பர்கத்தினால் தாங்கவே முடியவில்லை. மதியம் செய்த பெருநாள் பிரியாணியை ஐந்து மணியாகியும் ஒருவாய் எடுத்து வாயில் வைக்க விருப்பம் இல்லை. பலமுறை அவனுடைய அம்மா சாப்பிட அழைத்த போதும் “வயிறு சரியில்லை ராத்திரி சாப்பிடுகிறேன்” என்று தவிர்த்துவிட்டான். இப்படியொரு அவமானத்தை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று கனவில்கூட நினைக்கவில்லை அதுவும் குமாரால். இத்தனைக்கும் ஒண்ணாம் வகுப்பு முதல் கூடவே படிப்பவன். அவனது வீட்டின் குடும்ப அட்டையில் பர்கத்தின் பெயர் மட்டும் தான் இல்லை மற்றபடி அவனது வீட்டில் குடும்பட்டையில் பெயர் இல்லாத மற்றொரு ஆள் பர்கத்.
குமாரின் வீட்டில் எந்த விசேஷமானலும் பர்கத்தின் இருப்பு இல்லாமல் போனதில்லை. குமாரின் அக்கா உமா திருமணதுக்கு தன்னுடைய அக்காவின் கல்யாணம் போல ஓடிக்கொண்டே இருந்தான். மாப்பிள்ளை வீட்டாரும் “தங்காமான புள்ளயா இருக்கானே, குமாருக்கு நல்ல தோஸ்த்” என்று அவர்களே சொல்லும்படி ஓடிக்கொண்டு இருந்தான். திருமணத்துக்கு கடைசி ஒருவாரத்தில் ஏராளமான வேலை இருக்கிறது என்று வீட்டுக்கே வராமல் அவனது வீட்டிலையே கிடந்தான். குமாருக்கு புதுத்துணி எடுத்த அவனது அப்பா பர்கத்துக்கும் சேர்ந்தே துணி எடுத்தார். குமாரும் பர்கத் வீட்டில் ஒரு பிள்ளையாகத்தான் இருக்கிறான்.
இருவரும் ஒரே கல்லூரியில் சேர வேண்டுமென்று முடிவு செய்து வீட்டில் சொல்லியபோது, பர்கத்தின் வாபா எதுவும் சொல்லவில்லை. ஆனால் குமாரின் அப்பாவுக்கு அவன் இன்ஜினியராக வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஒருவாரமாக குமார் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டே இருந்ததினால் வேறு வழியில்லாமல் சம்மதம் தந்தார். இருவரும் ஒரே கல்லூரியில் கெமிஸ்டரி பிரிவில் சேர்ந்தார்கள். கடைசி ஆண்டு, இன்னும் நான்கு மாதத்தில் படிப்பு முடிந்துவிடும்.
ஒருதாய் பிள்ளையாக பழகிய குமாரா இப்படி பேசியது? என்று மீண்டும் மீண்டும் பர்கத் அவனுக்குள்ளே குமார் சொன்னதை திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்தான். அவன் பேசியது பர்கத்துக்கு பெருத்த அவமானமாக இருந்தது. அவனா பேசியது? என்று திரும்ப திரும்ப தன்னைத்தானே கேட்டான். பதில் கிடைக்காமல் கேள்வி அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டே இருந்தது. நேரடியாக வீட்டுக்கே போய் கேட்டுவிடலாம் என்று தோன்றினாலும் அவர்கள் வீட்டில் தனக்கு இருக்கும் மரியாதையும் பாசமும் என்ன ஆகுமென்று எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறினான். அவனுடைய வாழ்நாளில் இப்படியான சூழலை அவன் சந்தித்ததே இல்லை.
போன ரம்ஜானுக்கு “அந்த புள்ளைக்கும் ஒரு துணி எடுடா” என்று அம்மா பணம் கொடுத்து அனுப்பினாள். அதில் இருவரும் ஒரே போலவே வேட்டி கட்டுவோம் என்று முடிவு செய்து மரக்கலர் சட்டையும், அதே பார்டர் வைத்த வேட்டியும் கட்டிக்கொண்டு குமாரின் பைக்கில் ஊருக்குள் “படம் காட்டி” திரிந்தார்கள். பல நாளாக தர்ஷனாவிடம் காதல் சொல்ல அவளின் பார்வைக்கு முயற்சி செய்தும் கண்டுகொள்ளாத அவள் புதிய கெட்டப்பில் குமார் வந்ததை பார்த்து வெட்கப்பட்டு போனாள். “மச்சான் உன்னாலதான் என் ஆளு பார்த்துச்சு” என்று வேட்டியை எடுத்துக்கொடுத்தற்காக பர்கத் மீது தாவி தாவி குதித்தான். இருவருக்குள்ளும் எந்த ரகசியமும் எப்போதும் இருந்ததில்லை.
கல்லூரி மாணவ தேர்தலில் செயலாளர் பதவிக்கு பர்கத் போட்டிபோடும்போது குமாரின் உறவுக்கார பையனும் அதே பதவிக்கு போட்டியிட்டான். எப்படியாவது பர்க்கத்தை போட்டியிலிருந்து விலகச்சொல்லி பலரையும் தூதனுப்பி குமாரிடம் பேசியபோதும் “விலக்க முடியாது” என்று குமார் கறராக மறுத்துவிட்டான். கடைசியில் “சொந்தக்காரனுக்கு சப்போர்ட் பண்ணாமா எதுக்குடா ஒரு துலுக்கனுக்கு இப்படி சப்போர்ட் பண்ணுற” என்று சொல்லிய போது அவனை கல்லூரியில் விரட்டி விரட்டி அடித்துதும், அது குமாரின் சொந்தத்துக்குள் பெரும் சண்டையாக முடிந்தது. கடைசிவரை குமார் செய்தது சரிதான் என்று அவனது அப்பா அவன்பக்கம் நின்றதை பர்கத் அவனுக்கான அங்கீகாரமாக பார்த்தான்.
பர்கத்தின் நினைவுக்கு தெரிந்தவரை குமார் வீட்டில் பர்க்கத்தையும் பர்கத் வீட்டில் குமாரையும் வேறு சமூகத்தை சேர்ந்தவன் என்ற மனநிலையை இருவரும் ஒருபோதும் கண்டதில்லை. குமார் வீட்டுக்கு எதிரில் குடியிருக்கும் ராகவன் “என்னதான் சின்ன வயசுல இருந்து பசங்க ப்ரண்ட்ஸா இருந்தாலும் தெருவோட வச்சுக்கணும் சார், ஆயிரம் இருந்தாளும் வேற வேறதானே ” என்று பர்கத் வருவதைப் பற்றி மறைமுகமாக அப்பாவிடம் ராகவன் சொன்னபோது “அதுல உங்களுக்கு என்ன சார் பிரச்சனை, மனுசனுக்குள்ள எப்படித்தான் உங்களால பேதம் பார்க்க முடியுது, உருப்படியா எதாவது பேசுங்க சார்” என்று முகத்தில் அறைந்தது போல குமாரின் அப்பா சொன்னது ராகவனுக்கு அவமானமாக போய்விட்டது. அதுமுதல் இவரை கண்டால் அவரின் தலை வேறு எங்காவது திரும்பிவிடும். “பேதத்தை” முன்னிறுத்தி அதற்கு ஆதரவாய் பல உதாரணங்களை காட்டி பேசுவது ராகவனுக்கு புதிதல்ல, அவறொரு கட்சியில் இருப்பதால் அந்த கொள்கையை திணிக்கும் வகையில் பலமுறை இப்படி பேசியுள்ளார். நேரடியாக எப்போவாவது பேசும்போது அப்போது மூக்கை உடைக்க வேண்டுமென்று காத்திருந்த குமாரின் அப்பாவுக்கு அன்று சந்தர்ப்பம் வாய்த்தது.
ராகவனுக்கு அவரின் சாதிமீது எப்போதும் ஒரு பெரும் கர்வம் இருக்கும். அவரது சாதியை தவிர மற்ற அனைவரும் முட்டாள் என்றும், தங்களுது அறிவுக்கு கீழானவர்கள் என்ற மிதப்பு இருப்பதை குமாரின் அப்பா எப்போதும் கவனித்தே வந்தார். அந்த கோபம்தான் அவருக்கு உறைக்கும்படி கொட்டு வைத்தார். இதை அவரே நேரடியாகவே பர்க்கத்தினுடைய வாபாவின் துணிக்கடையில் நேரில் பார்க்கும்போது சொன்னார். இருவருக்கும் எப்போதும் பரஸ்பர மரியாதை இருக்கும்.
எப்போதும்போல இந்த பெருநாள் அமையவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. யாரவது தும்பினால் துள்ளி குதித்து பத்தடி பதறி விழுமளவு தும்பலும் இரும்பலும் அபாயமான நோயாகிவிட்டது. தினசரி செய்திதாளில் ‘நுண் கிருமி” குறித்து வரும் தகவல்கள் பெரும் அச்சமாகவே இருந்தது. கண்ணுக்கே புலப்படாத கிருமி உலகம் முழுக்க மனிதர்களை கொத்து கொத்தாக கொலை செய்வதாக வரும் செய்திகள் ஊரில் எல்லோருக்கும் பீதியை கிளப்பியது. ஊரடங்கு எல்லோருக்கும் நெருக்கடியை கொடுத்தது. உலகம் முழுக்க ஒரு நோயாய் பார்க்க இங்கே மட்டும் ‘இஸ்லாமியர்கள் திட்டமிட்டு நோயை பரப்பினார்கள்” என்று திரும்ப திரும்ப அழுத்தமாக சொன்னதிலிருந்தே மொஹல்லாவில் நெருக்கடி அதிகமானது.
பர்கத்தின் வாபா கடையை வெகு நாட்களுக்கு முன்பே அடைத்து இருந்தார். அந்த கடையில் இருந்துதான் இந்த பகுதியில் நுண்கிருமி பரவியது என்று ராகவன் கட்சிக்காரர்கள் வேண்டுமென்ற கிளப்பிவிட்டார்கள். அவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி இரண்டு நாளில் டீக்கடை முதல் தண்ணீர் குழாய் வரை காட்டுத்தீ போல வேகமாக பரவியது. அவரின் துணிக்கடையின் பெயர் பலகையை யாரோ இரவில் உடைத்தார்கள். அதுமுதல் மொஹெல்லாவில் கெடுபிடி அதிகமானது. பகுதிக்குள் நுழையும் எல்லா வழித்தடமும் அடைக்கப்பட்டது.
மொஹல்லா வாசிகள் யாரவது அவசரத்துக்கு காவல்துறை அனுமதி வாங்கி வெளியே வந்தால் அவர்களை பார்த்து பல அடி தள்ளி நின்றார்கள். குல்லாவும் பர்தாவும் அபாயத்தின் குறியீடானது. “கொஞ்சம் அடங்கி ஒடுங்கி ஒரு இடத்துல இவங்களுக்கு உட்கார முடியாது, அப்படியே மேஞ்சு ஊருக்கே பரப்பி விடனும் ச்சை இவுங்க புத்தியே இப்படித்தான்” என்று காது படவே பேசுவதால் மொஹல்லாவாசிகள் யாருமே வெளிய போக விரும்பவில்லை.
எல்லா இடத்திலும் ஊரடங்கு இருந்தாலும் மற்றவர்கள் அவசரத்துக்கு வருவதுபோல மொஹெல்லா வாசிகளால் வர முடியவில்லை. அதற்கு மேலும்மேலும் தூபம் போடும் வேலையை அரசு அதிகாரிகளே தொலைகாட்சியில் தோன்றி செய்தனர். அதுவும் நேர்த்தியான உடையில் அளவான முகப்பூச்சு போட்டுவந்து பேட்டி கொடுக்கும் அந்த “பெண் அதிகாரியை” பார்த்தால் மொஹெல்லா வாசிகளுக்கு வயிற்றில் புளி கரைத்தது. ஆனால் மற்றவர்களுக்கு அவர்தான் நுண் கிருமியை ஒழிக்கவந்த “சக்தி” என்ற நம்பிக்கை இருந்தது. அவர் எப்போது தொலைக்காட்சியில் தோன்றினாலும் “சிங்கள் சோர்ஸ்” என்ற வார்த்தையை மட்டும் குறிப்பிட தவறியதில்லை. அந்த வார்த்தையில் மொஹெல்லா வாசிகளை மட்டும் தனித்து காண்பித்தார். இது மொஹல்லா வாசிகளுக்கு அவமானமாக இருந்தது. மற்றவர்களைப் பற்றி குறிப்பிடும்போது “யார் மனதையும் புண்படுத்தாதவாறு” அடக்கி வாசித்தார்.
பெருநாளுக்கு கொஞ்சம் தளர்வு கொடுக்கப்பட்டது. “தொற்று ஏற்பட நாம் காரணமாக கூடாது” என்று மொஹெல்ல வாசிகள் வீட்டிலையே தொழுதார்கள். அப்போதும் சிலர் சொர்க்கத்தில் இரண்டு சென்ட் நிலத்தை வாங்கியே ஆகவேண்டுமென்று கொழுப்பெடுத்து சில மொட்டை மாடிகளில் கூட்டம் சேர்த்து தொழுதார்கள்.
வெகு நாட்களுக்கு பிறகு கிடைத்த தளர்வில்தான் மொஹெல்லா வாசிகள் வெளியே எட்டிப்பார்த்தார்கள். இப்போது மொஹெல்ல வாசிகளில் பெரும்பாலானோர் தலைகளில் குல்லா இல்லாமல் வெளியே அடையாளமற்று வந்தார்கள். யாரும் அப்படி வர சொல்லவில்லை அவர்களாகவே குல்லாக்களை துறந்தார்கள். ஒரு உளவியல் நெருக்கடிக்கு மொஹல்லா வாசிகள் உள்ளாகியிருந்தனர். ராகவன் கட்சிகாரர்கள் எதை எதிர்பார்த்து களமாடினார்களோ அது சிறப்பாகவே நடந்தது. “சொரனையுள்ள இந்துக்கள் யாரும் துலுக்கன் கடைகளில் பொருள்கள் வாங்க மாட்டர்கள்” என்று சுவரொட்டிகளை ஒட்டினார்கள் பல இணைய தளங்களில் ஒரு பதிவுக்கு இரண்டு ரூபாய் என்ற ஒப்பந்தத்தில் மிக ஜோராக வெறுப்பு பிரச்சாரம் செய்தார்கள். தளர்வினால் காவல்துறை பாதுகாப்பில் இடைவெளியோடு கறிக்கடையில் மக்களை அனுமதித்துக்கொண்டு இருந்தார்கள். மொஹெல்லா வாசிகள் தொட்ட பொருட்கள் தொட எல்லோரும் பயந்தனர். அவர்கள் நிற்கும் கடைகளில் பொருள்கள் வாங்க மக்கள் தயங்கினர். அவர்கள் அங்கிருந்து போன பின்பே மற்றவர்கள் கடைக்கு வந்தார்கள் உளவியல் ரீதியாக மக்கள் ஒரே போல அவர்களுக்கே தெரியாமல். கட்டமைக்கப்பட்டு இருந்தார்கள்
கடந்த பெருநாள் வரையிலும் குதுகலமாக இருந்த பர்கத்தின் வீடு இந்த பெருநாளில் உற்சாகமில்லாமல் இருந்தது. துணிக்கடையை திறந்து இரண்டு மாதங்கள் ஆனதால் எல்லோரையும் போல பர்கத் வீட்டிலும் பொருளாதார நெருக்கடி இருந்தது. பெருநாளுக்கு பர்கத் வீட்டிலிருந்து குறைந்தது இருபது வீட்டுக்காவது பிரியாணி செல்லும் இந்தமுறை பண நெருக்கடியில் பர்கத்தின் வாபா “வீட்டளவுக்கு செஞ்சா போதும்” என்று அவர் சொல்லும்போது அவரின் குரல் உடைந்து இருந்தது. கடையில் வேலை செய்யும் மூன்று பேரின் வீட்டுக்காவது கொடுக்கலாம் என்று நினைத்தவர் இப்போது நாமா கொடுத்தா வாங்குவாங்களா என்று தயங்கியவர் “மாஷா அல்லா அடுத்தவாட்டி சேந்து செஞ்சிடலாம்” என்று அமைதியாக இருந்துவிட்டார்.
வாபாவின் முடிவு பர்கத்துக்கு மட்டுமே ஏமாற்றமாக இருந்தது. எப்போதும் பலநண்பர்களை அழைத்துவந்து பிரியாணி கொடுக்கும் வாடிக்கை இருந்தாலும், இந்த பெருநாளுக்கு நண்பர்களை சூழல் கருதி தவிர்த்தாலும், பல ஆண்டுகளாக குமாரின் வீட்டுக்கு பார்சல் கொடுப்பதும் குமாரின் அப்பாவும் பெருநாள் என்றால் எப்படியும் நம் வீட்டிலிருந்து “பிரியாணி” வந்து விடுமென்று பழகியவரின் முகத்தில் இனி எப்படி விழிக்க முடியும் என்று தடுமாறினான். குமாரிடமாவது சொல்லிவிடலாம் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் தவித்தான்.
பர்கத்தின் முகமே வாபாவுக்கு புரிந்தது. எதுவும் சொல்லாமல் போய்விட்டார். எப்போதும் நோண்டிக்கொண்டு இருக்கும் அவனது செல்போனை அனைத்து வைத்தான். ஒருவேளை குமார் அழைத்தால் எப்படி சமாளிப்பது என்ற தயக்கம் இருந்தது. ஊரடங்கு என்பதால் எப்படியும் அவன் வெளியே வர வாய்ப்பு இல்லை என்று இவனும் அமைதியாக இருந்துவிட்டான்.
மதிய வெயிலின் வெப்ப காற்றில் பிரியாணி வாசனை கலந்து மெல்லமாக அவனிடம் நுழைந்தது. பிரியாணி தேக்சாவை அவன் அம்மாவும் வாபாவும் அடுப்பிலிருந்து இறக்கி கொண்டிருந்தனர். கடந்தாண்டு கூட படிக்கும் பலரையும் அழைத்து வந்து பிரியாணி போட்ட நியாபகம் வந்தது. பர்கத்தும் குமாரும் சேர்ந்துதான் குமாரின் அப்பாவுக்கு பிரியாணி கொடுத்து வந்தார்கள். அன்று எதிர் வீட்டிலிருந்த சபீனா அவள் கூட படிக்கும் தோழிகளை அழைத்து வந்ததினால் இவனது நண்பர்கள் எல்லாம் கிளம்ப மாலையானது. எல்லோர் முகத்திலும் அசடு வழிந்து வீடே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. அம்மா கூப்பிடும்போதுதன் நினைவிலிருந்து களைந்தான்.
“டே! குமார் வீட்டுக்கு போகதே, இந்த நெலமைல அது நல்ல இருக்காது. அண்ணா சிலை பக்கம் அவன வரச்சொல்லி கொடுத்துட்டு வந்தறையா” என்று அவள் சொல்லும்போதுதான் அவன் முகத்தில் சிரிப்பே வந்தது.
சட்டென எழுந்து தயாரானான். பெரிய ஹாட் பாக்ஸில் அம்மா பிரியாணியை போட்டுக்கொண்டு இருந்தாள். இரண்டு மாதமாக மொஹல்லா அடைக்கப்பட்டதால் குமாரை பார்க்க முடியவில்லை. போனில் மட்டுமே பேசினான். அவனது வகுப்பு அரட்டை வாட்சப் குரூப்பில் எல்லா உரையாடல்களும் கடந்தாண்டு சாப்பிட்ட பிரியாணியை சுற்றியே இருந்தது. அனைத்து வைத்திருந்த அவனது போனை எடுத்து குமாருக்கு அழைத்தான்.
‘டே மச்சான் எங்க இருக்க”
“என்னடா காலையிலிருந்து போன காணோம்”
“சார்ச் இல்லாம சுட்ச்ஆப் ஆகிடுச்சு. சரி எங்க இருக்கே”
“வீட்லதான்”
“அண்ணா சிலை பக்கம் கொஞ்சம் வா”
“எதுக்குடா”
“நான் அங்க வந்து பிரியாணி தந்துட்டு போறேன். வீட்டுக்கு வரல” என்றான். எதிர்முனையில் எந்த பேச்சும் வரவில்லை. இவன் “ஹெலோ ஹெலோ” என்றான். பீப் சத்தம் மட்டும் வந்தது. மீண்டும் அழைத்தான் எதிர் முனையில் போனை எடுத்த குமார் குரலில் ஒரு தயக்கத்துடன் “பரவ இல்லை மச்சான் எதுவும் இந்தவாட்டி வேண்டாம்” என்றான்.
‘ஏன் என்னாச்சு”
“வேண்டாண்டா மச்சான் சொன்ன கேளு….” என்று அவன் சொல்லும்போது உமா அக்காவின் கணவர் குரல் மெல்லமாய் இவனுக்கு கேட்டது. குமாரின் மச்சானுக்கு துவக்கத்திலிருந்தே பரக்கத்தை பிடிப்பதில்லை. அவன் என்ன பேசினாலும் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு எழுந்துபோய் விடுவார். பலமுறை இந்த அனுபவம் பர்கத்துக்கு உண்டு. இவனை அவமானப்படுத்துகிறார் என்று இவனுக்கு உரைக்க பல நாள் ஆனது, ஆனால் ஒருமுறைகூட அவன் யாரிடமும் சொன்னதில்லை. உமா அக்கா அப்படியல்ல இவனிடத்தில் சொந்த தம்பியைப் போல நெருக்கமாய் இருப்பாள். குமாரின் மச்சான் இருக்கும்போது அங்கே போவதை பர்கத் தவிர்த்தான். அவர் எதிர்வீட்டு ராகவனிடம் நெருக்கமாக பேசுவதுபோல ஒருமுறையும் அப்பாவிடம் பேசியதை இவன் பார்த்ததில்லை. அப்பா இருக்கும்போது ராகவன் பெரும்பாலும் மச்சானோடு பேசுவது இல்லை. இவை எல்லாம் பர்கத்துக்கு நன்றாகவே தெரியும். ஒருவேளை தன்னிடம் பிரியாணி வாங்க வேண்டாம் என்று அவர் சொல்லித்தான் குமார் தவிர்க்கிறானா என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.
“அதற்காக இவனா இப்படி பேசியது, எல்லோரும் தொற்று காலத்தில் நம்மை வேறு ஆளாக பார்ப்பதைப்போல இவனும் பார்க்கிறானா??” என்று கடுமையான மனச்சோர்வு பர்க்கத்தை வாட்டியது. அந்த மன உளைச்சல் அவனுக்கு அழுகையை முட்டிக்கொண்டு வந்தது. அதையே நினைத்துக்கொண்டு இருந்தால் வாய்விட்டு அழுது விடுவோமோ என்று அடக்கிக்கொண்டு இருந்தான். யாரிடமும் பேசாமல் போனை அனைத்து வைத்தான். “அவர்கள் எல்லோரும் உமா அக்கா வீட்டுக்கு சென்றதினால் யாரும் வீட்டில் இல்லை” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டான். குமாரின் வீட்டுப்பங்கு மூளையில் அப்படியே இருந்தது.
மேற்கில் சூரியன் சாய்ந்துகொண்டு இருந்தது. தூங்கி எழுந்து வெளியே டீ சாப்பிட சென்ற வாபா வீட்டுக்குள் வேகமாக வந்தார். “எங்க அவன்” என்று கேட்டுக்கொண்டே வந்தார்.
“ஏண்டா குமார் வீட்டுக்கு சோறு கொடுக்கலையா”
“இல்ல வாபா எல்லோரும் உமா அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க”
“வெங்காயத்துல போனாங்க” அவர் சொல்லும்போது அவர் முகத்தில் அவ்வளவு கோபம் இருந்தது. மனைவியை பார்த்து “அவுங்களுக்கு போட்டு வச்ச சோறு எங்க” என்று ஏறினார். ஹாட் பாக்ஸில் போட்டு வைத்த பிரியாணி அதே சூட்டோடு ஓரத்தில் இருந்தது. அதை எடுத்து பர்கத் கையில் கொடுத்து “குமாரும் அவன் அப்பாவும் ரோட்ல கார்ல நிக்கிறாங்க நான் உள்ள வர வேண்டாமுன்னு சொல்லிட்டேன். அந்த புள்ளத்தாச்சி பொண்ணு நீ பிரியாணி கொண்டு வருவேன்னு சாப்பிடாம உட்கந்திருக்கா, உமா புருஷன் வேற எதோ சண்டை போட்டு போயிருக்கான் எதுக்குன்னு வேற தெரியல, போடா சீக்கிரம் போய்க் கொடு அறிவு கெட்டவனே” என்று சொல்லும்போது அவர் முகத்தில் கோபம் இருந்தது. இவன் முகம் மலர்ந்திருந்தது.
பையோடு தெருவுக்கு வந்தான் சாலையில் சிரித்த முகத்தோடு குமாரும் அப்பாவும் இவனை நோக்கி கையசைத்தனர். அவர்களை நோக்கி போனான், அவர்கள் இவனை நோக்கி வந்தார்கள். இவன் தலைக்கு பின்னால் மேற்கில் ஆரஞ்சுநிற சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டு இருந்தது.