மண் சார்ந்த எல்லாமே மனதுக்கு நெருக்கமாகிறது. இந்நாவல் யாரும் இன்னும் பெரிதாக எழுதி முடித்திடாத தேரிக்காட்டை பற்றிய குறிப்பு என்று எண்ண வேண்டாம். நிலாரசிகனாக அறியப்பட்டு ராஜேஷ் வைரபாண்டியனாக மிளிரும் தோழர் தேரிக்காட்டை பற்றி மட்டும் அல்லாது தேரியை சார்ந்த மக்கள் , அவர்கள் பழக்கவழக்கங்கள், தொழில், நட்பு, சொந்த பந்தங்கள் பின் காதல் என எல்லாவற்றையும் இந்நாவலில் தொட்டுச் செல்கிறார். நாவலுக்கு தேவையான எல்லாம் அளவாக வைத்து தேரியை செதுக்கி உள்ளார்.
என் வாழ்விடத்தின் மிக அருகில் இருக்கும் இந்த செம்மண் நிலத்தை ராஜேஷ் வைரபாண்டியனின் எழுத்துக்களிலேயே தரிசித்தேன். இனி நேரில் காணும் பொழுது பரிச்சயமான பூமியைத்தான் பார்ப்பேன். மழை உறியும் தேரி மண்ணைப் போல வாழ்வியலை மனதில் அமிழ்த்தி தேரியின் இன்நீரைப் போல ஒரு தேரிக்காட்டு காவியத்தை தந்திருக்கிறார். படித்த அனைவரின் மனமும் தேரிக்காட்டில் சில நாட்களாவது சுற்றியலையும் என்பதில் ஐயம் இல்லை, இன்றும் இருக்கும் சாதி வேறுபாடு என்றாவது மாறாதா என்ற ஆதங்கத்தை விதைக்கிறது தேரி!
நிஜமோ, புனைவோ நாமும் வாசிக்கும் போதே செல்லக்குட்டியோடு வாய்க்காலை வேடிக்கைப் பார்ப்போம், தேரியில் சுற்றி அலைவோம், வீட்டில் காய்த்த காய்கறிகளின் வாசம் உணர்வோம், தலைவலிக்கு ஆறுதலாய் சுக்குத்தண்ணி குடித்த உணர்வைப் பெறுவோம், அந்த மென்காதலை உணர்வோம், கல்யாணம் என்னும் பந்தம் கொடுக்கும் சொந்தம் அறிவோம், சாதியின் பெயரால் குட்டப்படும் ஒருவனின் மனவேதனை புரிவோம். அவ்வளவு இயல்பான நாவல்.
ஒரு நாவலை எழுதி முடிக்கையில் நமக்கு ஒரு திருப்தி வரும். அந்த நாவலில் நாம் வாழ்ந்துக்கொண்டே தான் எழுதுவோம். அதே திருப்தியும் வாழ்ந்த உணர்வும் வாசிப்பவர்களுக்கும் வருவது அத்தனை எளிதல்ல. தேரியில் நாமும் வாழ்ந்த உணர்வை நிச்சயமாய் வாசிப்போருக்கு தரும். அதுவே ஆசிரியரின் வெற்றி. நல்ல ஆசிரியர் தன் மனஒட்டத்தை அப்படியே வார்த்தைகளின் வழியாக வாசகனுக்கு கடத்தி விடுவார். இனி அந்த வரிசையில் ராஜேஷ் வைரபாண்டியன் நிச்சயமாக இடம்பெறுவார்.
நாவலின் தனிப்பெரும் சிறப்பம்சமாக நான் பார்ப்பது மொழிநடை. “யேலே” என்றாலே தெக்கத்தி பசங்க என அறிவார்கள். திருநெல்வேலி,தூத்துக்குடி, நாகர்கோவில் இங்கெல்லாம் கேட்கலாம் பலவிதமான யேலேக்களை. யோல், யேலே, ஏல, ஏலேய்,எல, இப்படியாகவும் பெண்பிள்ளைகளை ஏளா எனவும் விளிப்பார்கள். யாரு, எதுக்கு , எப்படி இதையே யாருல, எதுக்குல, எப்படில என்றே கேட்பார்கள். டா போட்டு பேசும் பழக்கமும் உண்டு. மக்களே, மக்கா என விளிப்பதும் உண்டு. தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டார வழக்கினை , அப்படியே அவர்கள் பேசுவதை அதே மொழிநடையிலும், சொல்வழக்கிலும் கேட்க முடிகிறது நாவலில்.ஆகையால் நம்மால் மிக சுலபமாக ஒன்ற முடிகிறது. பூச்சான வார்த்தைகள் இல்லாமல் இயல்பில் என்ன பேசுவார்களோ அதை அப்படியே எழுத்தாக்கியுள்ளார் சில கெட்ட வார்த்தைகள் உட்பட ஒரு இடத்தைப் பற்றி எழுதும் போது அதன் தன்மை அறிந்து உண்மை செய்திகளை கொண்டு எழுதுதல் சிறப்பு. ஆசிரியர் அப்படி , தான் வாழ்ந்த பூமியைப் பற்றி இங்கே பதிந்து உள்ளார். தேரி அவருக்கு ரத்தபந்தமாய் இருக்கலாம். அதே பந்தத்தை நமக்கும் கொடுப்பதில் தான் நாவலின் வெற்றி இருக்கிறது. அவருக்கு எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்ய தேவை இருந்து இருக்காது என்று நினைக்கிறேன். நாம் வாழ்ந்த பூமியை ஆவணப்படுத்த வாய்ப்பு கிடைத்தால் எத்தனை சந்தோஷம். தன் முதல் நாவலையே தேரியாக தேர்ந்தெடுத்து மிகச் சிறப்பான கதை சொல்லியாகவும் முத்திரை பதித்துள்ளார் ராஜேஷ் வைரபாண்டியன்.
தேரி என்றால் வெறும் செம்மண் பாலைவனம் என ஒரு அபிப்ராயம் இருக்கிறது. பாலைவனத்தில் நீறுற்றும் இருக்கும் தானே. அப்படி தேரியிலும் தண்ணீர் இருக்கிறது. செடி , கொடி , மரம் ,மட்டை எல்லாம் இருக்கிறது. அங்கு வாழும் உயிரினங்களை கதைகள் வாயிலாகவே நமக்கும் அறிமுகப்படுத்துகிறார். நமக்கும் மயில் அகவல் கேட்கும். ஒவ்வொரு அத்தியாயத்தின் பின்னும் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் சிறப்பு சேர்க்கிறது. தேரியைப் பற்றி அறியாதவர்களுக்கு நல்ல அறிமுகநூல். ஒரு பாதியாக அறிந்தவர்களுக்கு இன்னொரு பரிமாணத்தைக் காண்பிக்கும். அங்கே வாழ்ந்தவர்கள், அறிந்த இடங்களை வாசிக்கும் போது மானசீகமாக அங்கே உலாவிட்டு வருவார்கள். இப்படியாக தேரி எல்லோரையும் திருப்தி படுத்தும்.
தேரி பேசும் மொழி என்ன? சாதி. சாதி மட்டும் என சொல்லவில்லை. சாதியை சாதியால் நிகழும் அநீதிகளைத் தொட்டும், தட்டியும் செல்கிறார். சாதியின் பெயர்களை குறிப்பிடாமலே, வெளிப்படையாக சொல்லாமலே நம்மை ஆழ்ந்து யோசிக்கவும் அதனைக் குறித்து பேசவும் வைக்கிறார் ஆசிரியர்.
சாதி விட்டு சாதி திருமணம் இன்னமும் இது போன்ற ஊர்களில் எட்டா கனவே. மனிதனுக்கு மட்டும் தான் சாதி பெருசு. சாதி மட்டுமே பெருசு. நாய்களுக்கும் சாதியை கொடுத்து விலைகளை நிர்ணயிக்கும் யுக்தி நமக்குதான் கைவந்த கலையாயிற்றே! மிருகங்களுக்கும் நமக்கும் நியதிகள் வேறு. ஆனால் சாதிக்காக நாம் மிருகமாய் மாறத் தயங்குவதே இல்லை. அதுதான் மனித சாதிக்கு கவுரவம். ஆழமாக இந்த கதையை நோக்கினோமென்றால் நமக்கு ஒரு விடயம் புரியும், பெற்றவர்கள் யாருக்கும் தாங்கள் பெற்ற பிள்ளைகளை துன்புறுத்த மனமில்லை. பாழாய் போன சமூகத்திற்கான நடிப்புதான் அது. இந்த சமூகத்தில் மதிக்கப்படுவதும், மிதிக்கப்படுவதும் சாதியின் பெயரிலேயே! தன் வீட்டுப் பெண் ஓடிப் போனாள் என்றால் அவமானம். தேடிப் பிடித்து கொன்றுவிடும் அளவுக்கு அவர்களுக்கு சமூகமும், மரியாதையும், குடும்ப கெளரவமும், அவர்களின் சாதியும் முக்கியமாய் இருக்கிறது. அந்த வீட்டுப் பெண்களே வளர்ந்து வரும் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளிடம் மாமன் தலைய அறுத்துட்டான்லா எனச் சொல்வதை கவுரவமாகவும், பெருமையாகவும் ,அவர்கள் மனதில் உனக்கும் இதுதான் என காதலைக் குறித்த அச்சத்தை விதைப்பதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். தோண்டிப் பார்த்தால் சொல்லாத காதலோ, முயன்று முடியாமல் போன காதலோ அந்த பெண்களுக்குள்ளும் தவழ்ந்த வண்ணம் இருக்கத்தான் செய்யும்.
சாதி, மானம், குடும்பம், ஊர், உறவு இதெல்லாமே காதலையும், ஆசையையும், பாசத்தையும் அதளபாதளத்தில் தள்ளி விடுகிறது. எப்போதாவது விழும் கல்லில்
உருவாகும் நீர்குமிழிகள் போல வரும் நினைவுகளை அமிழ்த்தி தன் காதலை பெற்றவர்களின் அன்பிற்காக துறந்தோ, அச்சுறுத்தலுக்காக பயந்தோ இன்றும் பலர் போலி வாழ்க்கை வாழ்கிறார்கள்.
தன் பிள்ளை நன்றாக வாழ வேண்டும். அது தன் சாதிக்காரனாய் தான் இருக்க வேண்டும். தன் சாதியில் மனம்முடித்து நாசமாய் போனாலும் உன் விதி என்று கடந்து விடுவார்கள். யாரை நோவது? நாம் பிறந்த சாதியை அன்றி?!
ஆசிரியர் கதையை ஆரம்பித்த விதமே அருமை. அந்த இயற்கைகுள் நாமும் ஒன்றி விடுகிறோம். நண்பர்களின் அரட்டையில் நாமும் சிரித்து நம் பால்யம் கடப்போம். தாமிரபரணியில் முங்கி எழுவோம், நாம் சுற்றிய பெண்ணோ / நம் பின்னால் சுற்றியலைந்த பெயர் தெரியாத ஆணோ நினைவில் வந்து போவார்கள்.கதை கொண்டுபோன விதம் மிக நன்றாக இருந்தது. விறுவிறுப்பு குறையாத கதையின் வேகம் , கதாப்பாத்திரங்களை அவர்கள் உருவங்களோடு உள்வாங்க முடிந்த வர்ணனைகள் எல்லாம் சிறப்பு.
கொஞ்சம் அசந்தாலும் நாவல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். மிக கவனமான வார்த்தைப் ப்ரயோகத்தால் சிக்கல்களை எட்ட வைத்து சொல்ல வேண்டியதையும் நச்சென்று சொல்கிறார் ஆசிரியர்.
நாவலில் கதை எவ்வளவு முக்கியமோ அத்தனை முக்கியம் கதாப்பாத்திரங்களுக்கான உரையாடல். அவர்களின் வார்த்தைகள் வழியாகவே ஆசிரியர் அந்த இடத்தை நமக்கு காட்சிப் படுத்துகிறார். சில உரையாடல்கள் இயல்பாகவும் செம்மையாகவும் நாமே கடந்து வருவதைப் போலவும் இருப்பது சிறப்பு.
“வெரசா கட்டுல கண்ணிய… மொசக்கறி தின்னு நாளாச்சில்லா…” இப்படி ஒருவன் கூறுகையில் நம் மணக்கண்ணில் முயல்வேட்டைக்கான ஆயத்தக் களம் அப்படியே படரும். முயல்வேட்டைக்கு காட்டுக்குள் செல்லும் இளவட்டங்கள் கண்ணி செய்வார்கள். இதை ஒரு முக்கியமான பதிவாகத்தான் நான் பார்க்கிறேன்.
அப்போதெல்லாம் முயல் வேட்டைக்காக நாய் வளர்ப்பார்கள், காடை, கவுதாரி, கொக்கு, விருவுப்பூனை, எனப் பலதும் வேட்டையாடப்படும். எல்லோரிடமும் வேட்டை துப்பாக்கி இருப்பதில்லை. சிலருக்கு கவுட்டையே போதும்.சிலருக்கு வேல் கம்பு. இதில் கண்ணி செய்வதை பதிந்துள்ளார் ஆசிரியர். இப்படியான சிறு சிறு தகவல்கள் நாவல் முழுவதுமாக விரவிக் கிடக்கிறது. கொல்லாம்பழம், ரேஞ்சர், நுங்கு, கள்ளு என அந்த மண் சார்ந்த விடயங்களை பதிய தவறவில்லை.
இன்னும் கொஞ்சம் ஊர் பழக்கங்களை கதையில் சேர்த்து இருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் அறிய விழையும் எண்ணமே அன்றி குறையாய் இல்லை. ஒருவேளை கதையின் கவனம் சிதறப்படாமல் இருக்க தவிர்த்திருக்கலாம்.
கிராம வாழ்வில் இன்றும் கடைப்பிடிக்கப்படும் சடங்கு, இழவு எல்லாம் காட்சிகளாக நம் கண்முன் விரிகிறது. இப்படியான வழக்கங்களை புத்தகங்களிலும், படங்களிலும் பதிவு செய்வது மிக அவசியம். திரும்பிப் பார்க்கையில் இது ஒரு வரலாற்று சான்றாக இருக்கும். நகர்ப்புறங்களுக்கு குடியேறிவிட்டவர்களுக்கு நீர்மாலையும், பாடையும், தீ ஆற்றுதலும் வித்தியாசமாகத் தான் தெரியும். ஆனால் ஊர்ப்பக்கம் இருந்தவர்களுக்கு தன்னுடன் நன்றாக பொருத்திக்கொள்ள முடியும். கதையோடு இழவு வீட்டில் நடைபெறும் சடங்குகளை நன்றாக காட்சிப் படுத்தி இருக்கிறார்.
வாழ்வின் யதார்த்தத்தை கதைமாந்தர்கள் வழியாக அழகாக விளக்கிச் செல்கிறார் ஆசிரியர். எல்லோரும் காதலிக்கும் போது நியாயவாதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் குடும்பம் குட்டி என்று ஒரு பெற்றோர் நிலையில் தன் நிலை மாறிப்போகிறார்கள். திடீரென ஒரு மாய உலகத்தில் இருந்து தன்னை உதறி நிஜ உலகத்துக்குள் புகுந்துக் கொள்கிறார்கள். ஆம் புகுந்து கொல்கிறார்கள். தவிர்க்க முடியாத, இன்னமும் தடுக்க முடியாத யதார்த்தமாய் இந்த நாசமாய் போன உண்மை தேரி மணலில் தன் வெம்மையை பறைச்சாற்றிக்கொண்டே இருக்கிறது. வாசிப்பின் வழியே நாமும் அதை உணர்வோம். சேர்ந்து விட மாட்டார்களா என நம்மை ஏங்க விட்டு விட்டு சட்டென வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்குள் மிகச் சுலபமாய் கடத்தி விடுகிறார் ஆசிரியர். நம்மைப் போலவே கதையின் நாயகனும் யதார்த்த உலகத்தை சந்திக்கத் தடுமாறுகிறான்.
தேரியின் கதைமாந்தர்களை பற்றி சில வார்த்தைகள்.
நம் மனதை விட்டு அகலாத பெண்கள் தேரி எங்கும் உலவுகிறார்கள்.
வெட்சி :
என்ன ஒரு பெண் என எண்ண வைப்பவள். துள்ளித் திரியும் ஒரு மான்குட்டியாக நம் கண்களில் உலவுகிறாள். வெட்சி ஒரு தேவதையாக வருகிறாள். தேவதை
வரம் தருவது போல அன்பை பொழிகிறாள். என்ன பக்குவம், என்ன பெருந்தன்மை என வியக்க வைக்கிறாள். எல்லா உயிரையும் தன்னுயிராய் நேசிக்கும் நல்லோர் இருக்கும் பொருட்டே இன்றும் மழை பெய்கிறது அல்லவா. அந்த நல்லவளில் வெட்சியும் உண்டு.
பேச்சி & கனகாம்பரம்:
இருவேறு தோழிகள் நம் மனதிலும் நம் தோழியாக வலம் வருபவர்கள்.
நமது உயிர்தோழி போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டாள் பேச்சி. அவள் வாய் ஓயாமல் பேசுவது நமது காதிலும் ஒலிக்கிறது. எல்லா காலங்களிலும் பத்தாம்பசலியாகவும் சில பெண்கள் இருக்கிறார்கள். தைரியமாகவும் சில பெண்கள் இருக்கிறார்கள். பேச்சி பின்னதுக்கான எடுத்துக்காட்டு. துடுக்கும், தைரியமும், தோழியின் மீது ஆதீத அக்கறையும் , அன்பும் கொண்ட பேச்சி போன்ற பெண் தோழியாய் கிடைப்பது வரம். பேச்சிக்காக நம் மனமும் விம்மும்.
கணகாம்பரம் தன் தோழிக்காக தூது போவதாகட்டும், துணைக்கு செல்வதாகட்டும் அக்மார்க் தோழியின் அத்தனை லட்சணங்களும் கொண்ட பெண்.
தங்கராணி :
நமக்கு முதல் அத்தியாயத்தில் அறிமுகமாகும் பெண். தங்கம் செல்லத்தைக் கண்டு அடையும் படபடப்பை நம்மால் வாசித்து உணர முடியும். அவர்களின் காதல் இளம் ரோஜாவாய் பூத்துக் குலுங்கும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாமோ என்று தோன்றியது. தேரியில் குளிர்ந்த நீராய் நம்மை ஆசுவாசப்படுத்துவது அவர்களது காதல்.. தன் பிடிவாதம், தைரியம், அஞ்சாத போக்கு என தங்கம் தன் காதலுக்காக எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல்காரியாக இருக்கிறாள்.
செவ்வந்தி :
இரண்டாம் அத்தியாய கதையின் நாயகி. பேச்சியின் தோழி! இல்லை செவ்வந்தியின் தோழி பேச்சி. மிக ஆழமான, அழுத்தமான ஒரு கடின பாத்திரமாகத் தான் தெரிகிறாள் செவ்வந்தி. மலையளவு ரகசியத்தைக் கூட கடுகளவாக்கி மூலையில் போட்டு மூடிவைக்க பெண்களால் முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு. கொலையும் செய்வாள் பெண் தேவையென்றால். காளியின் ஸ்வரூபமாய் தோன்றும் செவ்வந்தி, தாடகையை போல மாறுகிறாள். சூழ்நிலை கைதியான செவ்வந்தியை யார் விடுதலை செய்வது? நிறைய செவ்வந்திகள் நம்மோடு இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சாதியை கலையவும் முடியாமல், தானும் தோற்று, சார்ந்தவர்களையும் சாக்கடையில் மூழ்கடிக்கத் தயாராய்.
பொட்டம்மை :
ஏன் பொட்டம்மை பற்றி சொல்ல தோன்றுகிறது? வெகுசில பத்திகளில் வரும் பொட்டம்மை நமக்கு கொடுக்கும் தோற்றம் கவனத்தில் கொள்ள வேண்டியது. கண்மூடித்தனமாய் இன்றும் எத்தனையோ சாதரணர்களை சாமிகளாய் கொண்டாடுகிறோம். பிரச்சனை என தொலைக்காட்சி பேட்டியில் வரும் பெண் திடீரென சாமியாராய் அருள் பாலிக்கிறார். சில சமயங்களில் சந்தர்ப்பமும், சூழ்நிலைகளும் நம்மை யோசிக்காமல் சில விஷயங்களை நம்ப வைக்கிறது. ஒரு நல்லது நடந்து விட்டால் கண்ணை மூடிக்கொண்டு நாம் நம்புவோம். மனித புத்தி. பொட்டம்மாவின் உருவம் நம் மனதில் பதிகிறது. நாம் ஊர்க்காட்டில் பார்க்கும் ஒரு மந்திரவாதியாக தெரிகிறாள் பொட்டம்மை.
ஆச்சி :
செல்லக்குட்டியின் ஆச்சி ஒரு பாவமான பாத்திரம். செல்லக்குட்டிக்காக வருந்தவும், அழவும் அவனை பாதுகாக்கவும் தாயாய் வளர்த்த ஆச்சி மட்டுமே
இருக்கிறாள். ஆச்சி நம் எல்லோர்க்கும் தத்தமது ஆச்சியை நினைவுப்படுத்துவாள்.
எங்கள் ஊர்ப்பக்கம் ஆச்சி என்றே அழைப்பார்கள். சில இடங்களில் ஆயி என்றும் பாட்டி என்றும் அம்மம்மா என்றும் அம்மாச்சி என்றும் அம்மாயி என்றும் அழைப்பார்கள். ஆச்சியால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். அந்த செல்லம் கிடைக்கப்பெற்றவர்கள் அதனை அறிவார்கள். தாயின் அன்பை பெறாத செல்லக்குட்டி ஆச்சியிடம் தான் அதைப் பெறுகிறான்.
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வயதானவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள். நாம் அறிந்துகொள்ள அவர்களிடம் எத்தனையோ இருக்கிறது. அனுபவப்பாடம் படித்தவர்கள் அல்லவா?! அவசர உலகில் பெரிதாய் யாருக்கும் நேரம் இருப்பது இல்லை. ஆனால் ஆச்சி இருப்பவர்கள் அந்த வாய்ப்பை இழந்து விடாதீர்கள். அவர்களின் சொற்களில் இந்த உலகத்தை பாருங்கள். இந்த பூமி வேறுமாதிரி அழகாய் விளங்கும்.
சித்திரப்பூ :
சிலப்பெண்கள் ஆசைமொழிகளில் சட்டென விழுந்து விடுவார்கள்..சில அல்ல பல பெண்கள். ஆனால் சிலருக்கு ஒரு அலாரம் சட்டென அடித்து சுதாரித்துக்கொள்வார்கள்..வெகுசிலரே இப்படி வகையாக சிக்கிக் கொள்வார்கள். அப்படி ஒரு பாவப்பட்ட பெண் தான் சித்திரப்பூ. தாழ்ந்த சாதியில் பிறந்தததால் நேந்து விட்டதைப் போல பாவிக்கப்படும் போக்கை சித்திரப்பூவின் வாயிலாக காண்பிக்கிறார் ஆசிரியர்.
கதையில் வரும் ஆண்கள் பற்றி:
செல்லக்குட்டி, அசரியா, பாதாளமுனி:
செல்லக்குட்டி துடிப்பான, அழகான ,படித்த, தன்மானமுள்ள இளைஞன். கதாநாயகனாய் வலம் வர எல்லா பொருத்தங்களும் பெற்ற கலைஞன். என்ன அசரியா அளவுக்கு முனுக்கென்ற முன்கோபி அல்ல. சண்டைக்காரன் அல்ல. பாதாளமுனியை போல பெண்களை கவர நினைப்பவன் அல்ல. செல்லக்குட்டியின் பாத்திரம் மிக அழுத்தமானது. காதல் , யதார்த்தம், வாழ்க்கை, கடமை, சோகம், பொறுப்பு , தன்மானம் என எல்லாவற்றையும் தாங்கி செல்லும் ஆழமான அம்சம். செல்லக்குட்டியைப் போல நம்மை ஈர்க்கும் சகபயணி அசரியா. அந்த துடிப்பும், நண்பனுக்காக எதையும் செய்யும் போக்கும் எல்லோரும் ஆசைப்படும் ஒரு நண்பனாய் நட்பு பாராட்டுகிறான். கொஞ்சம் காமெடி கலந்த போக்கிரி பாத்திரம் பாதாளமுனி. எல்லா குழுவிலும் இப்படி ஒரு பையன் நிச்சயமாய் இருப்பான். கதையில் அதிக நேரம் செல்லக்குட்டியோடு பயணிக்கும் இரு நண்பர்கள் இவர்கள்.
தங்கவேலு, மைக்கேல் :
தங்கராணியின் அண்ணனான தங்கவேலு முன்கோபி மட்டுமல்ல , பெண்களிடம் விளையாடும் பொறுக்கியும் கூட. தன் வீட்டு பெண் பத்திரமாய் இருக்க நினைக்கும் ஆண்கள் தாங்கள் அடுத்த பெண்ணை தொடும் போது தவறென்று உணர்வதில்லை. கீழ்சாதி என்றால் தட்டிக்கேட்கவோ, போராடவோ நாதி இராது. நினைத்ததை செய்யலாம் என்னும் மனப்போக்கு. சில வக்கிர ஆண்களின் பிம்பமாய் தான் தங்கவேலு இருக்கிறான். துரியோதனனுக்கு கர்ணனைப் போல தங்கராசுக்கு ஒரு மைக்கேல். என்ன செய்தாலும் உடன் இருந்து ஏந்துபவன்.
சந்தோஷராஜ் :
குறியீடுகளால் அடையாளப்படுத்தினாலும் , சாதியின் பெயரை நேரிடையாக கூறாமல் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்களாகவும், குலத்தொழிலாய் சிலவற்றை சிலவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நியதி இருப்பதையும் சந்தோஷ ராஜ் வாயிலாக விளக்குகிறார் ஆசிரியர். எத்தனை கடின உழைப்பாளியாக இருந்தாலும் , புத்திசாலியாக இருந்தாலும் உனக்கான வேலை இதுதான் என சமூகம் போதித்து மிதித்து கீழேயே வைக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சிறிதேனும் மாறியிருப்பதும் எல்லோரும் படிக்க விழைவதும் ஆறுதல். வந்தேறி என்னும் சொல் பிரயோகத்தை உபயோகித்து இருக்கிறார் ஆசிரியர். வந்தேறிகள் யார்? தன் இருப்பிடம் விட்டு வேற்றிடம் சென்று வாழ்பவர்கள். பஞ்சம் பிழைக்கவோ, ஊரில் பிரச்சனை காரணமாகவோ, வேலை இல்லாத நிலையிலோ ஏதோ ஒரு காரணத்திற்காக இடம் பெயர்ந்து வாழத் தலைப்பட்டவர்கள். வந்தேறிகள் நாடோடிகள் அல்ல. தேரியையே இன்னும் பார்த்திராத எனக்கு தேரியின் சரித்திரம் எதுவும் தெரியாது. ஒருவேளை வெளுக்கும் பணி செய்யும் மக்கள் இப்படி இடம் பெயர்ந்து வந்திருக்கக்கூடும். இல்லா விட்டால் அவர்களின் சாதியின் பொருட்டு மேல்தட்டு மக்கள் என தன்னைக் கூறிக் கொள்பவர்கள் ” இந்த நிலத்தில் உங்களுக்கு உரிமை இல்லை. எங்கள் நிலம் ” என அவர்களை குத்திக் காண்பிப்பதற்காக உபயோகித்த சொல் பிரயோகமாய் இருக்கக் கூடும். நிலம் எல்லோருக்குமான உரிமை. இன்று நம் பெயரில் இருக்கும் நிலம் எந்த நொடியிலும் இன்னொருவர் பெயருக்கு போகலாம். நிச்சயமற்ற வாழ்க்கை , நிச்சயமற்ற பயணம், நிச்சயமற்ற நிலம். அதற்காகத்தான் சண்டை, சச்சரவு, வெட்டு, குத்து, கொலை, மிரட்டல் எல்லாம் நடக்கிறது. தெக்கத்தி இடங்களில் காதலைப் பிரிக்கவும் இதெல்லாம் கையாளப்படும். படங்களும் , புத்தகங்களும் மாற்றத்திற்கான விதைகளை தூவிக் கொண்டு தான் இருக்கிறது. சில மட்டுமே நன்நிலத்தில் விழுகிறது. பல தரிசில் விழுந்து வீணாய்த் தான் போகிறது. சந்தோஷம் நமக்கு நடத்தும் பாடம் தான் இந்த எழுத்துக்கள்.
தொம்மை அண்ணாச்சி:
உள்ளூர் மாபியா. மணல் கடத்தல் நம் ஊரில் பிரசித்தம். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து எடுக்க வேண்டியதை எடுக்கும் வித்தை தெரிந்த முருக பக்தர். சிலருக்கு பாவம் செய்து சேர்த்த பணத்தை உண்டியலில் கொஞ்சம் போட்டு கடவுளுக்கு பங்கு கொடுத்து விட்டால் அந்த தெய்வம் கண்ணை மூடிக்கொள்ளும் என்ற நம்பிக்கை. அப்படியான ஒரு பாத்திரம் தான் தொம்மை அண்ணாச்சி. இன்னொருவர் முத்துசாமி அண்ணாச்சி , தொம்மை அண்ணாச்சி மண்ணை வித்தார் எனில் இவர் நீரை விற்கிறார்.
அந்த வட்டாரத்தில் அண்ணா என்பதை அண்ணாச்சி என்றே மரியாதை நிமித்தம் அழைப்பது வழக்கம். கொஞ்சம் வசதி வாய்த்தவர்களும், வயதில் பெரியோர்களும் அண்ணாச்சி என்னும் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். மற்றபடிக்கு படங்களில் திருநெல்வேலி என்றாலே அண்ணாச்சி என்ற வார்த்தையை சேர்த்து விடுவார்கள்.
கண்ணாடிக்காரர் :
சாதி என்னும் சாக்கடையில் ஊறிய பெரியவர். தம் கவுரவத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போக துணிந்தவர். தன் மகனும் தன் பேரனும் கூட தன்னைப் போலவே இருக்க வேண்டும் என விரும்பும் சாதி வெறியர். உயர்சாதியில் பிறந்துவிட்டதால் மட்டுமே அடுத்தவனை அடிமையாக நடத்தும் போக்கைக் கொண்ட கண்ணாடிக்காரர் நம் சமூகத்தின் ஒரு முகமே.
சிகப்பு சட்டைக்காரர் :
பெயர் குறியீடு வழியாகவே அவரின் கதாப்பாத்திரம் விளக்கப்படுகிறது. சமூக மாற்றத்திற்கான வித்தாக அந்த கிராமத்தில் முளைத்த ஒரு மரம். கிளைகள் நிறைய பரப்பி நிழல் கொடுக்கட்டும். நமக்கும் நம் சமூகத்துக்கும் இப்படியான மரங்கள் மிகத் தேவை. போகிற போக்கில் ஒரு வார்த்தை சொல்வார். துக்கநிகழ்ச்சிக்கு அழைப்புக்கு காத்திருக்க கூடாது. உண்மை தானே துவண்டிருக்கும் போது தானாக போய் தோள் கொடுப்பது தானே மனிதம். கிராமத்தில் இன்னமும் அப்படித் தான். எனக்கு சொல்ல வில்லை உனக்கு சொல்லவில்லை என நற்காரியங்களுக்கு கோபித்துக் கொள்ளும் உறவுகள் சாவுக்கு அப்படி இருப்பதில்லை. யார் வழி அறிந்தாலும் என்ன பகை இருந்தாலும் நடையேறி போய் முகத்தை பார்ப்பார்கள். இறுதி வாய்ப்பல்லவா முகம் பார்க்கவும், மனதுக்குள் மறுகிக் கொள்ளவும். ஆகையால் தீராச் சண்டையில் செத்தாலும் என் மூஞ்சில் முழிக்காதே என சொல்லித் தீர்ப்பார்கள். முட்டாள்த் தனமான கருத்துக்களை திணிக்க சிலர் இருந்தாலும் , இப்படி நல்லது சொல்லவும் நாலு பெரியவர்கள் வேண்டும் என நினைக்க வைப்பவர்.
இப்படியாக ஒவ்வொரு கதாப்பாத்திரங்கள் வழியாகவும் தேரியில் பார்த்த கதைகளை சொல்வதோடு சில சிந்தனைகளையும் விதைக்கிறார் ராஜேஷ் வைரபாண்டியன். தேரி என்னும் செம்மண் பூமி எண்ணற்ற உயிரினங்களை தன்னகத்தே கொண்டது. அதனோடு தேரியினுள் எத்தனையோ கதைகளும் புதைந்து கிடக்கிறது. அதில் சிலவற்றை நமக்கும் வாசிக்கத் தந்திருக்கிறார் நாவலாசிரியர். துக்கமோ, சந்தோஷமோ ஒப்பாரியாகவும் , விருப்பப் பாடலாகவும் பாடும் தன்மை நம் மக்களுக்கு உண்டு. தான் கவிஞன் என்பதை இப்படியான பாடல்கள் வாயிலாகவும் இங்கே பதிவு செய்துள்ளார்.
விமானநிலையத்திற்காக எத்தனையோ பேர் தங்கள் நிலங்களை தானம் செய்ததை எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆம் தானம் தான். அரசாங்கம் நிர்ணயித்த விலையை தானமென்றே கொள்ளலாம். கேட்பது அரசாங்கம் ஆயிற்றே எளிய மக்கள் என்ன செய்வார்கள் கொடுப்பதை தவிர? ஆசிரியரும் அத்தகைய வலியை உணர்ந்திருக்கக் கூடும். தன் வார்த்தைகளில் அதையும் பதிவு செய்ய மறக்கவில்லை. எங்காவது பெரிய மரங்கள் வெட்டப்படும் போது தாங்க இயலாத துக்கம் நெஞ்சை அடைக்கும். அப்படியான துக்கம் தான் மண்ணை இழந்தவர்களுக்கும் இருக்கும். அதனைக் காட்டிலும் கூடுதலாய் இருப்பது உழைத்து பல கனவுகாளோடு வாங்கிய நிலம் பறிபோகும் போதுதான். முன்னேற்ற பாதை எனலாம். ஆனால் அதற்கு தகுந்த கூலி கிட்டினால் ஒருவேளை மனம் ஆறக்கூடும்.
கதையில் எல்லா திருட்டுக்களையும் அதற்கான விளைவுகளையும் கூறியிருக்கிறார். ஆடு, கோழி திருட்டு சகஜம் தான். ஆனால் மண் திருட்டு? நிலத்தடி நீர் திருட்டு? தொழில் என்றாலும் ஒரு நியாயம் வேண்டும் தானே? தேரி நாவல் பேசும் மொழி எல்லோருக்குமானது.. பிறப்பால் யாரும் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் இல்லை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் விதியை தீர்மானிக்கிறது. சாதியால் மடிந்து போகும் பல நூறு காதல்கள் இன்னும் கிராமங்களில் நீலிக் கதைகளாகவும், மோகினியாகவும் உலா வருகிறது. வெவ்வேறு காலக்கட்டத்தில் நடக்கும் கதையில் மாறாததது சாதி மட்டுமே என பொட்டில் அடித்து கூறுகிறது தேரி.
இந்நாவலை வாசித்து முடித்த நொடியில் கூறினேன். ஒரு திரைப்படமாய் உருவாவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கிறது என்று. வாசிக்கும் போதே என்னுள் காட்சிகள் விரிந்தது ஒரு காரணம், கதையம்சம் ஒரு காரணம். கரிசல் காட்டு கதைகள் பல பார்த்துள்ளோம். இந்த தேரிக்காட்டு காவியமும் திரையில் மிளிரட்டுமே. தன் மனதிலும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாய் ராஜேஷ் கூறினார். இன்னும் சில நண்பர்களும் திரைப்படம் பார்த்த உணர்வெழுந்தெதன கூறியதாய் பகிர்ந்தார். ஆக இது எனக்கு மட்டும் தோன்றவில்லை. நிச்சயம் தேரி ஒரு திரைப்படமாய் வரும் என நம்புகிறேன்.
சாதியால் செத்தழிந்த காதலர்களுக்கு சமர்ப்பணமாய் இருக்கும் இந்த தேரி. நன்றி!