சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்- 39& 40
39 ) மஞ்சள் நிற சாமியார்
நான் அப்போது ஒரு கல்லூரி ஹாஸ்டலில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். இரவு நேரத்தில் நண்பர்கள் கூட்டம் சேர்ந்துவிடும். மது, கஞ்சா தாராளமாகப் புழங்கும். ஆனால் எவரும் எழ முடியாமல் விழுந்து கிடைப்பதையோ ரகளை பண்ணுவதையோ கண்டதில்லை.அந்த ஜமாவிற்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவர் வருவார். அவர் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. அவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். என்று சொன்னார்கள். அவர் வரும்போது ‘ ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ‘ என்ற சினிமாப பாட்டைப் பாடிக் கொண்டே வருவார். ஏன் அந்தப் பாட்டைத் தேர்ந்தெடுத்தார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. மஞ்சள் நிறமாக இருப்பார். ஆங்கிலம் பேசுவார். ஒரு நாள் நான் ஓட்டலுக்கு மதியச் சாப்பாடு சாப்பிடச் செல்லும்போது வாசலில் அவர் நின்றுகொண்டிருந்தார். தனக்கு உணவு வழங்க முடியுமா என்று ஆங்கிலத்தில் கேட்டார். நாங்கள் இருவரும் உள்ளே சென்று சாப்பிட அமர்ந்தோம். அவரைப் பற்றி விசாரித்தேன். ‘ என் பெயர் அஜய். அதற்கும் மேல் என்னைப் பற்றி தயவுசெய்து எதுவும் கேட்காதீர்கள். நான் தொள தொள பேண்ட் சட்டை போட்டிருக்கிறேன். ஜோல்னாப்பை போட்டிருக்கிறேன் . ஆனால் நான் ஒரு சாமியார் வகையைச் சேர்ந்தவன் ‘ என்றார். நன்றாகச் சாப்பிட்டார்.
நண்பர்கள் ஜமாவிற்கு அவர் வருவதில்லை. பிறகு வரவே இல்லை .எங்கே போனார் என்று எவருக்கும் தெரியவில்லை. இதெல்லாம் நடந்து சுமார் 20 ஆண்டு காலமாகிவிட்டது. என் வாழ்க்கையிலும் வேலையிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டு நான் இப்போது திருவண்ணாமலையில் வசிக்கிறேன். ஒரு நாள் அவர் கனவில் வந்தார். மேற்கு வங்காளத்தில் ஓர் வெற்றிகரமான அரசியல்வாதியாக இருப்பதாகக் காட்சி தோன்றியது. திருச்சியில் மனைவி பிள்ளைகளுடன் இருப்பதாகக் காட்சி தோன்றியது. சௌகார்பேட்டையில் முக்கியமான வியாபாரியாக இருப்பதாகக் காட்சி தோன்றியது.. ஓர் அனாதைப் பிணமாகக் கிடந்து 35 ஆண்டுகளுக்கு முன்பே அவரை எரித்து சாம்பலாக்கி விட்டதாகக் காட்சி தோன்றியது. நான் கண் விழித்தேன்.அந்த மஞ்சள் நிற சாமியார் சாம்பலாகிக் காற்றில் பறந்து இல்லாமலே போயிருப்பார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன் — நான் அவரைச் சௌகார்பேட்டையில் வியாபாரியாகப் பார்க்கும் வரை.
40 ) அறிவாளி உருவாக்கிய கதாநாயகி
நானும் அந்த நடிகையும் தனி அறையில் இருந்தோம். பீர் அருந்திக்கொண்டிருந்தோம். நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவள் படிக்கும் காலத்திலேயே மாடலிங்கில் ஈடுபாடு கொண்டிருந்தாள். சில லோக்கல் நிறுவனங்களுக்கான விளம்பரப் படத்தில் நடித்தாள். சினிமாவில் நடிக்க வேண்டும் ;சம்பாதிக்க வேண்டும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது . அண்ணன் எங்கேயோ தனியாகக் குடும்பத்துடன் வசிக்கிறான். அம்மாவிற்குப் பென்ஷன் வருகிறது. அம்மாவுடன் நடிகை வசிக்கிறாள். அம்மாவிற்கும் நடிகைக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டிருக்கும். அம்மாவுக்கு கட்டுப்படாத மகள். சில படங்களில் நடிகை தலை காட்டியிருக்கிறாள். நல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது. தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நடிகையைப் பிடித்துவிட்டது. ஆனால் ஒரு சிக்கல். தயாரிப்பாளர் படுக்கையைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று சொல்கிறார். பிறகு வாய்ப்பு நிச்சயம் என்கிறார். ஒப்பந்தம் போடக் கூடத் தயாராக இருக்கிறார். பார்ப்பதற்கு நல்லவர் போல் இருக்கிறார். என்ன செய்யலாம் என்று விவாதித்து முடிவு எடுப்பதற்காக நாங்கள் இன்று சந்தித்துள்ளோம்
படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் படத்தில் வாய்ப்பு நிச்சயம் என்று உறுதியாக நம்புகிறாயா என்று கேட்டேன். நிச்சயமாக நம்புகிறேன் என்றாள். அவளின் இலட்சியத்தை கருத்தில் கொண்டு பிறகென்ன பகிர்ந்து கொள்ள வேண்டியதுதானே என்றேன். கற்பு என்று ஒன்று இருக்கிறதல்லவா என்றாள். அவர் தொடர்ந்து உன்னை பயன்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறாயா என்று கேட்டேன். அப்படி நினைக்கவில்லை ; அவர் நல்லவர்.என்றாள். அந்த நல்லவரை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே; நீ அவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொள்.; அவர் நல்லவர் என்பதால் உன்னைக் கைவிட மாட்டார்.; உனக்கு வாழ்க்கையும் அமையும்; கதாநாயகி வாய்ப்பும் கிடைக்கும் என்ற நல்ல யோசனையைக் கூறினேன்.
அவரை அவள் ரகசியத் திருமணம் செய்துகொண்டாள். அவள் கதாநாயகியாக நடித்தாள். படம் வெற்றிகரமாக ஓடியது. திரையுலகில் ஒரு ரவுண்டு வருவாள். என்னைச் சந்தித்து நன்றி கூறினாள். நல்ல யோசனை கூறி தன்னுடைய இலட்சியம் நிறைவேற உதவி செய்ததாகக் கூறினாள். என்னை அறிவாளி என்றாள். நான் ‘என்னை ஒரு முக்கியமான அறிவாளி ‘ என்று சுய பகடி செய்துகொண்டேன்.