சுரேஷ்குமார இந்திரஜித் குறுங் கதைகள் 45 & 46
45 ) உஷா நந்தினி
இது வயதானவர்களுக்கான கதை. சினிமா ரசிகர்களுக்கான கதை. சீனிவாசனுக்குக் குடலில் புற்றுநோய் என்பது உறுதியாகிவிட்டது.டாக்டர் பரவிவிட்டது என்று சொல்லிவிட்டார். ஒன்றும் செய்வதற்கு இல்லை. வலியைத் தவிர்ப்பதற்காக மாத்திரைகள் கொடுத்திருக்கிறார்கள். திரவ ஆகாரம் கொடுக்கிறார்கள். ‘ சிவாஜி கணேசனே இறந்துவிட்டார் இனி நான் இறப்பதற்கு என்ன ‘ என்று நினைத்துக்கொள்வார். சிவாஜி கணேசன் நடித்த உணர்ச்சிகரமான குடும்பப் படங்களைப் பார்த்து அவரின் ரசிகரானார். ஒரு கட்டத்தில் சிவாஜி உடலைக் குறைத்து ட்ரிம்மாக படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் அவருக்குப் பிடிக்கும். சிவாஜியுடன் நடித்த கதாநாயகிகளில் உஷா நந்தினி என்ற நடிகையைத்தான் அவருக்குப் பிடிக்கும். அவர்தான் சிவாஜிக்கு பொருத்தமாக இருப்பதாக அவர் நினைத்தார்.
சரோஜா தேவி எம்ஜியாருக்குத்தான் பொருத்தமானவர். பத்மினி பல படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தாலும் அவருடைய வடிவமைப்பு அவருக்கு ஈர்ப்பை அளிக்கவில்லை. உஷா நந்தினி என்ன ஆனார் என்றே தெரியவில்லை. பத்திரிக்கைகளிலும் அவரைப்பற்றி செய்தி எதுவம் வரவில்லை அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. பலவாறு யோசித்துக்கொண்டே அவர் தூங்கிவிட்டார்.
அவர் கண்வழித்துப் பார்க்கும்போது நாற்காலியில் பழைய தோற்றத்தில் உஷா நந்தினி உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கலாம். கிழவித் தோற்றத்தில் உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கலாம். சிவாஜி கணேசனுடன் சேர்ந்து உஷா நந்தினி உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கலாம். சிவாஜி கணேசன் மட்டுமே உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கலாம். அல்லது அவர் கண்விழிக்காமலே இறந்து போயிருப்பார் என்று நினைக்கலாம். அல்லது அவர் வழக்கம்போல் தூங்கி எழுந்திருப்பார் என்று நினைக்கலாம்.
மேற்கண்ட யூகங்களுக்கு உட்பட்டுத்தானே முடிவுக்கு வர முடியும் . மேலும் அப்படி சீனிவாசன் என்று ஒரு நபர் இருந்தால்தானே இத்தனை யூகங்களுக்கும் இடம் கொடுக்க முடியும் . இப்போது சொல்கிறேன். அப்படி ஒரு நபரே இல்லை
46 ) என் சந்தேகங்கள்
பொய் சொல்வதிலும், பசப்புவதிலும் ,பொய் பாவனைகள் காட்டுவதிலும், பேசுபவரிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதிலும் கெட்டிக்காரியான நாகம்மை என்ற வினோதினியின் முன்னால் நான் உட்கார்ந்திருக்கிறேன்.’ நீ சொன்ன பணம் எனக்குப் போதாது. ஒரு நைட் கூட இருக்கணும்னு சொல்றே. எப்படி பத்தும் . தூங்கவிடமாட்டான் குடிச்சிட்டு வருவான் . ஒரு நைட் அதுக்கு தில் வேணும் . என்ன செய்வானோ ஏது செய்வானோ. எல்லாத்துக்கும் ஒத்துப் போகணும் வேண்டாம் இந்த கேசு. அப்புறம் உறை போட ஒத்துக்கணும். இதெல்லாம் வேண்டாம். ஒரு தடவைக்கு வந்தானா, முடிச்சானா. போய்க்கிட்டே இருக்கணும் . நானும் முன்னே மாதிரி இல்லை. நான் டெய்லரிங் பண்றேன். சம்பாதிக்கிறேன் .அதனாலே நைட் வேண்டாம்னு சொல்லியிரு. மத்தபடி ஒரு தடவைக்கு சரி.. ஆனால் உறை போட்டுக்கணும்.’
நான் அந்த நபரிடம் சென்று எல்லாம் பேசி முடிவாகிவிட்டது என்று சொன்னேன். டெய்லரிங் பண்ணிக்கொண்டிருந்த அவளை சற்று தள்ளி நின்று அந்த நபரிடம் காண்பித்தேன். அந்த நபருக்குப் பிடித்து விட்டது. நான் ஒரு நைட்டுக்கு தொகை பேசி அட்வான்ஸ் கேட்டேன் . அவன் வெளியூர்காரன். என்னிடம் அந்த அப்பாவி தற்செயலாக மாட்டிக் கொண்டான். அவனிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டேன்
ஒரு வாரம் கழித்து நாகம்மையைப் பார்க்கச் சென்றேன். ‘ அன்னைக்கு வந்தே அப்புறம் ஆளையே காணாமே ‘ என்று கேட்டாள். ‘ பார்ட்டி படியலே விரட்டி விட்டுட்டேன் ‘ என்றேன்.’ எனக்கு கண்ணு பொட்டைனு நினைச்சியா அந்த செட்டியார் கடைப் பக்கம் நின்னு என்னை காமிச்சு அந்த ஆள் கிட்டே பேசுனீயே . வெளியூர்காரன்ட் என்னை காமிச்சு ஏமாத்தினியே. எவ்வளவு அட்வான்ஸ் வாங்கினே’ என்றாள். நான் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து ‘ இந்தா உன் பங்கு ‘ என்று அவளிடம் கொடுத்தேன் . அவள் வாங்கி வைத்துக் கொண்டாள். எனக்கு அவளிடம் சில சந்தேகங்கள் ஏற்பட்டன. ஆனால் நான் அந்த சந்தேகங்களை அவளிடம் கேட்கவில்லை.