1.

முன்பொரு பாடல் இருந்தது. அதை காற்றினில் பரவ விட்டேன்.

பின்னொரு தீண்டல் இருந்தது.

பிராணிகளுக்கு

அளித்து வளர்த்தேன்.

பிந்திய காலத்தின் கனவை

பகல் தன் சோம்பலை முறித்து

எழுமுன்

மறந்து போனேன்.

ஒரு கடிதம், அதன் வரிகள்,

எழுதிய பேனா

என அனைத்தையும்

அலை உமிழும் மணலின்

அடியில் விட்டுவிட்டு

வந்தேன்.

விடாது ஒட்டி வந்த

உப்புக்கரிப்பை,

நரநரப்பைப் போக்க

இரண்டு டிஷ்யூக்கள்

போதுமானதாய் இருந்தன.

 

பரிசளித்த ஆடையை

முழுகிய பின்

திரும்பிப் பார்க்கக் கூடாத

குளத்தின் படிகளில்

நீங்கினேன்.

சொல்லிய வார்த்தைகளை,

பெற்றுக் கொண்ட

வாக்குறுதிகளை,

சாட்சியென நின்றிருந்த

வானத்தில் வீசியெறிந்தேன்.

ஒவ்வொன்றாய் மினுங்கும்

நட்சத்திரமாகி

இரவு முழுதும்

வெறிக்கிறது

என் கூரையில்.

 

படர்ந்த வேலி முழுதும்

தெறித்த சிவப்பில்

பூக்கும் மயில்மாணிக்கத்தின்

இலையைக்

காணும்போதெல்லாம்

இமைபீலியென

வர்ணித்த வரிகள்

வஞ்சிக்கின்றன.

 

வாதைக்கட்டிகள்

அடைந்த சிறுபொதிகள்

சுமக்கும் வாகனத்திற்கு

உயிரிருக்குமானால்

அது என் பெயரைச் சொல்லும்.

வாசனைத் திரவ புட்டியென

ஞாபகங்களைக்

கசியச் செய்யும்

காந்தலேறிய

கன்னத்தழும்புக்கு

ஒரு சிகரெட் முனை

போதும்.

 

விண்ணேகும்

வெகுமானத்திற்கு காத்திருக்கும் வீண்பொழுதினில்

கண்திறக்கச் செய்யும்

வெளிச்சமாய்

இன்னும் ஏன்

என் வாழ்வில்  ஒளிர்கிறாய்?

 

2.

அக்கதவின் பின்

நின்றிருந்த காலங்கள் உண்டு.

சருகசைந்த சத்தத்திற்கு

படபடத்த

நெஞ்சம் உண்டு.

இந்த வசந்தத்தின் இறுதியான மாம்பழம்

உனக்குதான்

என நினைத்ததுண்டு.

வேரோடி போன கால்களில்

கொலுசுகள்

விலங்கான கதையுமுண்டு.

என் ஏட்டில் எழுதப்படாத

கதைகளென

உன் வாழ்வில்

ஒரு காதலுமில்லை.

ஏதென அறியச்செய்த

இறுமாப்பை சுமக்குமுன்பு

கல்பவருஷ தவத்தை

சுண்டுவிரலால்

ஒதுக்கும்

அலட்சியத்துக்கும்

பெண்கணக்கெழுதும்

பேராற்றலுக்கும்

நிறை வைக்கக் காணேன்.

 

புழக்கடையில்

பொரி தின்னும் மீன்களுடைய

கிணற்றுக்கு

ஊண் அளிக்கும்

பெருங்கொடையாகட்டும்

இக்காத்திருப்பு.

 

3.

சிறுகல் பொறுக்கி

மணல் நிரவி

இருமருங்கும் இசைமுழங்கும்

ஒருவழிப்பாதையின்

கடைசி நிறுத்தம் நான்.

ஒற்றைப்பாதம் அழுத்திய

உப்புப்பாறை தவத்திற்கு

உன் தரிசனமன்றி

வரமேதும் கேட்பதாயில்லை.