சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்: 9 – 10

9 ) குத்து விளக்கு

ராதிகாவிற்கு திருமணக் கனவுகள் இருந்தன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் கனவுகள் இருப்பது இயல்புதான் . ஆண் பலரிடமும் சொல்லலாம். பெண்கள் நெருங்கிய தோழிகளிடம் மட்டுமே சொல்வார்கள் . அதிலும் பல ரகசியங்கள் மறைக்கப்பட்டிருக்கும். டி வி யைத் திறந்தால்  ஆணும் பெண்ணும் தொட்டு , உரசி, கட்டிப் பிடித்து , தடவிக் கொண்டு, வாயினால் தேய்த்துக் கொண்டு சரசமாடிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தோடு பார்க்கும் காட்சிகள். சமூகம் உருவான காலத்திலிருந்து ஆன் பெண் உறவுகள்தான் முக்கியமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

திருமணமான பின்பு கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் உடல் உறவு மட்டுமே நிலைத்திருக்கிறது . ராதிகா ஒரு பிசினஸ் பார்க்கும் பையனைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாள். கார் ,ஓட்டல் , டூர் ,ஷாப்பிங் – இவையெல்லாம் அவளுடைய மகிழ்ச்சிகள். அரசு வேலை பார்க்கும் பையன் வேண்டாம் என்று நினைத்தாள். காலையில் வேலைக்குப் போய்  இரவில்  வரும் ,மதியச்சோறை கொண்டு செல்லும், முகத்தில் எண்ணெய் வழியும் கணவனை அவள் வெறுத்தாள். கணவனுக்கு மதியச்  சாப்பாடு பரிமாற வேண்டாமா. பிசினஸ் பார்க்கும் பையனாக இருந்தால் மதியம் வரச்  சொல்லிவிடலாம். அவர் ஒரு குட்டி தூக்கம் போட வேண்டாமா. சென்ட் போடும் அரசாங்க குமாஸ்தாக்கள் இருக்கிறார்களா. சென்ட்  போட்டுக் கொண்டு போய் எப்படி மேலதிகாரி முன் நிற்க முடியும்.?

இந்தியாவில் கனவுகள் நிறைவேறுவதுண்டா .கனவுகள் நிறைவேறாது . அவை கற்பனைகள் . முகத்தில் எண்ணெய் வழியும் ஒரு அரசாங்க குமாஸ்தாவைத் திருமணம் செய்து கொண்டாள் , சமையல் செய்கிறாள . இரவில் வரும் கணவனை அலுப்புடன் பார்க்கிறாள். சாமி கும்பிடுகிறாள் . அப்போது இந்திய உளவியலின்படி தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக் கொள்கிறாள். இப்போது அவள் ஒரு குத்து விளக்கு .

10)வசந்தா

மனைவிகளுக்கு என்று ஒரு அழகுண்டு . அதாவது பிறன்  மனைவிகளுக்கு.. சொந்த மனைவி அழகாக இருந்தாலும் அவள் பிறன் மனைவியைக் காட்டிலும் எப்படி அழகாக இருக்க முடியும்.  அப்படி ஒரு பிறன் மனைவியிடம்தான் நட்பாக இருந்தான் பிரதாப். இருவரும் காபி ஷாப்பில் சந்தித்துக் கொண்டார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் கண்களுக்குள் பார்த்துக் கொண்டார்கள். கிளர்ச்சியாக இருந்தது. இருவரும் எதிர் எதிரே உட்காராமல் ஒரே சீட்டில் பக்கம் பக்கமாக உட்கார்ந்திருந்தார்கள். அப்போதுதானே ஒருவரை ஒருவர்  ஏதோ ஒரு வகையில்  தொட்டுக் கொள்ளவோ ஒட்டிக் கொள்ளவோ முடியும். அப்படி ஒரு நிலையில் இருந்தபோது வசந்தா உள்ளே நுழைவதைப்  பார்த்தான. எழுந்து எதிர் சீட்டிற்கு மாறி உட்கார்ந்து கொண்டான் . அந்தப் பிறன்  மனைவி  ‘ என்ன’ என்று கேட்டாள். அவன் ‘வசந்தா ‘ என்று மெதுவாகக் கூறினான் . ‘ வசந்தா யார் ‘ என்றாள். பிரதாப் ‘ என்னுடைய மனைவி ‘ என்றான் . ‘ உங்கள் மனைவியா ‘ என்று பதறியபடி அவள் வேறு ஒரு சீட்டிற்குச் சென்று உட்கார்ந்தாள்.

நன்றாகப்  பார்த்தான். வசந்தாவைக்  காணவில்லை.  வசந்தா  உண்மையில் வந்தாளா   இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது . அந்த பிறன் மனைவியைப் பார்த்து அவள் அருகே சென்றான் .’என்ன ‘ என்றாள். ‘ வசந்தா மாதிரி தெரிந்தது ஆனால்  அவள் இல்லை ‘ என்றான் , ‘உங்களுக்கு அப்படித்தான் தெரியும் எனக்கும் என் கணவர்  வருவது போல் தெரியும் ‘என்றாள். ‘ஒரு வேளை  வந்தது வசந்தாவாக இருக்குமோ; பார்த்துவிட்டு சென்றிருப்பாளோ ‘ என்று தோன்றியது. இருவரும் காபி ஷாப்பைவிட்டு வெளியேறினார்கள். இந்திய உளவியலின்படி வசந்தா தோன்றத்தானே செய்வாள்.