சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்  35 & 36

…………………..

35 ) காலங்களில் அவள் வசந்தம்

நான் அந்த பாடகியின்  பாட்டைக் கேட்கும்போது பெரிதும் உவகை  அடைகிறேன். சுமாரான பெண்ணாகிய அவள்,அழகு ரூபம் கொண்டுவிடுவாள். அழகு என்றால் பெரும் அழகு. பாடும்போது ஏற்படும் சிரித்த முகம்; பாவனைகள்  பெரும் இன்பத்தை   எனக்கு  அளிக்கின்றன. அந்தப் பாடகியைக் கடத்திக்கொண்டு போய் நான் விரும்பும்  நான்கு வரிகளை நான்கு விதமான ராகங்களில் பாட வைக்கவேண்டும் என்று தோன்றியது. நான் எந்த அடிப்படையில் அவள் வீட்டுக்குச் சென்று என் கோரிக்கையை வைப்பது. அவள் அதை  எப்படி ஏற்றுக்கொள்வாள் என்று நான் எதிர்பார்க்க முடியும். கடத்துவது ஒன்றே ஒரே வழி.

அந்தப்பூந்தோட்டத்தில்  இருந்தோம். அவளை எப்படிக் கடத்தினேன் என்பதையும்  அவளுக்கு எப்படி என் மேல் நம்பிக்கை வந்தது என்பதையும் நான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன். பக்கத்தில் கடல் இருக்கிறது என்றேன். இரைச்சலில் தெரிகிறது என்றாள்  நான் உங்களின் மஹா ரசிகன் என்றேன். தெரிகிறது என்றாள். நான் என் கோரிக்கையைக் கூறினேன்;”காலங்களில் அவள் வசந்தம் ; கலைகளில் அவள் ஓவியம் ; மாதங்களில் அவள் மார்கழி ; மலர்களில் அவள் மல்லிகை ” இந்த நான்கு வரிகளை ராகம் தானம் பல்லவியில் பாடிக் கேட்க வேண்டும் என்பது என் ஆசை . ஆனால் அதற்கு நேரம் அதிகமாகும். ராகம் தானம் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். பல்லவியான இந்த நான்கு வரிகளையும் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு ராகத்தில்  ஸ்வரத்துடன் பாடவேண்டும் என்றேன். இது யார் எழுதியது என்று கேட்டாள் . கண்ணதாசன் எழுதியது என்றேன். திறந்தவெளியில்  கூரையால்  வேயப்பட்ட காற்று மிதமாக அடிக்கும் இடத்தில நாங்கள் இருந்தோம். அவள் சற்றுத் தள்ளிச் சென்று ஒத்திகை மாதிரி  பாடிப் பார்த்தாள்.

பின் அவள் தன் வசீகரக் குரலில் பாடினாள் ; சஹானா , ஹம்சாநந்தி , அமீர் கல்யாணி , தர்பாரிகானடா  ஆகிய ராகங்களில் நான் சொன்னபடி பாடினாள். நான் பெரும் பரவசமும் இன்பக் கிளர்ச்சியும் அடைந்தேன் .நான்  உருகி வழிந்து விட்டேன். அவள் பாட்டை நிறுத்தினாள் . உருகி வழிந்து கிடந்த நான் உருப்பெற்றேன் . எனக்கு அவளைக் கட்டிப்பிடிக்க வேண்டும் போலிருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டேன். அவள் கடலை நோக்கிச் சென்றாள். நான்  பின் தொடர்ந்தேன். கடல் தெரிந்தது. அவள் கடலுக்குள் இறங்கிக் கடலுக்குள் மறைந்தாள். அவள் சங்கீத சாகரம்.

36 ) வெள்ளத்தில் சிக்கும் காலம்

நீண்ட காலம் கழித்து அந்த ஊருக்கு வந்து அந்தத் தெருவை அடைந்து  “காளிவேலு ” என்ற பெயரைச் சொல்லி விசாரித்தேன். அவர் நொடித்துப் போய் விட்டார் என்றும் இந்த வீட்டை விற்றுவிட்டு கடற்கரைப் பகுதியில் ஒரு சிறு வீடு கட்டி அதில் வசிப்பதாகவும் தெரிவித்தார்கள். காளிவேலு பள்ளியில் என் கூடப்படித்தவன். அவர்கள் காண்பித்த கடற்கரைப் பகுதிக்கு நான் சென்றேன். சிறு ஓட்டு வீடு. கடற்கரைப் புறம்போக்கில் இருந்தது. நிலைப்படியில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். நான் அவளிடம் ” நீங்கள் காளிவேலுவின்  மனைவியா  ” என்று கேட்டேன்.  ” இல்லை. நான் அவருடைய மகள் ” என்றாள் . சத்தம் கேட்டு ஒரு பெரியவர் உள்ளே இருந்து வந்தார். அவர் கூடப்படித்தவன் என்றும் என் பெயர் சந்திரன் என்றும் கோமுட்டி கடைக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தோம் என்றும் என்னை அடையாளம் காட்டிக் கொண்டேன். அவருக்கு ஒன்றும் நினைவில் இருக்கிறாற்போல் தெரியவில்லை. அவர் கிழத்தோற்றத்தில் இருந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் தமிழ்நாடு ஓட்டலில் அறை  எண் 234 இல் தங்கியிருப்பதாகவும் காலை பத்து மணிக்கு என் அறைக்கு வந்து என்னைப்  பார்க்குமாறும்  கூறினேன். அவர் தலையாட்டினார். எனக்கு சந்தேகம் வந்து : உங்கள் அப்பா பெயர் சிவலிங்கம் உங்க அம்மா பெயர் பார்வதிதானே ” என்றேன் அவர் என்னைப்  பார்த்து ” ஆமாம் ” என்றார். பிறகு “காலையில் வாங்க ” என்று கூறிவிட்டு ஓட்டலுக்குச் சென்றேன். அடுத்த நாள் காலையில் காத்திருந்தேன்.காளிவேலு வரவே இல்லை. காலம் பலவற்றை வெள்ளம் அடித்துச் செல்வதை போல் அடித்துச் சென்றுவிடுகிறது.  காளிவேலுவின் நினைவில் நான் இல்லை என்று நினைத்துக் கொண்டேன் .