித உடம்பை மனிதனாகி அடைய இன்னும் பல நூறாயிர கால கட்டம் இருக்க கூடும் என்பது ஒரு கணிப்பு…
அந்தப் பாறைகளை மிகவும் நேசித்தவன் . அதனுள் என்ன இருக்கும் என்பது அவனுக்குப் பெரும் கேள்வியாகவே இருக்கிறது . அவனைத் தவிர அங்கு யாரும் இல்லை என்பதில் ஒரு பயமும் இல்லை அவனுக்கு. அந்த வீட்டைப் பல காலம் விரும்பிக் கட்டிக் கொண்டான் . அதை இந்தப் பாறைகள் மூடி இருக்கக் கூடும் என்று யோசித்துக்கொண்டான். மனிதன் தான் வாழ விரும்பும் இடத்தில் வீட்டை கட்டி கொள்ள அவன் எடுத்த முதல் சிந்திப்பாக கூட இருக்கும் .. ஆனால் அவன் வீட்டை ஒரு போதும் கட்டவில்லை அதற்கு இங்கு பாதைகளும் இல்லை. அது அவனுடைய பிரதிபலிப்பு! மணலாகி போகவிருக்கும் பிரதிபலிப்பு ! அவனின் மரணம் !
அடிக்கடி அந்த ஓசைக்கு வடிவம் கொடுக்க முற்படுவான். அவன் தன்னைப் போல இருக்க கூடும் என்ற ஒரு வித முன்னெச்சரிக்கையை அவனுக்குக் கொடுக்க, ஒருநாள் அந்த ஓசை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தூங்கும் போது வருவதால் அவன் அடிக்கடி இப்போது தூங்குவதாக நடிக்கிறான். அந்த சத்ததை விரும்பிக் கேட்டுக்கொண்டே அந்த மணலில் மிதந்து கொண்டிருந்த பாறைகள் சூரியனால் அவன் கண்களைக் கூசி கொண்டிருக்க, முதல் முறையாக தூங்காமல் இருக்கும் போது அந்த ஓசை கேட்க திடுகிட்டவனாய், சூரியனின் வெளியையே ஓசையாக கருதியிருக்கிறான்.
அதுவே தொடக்கத்தின் நீட்சி! இந்த முறை நிறைய, அதுவும் கேட்கும் திசை தெளிவாக இருந்தது.
அந்தப் பாறைகளின் இடுக்கில் ஏறி மேலே ஏறத் தொடங்கினான். இதுவரை பாறைகள் மேல் ஏறியது இல்லை. அதை தூங்கவே பயன்படுத்தி இருக்கிறான்.
ஏறி ஏறி, ஒரு பாறையின் மேல் நின்ற அவனுக்கு, அவனைப் போலச் சிலர் அங்கு அவனது உடலைச் சுற்றி உட்கார்ந்து இருந்தனர். எதையும் பொருட்படுத்தாமல் மௌனமாய் மரணத்தின் கொண்டாட்டத்தை வேடிக்கை நிரம்பியிருந்த விளையாட்டாகவே ஆடத்தொடங்கியிருந்தனர் . மரணித்த அவனது உடலை கண்கள் கூச்செரிந்து உள்ளிழுக்கும் பாறையின் மேல் சிறுசிறு துண்டுகளாக்கி விதையின் உயிர்ப்போடு இருப்பதை போன்ற சத்தத்தை தூவிக் கொண்டிருந்தனர்…. ஹாப்…ஹாப்…ஏய்.. ப்ப்…… அந்த கூட்டத்தில் கலந்து கொண்டாலும் அவனைத் தனியாகக் கண்டு பிடிக்க முடியாது. ப்பா.. ப்….
ஏன் என்றால் அனைவரும் ஒரே மாதிரியான முக மூடிகளைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர் … அவர்கள் எழுப்பும் சத்தத்தைத் தாண்டிய மிகை ஒலி நடுக்கத்தை கொடுக்க தொடங்கியிருந்தது. விசாலமான வானை தனதாக்கி கொண்ட மணல் அலை அலையாய் அவர்களைப் போர்த்தி அழகு பார்க்க . அதற்குள் இருந்து எவரும் அதற்கு பின் எழுந்திருக்கவில்லை…
***
நான் அறையின் கட்டிலில் இருந்து எழுந்து உடம்பெல்லாம் ஒட்டி கிடந்த மணலைத் தட்டி விட்டேன். என் அருகில் இருக்கும் ஜன்னலில் போய் நின்றேன், அது கண்டிப்பாக மேம்பாலமாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.நுங்கம்பாக்கம் பாரில் குடித்தது.அவளிடம் திரும்ப முற்படுகையில் அவள் என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நான் சட்டென தலையை திருப்பிக் கொண்டேன்.இதற்கு முன் அவளுக்கும் எனக்குமான எந்த அறிமுகமும் இல்லை இந்த அறையைப் போலவே. .இன்னும் அவளை முழுமையாகப் பார்க்க வில்லை. பார்த்ததும் முழு விபரத்தையும் உங்களிடம் சொல்லி விடுகிறேன். அப்போதுதான் பர்ஸ் ஞாபகம் வர பதறிப்போய் சட்டை, பேண்டை தடவினேன். அதை அவள் பார்த்திருக்க கூடும் என்னை ஏய் !’அங்க இருக்கு’ என ஒரு டேபிளைக் காட்டினாள் அதில் என்னுடைய பர்ஸ் , போன். வேகமாக .போனை எடுத்து பார்த்ததில் பேட்டரி இல்லாமல் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கும் போலா .’உன்னோடசெல் ‘ சி ‘ டைப் , இங்க அது இல்ல ‘என கூறினாள்.
நான் எல்லாத்தையும் எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அந்தக் கட்டிலின் மறு பக்கம் அமர்ந்தேன், எவ்ளோ ஹெட் நீ என நக்கலான தொனியில் கேட்டது போலத் தான் இருந்தது, எதுக்கு என்றேன்? பெட்ல படுத்த பாதி கால் வெளியதான் இருந்துச்சு என்று சிரித்துக் கொண்டாள். பெருமூச்சுவிட்டவளாய் உன்னோட சிகரெட்ல ரெண்டு எடுத்திருக்கேன் . பரவால்லயா நம்ம பிராண்ட் தான் என ஆஸ்ட்ரேயை காட்டினாள் அதில் புகைத்து போட்ட ஒரு பிளாக் சிகரெட் உடன் என்னுடைய சிகரெட் டப்பாவும். அதை டேபிளிலிருந்து எடுத்து என்னிடம் வீசினாள் . நான் நாயை போலக் கவ்வி பிடித்துக் கொண்டதாக அவளுக்கு தோன்றியிருக்கலாம். அவளுடைய சிரிப்பு அப்படி ! . அவள் அருகில் இருந்த அந்தச் சிவப்புக் கலர் லைட் மஞ்சளுடன் சேர்ந்து ஒளிர தொடங்கியிருந்தாள்.
நானும் ஒரு சிகரெட்டை எடுத்துப் புகைக்கத் தொடங்கினேன். அவளை இப்போது தான் முழுமையாகப் பார்க்க முடிந்தது.இந்த இடத்திற்கு இது வரை வந்ததில்லை என்றாலும் ஒரு நெருக்கம் இருப்பது போலவே உணர்ந்தேன்.அவள் தனது மேலாடையை களைந்துவிட்டு கட்டிலில் படுத்து கொண்டாள். என்னைப் பார்க்கவில்லை. இன்னொன்றை எடுத்து புகைக்கத் தொடங்கினேன். அவள் தூங்கி இருக்கக் , இது போன்ற இடங்கள் கணேசனுக்குத் தான் அறிமுகம். மாதம் ஒரு முறை இப்படி வருவது வழக்கம்தான். ஆனால் இது முன்பு போல இல்லை, பர்சில் இருந்த பணத்தை சரி பார்த்துக் கொண்டேன், பாரில் பில் பே பண்ணிய ரசீதும் அதில் இருந்தது, மெதுவாக நடந்து கதவின் பக்கம் போன நான் இங்கிருந்து கிளம்புவதற்கு மெதுவாகக் கதவைத் திறந்தேன் ;இழுத்தேன் என்று சொல்லலாம் . சத்தம் அதிகமாக வந்துவிட்டது.அது வெளியில் பூட்டி இருக்கிறது என அவள் கூறுவதைக் கேட்டு கட்டிலை நோக்கி திரும்பிப் பார்க்கையில் அந்த சிவப்பு விளக்கு எறியும் எதிர் திசையில் படுத்திருந்தாள் மேலாடை இல்லாமல் அவள் முதுகு தண்டுவடங்கள் வளைந்து தெரிந்தன.
ஏன்? என்ற கேள்விக்குப் பதில் இல்லை. நான் முதலில் ஏன் என்று கேட்டிருக்க கூடாது. இது என்ன இடம் என்றுதான் கேட்டிருக்க வேண்டும். கதவின் அருகில் நின்றிருந்தேன் அதை என்னால் முடிந்த அளவு தள்ளிப் பார்த்தேன்.அதன் அடர்த்தி உண்மையிலேயே வெளியிலிருந்து அடைக்கப்பட்டது போல இறுகி தன்னை வெளியுலகிருந்து அந்நியப்படுத்தியது .அது அவனின் கேள்வியாய் மாறிப் போனது அந்த அறையைப் போல, அவனது தேடலை !அவளது தேடலை ! போல. இரண்டு, மூன்று முறை முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னைப் பார்த்த அவள் கீழிருந்த டப்பாவை எடுத்து கொட்டிவிட்டுவருமாறு அதைக் தட்டி கொண்டிருந்தாள். அதாகதான் இருக்கும் என்று புரிந்து கொண்டேன். அவளது மார்பு நல்லா உருண்டு திரண்டு, உடம்பிற்கு பொருந்தாது போல துருத்திக்கொண்டிருக்க…
கட்டிலின் கீழிருந்த டப்பாவில் விஸ்கி வாசம் தூக்கியது ஒரு கையால் அதை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு அறையில் அதை ஊற்றினேன், இதற்கு முன் அவனின் தேடல்களாக இருந்தன , வெறும் அறை சிறியதாக இருந்தது. அதில் முன்பு டாய்லெட் இருந்ததற்கான தடம் குழியாக. திரும்பிப் பார்க்கையில் புது டைல்ஸ் அந்த அறையின் மூலையில் சாத்தியிருந்தது. அவனின் புது தொடர்ச்சியின் ஆரம்ப முடிவை நோக்கி இருந்தது , குழாயின் அடியில் டப்பாவை வைத்துக் கழுவிக் கமுத்தினேன் வெளியில் வந்த போது அவள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கும் ஓசை கேட்டது.என்னைப் விட பத்து வயது குறைவாக இருக்க வேண்டும் . கண்டிப்பாக ‘ கால் கேர்ளாக ‘ இருக்க வாய்பில்லை.
கடிகாரம் கூட சுவரினில் காலத்தை காட்ட மாட்ட பட்டிருந்த ஜன்னலில் இருந்து கீழே பார்க்கையில் இது மூன்றாவது மாடியாகக் இருக்கலாம். ஆனால் இடம் ரொம்ப பழைய இடம் . நான் புகைத்த சிகரெட் துகள்கள் அவள் புகைத்ததோடு சேர்ந்து கொண்டிருக்க , ஏற்கனவே ஆஷ்ட்ரேவில் இருந்ததை படுக்கும் போது கொட்டிவிட்டாளா? .தெரு வெறிச்சோடி இருப்பதால் இரவு இரண்டு அல்லது மூனறின் ஓசை. அவளை எழுப்ப யோசித்த நான் கொஞ்ச நேரம் இது எந்த இடமாக இருக்கலாம் என்று அறையின் வெளிப்பக்கம் பார்த்த எனக்கு ரோடும், வீடுகளும் குகைக்கே உரித்தான சாயல் !
இது வரை இவளைப் பார்த்தது இல்லை.எதற்காக என்று புலம்ப ஆரம்பித்து விட்டேன், இவளது நடவடிக்கையும் அப்படியே வெளிப்பட்டது .நேற்று கடைசியாக இருந்த ஞாபகம் பெண்னின் பிறப்புறுப்பில் கை வைத்ததாக ஞாபகம் ஒரு வேளை இவளுடையதா? இவள் தூங்கு வதைப் பார்த்தால் நல்ல உடல் உறவுக்கு பின் தூங்குவது போல் தான் உள்ளது, இவ்வளவும் யோசித்து விட்டுப் பின் முன்னால் எடுத்த முடிவிற்கே வந்தேன். இருந்துமிவள் என் தேடலின் பிரதியா என்றக் கேள்வியும் எழாமல் இல்லை. தேடல் என்பதை தொலைத்துக் கொண்டே அதில் முன்னேறிக் கொண்டிருந்தான் . அவளும் !
***
அவள் அருகில் போய் எழுப்ப முயன்றேன், எழுவதாக தெரியவில்லை, நீந்திக் கொண்டிருந்தது உடல். முயற்சித்து தோற்ற நான் அந்த அறையில் இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக என்னவென்று பார்க்கத் தொடங்கினேன். அதில் டைல்ஸ் யைத் தவிர ஏதும் புதிது இல்லை. இவளைப் பற்றிய எந்த அடையாளமும் அங்கு இல்லை. உடலின் எண்ண ஓட்டம் ஒன்றே மேலும் நீந்தத் தூண்டுவித்ததை நம்மிடம் சொல்ல மறுக்கிறாள். பின் கண்டிப்பாகச் சொல்ல விருப்பப்பட்டால் நல்லது. அதற்க்குள் நிர்ப்பந்திக்க இயலாது? !
அந்த நீல நிறக் கடல் அவளை அழுக்காக்கியதாக ஒரு குற்றச்சாட்டு . இல்லை ! நான் தாங்கிக் கொள்கிறேன் ! அனுமதியோடுதான் தீண்டுகிறேன் ! விருப்பப்பட்டு தான் இணங்குகிறாள் ! என்னை எப்போதோ ஏற்றிருக்கக் , கண்டிப்பாக ஒரு நாள் அதை வெளிபடுத்துவாள் ! ஏன் என் மீது பழி சுமத்துகிறீர்கள் என்றது கடல் …
எங்கு இவ்வளவு வேகம்? அந்த மேகத்திடம் எப்படி நீந்திப் போவது? அதுவும் ஒரு வழிதான் என்றாள் ! சிறு சிரிப்புடன் அதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றதற்கு என்னையவள் கண்டு கொண்டது மாதிரி தெரியவில்லை. முகத்தில் அப்படியொரு புறக்கணிப்பு. செய்யும் செயலில் முன்னெச்சரிக்கை.
அதைக் கேட்க யோசித்து…. மேகத்தை நோக்கி நீந்துகிறாயா..? தலையை மட்டும் அசைத்தாள்.. கொஞ்ச தூரம் நீந்தி விட்டு ஏதோ கேட்க முற்பட்டவள் என்னைப் பார்த்து சிறு புன்னகையைச் சிந்தி விட்டு நீந்தத் தொடங்கினாள். மறுபடி நான் தவற விட்ட புன்னகையை அந்த நீல கடல் வழிநெடுக வாங்கிக் கொண்டே வந்தது.. நீந்த முடியாத இடங்களில் கடல் தாங்கிக் கொண்டது.நாம் இந்த முறை ஒரு கேள்வியாக ஆரம்பிபோம் என்று கடலிடம்
உனக்கு ஏன் நீல நிறம் என்றேன். அதனிடம் இருந்து பதிலில்லை.பின் அடுத்த கேள்விக்குத் தாவி விடுவதென யோசித்து கொஞ்ச நேர தாமதத்திற்கு பிறகு..
உனக்கு ஏன் அவள் மீது தனி விருப்பம்?
யார் மீது?
உன்னவள் மீது தான்..
புரியவில்லை…
அவள் தான் !அவள் தான் ! மேகத்தை நோக்கி நீந்திக் கொண்டிருப்பவள் மீது…
எங்களின் இனங்களில் ஒருத்தி என்றது கடல்…
உனக்கென்ன பைத்தியமா என்றதற்கு இங்கு நீந்த தொடங்கியது முதல்… என்று நிறுத்திக் கொண்டது கடல்…
மீனா ! என்றதற்கு பெரும் அமைதி மட்டும் நிலவியது நீச்சல் ஓசையுடன்… மேகத்தை நோக்கி நீந்திக் கொண்டிருக்கிறவளின் பார்வை , வெறிச்சிட்ட அறையில் அடுக்கப்பட்டிருந்த பனுவலின் உடலாகிய ஓரிதழ்
இன்னும்
உடையாத ஒரு
நீர்க் குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.
பிரமிள். 40.
நனைந்திருந்தது …. தன்னை படர்ந்திருந்த வெளிச்சத்தின் ஆரம்ப புள்ளியாக உணர்ந்தவள். அந்த அறையினுள் இருந்து எப்படி வந்தாள் என்பது தெரியாதோ? அதே போல் வெளியேறினாள் !
ஒருவேளை இது எல்லாம் கனவா? நம் கற்பனையா? என்று யோசிக்கத் தொடங்கி அதை ஆரம்பத்திலேயே கை விட்டுவிட்டேன். போன வாரம், எங்கள் டீம் மேனேஜர் ‘ உனக்கு இது தான் லாஸ்ட் வாரமா இருக்கும் ‘ என மிரட்டி விட்டுப் போனார் முன்னெல்லாம் படத்தில் அருவா வைத்திருப்பார்கள் வில்லன்கள் எனத் தான் பார்த்திருக்கிறேன். இந்த ஐ டி வேலையில் டீம் மேனேஜர் மிரட்டுவது அதை விட கடுமையாக இருக்கும். அதனால் இது கற்பனை இல்லை.இவளைத் தவிர இங்கு என்ன நடக்கிறது என தெரிய வாய்ப்பே இல்லை, அருகில் இருந்த சேரில் அமர்ந்து கொண்டேன்.
இப்போது அந்தச் சிவப்பு விளக்கின் ஒளி என் முகத்தில் உரசியது , அசைவில்லாமல் கட்டிலில் நீந்தும் ஓசையாகி அவள் ! அணிந்திருந்த பேண்ட் தோலோடு அவ்வளவு நெருக்கமாக தன்னைக் காட்ட . மேலும் புகைக்க அவனிடம் சிகரெட் இல்லை, கீழே இருந்த துகள்கள் அறை முழுவதும் சிதறுண்டிருந்தது . தன்னிலிருந்து விலக்கி அவள்கீழ் எறிந்த மேலாடை எரியும் ஆயத்த நிலை. .அறையெங்கும் அதன் ஒளிப்படர ஏங்கிய கண்களை முடிய அவன் அதனுடன் போராடித் தோற்று போனான்.
‘ இங்கு நீ யாதுமாகி இருக்கிறாய் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது.’.
‘ ஏன்? ‘என்ற கேள்வி சிறு கோபத்துடன் அவளிடம் ..
‘அது எப்படி யாதுமாகி இருப்பாய்..’
‘ நீ திரும்பிப் பார் ‘என்றது சிறு குறும்புச் சிரிப்புடன்…
‘ ஆம் என்னுள் புகுந்து என் பிரதியாய் இருக்கிறாய், என்னால் ஏற்று கொள்ள முடிகிறது ஆனால் முழுவதுமாக இல்லை..’
‘ ஏன் ஏன்.. உன்னால் உண்மையை ஏற்றுக் கொள்ள வருத்தமாக இருப்பதை விட என்னை வெறுப்பதில் உனக்கிருக்கும் போதை தான் இதை ஏற்றுக் கொள்ளத் தடுக்கிறது.’. என்றாள் ஒளிபடர.
நான் யாவரது பிரதியையும் இயல்பாய் எடுத்துக் கொள்வேன் ‘என்று சொல்லி ஒரு சிரிப்பு.
அதன் சிரிப்பை அடக்க முற்பட்டு..
என் ஒளியில் தான் இருக்கிறாய் நீ என்றான் கோபம் சொட்ட.
அதற்கு நிழல் மேலும் சிரித்துக் கொண்டது.மேலும் சிரித்ததை எண்ணி நீ ஒளியில் தான் இயங்குகிறாய். சிரித்துக் கொண்டிருப்பதை நிழல் நிறுத்துவதாகத் தெரிய வில்லை… அவன் அந்த ரூமின் ஒளியை அமர்த்தினான்.. சற்று நேரத்தில் எங்கும் பரவியது இருட்டு அமைதியுடன்
.நிழலின் சிரிப்பைக் கட்டுப் படுத்தி விட்ட ஆணவத்தில்..
எப்படி உன்னை அளித்தேன் என்றான்…
அதற்க்கு நிழல்…
இப்போது தான் எங்கும் நிறைந்திருக்கிறேன் என்றது.
அவனுக்கு புரியவில்லை…
ஒளியில் எனக்கு பிறரின் பிரதியை மட்டும் தான் எடுக்க முடியும் அது எனக்கு விதிக்க பட்ட சாபம். ஆனால் ஒளியற்ற இடத்தில் என் இயல்பில் இயங்கி கொள்வேன்…
***
1.கையில் வைத்திருக்கும் ஏதோ ஒன்று அவனைக் குத்திக் கொண்டிருந்தது. அதை அவன் கர்ப்பநீர் தேக்கத்திலிருந்து தான் எடுத்திருக்கிறான் . அதைப் பயன்படுத்தாமலே வைத்திருக்கிறான்.என்ன வென்றே அவனால் அதை யூகிக்க முடியவில்லை அவன் அலைந்து திரியும் அந்த நிலப் பரப்பில் எப்படி இதை மற்றவரிடம் காட்டுவது என்பதால் அதை தன் உடலுக்குள் மறைத்து வைத்து விட்டான், எப்போதாவது நினைத்துப் பார்த்துக் கொள்வான் அதை இப்போது அதன் வடிவத்தையே மறந்து விட ஆரம்பித்து விட்டான், வயதின் மூப்பினால். எப்படியோ அதை அவன் அடுத்த தலை முறைக்கு இதை எடுத்துப் போக விரும்பவில்லை, தன்னோடு அழிந்து போகட்டும் என்றே நினைத்து வாழ்ந்து வந்தவன், தன் இறுதி காலத்தில் அந்த நீண்ட ஒன்றை அதான் தன் உடம்புக்குள் போட்டுப் புதைத்த ஒன்றை எடுத்த குவியகிய வடிவை கொண்ட நீருக்குள் மூழ்கினான் இன்னொன்று அது மாதிரி ஒன்று தட்டுப் படுமா என்று, சுற்றி கம்போடு நின்றியிருந்த இளம் வயதை ஒட்டிய குழந்தைகள் இவர் குதிப்பதை பார்த்து தங்களுக்குள்ள சிரித்து கொள்கின்றனர், அவரால் முன்னை விட ஆழத்திற்கு செல்ல முடிய வில்லை, தான் இங்கிருந்து எடுத்ததை இங்கே விட்டு வர முடிவெடுத்தவரை ஒரு பெரிய அலை உள்ளிழுத்து சென்றதாக கூறிய குழந்தைகள் தாங்கள் செய்த இழையாலான உருண்டையில் ஒலி எழுப்பி கொண்டே ஓடினர், பெரியவரை தான் துளைத்த சாவி என நினைத்து கொண்டு அவரை வளர்க்க தொடங்கியது அந்த சிவப்பு ஒளியுடன் கூடிய அறை… நாம் இருப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரோ, பின்னரோ அது இருக்கலாம்…
- கண் திறக்கும் போது அவள் மட்டுமே அங்கு இருப்பதாக உணர்ந்தவள் போகப் போக தன்னை இரண்டாக பிரிக்க தொடங்கினாள், அவளே பேசிக் கொள்வாள்.மேலும் அவளால் அவளைப் பிரிக்க முடியும். அவைகளோடு பேசத் தான் தெம்பில்லை. தன் அருகிலிருந்த உயர்ந்த மனிதனைக் காணவில்லை. அவனும் அவன் வாந்தியும் என்னிடம் எதையெதையோ கேட்க யோசித்தவன் அமைதியாக அழிந்து போனான். கத்தியிருக்கலாம் ஆனால் அதை அவன் ஏன் செய்யவில்லை என்பது தெரியவில்லை ஒருவேளை வேறு விதமாகக் நடந்திருக்கலாம். என்னால் இப்படித்தான் என்று சொல்லமுடியாது.இது அந்த இடமில்லை. என்ன சாட்சியம் இருக்கிறது? என்று தேடுவதற்கு.பலவாறு யோசித்துவிட்டேன். மறுபடியும் அவனைச் சந்திக்கக் வேண்டாம் என்று தனது மார்பை மேலும் உருண்டை ஆக்கிக் கொண்டாள். சுற்றி திரிகிறாள். பதில் இருப்பது போல எண்ணினால் பரவாயில்லை. இந்த உடல் அவளுக்கு இப்போதெல்லாம் மிகவும் பிடித்ததாக மாறிவிட்டது. கொஞ்சம் புதிதாக வாசனை அடிப்பதை யூகித்தவள், அவன் இங்கேயும் வந்து விட்டதாக எண்ணிப் பயந்தாள். ஏன் பயப்படுகிறோம் என்று தெரியவில்லை, கீழ் இறங்குவது போலத்தான் எண்ணி கொள்கிறாள் காற்று துணை கொண்டு இருப்பதாக உணர்ந்தவள், தன் உடலிலிருந்து பிரித்தவள்தான் அது நம்முடைய உடலில் இருந்து வருவதாகச் சொன்னாள்.இது அவனுடைய வாசம்தான் வாந்தி எடுத்ததிலிருந்த விஸ்கி வாசம் இப்போது அது இவளின் மூக்கில் ஏற மூச்சை உள்ளிழுது கண்களை மூடியவள் தனக்குள்ளவே பல விதமாக பேசிக்கொண்டாள். இது என்ன இடம் என்று கடைசி வரையில் யூகிக்க முடியவில்லை.. ஆனால் எரிந்த தன் சட்டையின் துகல்களை தேட முற்படலாம்….. தேடலும், அழிவதுமாகவே இயங்கி கொண்டிருந்தனர் இருவரும் இன்னும் பலரை அவர்கள் சந்திகக் காலம் எட்டிஉதைக்கும்… அங்கே பார் என்று கொஞ்ச ஆட்கள் இருக்கத்தான் செய்வார்கள்.. . ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்க கூடாது என்பதை தீர்மானித்ததை கால நடையில் மறந்தும் இருக்கலாம்.
தொடக்கமும் முடிவும் ஒரே முடிச்சில் இருந்தே பிரிக்கப்பட்டதாகிவிட்டதா என்ற தேடல் அவனும் !அவளும் ! அதுவாகி ! போன வெற்றோசை. சாபம் மரணத்தால் கொடுக்க பட்டது இறக்கும் ஒவ்வொரு வரின் பிரதி எடுக்க வேண்டும் என்ற சாபம் அது இருவரையும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது , கொடுக்கப்பட்ட பணி முடிவதற்கான எந்த சாத்தியங்களும் இங்கு இல்லை ஒவ்வொரு முறையும் அது நீண்டுகொண்டே செல்கிறது. இப்போது இங்கு வாழும் அனைத்திற்கும் பிரதி எங்களால் தான் எடுக்கப் படுகிறது பல ஆயிரம் வருடங்களாக இதை ஏற்றுக் கொண்டாகிவிட்டது. எதற்கு என்று நீங்கள் கேட்கலாம் அது நாங்கள் கேட்ட ஒரு கேள்வியால் எங்களுக்கு வந்த வினை. பிரதி எடுக்க முடியாத இருளாகிய எங்களை பிரதி நிழலாய் மாற்றிய கொடுமை ஒரு கேள்வியால் வந்தது.. அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… மரணத்தை நண்பனாக ஆக்கிக் கொண்டு இதை இன்றுவரை செய்துக் கொண்டிருக்கிறோம். தண்டனையின் மூல பிரதி மரணத்தால் எடுக்கப்பட்டதே.. அழிவு ஒவ்வொரு வருடமும் மாற்றி எழுதப்பட்டு கொண்டே இருக்கிறது… நிழல் அற்ற ஒரு பிரதிநிதி இவ்வுலகத்தில் தோன்றும் காலகட்டத்தை எண்ணிக் காத்துக் கொண்டிருக்கிறோம் அது நடக்காதது… நிழலாகி போன அவள் தன் இயல்பில் இருக்க விரும்பியது அந்த ஒளியில் பிரதி எடுக்கும் பாரம் கொன்று கொண்டிருந்தது அவளது யோனியின் வடிவத்துடன்.
எங்கோ அடித்துக் கொண்டிருந்த சூரியன், அது என்ன கேள்வி என்று ஒவ்வொரு நிழலாகக் கேட்டுக் கொண்டிருக்க எதுவும் பதிலாகவில்லை, ஆகையால் தான் பறந்து விரிந்து இருந்ததென சூரியனை கேலி செய்வதாகவே மறுபக்கத்தில் பிடரி இழுத்து மெத்தையில் தன்னை படர விட்டுத் தேடிய அனைத்திற்கும் விடையாய் பிதுங்கிய குருதியை அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது இருள் .நீர்குமிழிகளின் பிரதிகளாய் !
பெரும் வலியே மிச்சம் !
” எதையும் புரிஞ்சுக்கக் கூட வேண்டாம். அதுவா மாறிப்போனாப் போதும், ‘ நான் ‘ ‘ அது ‘ ஆணும்.
– கள்ளம் ( நாவலிலிருந்து )….