ன் விருப்பமில்லாமல் என் கண்களிலிருந்து சுரந்தபடி இருந்த நீர் எனக்கு அருவருப்பையே தந்தது. மழை கரைக்கும் கரையான் புற்றாக என் இருப்பைக் கரைத்துக்கொண்டிருந்த நினைவுகளிலிருந்து தப்பிக்க பார்வையை ஜன்னலுக்கு அப்பால் செலுத்தினேன்.  அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்த மைனா ராகம்  இசைத்துக்கொண்டிருந்தது. அந்தக் குட்டிப் பறவையை சில நிமிடங்கள் கவனித்தாலே எத்தனை பெரிய துக்கமும் பஞ்சாகப் பறந்துவிடாதா என்ன! அதன் அலகு ஆரஞ்சு நிறமா மஞ்சளா  என்று  யோசித்துக்கொண்டிருக்கையில் கீழே ரம்யா கேட்டிற்குள் நுழைந்து ஸ்கூட்டரை நிறுத்துவது தெரிந்தது. அவள் மாடிக்கு வர இன்னும் இரண்டு நிமிடங்கள் ஆகலாம். எழுந்து கிச்சனுக்குள் சென்று குழாயைத் திறந்து இளஞ்சூடாகக் கொட்டிய தண்ணீரை முகத்தில் எடுத்து அறைந்துகொண்டு அழுத கரையைக் கழுவினேன்.

நான் ஹாலுக்கு வரவும் ரம்யா கதவைத் தட்டுவது கேட்டது. கதவைத் திறந்ததும் ‘உஸ்’ என்று அனத்திக்கொண்டே உள்ளே நுழைந்தவள் நேராகக் கிச்சனுக்குள் சென்று மடமடவென்று ஒரு கிளாஸ் நீரை எடுத்துக் குடித்தாள். பின்பு வாஞ்சையாகப் புன்னகைத்தவாறே என் கையைப் பிடித்து இதமாக என்னை சோஃபாவில் அமர்த்தினாள்.

சில நிமிடங்கள் ஆதரவாகக் கையைத் தடவிக்கொடுத்தவள் மெதுவாகப் பேசத்தொடங்கினாள். முகுந்த், என்னை இவ்வாறு நடத்துவதை எந்தவிதத்திலும் இனியும் நான் பொறுத்துக்கொள்ளக்கூடாது என்றாள். நான் தலையைக் குனிந்துகொண்டேன். முன்பே ஒரு முறை என்னை நடு இரவில் அவன் வீட்டிலிருந்து வெளியேற்றியதையும், நண்பர்கள் முன்பே என்னை அறைந்ததையும் கோபமாக நினைவுகூர்ந்தாள். முகுந்த் என்னிடம் இத்தனை முரடாக நடந்துகொள்வதற்கு என் அமைதியும் ஒரு காரணம் என்றாள். இந்த முறை எது நடந்திருந்தாலும் அவன் மீது நிச்சயம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க வேண்டும் என்றாள். எனக்கு சிரிக்கத் தோன்றியது. என் உதடுகளில் அனிச்சையாகத் தோன்றி மறைந்த புன்னகையை நல்லவேளையாக அவள் கவனிக்கவில்லை. சில நொடிகள் தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டதுபோல் அமைதியாக இருந்துவிட்டு பின்பு மெதுவாகவும் தயக்கமாகவும் நேற்றிரவு என்ன நடந்தது என்று கேட்டாள். என் பார்வை மீண்டும் ஜன்னலுக்கு வெளியே சென்று மைனாவைத் தேடியது. என்னை ஏமாற்ற விரும்பாததுபோல் மைனா அது அமர்ந்திருந்த இடத்திலேயே இருந்தது. நான் மீண்டும் புன்னகைத்தேன். சற்றே அகன்றப் புன்னகை. அதைக் கவனித்த ரம்யா என் கையை அழுத்தி நேற்று என்ன நடந்தது என்று மீண்டும் கேட்டாள். எத்தனையோ மைல்கள் பறந்து, தன் சிறிய உடல் அளந்து முடித்த உலகத்தை சற்று நேரம் அமைதியாக உற்றுப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தது அந்த மைனா. அது ராகம் இசைக்கும்பொழுதெல்லாம் அசையும் அதன் குரல்வளைச் சதையைக் கவனிக்க இனிமையாக இருந்தது.  இந்த மைனாவைப்போல் மனிதர்களும் மிருதுவாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ரம்யாவிற்குக் கடுப்பாக இருந்திருக்க வேண்டும். வேலைக்கு நடுவே போனில் என் அழுகுரல் கேட்டு அனுமதிபெற்று என்னை ஓடி வந்து சந்திக்கிறாள். நானோ இதுவரை ஒரு வார்த்தையும் பேசவில்லை. ரம்யா என்னைச் சற்று தனிமையில் விடும்பொருட்டு தன் கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் சென்றாள். சில நொடிகளுக்குப் பிறகு ஏ.சி உறுமுத் தொடங்கியது.

பின் கட்டில் அம்மா புழங்குவது அவள் உருட்டும் பாத்திரங்களின் சத்தத்தில் தெரிந்தது. அன்று அம்மா தாமதமாகக் கண் விழித்திருந்தாள். அனு அவளுக்கு முன்கூட்டியே எழுந்து, பல் துலக்கி பாடம் படிக்கத் தொடங்கியிருந்தாள். அம்மா என்ன வேலை செய்தாலும் கடுப்புடன்தான் செய்வாள். அவளுக்குப் பிடித்த வேலை என்று எதுவும் உண்டா என்று அனு யோசித்திருக்கிறாள். காலை எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போடும்போதுகூட அவள் வாய் எதையாவது சபித்தபடி இருக்கும். அனுவிற்குக் கோலம்போட ஆசை. ஆனால் அவளுக்கு அம்மா போல் கோல இழையைப் பிசிறில்லாமல் இழுக்கத் தெரியாது. அம்மாவிடம் திட்டு வாங்காமல் இருக்க ஒழுங்காக இழையை இழுக்க வேண்டும் என்று நினைக்கவே அவள் கைகள் மேலும் நடுங்கும். அன்று அம்மா அவளைக் கூப்பிட்டுக் கோலம் போடச் சொன்னாள். அனு வாசல் தெளித்து, கூட்டி முடித்துக் கோலம் போட்டுவிட்டு மீண்டும் பாடத்தை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினாள். வயிறு பசியில் கிள்ளியது. அம்மாவிடம் ஏதாவது கேட்டால் கெட்ட வார்த்தையில் காலையிலேயே அர்ச்சிக்கத் தொடங்கிவிடுவாள். அவள் வாயிலிருந்து வந்து விழும் ஒவ்வொரு வார்த்தையும் அன்றைய தினம் முழுவதும் காதுகளில் ரீங்காரித்தபடி இருக்கும். அம்மாவிற்கு என்றைக்காவது வாய் கோணி பேச்சு வராமலோ தொண்டை அறுந்து ஊமையாகியோ விடமாட்டாளா என்று அனு யோசிப்பாள். பள்ளிக்கூடம் சென்றால் தோழிகளைச் சந்திப்பது மகிழ்ச்சிதான் என்றாலும் அம்மாவின் வார்த்தைகள் ரீங்காரிப்பதை அவ்வளவு எளிதில் அவளால் புறந்தள்ளிவிட முடியாது. அம்மா கெட்ட வார்த்தைகளில் சபிப்பதும் ஏசுவதும் அவள் தோழிகளுக்குத் தெரிந்திருக்குமா, அவர்கள் வீட்டிலும் அம்மாக்கள் அப்படித்தான் அவர்களைத் திட்டுவார்களா, அவர்களும் இவளைப் போல்தானா?

பின்கட்டு வேலை முடித்து வாசலில் எட்டிப் பார்த்த அம்மா கோபமாக மீண்டும் உள்ளே சென்று வாளித் தண்ணீரை வேகமாக எடுத்து வந்து கோலத்தின் மீது கொட்டினாள். அனு போட்ட கோலத்தைக் கழுவி மீண்டும் தானே போட்டாள். அம்மா கோலம் போடுவதையே பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அனு. எங்காவது ஓடிப்போக வேண்டும்போல் இருந்தது அவளுக்கு. கோலம் போட்டு முடித்து உள்ளே திரும்பி வந்து அலுமினியக் கோல டப்பாவை நங்கென்று ஜன்னல் திட்டில் வைத்த அம்மா, அனுவின் தலையில் அவள் எதிர்பார்க்காத நொடி ஓங்கி ஒரு குட்டு வைத்தாள். வலியை விடவும் அவமானம் பிய்த்துத் திங்க, அனு பாட புத்தகத்தில் முகத்தைக் கவிழ்த்துக்கொண்டாள். கொட்டிய கண்ணீர் கன்னத்தை நனைக்காமல் நேராக புத்தகத்தின் பக்கங்களை நனைத்தது. தலைமீது கைவைத்து வலித்த இடத்தில் அழுத்திவிட கை பரபரத்தது. ஆனால் அதை அம்மா பார்க்கக்கூடாது.  இரண்டு கைகளையும் இறுக்கமாகப் பிடித்தபைடி பற்களைக் கடித்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் அப்பாவும் எழுந்து வந்து வாசற்பக்கமாகப் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படிக்கத் துவங்க, அம்மா அவர் கைகளில் காபிக் கோப்பையைக் கொடுத்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். எப்பொழுதும் அப்பாவை எதையாவது முணுமுணுக்கும் அவள் வாய் அதிசயமாக இன்று அமைதியாக இருந்தது. அப்பாவும் அந்த மாற்றத்தை எதிர்பார்த்திருந்தவராக இயல்பாக செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தார். அனு அவரருகே சென்று நிற்கவும் என்னவென்று அன்புடன் வினவினார். அனு நடந்தவைகளைச் சொல்லி அவர் முன்பு அழ நினைத்தாள். ஆனால் அப்பொழுது பார்த்து கண்ணீர் வரவில்லை. ஏதாவது வாய்ப்பு கிடைத்தால் அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் ஏசிக்கொள்ளத் தயங்காதவர்கள். அனுவைக் காரணம் காட்டியே இருவரும் சண்டையிட்டுக்கொண்ட பொழுதுகள்தான் அதிகம். ஆனால் அப்பா, அன்று அம்மாவை எதுவும் கேட்கவில்லை. அம்மாவை தொந்தரவு செய்யாமல் பாடத்தைப் படிக்க அனுவை அறிவுறுத்தினார். ஒருவேளை தான் அழாததால் அப்பாவிற்குத் தன் மீது இரக்கம் வரவில்லையா? ஏன் அப்பா அன்று அம்மாவிடம் எதுவும் கேட்கவில்லை? அனுவிற்குக் குழப்பமாக இருந்தது.

மீண்டும் என்னிடம் வந்தமர்ந்த ரம்யா என்னால் இப்பொழுதாவது பேச முடியுமா என்று கேட்க, நான் அவளை அமைதியாக ஏறெடுத்துப் பார்த்தேன். நடந்தவைகள் என் மனத்திரையில் சுழன்றுகொண்டிருப்பதை அவளுக்குக் காட்ட நினைப்பவள்போல் அவள் கண்களை ஊடுறுவினேன்.

நேற்று முகுந்த் அவனது நண்பன் சதீஷை அவன் விட்டிற்கு அழைத்து வந்திருந்தான். நானும் நேற்று முகுந்த் வீட்டில்தான் தங்கியிருந்தேன்.  முகுந்த் என்னிடம் அவனும் சதீஷும் இரவு சேர்ந்து படம் பார்க்கப்போவதாகக் கூறி என்னை அறைக்குச் சென்று உறங்க அவசரப்படுத்தினான். என்னால் உறங்க முடியவில்லை. என்னை வீட்டிற்கு வரவழைத்துவிட்டு பின்பு எனக்கு அறிமுகமில்லாத அவன் நண்பனையும் எதற்கு அழைக்க வேண்டும்? முகுந்திற்கு என்னுடன் இருக்கப் பிடிக்கவில்லையா? எனக்கு சமயங்களில் அவன் நடத்தைகள் எதுவும் பிடிபடுவதில்லை. அறைக்கதவை சாத்திக்கொண்டு தலையணைக்குக்கீழ் இருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். சில நிமிடங்களுக்குப் பிறகுதான் நான் எதுவும் வாசிக்காமல் வெகு நேரமாக பக்கத்தை வெறித்துக்கொண்டிருக்கிறேன் என்று உரைத்தது. அறைக்குள் எட்டிப்பார்த்த முகுந்த் நான் படிப்பதைக் கவனிக்காதவன்போல் விளைக்கை அணைத்துவிட்டுச் சென்றான். தூங்குவதற்கான உத்தரவு. நான் புத்தகத்தை அணைத்தவாறு ஒருக்களித்துப் படுத்துக்கொண்டேன். நெடு நேரம் படுத்த வாக்கில் அசையாமல் திறந்த கண்களுடன் தூக்கம் பிடிக்காமல் தவித்துக்கொண்டிருந்தவள் எனக்கு எதிரில் இருந்த ஸ்டீல் பீரோவில் தெரிந்த பிரதிபலிப்பில் முகுந்த் கதவைத் திறந்து என்னை எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றதைக் கவனித்தேன். குழம்பிய மனம் மேலும் குழம்பியது.

சிறிது நேரத்தில் ஏதோ ஒரு புகை அறையை நிரப்பியது. நெருப்போ என்று பயந்து திடுக்கிட்டு எழுந்து உட்கார, புகை ஹாலிலிருந்து வருவதை உணர்ந்தேன். விளக்கைப் போடாமல் கதவைத் திறந்து ஹாலுக்குள் தயக்கமாக எட்டிப் பார்க்க, சதீஷ் என்னை முதலில் கண்டுகொண்டு முகுந்திடம் சைகை செய்தான். கூடம் முழுவதும் மெல்லிய புகைப் படலம் படிந்திருந்தது. அந்தப் புகையிலிருந்து வெளிப்பட்ட காரல் என் தொண்டையைத் தொந்தரவு செய்யவும் இருமல் வந்தது. என்னைக் கோபமாகப் பார்த்த முகுந்த் அறைக்குள் போகுமாறு சைகை செய்தான். பின்பு அவன் ஏதோ ஒரு கெட்ட வார்த்தையைக் கூற எனக்கது சரியாகக் கேட்கவில்லை ஆனால் அவன் நண்பன் அதைக் கேட்டுத் தலையைக் குனிந்துகொண்டான். இதுவரை முகுந்திடமிருந்து வெளிப்பட்ட கோபம், அன்பைப் போலவே அந்தரங்கமாக எங்களுக்கு இடையில் மட்டுமே இருந்தது. இன்று மூன்றாம் மனிதன் முன்பு என்னைக் கீழ்மைப்படுத்தவும் அவன் தயங்கவில்லை. என் உடல் எரிந்தது. அவனருகில் சென்று புகைப்பதை நிறுத்துமாறு நான் கூறவும் அவன் பதிலளிக்காமல் புகையை இன்னும் இழுத்துவிட்டான். சதீஷிடம் அவர்கள் புகைப்பது கஞ்சாவா என்று நான் கேட்க அவன் மீண்டும் தலையைக் கவிழ்த்துகொண்டான். அவன் வாயிலிருந்தும் புகை வெளியேறியபடி இருந்தது. நான் சதீஷிடம் கேள்வி கேட்கவும் முகுந்த் வேகமாக எழுந்துகொண்டே என்னை மீண்டும் அறைக்குள் போகுமாறு கத்தினான். நான் சுதாரிப்பதற்குள் என் மார்பில் கைவைத்துத் தள்ளிக்கொண்டே படுக்கையறைக்குள் என்னை செலுத்தினான். மூன்றாவது மனிதன் ஹாலில் அமர்ந்திருக்க கதவைத்  திறந்தபடியேவிட்டு முகுந்த் என் மீது வெறித்தனமாக இயங்கினான். என் உடல் அவனது உடலின்கீழ் வெட்டி சாய்த்த மரமாகக் கிடந்தது.

‘முண்ட.. யே முண்ட… எங்கடி மேஞ்சுட்டு வர?’

‘…’

‘கேக்கறேன்ல.’

‘…’

‘இங்க வாடி. இழுத்து மூடியிருக்குற வாய்ல சூடு வெக்கறேன்.’

‘…’

‘பாத்தியா இவளுக்கு அழுத்தத்த. முடிய அறுத்து மொட்டையா திரியவிட்டாதான் உனக்குக் கூதிக் கொழுப்பு அடங்கும்.’

‘ஏன் என்ன எப்பப்பாரு அசிங்கமா பேசற. இன்னிக்கு அப்பா வந்தா சொல்றேன்.’

‘சொல்லுடி நல்லா சொல்லு… நாளைக்கு பள்ளிக்கூடம் போறப்போ நீ ஒழுகிட்டுப் போறத ஊரே பாத்து சிரிக்கும் பாரு. அப்பா கிட்ட சொல்வாளாம். போ…போயி சொல்லு’

‘ஏய் கமலா… ஏண்டி வயசுக்கு வந்த பொண்ண இப்படி கண்டதையும் பேசற. உம்பொண்ணுதான இது. பிஞ்சு மனசுல இதெல்லாம் பதிஞ்சு போகாதா.’

‘வந்துட்டா நல்லா நீட்டு முழக்கி நாட்டாம பண்ண. அடுத்த வீட்டுலயே காத வெச்சுட்டு திரியுது அறுத்த முண்ட.’

‘பொண்ண எப்படி வளக்கனும்னு எனக்குத் தெரியாதாக்கா. நீங்க போயி வேலைய பாருங்க.’

‘அப்பப்பா. என்ன வாயி இது. கமலாக்கு புத்திதான் பெசகிடுச்சு போல. பெத்த பொண்ணயே என்ன பேச்சு பேசறா? இவகிட்டருந்து தப்பிக்கவே நாளைக்கு அது கண்டவன்கூட ஓடிப்போயிடப்போகுது பாரு. பாவம் இன்னும் எப்படியெல்லாம்  சீரழியப்போகுதோ.’

‘என்ன ஆச்சு அத்த?’

‘இந்த கமலா காய் வாங்கிட்டு வர அனுவ அனுப்பியிருக்கா போல. அது காய வாங்கிட்டு பாக்கி சில்றைக்கு கடலபொட்டலத்த வாங்கி கொறிச்சுட்டே பராக்கு பாத்துட்டு ரெண்டு மணி நேரம் கழிச்சு வீட்டுக்கு வந்துருக்கு. அதுக்கு அவ முதுகுல ரெண்டு அடிய போட்டிருக்கலாம். அத வுட்டுட்டு அவ பேசற பேச்ச காதால கேக்க முடியல. இன்னிக்கு நேத்தா. அவ வாய்ல என்னவோ எப்பவும் சனியன்தான்.’

‘அனு பாவம்தான் அத்த.’

‘ஹும்… பெத்தவளே அதுக்கு எமனா வாச்சிருக்கா.’

ரம்யா என்னைக் கோபமாகப் பார்த்தாள். என் உடலில் காயம் இருக்கிறதா என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையசைக்கும்போதே கழுத்து, மார்பு, தொடைகள் என்று என் உடையைத் தன்மையாக ஒதுக்கி அவளே சோதித்தாள். என்னை உடனே ஒரு மகளிர் மருத்துவரிடம் கிளம்பச் சொன்னாள். தன் கைப்பையில் மொபைல், தண்ணீர் பாட்டில் என்று பரபரப்பாக எடுத்துவைத்துக்கொண்டு என்னையும் அவசரப்படுத்தினாள். நான் அசையாது உட்கார்ந்திருந்தேன். என்னருகே வந்து தோள்களை அணைத்தவாறு தான் நடந்ததைப் புரிந்துகொள்வதாக மீண்டும் உறுதிப்படுத்தினாள். மகளிர் மருத்துவரிடம் போய் வந்த பிறகு  மனநல மருத்துவரிடமும் அழைத்துப் போவதாகக் கூறினாள். ஆனால் முகுந்த் மீது வழக்கு பதிவு செய்ய நான் முதலில் மகளிர் மருத்துவரிடம் செல்வதும் அவரிடம் வன்புணர்வு செய்யப்பட்டதற்கான சாட்சியம் பெறுவதும் முக்கியம் என்றாள். நான் அவளிடம் மெதுவாகப் பேசத் துவங்கினேன். முகுந்த் மீது எதுவும் வழக்குப் பதிய விருப்பமில்லை என்றேன். ரம்யா தொப்பென்று கைபையை தரையில் போட்டாள். என்னை நம்ப முடியாமல் பார்த்தாள். என் மறுப்பின்றிதான் முகுந்த் என்னை வன்புணர்ந்தான் என்று நான் அவளுக்கு எப்படி புரியவைப்பது. என்னிடம் எதுவும் கூறாமல் படுக்கையறைக்குள் சென்று யாருக்கோ அலைபேசியில் அழைத்தாள். என் வெறுமையான உடலிலிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு என் கழுத்தையும் மார்பையும் ஒரு கணம் சூடாக்கியது. ஒரே நேரத்தில் என் உடல் எனக்குக் காற்றில் பறக்கக்கூடிய தக்கையான காகிதமாகவும் பல நாட்கள் நீரில் ஊரிப்போன கனத்த சடலமாகவும் தோன்றியது. சோஃபாவில் சுருண்டு படுத்துக்கொண்டேன். ரம்யா வெளியில் வந்து என் எதிரில் ஒரு சேரில் அமர்ந்துகொண்டாள். நானாகப் புகாரளிக்காமல் முகுந்தை எதுவும் செய்யமுடியாது என்றாள். நான் கண்களை மூடிக்கொண்டேன். சில நிமிடங்கள் கனத்த அமைதியில் கழிந்தன. இனி நான் முகுந்தை எக்காரணம் கொண்டு பார்க்கக்கூடாது என்றும் அவனுடனான உறவை இப்பொழுதே முறித்துக்கொள்ள வேண்டும் என்றும் என்னிடம் சத்தியம் வாங்கினாள். நான் அவள் கைகளை அழுத்தி சரியென்று தலையசைத்தேன். தன்னுடன் சில நாட்கள் வந்து இருக்க விருப்பமா என்று கேட்டாள். நான் இல்லை என்று தலையசைத்தேன். குனிந்து என் நெற்றியில் முத்தமிட்டு என்னையே சில கனங்கள் கனிவுடன் பார்த்தாள். கிளம்புவதற்குமுன் என்னிடம் நான் இத்தனை மென்மையாக இருப்பதே என் பலவீனம் என்றும் அதைத்தான் முகுந்த் போன்ற ஆண் தனக்கு சாதகமாக்கிக்கொள்கிறான் என்றும் கூறிவிட்டு, என்னிடம் என் குணத்தைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள மன்றாடினாள். அவள் விடைபெற்றுச் சென்ற பிறகு எழுந்து அமர்ந்துகொண்டேன். ரம்யா செல்வதற்குமுன் தன்னையறியாமல் என் நெஞ்சில் அமிலத்தை ஊற்றிச் சென்றுவிட்டாள். இதற்கெல்லாம் நானா காரணம்? என் உடலை ஒருவர் அத்துமீறுவதற்கும், என்னை வார்த்தைகளால் நிந்திப்பதற்கும், என்னை உடலாலும் மனதாலும் காயப்படுத்துவதற்கும் நானா காரணம்? ஒருவேளை நான்தான் காரணமா? காயப்பட்டிருக்கும் மனதைக் குற்றவுணர்வுகொள்ளச் செய்வதுபோன்ற கொடூரம் வேறில்லை. எத்தனையோ வருடங்களாக அடக்கி வைத்திருந்த துக்கம் ஒரே நொடியில் ஒட்டுமொத்தமாக மேலெழ, அடக்கமாட்டாமல் பெருங்குரலெடுத்து ஓவென்று அழுதேன்.

ஓர் யுகம் கடந்துவிட்டதுபோன்ற தூக்கத்திற்குப் பிறகு விழிப்புத் தட்டியது. கண்களைத் திறப்பதற்குமுன் என் கடந்தகாலங்களின் புண் ஆறிவிட்டிருக்கக்கூடும் என்று பேராசை கொண்டேன். என்னைச் சுற்றிலும் முழு இருட்டு. வெளியில் வாகனங்களின் இரைச்சல். இரைச்சல் மிகுந்த அந்த உலகத்தில் கரைந்துவிட துடித்தேன். எழுந்து முகம் கழுவி உடைமாற்றிக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் நடக்கத் தொடங்கினேன்.

இரைச்சல் மட்டுமே புலன்களை ஆக்கிரமிக்க எதையும் யோசிக்காமல் நடப்பது சுலபமாக இருந்தது. ஏதோ ஓர் உந்துணர்வில் திரையரங்குகள் இருக்கும் அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தேன். செலுத்தப்பட்ட இயந்திரம்போல் வரிசையில் நின்று அங்கு மின்திரையில் ஓடிய பெயர்களில் ஏதோ ஒரு பெயரைக் கூறி அனுமதிச் சீட்டுப் பெற்று அரங்கிற்குள் சென்று அமர்ந்துகொண்டேன். மீண்டும் இரைச்சல். விளம்பரங்களின் இரைச்சல். வெளியில் ஓடிய ஆயிரக்கணக்கான வாகனங்களைவிடவும் பல மடங்கிருந்தது விளம்பரங்களின் ஒலி. ஒரு கட்டத்தில் காதையடைத்துக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தேன். இருநூறு பேர் அமரக்கூடிய இடத்தில் பத்துபேர்கள் இருந்திருந்தால் அதிகம். திடீரென்று அமைதிசூழ, திரைப்படம் தொடங்குவதற்கான ஆயுத்தங்கள் திரையில் தொடங்கியது. படம் தொடங்கியதுமே ஏதோ பாட்டு ஓடியது. ஆட்டமும் பாட்டமுமாக. இப்படியெல்லாம் யாருடைய வாழ்க்கை இருக்கிறது என்று வியந்துகொண்டிருந்தபொழுது என் வரிசையில் மூன்று சீட்டுகள் தள்ளி ஒருவர் வந்து அமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளிலேயே அவனிடமிருந்து அருவருப்பான உடலசைவுகளும் பெருமூச்சுகளும் வெளிப்படத் தொடங்கியதை என் புலன்கள் உணர்த்தின. அந்த மனிதனை நிர்தாட்சண்யமாக ஒதுக்கிவிட்டு திரையில் கவனம் குவிக்க, சில நொடிகளில் அவன் உச்சத்தை அடைந்தான். அவன் வாயிலிருந்து ஏதோ சொற்களை விந்தை வெளியேற்றுவது போல் வெளியேற்றினான். அடிவயற்றில் தோன்றிய அருவருப்பு எனக்குக் குமட்டலைத் தர திடீரென்று உதிரப்போக்கு தொடங்கியதை உணர்ந்தேன். சானிடரி பேட் வைத்திருக்கவில்லை. திரையரங்கில் இருந்த ஓய்வறையில் பேட் கிடைக்கும் என்று தெரிந்திருந்தாலும் எழுந்துசெல்ல பிடிக்கவில்லை. அப்படியே அசையாமல் அமர்ந்திருக்க உதிரப்போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. என் தொடைகளிலும், பிட்டங்களுக்கு அடியிலும் குருதி பரவும் பிசிபிசுப்பை உணர்ந்தேன். காட்சிகள் முடிந்து திரையில் மீண்டும் வெளிச்சம் பரவுவதற்குள் அந்த மனிதன் அவசர அவசரமாக எழுந்தோடி மறைந்தான். நான் இன்னமும் அமர்ந்துகொண்டிருந்தேன். குருதிப் பெருக்கோடு. அரங்கில் விளக்குகள் போடப்பட அமர்ந்துகொண்டே சுற்றிப் பார்த்தேன். என்னைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. மெதுவாக எழுந்துகொண்டு குருதி படிந்திருந்த இருக்கையை ஒரு நொடி வெறித்துவிட்டு அரங்கிலிருந்து வெளியேறி கரைபடிந்த உடையுடன் மீண்டும் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினேன்.