ஏராளக் குதிரைத் தலைகள் அச்சிட்ட‌ பேண்டீஸைப் பாதப் பெருவிரலால் லாகவமாய்க் கொக்கியிட்டெடுத்துச் சிக்கவிழ்த்து இரு கைகளின் ஆட்காட்டி, நடுவிரல்கள் கொண்டு நாசூக்காய்க் கவ்விப் படுத்துக் கொண்டே கால்களைத் தூக்கி உள்நுழைத்தாள் மித்ரா.

பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். விக்ரம் குப்புறப் படுத்துக் குறட்டை விட்டிருந்தான். ரோமங்களற்ற அவன் புட்டங்களின் பரிசுத்தம் ஒரு குழந்தையைப் போல் வசீகரித்தது.

“எந்த ஆணிடமும் இல்லாத ஒன்று, அது ஏதோ, உன்னிடம் இருக்கிறது” எனப் பாடினாள். கோப்பையின் இறுதித்துளி தேநீரை அண்ணாந்து பருகுவதுபோல் அக்கணம் இனித்தது.

எழுந்தமர்ந்து பாப் குழலைச் சீர் செய்தாள். தானியங்கி மேலாண்மையில் அறையின் சீதோஷ்ணமும் வெளிச்சமும் எந்தக் குறிப்பும் தராதிருக்க‌, சன்னல் கண்ணாடி வழியே எட்டிப் பார்க்க, இருள் அருகிலிருந்தது. மித்ரா நினைவு வந்தவளாய்க் குரலுயர்த்தினாள்.

“லீலா, டைம் என்ன?”

“மாலை 06 மணி 03 நிமிடம் 58 விநாடிகள். நாள் டிசம்பர் 17, 2049 வெள்ளிக்கிழமை.”

அறையின் எதோ மூலையிலிருந்து மென்மையாய், பவ்யமாய், இயந்திரமாய்ப் பேசியது.

“ஷிட்.”

விக்ரமை முதுகில் தட்டினாள். திடுக்கிட்டுச் சலவாய்த் துடைத்துக் கொண்டு எழுந்தான்.

“லேட் ஆச்சுடா. நான் கிளம்பறேன். பிரச்சனை ஆகிடும்.”

அவன் நிதானம் பெற்று சூழலுணர்ந்து போர்வை விலக்கி, குழறிய குரலில் சொன்னான்.

“ஆமா, நானும் டின்னருக்கு ரெடி பண்ணனும்.”

அறை வாயிலில் அழைப்பு மணி அகவியது. இருவரும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டனர்.

விக்ரம் தலைமாட்டில் பதுக்கியிருந்த உடைக்குள் மிக‌ அவசரமாக அடைக்கலமானான். உடைபட்ட ஷாய்பெய்ன்போல் அட்ரினலின் பொங்க‌ அவன் நெஞ்சு வேகமாய் அடித்தது.

மீண்டுமொரு முறை அழைப்பு மணி அடிக்கப்பட‌, மித்ரா நடுங்கும் குரலில் கேட்டாள்.

“லீலா, ஹூ இஸ் தட்?”

“இந்த வீட்டின் உரிமையாளர் பைரவி. விக்ரமின் மனைவி என்றும் சொல்லலாம்.”

*

அன்றைய‌ மாலை பைரவி பரணி பாடிய‌ பேயானாள். விக்ரம் கேட்ட மன்னிப்பும், மித்ரா செய்த சமாதானமும் அவளைச் சற்றும் அசைக்கவில்லை. மித்ராவின் முகத்தில் காறி உமிழப்பட்ட‌ எச்சிலையும், விக்ரமின் கன்னத்தில் அழுந்த‌ விரல் பதிந்த அறையையும் அமைதியாய் வாங்கிக் கொண்டார்கள். மித்ரா தலை குனிந்தபடி வெளியேறினாள்.

அவர்களின் உறவிற்கு வயது மூன்று மாதம்தான். வார நாட்களில் மருத்துவமனையில் பிற்பகலில் விடுப்பு சொல்லி விட்டு பைரவியின் அடுக்ககத்துக்கு வந்து விடுவாள் மித்ரா.

அங்கே ஒரு மணி நேரம் காதல். அவள் வரும் நாட்களில் வீட்டு வேலைகளை திட்டமிட்டு முன்கூட்டியே முடித்து விட்டு, லேசாய்த் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விரல் நகம் கடித்தபடி காத்திருப்பான் விக்ரம். பொதுவாக பைரவி அலுவலகம் முடிந்து வீடு திரும்ப இரவு ஏழு மணியாகி விடும் என்பதால் இந்த ஏற்பாட்டில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

ஒரு முறை பக்கத்து வீட்டு மாமா பைரவி வீட்டிலிருந்து மித்ரா வெளியேறிச் செல்வதைச் சந்தேகமாய்ப்பார்த்தார். அது விக்ரமைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. தயங்கிக் கொண்டே தன் கவலையை மித்ராவிடம் சொன்ன போது, அலட்சியமாகச் சொன்னாள்.

“பல் இருப்பவன் பகோடா சாப்பிடுவான். ப‌ல் இல்லாதவன் பொறாமை சாப்பிடுவான்.”

ஆனால் அன்றைய தினத்தில் நடந்திருக்கக் கூடாத இரண்டு மஹாபிசகுகள் நடந்தன.

ஒன்று மித்ராவும் விக்ரமும் ஏர்ப்ளேன் பொஷிசனை முயற்சி செய்திருக்கக்கூடாது. அது அவர்கள் இருவரையுமே சோர்வாக்கி கூடுதல் நேரம் உறங்கச் செய்து விட்டது; எழுப்பச் சொல்லி லீலாவிடம் சொல்லவும் மறந்தார்கள். இரண்டாவது அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சீக்கிரமாய் வீடு திரும்பி விக்ரமுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க பைரவி திட்டமிட்டிருக்கக்கூடாது. நகரில் புதிதாய்த் திறந்திருக்கும், முழுக்க ரோபோக்களால் இயக்கப்படும் உணவகத்துக்கு விக்ரமை அழைத்துச் செல்லும் நோக்கத்தில் இருந்தாள்.

பைரவி கோபத்தின் உச்சியில் மித்ராவின் வீட்டுக்கு அலைபேசி அவளது கணவனிடம் விஷயத்தைச் சொல்லி அவளை ஆபாசமாய்த் திட்டினாள். அவன் புரியாமல் கேட்டான்:

“மித்ராவுக்கு ஒன்றுமில்லையே?”

*

நகரம் இரவில் குளிரினூடே ஒரு வெக்கையைத் தேக்கி வைத்து அவ்வப்போது வீசியது.

மித்ரா வீடு திரும்பியதும் உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு அவளுக்கு உணவு பரிமாறி விட்டுத் தயக்கமாய்க் கேட்டான் புருஷன். அப்போதுதான் அவளுக்கு பைரவி சொல்லி விட்டாள் என உறைத்தது. ஒரு கணம் அதிர்ந்து பின் சுதாரித்துச் சொன்னாள்.

”அது ஒரு துன்பியல் நிகழ்வு. அதைப் பற்றி நாம் பேசாமல் இருப்பதே நல்லது, சித்தார்த்.”

அதன் பிறகு அவன் அதைப் பற்றி ஏதும் கேட்கவில்லை. அன்றைய இரவு படுக்கையில் அவனது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. அதை மித்ராவும் உணர்ந்திருந்தாள். அதைக் கேட்டு மீண்டும் பேசிக் கிளறுவதை விட அப்படியே விட்டு விடத் தீர்மானித்தாள். அவன் இரண்டு நாட்கள் சரியாகப் பேசாமலிருந்து விட்டுப் பின் சகஜமானான். ஆண்களுக்கு வேறு வழியிருக்கிறதா என்ன என எண்ணிக் கொண்டாள்.

துரோகத்தின் வலி என்பது எத்தகையது எனப்புரிந்து கொள்ள முயன்றாள் மித்ரா. மாதச் சுழற்சியின் குருதிக்கசிவு போலிருக்குமா! அல்லது பிரசவ வேதனை மாதிரியிருக்குமா! முதலாவது அவளுக்குப் பழகி விட்டது. இரண்டாவதை அவள் இதுவரை கண்டதில்லை.

மிக அருகில் கடல்ச் சப்தம் காதில் பாய்வது போல் அச்சிந்தனைகள் அலைக்கழித்தன.

‘இனி இப்படி நடக்காது’ எனத் தான் ஒரு பேச்சுக்காவது ஆறுதலாய்ச் சொல்வேன் எனக் கணவன் எதிர்பார்த்திருக்கக்கூடும், ஆனால் அதைச் சொல்வதே கூட தான் அவனுக்குப் பணிந்து போவதாகி விடும் என்பதாக‌த் தோன்றியதால் மிக‌க் கவனமாகத் தவிர்த்தாள். அதே சமயம் இனி இதைச் செய்வதில்லை எனத் தன்னுள் தீர்மானித்துக் கொண்டாள்.

ஆனால் மறுபுறம் பைரவி விவாகரத்து வரை போவாள் என மித்ரா எதிர்பார்க்கவில்லை.

*

மித்ரா எட்டரை வயதிலிருந்து பைரவியின் தோழி. பள்ளிக் காலம் முழுக்க ஒரே வகுப்பு.

ஏழாம் வகுப்பில் வேறு பிரிவு மாற்றிப் போட, பைரவி அடம் பிடித்துத் தன் அம்மாவைத் தலைமை ஆசிரியையிடம் பேசச் செய்து, திட்டுக்கள் வாங்கிக் கொண்டே மித்ராவின் வகுப்புக்கு மாறினாள். பதினொன்றாம் வகுப்பில் மருத்துவராகும் ஆசையில் மித்ரா தூய அறிவியல் பிரிவெடுக்க நினைக்க‌, பொறியியல் கனவிலிருந்த பைரவி அவளைத் தடுத்து இருவருக்கும் பொதுவாய் உயிரியல் பிரிவில் சேர்ந்தார்கள் – இருவருக்குமே ஒரு பாடம் கூடுதல் சுமை என்கிற எச்சரிக்கைகளை மறுதலித்து விட்டு. பைரவிக்கு கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. மித்ரா நீட்டில் தோற்று நர்ஸிங் சேர்ந்தாள்.

“நர்ஸ் வேலை ஆண்களுக்கானது. அதில் நீ சேரனுமா?”

“அதைப் பெண்களே சிறப்பாச் செய்ய முடியும்னு தோனுது.”

“இன்னொரு அட்டெம்ப்ட் எழுதுடி. நிச்சயம் கிடைக்கும்.”

“ஒரு வருஷம்ங்கறது ஆயுளில் சின்னக்காலம் அல்ல. அதை வீணாக்க விரும்பல.”

“என்னவோ செஞ்சு ஒழி. உனக்கு சந்தோஷம்னா ஓக்கே.”

மித்ராவைக் கட்டிக் கொண்டு மிக‌ மென்மையாகக் கன்னத்தில் முத்தமிட்டாள் பைரவி.

பால்யத்தில் இருவரையும் இரட்டையர்கள் என முகத்துக்கு நேராய்க் கேலி செய்வார்கள். பதின்மத்தில் ஓரினப் பாலீர்ப்பு என்று முதுகுக்குப் பின் கிசுகிசுத்தார்கள். மித்ராவுக்கும் பைரவிக்கும் அது மேலும் உற்சாகமூட்டியது. இன்னும் இறுக்கமாய்க் கைபற்றினார்கள்.

“சினேகிதிகள் is a word. உடன் பிறவாச் சகோதரிகள் is an emotion.”

“உண்மையில் அவர்களுக்குப் பொறாமை. எவ்வளவு முன்னேறினாலும் பெண்களுக்கு ஏன் இந்தப் பொறாமை மட்டும் போவதில்லை என்பது எனக்கு எப்போதுமே ஆச்சரியம்.”

“அது அவர்களின் பிறவிக்குணம். இரண்டு பெண்கள் சினேகமாய் இருக்கவே முடியாது.”

“ச்சே. நாம் இல்லையா?”

“நாம் விதிவிலக்கு. Exception that proves the rule.”

“நமக்கு மட்டும் எப்படிச் சாத்தியமானது?”

“ம்ம்ம். நம்முள் பொறாமை இல்லை.”

“அதான்டி, ஏன் இல்லை?”

“ஏனெனில் நம்மில் ஒருவருக்குக் கிடைத்து மற்றவர்க்குக் கிடைக்காமல் போன ஒன்று என ஏதுமில்லை. எதுவென்றாலும் பகிர்ந்து கொள்ளும் மனம் இருப்பதுதான் காரணம்.”

“ஆனா உனக்கு நீ விரும்பின மெடிசின் கிடைக்கல. எனக்கு எஞ்சினியரிங் கிடைச்சுதே.”

“ஆனா எனக்கு அதில் எந்தக் குறையும் இல்லையே! இதில் திருப்தியாகவே இருக்கேன்.”

கல்லூரி, உத்தியோகம், திருமணம் என அவர்களின் பாதைகள் போகப் போக மேலும் கிளை பிரிந்தாலும் பிடிவாதமாய்த் தொடர்ந்து தொடர்பிலிருந்தார்கள். வாரம் ஒருதரம் காணொளி அழைப்பில் பேசிக் கொள்ளும் அலட்சியமற்ற, ரகசியமற்ற‌ சினேகமிருந்தது.

“பெண்ணுக்குப் பிறவிக் கொடை, மித்ரா. இறுதி வரை நட்பைப் பேணலாம். ஆண்போல் கல்யாணம் ஆனவுடன் நண்பர்களை மறந்து விட‌த் தேவையில்லை. I love being a woman.”

“அது ஆண்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருக்கும் நம் கலாசார விழுமியம்.”

எல்லாமே சரியாய்த்தான் இருந்திருக்கும், அவர்கள் இருவரும் தத்தம் தாயின் கருவில் இருந்த மாதங்களில் அந்த வைரஸ் கிருமி மட்டும் இவ்வுலகைத் தாக்காதிருந்திருந்தால்.

*

NoRise Virus என்பது அதன் பெயர். NOVID-20 அது உண்டாக்கிய நோயின் நாமம். இந்தியக் குறுநகரமான‌ தேனியில் 2020 டிசம்பரில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட அது, எச்சில், வியர்வை, ரத்தம், சுக்கிலம் இவற்றின் வழியே ஒருவரிடமிருந்து மற்ற‌வருக்குப் பரவியது.

தொப்புள் கொடிக் குருதி வழி தாயிடமிருந்து கருவிலிருக்கும் குழந்தைக்கும் தாவியது.

கிருமி பரவி மூன்று மாதத்துக்கு உடலில் எவ்விதமான‌ அறிகுறியும் இராது என்பதால் ஓர் ஆண்டிலேயே கிட்டத்தட்ட உலகின் 90% மக்களுக்கு அது தொற்றியது. இவ்வளவு மக்கள் இவ்வளவு அதிகமாய் இந்தத் திரவங்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதே மிக அதிர்ச்சியாய் இருக்கிறது என WHO அறிக்கை சொன்னது. உடம்பு முழுக்க ஆணுறை அணிவது சாத்தியமில்லை என்பதால் கலவி கொள்ளாதிருப்பதே நோயைத் தடுக்கும் ஒரே வழி என அறிவித்தார்கள். இந்தியாவில் ஏற்கனவே அப்படித் தான் இருக்கிறோம் என மாதர் சங்கத் தலைவி பேட்டி கொடுத்தார். ஆனாலும் நோய் பரவத்தான் செய்தது.

நாடு முழுக்க இருபத்தியொரு நாட்கள் குறியடங்கு உத்தரவு போடப்பட்டது. குடியரசு தினத்தன்று தடுப்பூசி தயாராகி விடும் எனப் பாரதப் பிரதமர் அறிவித்தார். அதனால் உந்தப்பட்ட பலர் குறியடங்கு உத்தரவை உடைத்து சுக்கிலச் செலவு செய்தனர். கிருமி உற்சாகமாய்ப் பரவியது. குடியரசு தினம் வந்து, சுதந்திர தினம் வந்து, காந்தி ஜெயந்தி வந்தது. தடுப்பூசி வரவில்லை. கோவிந்து இந்நோயைக் குணமாக்கும் என ஒரு சாரார் சொன்னார்கள். பின் மாடுகளுக்கும் இந்தக் கிருமி பரவியிருப்பது கண்டறியப்பட்டது.

கிருமி மூளைக்கு அடியிலிருக்கும் பிட்யூடரி சுரப்பியைத் தாக்கி அதன் செயல்களைத் தடம் புரளச் செய்தது. அதன் விளைவாய் ப்ரோலேக்டின் தாறுமாறாய் சுரந்து வழிந்தது. பரிசோதனைக்கூடங்களில் அந்நிலையை Hyperprolactinemia என்று அச்சிட்டு நீட்டினர்.

அக்கிருமி வினோதமாய் பெண்களுக்கு ஒரு மாதிரியும் ஆண்களுக்கு வேறு மாதிரியும் பாதிப்பை உண்டாக்கியது. பெண்களின் மாதவிடாய் சுழற்சி பிறழ்ந்தது. சீரான 28 நாள் என்பது சிதைந்து 14 முதல் 56 நாள் வரை வெவ்வேறு இடைவெளியில் வரத் துவங்கியது. ரத்தப்போக்கு மூன்று நாள் என்பது மாறி ஒரு நாள் முதல் ஒன்பது நாள் வரை என்றானது.

மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பெண்கள் PMS அறிகுறிகளுடன் திரிந்தார்கள். (எந்த வித்தியாசமும் தெரியவில்லை எனக் கணவர்கள் கருதுவது ஒரு சர்வேயில் தெரிந்தது.)

ஆண்கள் குறியின் விறைப்புத்தன்மை இழந்தார்கள். அவர்களால் குறிசார் கலவியில் ஈடுபட முடியாமலானது. கலவி செய்தால் கிருமி பரவும், பரவினால் குறி வீழும் என்கிற deadlock சூழல். ஈடுபடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் கலவியில் ஈடுபட்டார்கள்.

2021-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்றொடராக Erectile Dysfunction-ஐ அறிவித்தனர்.

சில ஆண்கள் தடுப்பு மருந்து கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் கலவி தவிர்த்துக் காத்திருந்தார்கள். பிறகு ஒரு கட்டத்தில் அது மெல்லப் பொய்த்தழிந்ததும் புணராமல் அதைக் காப்பாற்றி வைத்து மட்டும் என்ன ஆகப் போகிறது என்ற ஞானம் உதிக்கவும், இருக்கும் போதே அனுபவித்திடலாம் எனக் கட்டவிழ்ந்து இறங்கினார்கள்.

Quinagolide முதலான டோபமைன் ரிசப்டர்களைத் தூண்டும் மாத்திரைகளைக் கொஞ்சம் நாள் மருத்துவர்கள் முயன்று பார்த்தார்கள். அமெரிக்கா இந்தியாவுக்கு அழுத்தம் தந்து கோடிக்கணக்கில் மாத்திரைகளை இறக்குமதி செய்தது. அவை பயனளிக்கவில்லை.

சுமார் நான்கரை ஆண்டுகளில் உலகின் அத்தனை ஆண்களும் ஆண்மையிழந்தார்கள்.

ஒரே ஆறுதல் கிருமி ஆண்மையைப் பறித்தாலும் மலட்டுத்தன்மை உண்டாக்கவில்லை. அதனால் பெண்டிர் செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.

தேசத் தலைவர்கள் “நோரைஸ் வைரஸோடு வாழப் பழகுங்கள்” என அறிவித்தார்கள்.

ஆண்களின் மூலமாகவே கிருமி தொற்றுகிறது என்பதாலும் ஆண்களையே மோசமாய்ப் பாதிக்கிறது என்பதாலும் ஆண்களை வீட்டினுள்ளேயே இருக்க வைத்தார்கள். பெண்கள் வேலைக்குப் போக ஆரம்பித்தார்கள். ஆண்கள் வீட்டு வேலைகளைக் கவனித்தார்கள்.

மெல்ல மெல்லப் பெண்களின் கை வீட்டிலும் வெளியேவும் ஓங்கத் துவங்கியது. ரஷ்ய அதிபர் அதைப் பெண்ணியக் கிருமி (Feminist Virus) என்றது விமர்சனத்துக்குள்ளானது.

*

முப்பரிமாணச் செல்பேசித் திரையை நோண்டிக் கொண்டிருந்த‌ மித்ராவின் மடி மீது கால் நீட்டிய‌மர்ந்திருந்த பைரவி கிண்டில் பக்கத்தைக் கண்களால் புரட்டிக் கேட்டாள்.

“எட்டுக் கிரஹங்களை எப்படி நினைவு வெச்சுக்குவே, மித்ரா?”

“இதென்ன மூணாங்கிளாஸ் கேள்வி?”

“சொல்லுடி.”

“My Very Energetic Mother Jumps Skateboards Under Nineteen.”

“கரெக்ட். ஆனா இருபது வருஷம் முன்ன வேற மாதிரி இருந்திருக்கு.”

“என்னன்னு?”

“My Very Eager Mother Just Served Us Noodles.”

“ஙே. மதரா! அப்பா தானே சமைச்சுப் பரிமாறுவார்?”

“அப்பல்லாம் அம்மாதானாம்.”

“அப்படியா! பெண்கள் சமைப்பார்களா?”

“அப்படித்தான் தெரியுது.”

“ஆனா என் அம்மாவுக்கு வெந்நீரே சரியா வைக்கத் தெரியாதே!”

“தெரிஞ்சிருக்கும். மறந்துட்டாங்க. அல்லது மறுத்துட்டாங்க‌.”

“என்னடி புதுசு புதுசா சொல்ற?”

“சரி, உலகின் கடைசி ஆண் அதிபர் யார்? சொல்லு.”

“ம்ம்ம். தெரியலயே.”

“மிக்கெல் ஸெனவி. எத்தியோப்பியா. அவர் பதவியிழந்தது 2028ல.”

“அப்ப அந்தக் காலத்தில் ஆண்களும் அதிகாரத்தில் இருந்திருக்காங்க.”

“வெரி மச். ரொம்ப காலத்துக்கு. அப்புறம் எல்லாம் மாறிடுச்சு.”

“நமக்குத் தான் ஹிஸ்டரின்னு ஒரு பாடமே இல்லையே.”

“இருக்கு. ஆனா அது 2025 வாக்கில்தான் தொடங்குது. Filtered. Focussed. Framed.”

“பத்து வருஷம் பத்தி சொல்றதுக்குப் பேரு வரலாறாக்கும்!”

“அதுக்கு முன்னயும் வரலாறு இருந்திருக்கு.”

“அது என்னனுதான் நமக்குத் தெரியலயே!”

“சில ban பண்ணின பழைய‌ புக்ஸோட சாஃப்ட்காப்பி கிடைக்குது.”

“ஏய், அப்படியா?”

“ஆமா, யார்கிட்டயும் சொல்லாதே.”

“ம்ஹூம். ப்ராமிஸ்.”

“அதெல்லாம் நம்பவே முடியல படிச்சா.”

“என்னனு சொல்லி இருக்கு?”

“பெண்கள் வீட்லயே இருந்திருக்காங்க. ஆண்கள் வேலைக்குப் போயிருக்காங்க.”

“நிஜமாவா?”

“ஆமா. அப்ப பெண்கள் நீளமா கூந்தல் வெச்சிருந்திருக்காங்க. விதவிதமான உடைகள், நகைகள், முகப்பூச்சுனு தங்களை அழகுபடுத்திட்டுத்தான் வெளியே போவாங்களாம்.”

“வாவ்.”

“பீரியட்ஸ் கரெக்டா மாசம் ஒரு தடவை வந்திடுமாம்.”

“அப்படியா?”

“ஆமா.”

“சனியன். எனக்கு போன வாரம்தான் வந்தது. இப்ப மறுபடி அடிவயிறு வலிக்குது.”

“அப்பல்லாம் ஆணாதிக்கம்னு ஒரு கான்செப்ட் இருந்திருக்கு.”

“ஓ! இப்பப் பெண்ணாதிக்கம்னு சொல்லி எதிர்க்கற‌ மாதிரியா?”

“கிட்டத்தட்ட. அப்படியே இப்ப இருப்பதன் தலைகீழ் நிலை.”

“ஓ!”

“Mirror universe. Just images are inverted.”

*

அடுத்த ஆண்டு வந்தால் இந்தியாவின் அரசியல் சாசனம் ஆதியோடந்தமாய் மாற்றி எழுதப்பட்டு கால் நூற்றாண்டு ஆகியிருக்கும். அஃது பெண்களால், பெண்களுக்காக எழுதப்பட்ட பெண்களின் சாசனம் என்பதாக‌ எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு, எந்த நாட்டில் ஆண்களுக்கான சாசனம் இன்னும் இருக்கிறது என்ற கேள்வியில் அடங்கிப் போனது.

Black Hole Politics, பெண்குறி மைய அரசியல் என்றெல்லாம் கட்டுரைகள் தீட்டப்பட்டன. தடை செய்யப்பட்டன. சிறைக்குப் போனார்கள். அல்லது காணாமலே போனார்கள்.

பிரதமர், ஜனாதிபதி என்ற இரட்டை அதிகாரம் அகற்றப்பட்டு அதிபர் என்கிற ஒற்றைப் பீடம் உண்டாக்கப்பட்டது. பெயருக்கு மக்களாட்சி என்றாலும் அது ஒரு மாதிரி அன்பான சர்வாதிகாரம். தேர்தலில் நிற்க ஆண்களுக்கு அனுமதி இல்லை என்றானது. முதலில் வாக்களிக்கவும் உரிமையில்லை என்று சொல்லி, பின் பல போராட்டங்களுக்குப் பிறகு வாக்களிக்க அனுமதி அளித்தார்கள். ஆனால் அரை ஓட்டுதான் கணக்கு. அதாவது ஒரு பெண்ணின் வாக்கும், இரு ஆண்களின் வாக்கும் சமம். பாலினங்களின் அறிவு மற்றும் திறன் பொருத்த முடிவு என்றார்கள். அதற்கு ஆண் போராளிகள் அன்றைய‌ அதிபருக்கு நன்றி சொல்லிக் காலில் விழுந்தார்கள். ‘தந்தையுமானவள்’ என்று புகழ் மாலை சூடினர்.

புதிய‌ சாசனத்தின்படி உடல் உழைப்பும், சகிப்புத்தன்மையும் தேவைப்படும் கடைநிலை ஊழியர் பணியிடங்கள் மட்டும் ஆண்களுக்கென்று ஒதுக்கப்பட்டன‌. அப்புறம் உயிரைப் பணயம் வைக்கும் வேலைகள். சமையல், விவசாயம், நெசவு, கட்டுமானம், துப்புரவு, காவல், ராணுவம் இவற்றில் இறங்கியது போக மிச்ச ஆண்கள் வீட்டில் கணவர்களாக‌ முடங்கினர். அதில் விதவிதமாய் சமைக்கத் தெரிந்தவன் என்றால் இன்னமும் மதிப்பு.

வேலைக்குப் போய் வரும் ஆண்களை விட வீட்டோடு இருக்கும் ஆண்களுக்கு திருமணச் சந்தையில் மதிப்பு அதிகமிருந்தது. அதிக வரதட்சணை கொடுக்க முடிந்த ஆண் எனில் கூடுதல் மவுசு. Artificial Insemination-க்குத் தோதாக விந்தணு எண்ணிக்கை அதிகமாகவும் ஆரோக்கிய நடமாட்டத்துடனும் இருக்கிறதா எனத் திருமணத்துக்கு முன் பரிசோதனை செய்து ஆண்கள் அறிக்கை தர வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அப்புறம் விரல்கள் எல்லாம் வலுவுடன் நீளத்துடன் இருக்கின்றனவா எனச் சோதித்துத் திருப்தியுற்றார்கள்.

பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை மணம் செய்ய உரிமை உண்டு. ஆனால் ஆண்கள் மனைவி தவிர வேறு பெண்ணை நாடக்கூடாது. விவாக ரத்துக்கும் பாரபட்சம் இருந்தது. மனைவி கோரினால் விரைந்து கிட்டும். ஆணுக்கு நெடுங்காலம் இழுக்கும்.

ஆண்களில் சிலர் பெண்களாகப் பால் மாற்றம் செய்து கொண்டார்கள். ரொட்டிக்காக கிறிஸ்துவத்துக்கு மாறுவது போன்றது இது என இந்துத்துவவாதிகள் விமர்சித்தார்கள்.

சில பின்தங்கிய கிராமங்களில் ஆண் சிசுக் கொலை நடப்பதாகச் செய்திகள் வந்தன. (அதை எதிர்த்து CSK என்ற எழுத்தாளர் எழுதிய‌ ‘ஒருவன் நினைக்கையிலே…’ கவிதை ஆணின் உணர்வுகளை உள்வாங்கி, ஒரு பெண் எழுதியது எனப் பாராட்டப்பட்டது.)

மக்கள் பெண் குழந்தைகளுக்கு ஏங்கினர். பிறந்த குழந்தையின் துணி தூக்கிப் பார்த்து ஆணென்றால் முகஞ்சுழித்துப் பரிதாபத்துடன் முகத்தை வைத்து ஆறுதலுரைத்தார்கள்.

காலத்துக்கும் சிறுநீர் மட்டுமே கழிக்க முடிந்த அந்த உறுப்பு பரிதாபமாய்த் துவண்டது.

*

நூறாண்டுக்கு மேல் பழைய, சிவப்பும் வெளுப்பும் ஊடுபாவிய‌ கல்லூரிக் கட்டிடத்தை ஒட்டிய தார் சாலையில் பைரவியும் மித்ராவும் மிக மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்.

அந்திசாய ஆரம்பிக்க, எங்கிருந்தோ ஓர் அடையாளமற்ற பறவை சன்னமாய்க் கூவியது.

“ஏய் பைரவி, செம்ம மேட்டர் ஒண்ணு பார்த்தேன்.”

“என்ன அது?”

“ஜானி சின்ஸ் வீடியோனு ஒண்ணு. 8Kல‌ மோசமான ரெசலூஷன்.”

“எங்கே காட்டு?”

“ஃப்ரெண்ட் அவ ஃபோனில் காட்டிட்டு தர மாட்டேனுட்டா.”

“என்ன இருந்துச்சு அதுல‌?”

“அந்தக் காலத்துல ஆண்களுக்கு அது வேல செஞ்சிருக்கு.”

“அதுன்னா?”

“குஞ்சாமணி.”

“ஓ. அது என்ன பண்ணும்?”

“இப்ப நமக்கு கல்யாணமானா விந்தணு எடுத்து வயித்துல வைக்கறாங்கல்ல.”

“ஆமா.”

“அப்பலாம் நேரா அதை வெச்சே நமக்கு உள்ள அடிச்சிருவாங்க.”

“ஐயோ, கருமம்.”

“அது செம்மயா இருக்குமாம்.”

“அது புழு மாதிரி பாவமா இருக்கும். அது எப்படி…”

“அந்த சமயம் பாம்பு மாதிரி ஆகிடுது.”

“வலிக்காதா?”

“தெரில.”

“ம்ம்ம்.”

“அதெல்லாம் பார்க்கும் போது Paradise Lost மாதிரி இருக்கு.”

“மில்டனோடதா? நீ படிச்சியா?”

“ஆமா. நிறையப் புரியல. ஆனா நல்லா இருக்கு.”

“அதை எல்லாம் சொல்லாதேடி. புழு, பாம்புனு பேசிட்டுக் கிட‌.”

“சேச்சே. அதைப் பத்தித்தான் அடுத்து சொல்ல வந்தேன்.”

“சரி, ஏன் அந்த புக்கைத் தடை செஞ்சிருக்காங்க?”

“பெண் பேச்சைக் கேட்டுத்தான் உலகம் பாவம் செய்ய ஆரம்பிச்சதுன்னு இருக்கு.”

“ம்ம்ம். அப்பத் தடை நியாயம்தான்.”

“இதுல ப்யூட்டி என்னன்னா அதுலயும் ஒரு பாம்பு வருது.”

“எங்கம்மா இந்தப் பாம்பு பத்திலாம் சொன்னதே இல்லையே! நீ ஏதும் கதை விடறியா?”

“ஏய் நிஜம்தான்டி. எங்கம்மாவும்தான் வாயே திறந்ததில்ல.”

“ஏன்?”

“இதெல்லாம் பேசக்கூடாதுன்னு கவர்மெண்ட் உத்தரவாம்.”

“இப்ப நாம பேசறதும் தப்பா?”

“தப்புதான். தெரிஞ்சா ஜெயில்தான்.”

“அப்ப பேச வேண்டாம். பயமா இருக்கு.”

“ஆனா எனக்கு ஆசையா இருக்கு.”

“ச்சீய்.”

“நாம இருபது வருஷங்கள் முன்ன பிறந்திருந்தா என்ன ஏதுன்னு தெரிஞ்சிருக்கும்.”

“ஆனா நான் அப்ப‌ இருந்திருந்தாலும் இதெல்லாம் செஞ்சிருக்க மாட்டேன், மித்ரா.”

“போடி சாமியாரினி.”

“நீ மட்டும் கிழிச்சிருப்பியாக்கும்?”

“Sureshot, பைரவி. இப்ப சான்ஸ் கிடைச்சாக்கூட…”

மித்ரா த‌ன் அடிவயிறு நோக்கி நடுவிரல் விரல் நீட்டி ஆபாச‌ச் சைகை காட்டினாள்.

“அப்பாலே போ, சாத்தானே.”

விளையாட்டாய் ஆனால் வலுவாய் பைரவி மித்ராவின் பரந்த‌ முதுகில் அறைந்தாள்.

*

ஆண் கடவுள்களே இல்லாத ஓர் உலகம். அம்மனும், மேரியும், மர்யமும் நடுநாயகமாய் வீற்றிருந்தார்கள். ஆண் தெய்வங்களைத் தொழுவது பெரும் பாவமாகக் கருதப்பட்டது. அவர்களைக் கைகூப்பி வணங்குவது ஓர் இழுக்காக நினைக்கப்பட்டது. புராணங்கள் அதற்கேற்ப வெட்டி ஒட்டி தீட்டப்பட்டன. மனு ஸ்மிரிதி முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இப்போது பெண்கள் பூ சூடுவதில்லை. பொட்டிட்டுக் கொள்வதில்லை. புடவை, சுடிதார் அணிவதில்லை. இந்த‌ 21ம் நூற்றாண்டின் மத்தியிலிருக்கும் பெண் நிர்வாணமுற்றால் ஒழிய ஓர் ஆணைப் போலவே இருந்தாள். அடையாள அழிப்பே சமத்துவம் என்றானது.

தாயின் பெயரை லாஸ்ட் நேம் ஆக்கினார்கள். திருமணத்துக்குப் பின் ஆண்கள் மட்டும் மனைவியின் பெயரை லாஸ்ட் நேமாக, இனிஷியலாகக் கொண்டார்கள். விக்ரம் வேதா என்ற பெயர் விக்ரம் பைரவி ஆனது அப்படித்தான். பெண் பெயர் அப்படியே நீடிக்கும்.

விண்ணப்பப் படிவங்களில் பெயருக்கு அடுத்தபடியாக‌ தாய் அல்லது மனைவி பெயரை நிரப்பக் கேட்டார்கள். ‘மிசஸ்’ என்ற முன்னொட்டு பூரணமாக‌ ஒழிக்கப்பட்டது. ‘மிஸ்டர்’ என்பது மணமாகாத ஆண்களைக் குறிக்கவும் ‘மிஸ்’ என்பது மணமாகாத‌ பெண்களைக் குறிக்கவும் பயன்படுத்தினார்கள். மணமான பின் முன்னொட்டுக்கள் ஏதும் கிடையாது.

ஆண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டது. அவர்கள் கல்லூரியில் படிக்க விரும்பினால் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டும். அவர்கள் பள்ளிப் படிப்பில் பெற்ற‌ மதிப்பெண் அடிப்படையிலும், நேர்முகத் தேர்வின் மூலமும் அரிதாகச் சிலருக்கு அவர்களின் திறமையைத் தேசத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு அனுமதி வழங்கப்பட்டது. 99% விண்ணப்பங்களை நிராகரித்தனர்.

குறைந்த அளவில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. அதனால் நீண்ட காத்திருப்பு இருந்தது. நாற்பது வயதில் அனுமதி கிடைத்து வேண்டாம் என்று சொன்ன ஆண்கள் இருந்தார்கள். அனுமதி பெற்றவர்கள் வகுப்பில் நூறு பெண்களுக்கு மத்தியில் ஒற்றை ஆணாகக் கல்வி கற்க வேண்டியிருந்தது. அது மன அழுத்தம் நிறைந்ததாக இருந்தது.

ஆண்களுக்குக் கல்வியில் அனுமதி மறுக்கப்படுவதால்தான் கடந்த இருபதாண்டுகளில் விஞ்ஞான, தொழில்நுட்ப‌ வளர்ச்சி மிக வேகம் குறைந்து விட்டதெனச் சொன்னார்கள். “R&D என்பதன் விரிவாக்கம் Research & Development என்றல்லாமல் Read & Duplicate என பெண்கள் ஆக்கி வைத்திருக்கிறார்கள்” என்ற ட்வீட் மில்லியன் ரீட்வீட் கண்டது. ட்வீட் போட்டவரையும், முதலில் ரீட்வீட் செய்த நூறு பேரையும் சிறையில் அடைத்தனர்.

இப்பாரபட்சத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆண் விடுதலைக்குப் புரட்சிகர அமைப்புகள் தோன்றின. ஆண்கள் விந்து தானம் செய்யும் இயந்திரங்களா எனக் கேட்டார்க‌ள். அடிமையாக வீட்டுக்குள் அடைந்து கிடப்பதுதான் ஆண்களின் விதியா எனக் கொதித்தார்கள். அப்படிப் போராடியோர் அனைவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளானர்கள். அவர்களால் அப்பாவி ஆண்களின் சிந்தனை கெடுக்கப் பட்டு சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கிறது என அரசு காரணம் சொன்னது.

பெண்ணாதிக்கம், ஆணியம், ஆணுரிமை தொடர்பான புத்தகங்கள், வலைப்பதிவுகள், காணொளிகள் தடை செய்யப்பட்டன. எதிர்ப்பிலிறங்கிய ஆண்களைச் சில‌ ஆண்களே காட்டிக் கொடுத்தார்கள். ‘ஆணே ஆணுக்கு எதிரி’ என்கிற சொலவடை பிரபலமானது

உலகம் என்பது ஒரு பிரம்மாண்டத் தேன் கூடு ஆனது. ராணித் தேனீக்களுக்குச் சேவகம் செய்யும் வேலையாள் தேனீக்கள் அடிமைத்தனத்தில் சுகங்கண்டன. அடிமைகளுக்குத் தேவை ஒரு ஜோடி கால்கள். அதை பற்றிக் கொண்டே ஆயுளைக் கழித்து விடுவார்கள். முகம் எவருடையது என்பது முக்கியமில்லை. ஆள் மாறுவது பற்றியும் கவலையில்லை.

இந்திய அதிபர் சாஹித்யா தேவி ஆதிபராசக்தியின் அவதாரமாகவே பார்க்கப்பட்டாள். பத்தாண்டுகள் முன் பதவியேற்கையில் அவள் செய்த பிரகடனம் மிகப் பிரபலமானது.

“இது புதிய உலகம். ஏவாள்களின் உலகம்.”

ஏவாள்களின் உலகம் என்பது சர்ப்பத்தின் வழி நடக்கின்ற‌ உலகம். சாத்தானின் உலகம். ஆண்கள் இங்கு சேவகர்கள் மட்டுமே. மண்டியிடுதல் மட்டுமே அவர்கள் கடமை. அதைத் தாண்டி உயரும் தலைகள் கொய்யப்படும் என்று அதற்குப் பொழிப்புரை எழுதினார்கள்.

*

முதலில் மித்ராவுக்குத் திருமணம் நடந்தது. வேலைக்குப் போகும் மாப்பிள்ளையே அவள் விருப்பமாக இருந்தது. ஆனால் மருத்துவப் பணியைக் காரணம் காட்டி, மூன்று வரன்கள் தட்டிப் போய், பின் பைரவி ஆலோசனையில் வரதட்சணை வேண்டாம் என்று அறிவித்து வீட்டிலிருக்கும் மாப்பிள்ளை ஒருவனைப் பிடித்தார்கள். அரைமனதாய்ச் சம்மதித்தாள்.

இராகு தோஷ ஜாதகன், மித்ராவை விட மூன்று வயது அதிகம். ஆனால் வயது அதிகம் கொண்டவன் என்பது அவளுக்குப் பிடித்திருந்தது. அவன் மீசை வைத்தால் இன்னும் அழகாக இருப்பான் எனத் தோன்றியது. வைத்தால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை என நியோ ஐபிசி சொல்கிறது. தாடி வைத்தால் ஈராண்டு. தினசரிச் சவரம் கட்டாயம். (முகரோமம் வைத்துக் கொள்வது பெண்களை அவமதிக்கிறது என்பதால் இந்த ஏற்பாடு. நிரந்தரமாக ஊசிமூலம் ஆண்களின் மீசை, தாடியை நீக்கும் ஆய்வுகளும் நடக்கின்றன.)

விரற்கலவியின் போது அவனுக்கு மீசை இருப்பதாய்க் கண்மூடிக் கற்பனை செய்தாள் மித்ரா. அவள் ஏன் கண்களை மூடிக் கொள்கிறாள் என அவனுக்குப் புரியவில்லை. ஒரு வேளை தன் முகம் பிடிக்கவில்லையோ என நினைத்துக் கொள்வான். அதைக் கேட்டு ‘ஆம்’ என அவள் சொல்வதைக் கேட்கும் திராணி மனதில் இல்லாததால் தவிர்த்தான்.

ஆனால் மித்ரா அவனை மிக மரியாதையாக நடத்துவது அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் கொடுத்த‌ அழுத்தத்தில் அவன் முயன்று கடைமட்ட அரசாங்க‌ ஊழியனானான்.

சாஃப்ட்வேர் ஆர்கிடெக்ட்டாய் உயர்ந்த‌ பிறகே கல்யாணம் எனப் பிடிவாதமாய் இருந்து, ஏழு மாதங்கள் முன் தன் 28 வயதில் மிகுந்த செலவு செய்து ஆயிரம் பேரை அழைத்து 22 வயது நடந்து கொண்டிருந்த அழகான, நளினமான‌ விக்ரமைக் கரம் பிடித்தாள் பைரவி.

திருமண வரவேற்பில் மித்ரா மேடையேறி இருவருக்கும் மோதிரம் மாட்டி வாழ்த்திவிட்டு பைரவியின் காதில் ஓதியது, கசிந்து விக்ரம் காதில் விழுந்ததில் அவன் முகம் சிவந்தது.

“மூணு இஞ்ச் விரல். அதுக்கு முப்பது லட்சம் ரூபாய் செலவு.”

பைரவி மித்ராவை அதட்டி அனுப்பி வைத்து விட்டு விக்ரமிடம் சமாளிக்க முயன்றாள்.

“She is just kidding.”

“I will disprove her.”

விக்ரம் ஏன் அப்படிச் சொன்னான் என்று அன்றைய இரவு தான் பைரவிக்குப் புரிந்தது.

*

விஞ்ஞானத்தின் உள்முரண்கள் சுவார‌ஸ்யமானவை. பயன்பாட்டில் இருக்கும் பொருள் தேயும் என்பது இயற்பியல். பயன்பாட்டில் இல்லாத பொருள் தேயும் என்பது உயிரியல்.

ஆண்களுக்குக் குறியிலிருந்த மயிர்கள் உதிரத் தொடங்கின. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லிமீட்டர் ஆண் உறுப்பு சிறுப்பதாக ஆய்வுகள் சொல்லின. சிவராஜ் சித்த வைத்திய சாலைக்காரர்கள் பேராண்டிகளை நோக்கி அறச்சீற்றத்துடன் பேசுவது நின்று போனது.

ஆண்கள் வயதுக்கு வந்ததைத் தெளிவாய்க் கண்டறிய முடியாத ஒரு சூழல் நிலவியது.

அவர்களுக்கு உடலெங்கும் காமம் நிரம்பி வழிந்தாலும் அதை வெளிப்படுத்த முடியாது. சிறுநீர்ப்பையில் மூத்திரம் நிரம்பியும் வெளியேற்ற முடியாத நிலை போல். அதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். அவர்களின் பதின்மங்களில் அரசே இலவச உள‌சிகிச்சை அளித்தது. மெல்ல மெல்லக் குடும்பங்களில் பெற்றோரே இச்சிக்கலைச் சொல்லித் தயார் செய்தார்கள். ஆண்கள் உற்சாகம் வடிந்த பிரஜைகளாகிப் போயினர்.

செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம் எனக் கேட்டு ஆண்களுக்கான ஜட்டிகள் வடிவமைப்பு கைக் குட்டைகள் போல் மிக எளிதானதாக, மிகச் சம்பிரதாயமான ஒன்றாக‌ மாறியது.

ஆணுறைத் தயாரிப்பு முற்றிலும் நின்றது. . ‘pfizer’ எனப்பொறிக்கப்பட்ட‌நீலச்சாய்சதுரவயாக்ராமாத்திரைகள் வழக்கொழிந்தன‌.எய்ட்ஸ் நோய்ப் பரவல் அரிதாகிப் போனது.

பெண்களுக்கான செக்ஸ் பொம்மைகள் சந்தையில் குவிந்தன. ஆண்களின் குறிகளை நேனோமோட்டர் வைத்து வாய்ஸ் கண்ட்ரோலில் இயக்கும் முயற்சிகள் ஆராய்ச்சியில் இருந்தன. ஊசிவழி ப்ரோலேக்டின் சுரப்பைக் கட்டுப்படுத்த முடியுமா என ஆய்ந்தனர்.

பெண்ணுக்குப் பலபுருஷ அனுமதி உண்டெனினும் அதிகம் பேர் பயன்படுத்தவில்லை. அது ஏன் என‌ இந்தியா டுடே நடத்திய‌ சர்வேயில் பலரும் ‘It’s an unworthy risk’ என்றார்கள்.

குடும்பம் என்ற அமைப்பு எதற்கு என்கிற வாதங்கள் அதிகரித்திருந்தன. இரு பெண்கள் சேர்ந்து வாழ்வது சகஜமானது. ‘What’s the difference?’ எனக் கேட்டார்கள். ‘விரலிலில்லை வித்தியாசம்’ என்ற தலைப்பில் அவள் விகடனில் கட்டுரை எழுதினர். விந்து வங்கியில் தானம் பெற்று பிள்ளை பிரசவித்தனர். அவர்களும் சண்டைப் போட்டார்கள். அவர்களும் விவாக ரத்து பெற்றார்கள். ஆண் – பெண் தம்பதியரை விட பெண் – பெண் ஜோடிகளின் பந்தம் உடைந்து நிரந்தரமாய்ப் பிரிகிற‌ விகிதம் அதிகம் என்று ஓர் ஆய்வு தெரிவித்தது.

பெண் தனியே வாழ்ந்து விந்து தானத்தில் குழந்தை பெறுவதும் நிகழ்ந்தது. ‘என் வழி தனி வழி’ என ஃபெமினா தமிழ் இதழ் கவர் ஸ்டோரி வெளியிட்டது. அவர்களை ‘Peak Mother’ என்றழைத்தனர். சிகரத்தின் தனிமை. அத்தனிமையில் சுகங்கண்டார்கள். வீட்டு வேலைக்கு ஆள் வைத்தார்கள். கலவித் தேவைக்கு வாடகைக்கு ஆட்கள் கிடைத்தார்கள்.

உலகின் மக்கட்தொகை ஐந்நூறு கோடியாகச் சுருங்கியது. இப்படியே போனால் 2075-ல் மனித இனமே அழியும் என்று எச்சரித்தது உலக சுகாதார மையம். நூற்றுக்கணக்கான பழங்குடி இனக்குழுக்கள் ஏற்கனவே அழிந்திருந்தன. கிருமி பூடகமாய்ப் புன்னகைத்தது.

*

லீலா சூழல் உணர்ந்து அறையின் வெப்பநிலையைக் குறைத்து ஒரு மலைப் பிரதேசப் பாவனையை உண்டாக்கி வைத்தாள். பின் கண்ணியத்துடன் கண் மூடிக் கொண்டாள்.

விக்ரம் மீதிருந்து பைரவி அலுங்காமல் இறங்கி மல்லாக்கப் படுத்துப் புன்னகைத்தாள்.

“எப்படிடா இது?”

“ஆர் யூ ஹேப்பி?”

“சொர்க்கம்.”

சொல்லி விட்டு விக்ரமை நெற்றியில் முத்தமிட்டாள் பைரவி. அவன் வெட்கப்பட்டான்.

“அப்ப உனக்கு நோவிட் நெகடிவாடா?”

“இல்ல, பைரவி. இன்னிக்கு உலகில் எல்லோருமே நோவிட் பாஸிடிவ் தான்.”

“அப்புறம் உனக்கு மட்டும் எப்படி இது வேலை செய்யுது?”

“அது என்னோட பிறவிக் குறைபாட்டினால்.”

“புரியல‌.”

“இது ஒரு க்ரோனிக் மெடிகல் கண்டிஷன்.”

“இதுக்கு முன்ன சொன்னதே பரவால்லடா.”

“எனக்கு பிட்யூடரி க்ளாண்ட்ல ஒரு பிரச்சனை இருக்கு. அதனால் சரியா ப்ரோலேக்டின் செக்ரீட் ஆகாது. ஸோ நோரைஸ் வைரஸ் கிருமி தாக்கியும் அதோட சுரப்பு அளவு கூடல. அதனால் என்னோட‌ ஆண்மைக்குப் பிரச்சனை ஏதும் ஆகல. It’s actually, blessing in disguise.”

“ம்ம்ம். இப்பப் புரியுது.”

“நான் ரொம்ப எளிமைப்படுத்திட்டேன்.”

“உன் மாதிரியே நிறையப் பேர் இருக்காங்களா?”

“தெரிய‌ல. சிலர் இருக்கலாம்.”

“அப்படியா?”

“ஆமா. பில்லியன்ல ஒருத்தருக்குத்தான் இக்குறை இருக்கும்னு என் தாத்தா சொன்னார்.”

“உன் தாத்தாவுக்கு எப்படித் தெரியும்?”

“அவர் டாக்டர். வைராலஜிஸ்ட்.”

“கல்யாணத்துல பார்க்கலயே?”

“இப்ப இல்ல. அஞ்சு வருஷம் முன்ன இறந்துட்டார்.”

“ஐயாம் ஸாரி.”

“வருந்த ஒண்ணுமில்ல. கல்யாணச்சாவுதான். நிறைய சாதிச்சிட்டு வீட்ல இருந்தவர்.”

“ம்ம்ம்.”

“பதிமூணு வயுசு எனக்கு. அப்பத்தான் இது திடீர்னு வேலை செய்ய ஆரம்பிச்சுது. நான் பயந்து போய் தாத்தா கிட்ட சொன்னேன். அப்ப அவர்தான் எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். அவர் எனக்கு வீட்லயே சில டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு இதைச் சொன்னார். இதை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டார். சாகும்போதும் என்னைக் கூப்பிட்டு இது விஷயமா முக்கியமா ஒரு அட்வைஸ் பண்ணினார். இப்ப வரை, I am following it religiously.”

“என்ன அது?”

“கல்யாணம் பண்ணிக்க. அந்தப் பெண்ணுக்குத் தெரிஞ்சுதான் ஆகும். அது பரவால்ல. உங்க ரெண்டு பேர் தாண்டி வெளியே போகக்கூடாது. போனா உன் உயிருக்கு ஆபத்து.”

“He is right.”

“தாத்தா போன பிறகு இதைப் பத்தி யார்கிட்டயும் பேச முடியல. ஏதாவது சந்தேகம்னா நானே ஏதாவது ஒரு விளக்கம் சொல்லி சமாதானம் செஞ்சுக்குவேன். கோரத் தனிமை.”

“என்ன சந்தேகம்?”

“காலைல நான் எந்திரிக்கறதுக்கு முன்ன அது எந்திரிச்சிருக்கும்.”

“ஓ! அப்புறம்?”

“சில சமயம் அதுவே அமைதியாகிடும். மத்த நேரம் நான் சாந்த‌ப்படுத்தனும்.”

“இது வேறயா!”

“ஆமா. தினமும்.”

“அதுக்கு என்ன சமாதானம் சொல்லிக்கிட்டே?”

“அதிகாலையில் சேவல்கள் கூவுவது இயற்கையானது.”

“ஹெஹெஹெ. Poor joke.”

“Poor male.”

“ம். இப்ப எனக்கு ஒரு சந்தேகம்.”

“சொல்லு.”

“இது எப்பவும் வேலை செய்யுமா?”

“இது சந்தேகமா, கவலையா?”

“ஏதோ ஒண்ணு. பதில் சொல்லு.”

“Life long guarantee, madam. Always at your service.”

“இனிமேல் காலைல நீயே தனியாக் கஷ்டப்பட வேண்டாம்.”

“நைட் ஷோவே இன்னும் முடியல. அதுக்குள்ள மார்னிங் ஷோ பத்தி என்ன பேச்சு?”

“இப்பதானேடா முடிஞ்சுது.”

“இது ரெண்டாம் ஆட்டம்.”

அவன் அப்பாவியாய்ச் சொன்னதும் வெறியுடன் மறுபடி விக்ரம் மீதேறினாள் பைரவி.

*

மித்ராவின் முகம் செல்பேசியிலிருந்து வெளி எழுந்து ஒளிர்ந்ததும் பற்றினாள் பைரவி.

மளிகைப் பொருட்களின் ட்ரோன் டெலிவரியில் கரன்ஸி எண்ணி வாங்கும் நிரலின் ஒற்றைத் தலைவலி ஊட்டுகின்ற‌ ஒரு பிழையைச் சரி செய்து கொண்டிருந்தவளுக்கு அதிலிருந்து தற்காலிகாமாய்த் தப்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது போல் தோன்றியது.

“என்னடி, ஒரு மாசம் ஃபோனே, இல்ல? ஆள் இருக்கியா இல்லையா?”

“ச்சே. கல்யாணம் முடிஞ்சு, வீடு செட்டில் பண்ணி, இப்பத்தான் மூச்சு விடறேன்.”

“நீ ஃபோன் பண்ணலன்னா சரி. என் கால்ஸ் கூடவா எடுக்க முடியாத அளவு பிஸி?”

“அப்புறமா ரிலாக்ஸ்டா பேசலாம்னுதான் இக்னோர் பண்ணினேன்.”

“இப்பத்தான் உனக்கு ஃபோன் பண்ணலாம்னு இருந்தேன்னு சொல்வியே!”

“நீ நம்பலனாலும் அதுதான் நிஜம். ஈவ்னிங் வீடு போய்ப் பேசலாம்னு இருந்தேன்.”

“அப்ப நாந்தான் உன் நட்புணர்வு பீறிட்டு வெளிப்படுவதைக் கெடுத்துட்டேனா?”

“எக்ஸாட்லி. சரி, எப்படி இருக்கே? வேலை எல்லாம் ஓக்கேவா?”

“என்னை விடு. புதுப்பெண் நீதான் எப்படி இருக்கேன்னு சொல்லனும்.”

“ரொம்ப ஹேப்பியா இருக்கேன்டி. Marriage is definitely, a worthy timepass.”

“அது தெரியுது, பிரச்சனைனாத்தான் ஃபோன் பண்ணியிருப்பியே.”

“ஏதாவது புலம்புவேன், கேட்கலாம்னு காத்திருக்கற‌ மாதிரியே இருக்கே!”

“பின்ன உங்க சக்சஸ் ஸ்டோரில என்னடி கிக் இருக்கு?”

“நாய், பன்னி, கழுதை, காண்டாமிருகம்.”

“என்கிட்ட பூனைக்குட்டிதான் ஒண்ணு இருக்கு.”

“ச்சீய், கருமம்.”

“லவ் யூ பைரவி.”

“என்கிட்டயும் இருக்கு. புதுசா ருசி கண்ட பூனைக்குட்டி.”

“நான் ச்சீய்ன்னு நடிக்க‌ மாட்டேன். மேலே சொல்லு.”

“விக்ரம் பெஸ்ட். நிஜமா நாட்கள் அவ்வளவு அழகா நகருது.”

“நாட்களா, இரவுகளா?”

“ரெண்டும்தான்.”

“நிஜமாவாடி?”

“எஸ்.”

“கல்யாணத்தில் கவனிச்சேன். விக்ரமுக்கு அழகான விரல்கள்.”

“ம்ம்ம்.”

“ஆனா, மிளகாய் பஜ்ஜியை நாமே செஞ்சா என்ன, கடைல வாங்கினா என்ன?”

பைரவிக்குக் கோபம் எழுந்த‌து. கல்யாண மேடையில் மித்ரா செய்த கேலி நினைவுக்கு வந்தது. கூடவே விக்ரமின் தாத்தாவும். மெல்ல நிதானம் செய்து கொண்டு சொன்னாள்.

“அதெல்லாம் ஸ்னாக்ஸ். நான் ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு இருக்கேன்.”

“என்னடி சொல்ற? கனவு ஏதும் கண்டியா?”

“உங்களுக்கெல்லாம் கனவு. எனக்கு நிஜம்.”

“வாட் டூ யூ மீன்?”

“விக்ரம் முழு ஆம்பிளை.

“அப்படின்னா?”

“He can make me moan, scream, cry.

“அதை வெச்சா?”

“ம்.”

“ஏய், பொய் சொல்லாதே.”

“நம்புறது உன் இஷ்டம். ஆனா நான் உன்னிடம் எப்பவும் பொய் சொன்னதில்ல.”

சினத்துடன் இணைப்பைத் துண்டித்தாள். மித்ராவின் உருவம் பேசிக்குள் அடங்கியது.

*

விக்ரம் கிளம்பி அம்மா வீட்டுக்குப் போய் விட்டான். மின்னஞ்சலில் டிவோர்ஸ் நோட்டீஸ் கண்டதும் அவனது பெற்றோர் அழுது புலம்பினார்கள். விவாக ரத்து என்பதை விடவும் மகனுக்கு இருக்கும் உடற்கூறுப் பிரச்சனை அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஊட்டியது.

வாழாவெட்டியாய் வந்த அவனை எப்படிப் பாதுகாப்பது எனப் பயத்துடன் யோசித்தனர்

திருமண ரத்துக்குச் சரியான காரணத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. பைரவி இருந்த கோபத்தில் நிஜத்தை அப்படியே சொன்னாள். முதலில் அவளுடைய‌ வக்கீலிடம். மத்திம வயதுக்காரியான‌ அவளுக்கு ஆரம்பத்தில் விளங்கவில்லை. புரிந்த போது பைரவிக்குச் சித்த சுவாதீனம் இல்லையோ என்பதாக‌ யோசித்தாள். “என்ன அது வேலை செய்யுதா? அது செயல்படுதா?” என்றெல்லாம் திரும்பத் திரும்பக் கேட்டாள். பைரவி மௌனமாய்த் தலையாட்டி ஆமோதித்ததும் நம்பிக்கையின்றி அதற்கு ஆதாரம் தர வேண்டும் எனக் கேட்டாள். பைரவி விக்ரமை மிக‌ வற்புறுத்தி மருத்துவமனை அனுப்பிப் பரிசோதித்து அறிக்கை வாங்கினாள். மருத்துவர்கள் மிரண்டனர். அத்தனையும் பெண்கள். தொட்டுத் தொட்டுப் பார்த்தனர். விக்ரம் கூசிப் போனான். நீதிமன்றத்தில் கேட்கையிலும் பைரவி உண்மையை உரக்கச்சொன்னாள். விக்ரம் அவரசமாக‌ ஊடக வெளிச்சத்துக்கு வந்தான்.

நீதிபதி சாந்தி தன் முன் கைகட்டி நிற்கும் விக்ரமை நமுட்டுச் சிரிப்புடன் பார்த்தாள். அதில் இருந்தது ஏக்கமா ஏளனமா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“பைரவி, இந்தப் பிரிவின் மூலம் நீ எதை இழக்கிறாய் எனத் தெரியுமா?”

“எஸ், யுவ‌ர் ஆனர். நான் அதைப் பொருட்படுத்தவில்லை.”

“இது உறுதியான முடிவா?”

“ஆம், எனக்கு எச்சிலில் ஆர்வமில்லை.”

“ஃபைன். விக்ரம் பைரவி, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

“நான் மரியாதைக்குரிய பைரவியைப் பிரிய விரும்பவில்லை. என் குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். என் பிழையுணர்ந்து விட்டேன். இனி இப்படிச் செய்ய மாட்டேன். எனக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்கினால் என் விசுவாசத்தையும், கற்பையும் நிரூபிப்பேன்.”

“இது சம்பிரதாயமான‌ கேள்விதான், விக்ரம். சிரமப்பட்டு பதிலளிக்க‌ அவசியமில்லை.”

“இழந்து விட்ட‌ கற்பை எப்படி மீண்டும் பெறுவார், என் கணவர் எனச் சொல்லப்படும் இந்த நபர்? எல்லாம் வெறும் பசப்பு வார்த்தைகள். மிக‌ அருவருப்பாய் உணர்கிறேன்.”

“அமைதி பைரவி. உடனடி விவாகரத்துக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இது கள்ள உறவு என்பதால் சட்டப்படி விக்ரமுக்கு நீங்கள் ஜீவனாம்சமேதும் தர வேண்டியதில்லை.”

“…”

“ஆனால் விக்ரம் சுயசம்பாத்யம் ஏதும் இல்லாதவர் என்பதையும் கோர்ட் கவனிக்கிறது. ஆனால் அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் நீதிமன்றத்துக்கு வெளியே

வைத்து அவருக்கு மனிதநேய அடிப்படையில் மாதாமாதமோ ஒரேமுறையிலோ அவரது வாழ்வாதாரத்துக்கு உதவும் தொகையை அளிக்கலாமென ஆலோசனை சொல்கிறேன்.”

விக்ரம் முகமிறுகி நின்றிருந்தான். பைரவி நிம்மதியுடன் நீதியரசிக்கு நன்றியுரைத்தாள்.

*

முதல்முறை மித்ரா அவனைத் தேடி அடுக்ககம் வந்த போது தாத்தா முகம் நினைவுக்கு வந்ததைக் கஷ்டப்பட்டு ரத்து செய்து விட்டு விக்ரமின் கண்களின் ஆசையில் மின்னின.

மித்ரா விக்ரமுக்குத் தவறுதலாய் அனுப்பி விட்டதொரு செல்ஃபியில் தொடங்கியது அது. அதற்கு நூறு தடவை மன்னிப்புக்கோரினாள். விக்ரம் பெருந்தன்மையாய் மன்னித்தான்.

மித்ராவுக்கு பைரவி சொன்னதில் முழுநம்பிக்கை வரவே இல்லை. விக்ரமிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றுதான் ஆரம்பித்தாள். அவனைப் பேச வைப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல அவனை சொற்களால் இளக்கினாள். அவன் பயந்தான், பிறகு குழம்பினான், இறுதியில் அவிழ்ந்தான். பார்த்ததும் உடனே அழித்து விட வேண்டும் எனச் சத்தியம் வாங்கிக் கொண்டு அதை 3D படமெடுத்து அனுப்பினான்.

மித்ராவுக்கு மின்சாரம் ஓடியது. பழைய‌ வரலாறு ஒன்று நேரில் வந்து நிற்பது போல் தோன்றியது. முத்த ஸ்மைலி அனுப்பினாள். அவன் வெட்க ஸ்மைலி அனுப்பினான்.

“என்னை முதலில் கல்யாண ரிசப்ஷனில் பார்த்த போது என்ன சொன்னாய், மித்ரா?”

“டேய், leave it. எனக்கெப்படித் தெரியும், நீ ஒரு கருப்புக் குதிரை என?”

ஐந்து மாதமாகவே அவர்களுள் குறுஞ்செய்திப் பரிமாற்றங்கள் இருந்தன. அர்த்தமற்ற அரட்டைகள். ஏதுமற்ற இனிமைகள். அதைக் காதல் என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

பேச்சிலிருந்து அடுத்த கட்டமாய் இப்போதுதான் தனிமையில் நேரில் சந்திக்கிறார்கள்.

“மூன்று நிபந்தனைகள் விக்ரம். ஒன்று இது ஒருபோதும் பைரவிக்குத் தெரியக்கூடாது. இரண்டு இது ஒருபோதும் என கணவனுக்குத் தெரியக்கூடாது. மூன்று இது ஒருபோதும் எவருக்கும் தெரியக்கூடாது. இவற்றை ஒப்புக் கொண்டால் மட்டும் நாம் இறங்கலாம்.”

விக்ரம் எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டு மல்லாக்கப் படுத்துக் கொண்டு அவளைப் பார்த்தான். மித்ரா அவனுக்கு அருகே வந்து மல்லாக்கப் படுத்துக்கொண்டு சொன்னாள்.

“நீ மேலே, விக்ரம்.”

அவன் அப்படி ஒன்றை அதுவரை கற்பனை செய்ததில்லை. கனவிலும் கண்டதில்லை.

“நிஜமாகவா, மித்ரா?”

“எனக்கு நம்பாதது ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. உனக்கும் நடக்க வேண்டாமா?”

“…”

“என்ன யோசனை?”

“நீ ஆணுரிமைவாதியா?”

“தெரியல. நியாயத்தைச் சொல்ல எந்த சித்தாந்தத்தின் பின்னும் ஒளியத் தேவையில்ல.”

“இல்ல, எங்க தாத்தா அடிக்கடி ஒண்ணு சொல்வார்.”

“என்ன?”

“பெண்ணாதிக்கவாதிகளைக் கூட நம்பு. ஆனா ஆணுரிமைவாதிகளை நம்பாதேன்னு.”

“அவர் விரக்தில சொல்லி இருக்கார். மறந்துடு அதை.”

“ம்.”

“அடிமைகளுக்குச் சுதந்திரம் கிடைத்தால் ஏற்க மாட்டார்கள் என்பதை உண்மை ஆக்கப் போகிறாயா? அல்லது எஜமானரையே அதிகாரம் செய்வர் எனக் காட்டப் போகிறாயா?”

“ம்… ம்… ம்…”

“எனக்கு வலி கொடு. என்னை முனகச் செய். என்னைத் தின்று தீர்.”

“ம்… ம்… ம்…”

“கலவி என்பது பரஸ்பரம். நான் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும் என்றில்லை. சில சமயங்களில் நீ உத்தரவிடு. உனக்கு வேண்டும் என்பது போல் உடம்பை வளைந்து கொடுப்பேன். இருக்கும் அத்தனை பொசிஷனும் ஒவ்வொன்றாய் ருசிப்போம், வாடா.”

“ம்… ம்… ம்…”

“நீயும் என்னை டி போட்டுக் கூப்பிடு.”

“கணவன் மனைவியை டி போடலாமா?”

“நாமதான் கணவன் மனைவி இல்லையே!”

“சரி, ஆண் பெண்ணை அப்படிச் சொல்லலாமா?”

“தாராளமாய்ச் சொல்லலாம்.”

“அது பாவமல்லவா?”

“படுக்கையில் ஏதடா பாவம், புண்ணியம்? அங்கே சுகம் மட்டும் தான்.”

“அடியே, மித்ரா…”

ஆயிரம் ஆண்டுகளின் ஆண் அவனுக்குள் விழித்துக் கொண்டு அவள் மீது பாய்ந்தான்.

மழலை போல் தடுமாறினான். புன்னகையுடன் அவனுக்கு நடை பழக்கினாள். மெல்ல மெல்ல அவன் ராஜ‌பாட்டைக்கு வந்ததும் குதிரை போல் ஓடத் தொடங்கினான். ஈடுதர முடியாமல் அவளுக்கு மூச்சு வாங்கியது. வியர்த்துக் கசகசத்துக் கீழே இறங்கினான்.

“Paradise Regained.”

மித்ரா முனகியது அவனுக்கு விளங்கவில்லை. அவன் பைத்தியம் மாதிரி சிரித்தான்.

*

மித்ரா கிளம்பி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது விக்ரமின் குறுஞ்செய்தி வந்தது.

I go to bed thinking

about you.

Pissing a few moments ago

I looked down at my penis

affectionately.

Knowing it has been inside

you twice today makes me

feel beautiful.

படித்துப் புன்னகைத்தாள் மித்ரா. அந்தப் புன்னகையைச் சாகவிடாமல் டைப் செய்தாள்.

“உன் வரியா?”

“இந்தப் பாமரனுக்குக் கவிதை ஒன்றுதான் கேடு.”

“அப்ப‌ யாருடையது?”

“ரிச்சர்ட் ப்ரௌட்டிகன். அமெரிக்கன் ரைட்டர். அஃப்கோர்ஸ் தடை செய்யப்பட்டது.”

“படிக்கிறாயா நீ?”

“உனக்குப் பிடிக்குமல்லவா? அதனால் ஆரம்பித்திருக்கிறேன்.”

“ஏற்கனவே உன்னை நிறையப் பிடிக்கிறது, விக்ரம்.”

“அதைத்தான் செயலிலேயே நிரூபித்து விட்டாயே!”

“சரி, உனக்கு என்னை அதிகம் பிடித்திருகிறதா, பைரவியையா?”

“உன்னைத்தான்.”

“சும்மா எனக்காகப் பொய் சொல்லாதே, விக்ரம்.”

“இல்லை. நிஜமாகத்தான். என் ஆண் குறி மீது ஆணையாக.”

“பொறுக்கி. ஏன் அப்படி?”

“பைரவி எஜமானி, நீதான் சினேகிதி.”

“பொய்யோ மெய்யோ, இனிக்கிறது.”

“உன் பூனைக்குட்டி மீது சத்தியம்.”

“போடா. லவ் யூ சொல்ல வேண்டும் போலிருக்கிறது. ஆனால் சொல்ல மாட்டேன்.”

“சீக்கிரம் சொல்ல வைப்பேன்.”

சிரித்துக் கொண்டே அந்த எழுத்துக்களைப் பார்த்திருந்தாள். அவள் கணவன் அவளை வினோதமாகப் பார்த்தான். அவள் அப்படிச் செல்பேசி பார்த்துச் சிரித்ததைக் கண்டதே இல்லை. அவன் கவனிப்பதை உணர்ந்ததும் சட்டெனச் சிரிப்பைக் கத்தரித்தாள் மித்ரா.

அவனைப் பார்த்து பாசாங்காய்ப் புன்னகைத்தாள். அந்தக் கள்ள உடல்மொழியும் புதிது.

*

சரியாய் மூன்று நாட்கள் தொலைக்காட்சிகள் விக்ரம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தன. பிறகு சொல்லி வைத்தாற்போல் மறந்து போயின. ஆனால் மித்ராவின் பெயர் மட்டும் எங்கும் வெளிவர‌வில்லை – பைரவி, விக்ரம் இருவரையும் கேட்டும் சொல்லவில்லை.

தொலைக்காட்சிகள் ப்ரேக்கிங் நியூஸ் அப்டேட்கள் தாண்டி துறைசார் வல்லுநர்களைக் கொண்டு விவாதங்கள் நடத்தின. அவர்கள் அனைவரும் பெண்கள். ஒப்புக்குச் சில ஆண் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். வினோதமாய் ஆண்களும் விக்ரமைத் திட்டினர்.

அதிலொன்றில் விக்ர‌ம் பங்கேற்றுக் கொஞ்சமாய், கூச்சமாய்ப் பேசத் தொடங்கினான். ஆனால் ஒரு கட்டத்தில் நெறியாளர் வளைத்து, மடக்கி, ஒடித்துக் கேள்வி கேட்ட போது – ஞமலி குரைப்பது போல் உரத்த குரலில் “The nation wants to know…” – இயல்பான ஒழுக்கில் அவனிடமிருந்து வந்த‌ வாக்கியம் வைரலாகி கடுமையான‌ விமர்சனத்துக்குள்ளானது.

“Bones are for dogs. Meat is for women.”

பிரச்சனையாகும் எனத் தெரிந்தே அத்தொலைக்காட்சி அதை ஒளிபரப்பியது. பிறகு, மன்னிப்புக் கோருவதாகவும் அறிவித்தது. பெரும்பாலான‌ கட்சிகளும், அமைப்புகளும் விக்ரமைக் கைது செய்யக் கோரினார்கள். தம் தொண்டர்களை வீதியில் இறக்கி பெரிய ஆண் குறியுடன் விக்ரமின் உருவ பொம்மை செய்து கொடும்பாவி கொளுத்தினார்கள்.

விக்ரமுக்குத் தான் பேசுபொருளானதில் உவப்பில்லை. சங்கடம் கொண்டான். அவன் விரும்பியது ஓர் அமைதியான குடும்ப வாழ்க்கையை. குழந்தைக‌ள் பெற்று, வளர்த்து, வயதாகி, இயற்கையாக மரிப்பதை. அவன் இப்போது தன் ஆண்குறியை வெறுத்தான்

*

வெயில் முகிலுக்குப் பின் நின்று வரலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தது.

அன்று மித்ராவைத் தேடி அவளது பணியிடத்துக்குச் சென்றான் விக்ரம். மருத்துவமனை வாசனை அவனுக்கு ஒருவித அச்சத்தை அளித்தது. செவிலி உடையில் இருந்தாள் மித்ரா.

“இந்தச் சீருடையில் நீ மித்ரா போலவே இல்லை.”

புன்னகைத்தாள். அவனுக்கு சாக்லேட் பானம் ஒன்று வாங்கிக் கொடுத்து எதிரமர்ந்தாள்.

“சொல், விக்ரம்.”

“நாம் திருமணம் செய்து கொள்ளலாமா, மித்ரா?”

அந்தக் கேள்வியில் அதிர்ந்தவள், பின் மீண்டு இயல்புக்குத் திரும்பிப் புன்னகைத்தாள்.

“இல்லை, விக்ரம்.”

“ஏன்…?”

“என்ன கேள்வி இது? நான் திருமணமானவள்.”

“உன் கணவனை விவாக ரத்து செய்து விட்டு…”

“அவன் என்னை நம்பி இருப்பவன். ஒருபோதும் கைவிட மாட்டேன்.”

“என்னை நீ காதலிக்கவில்லையா, மித்ரா?”

“ம்ம்ம்”

“சொல்.”

“நான் எப்போதாவது அப்படிச் சொல்லி இருக்கிறேனா, விக்ரம்?”

“இல்லை. ஆனால் உன் செயல்கள்…”

“நான் விரும்பியது உன் குறியை மட்டுமே. அதன் உயிர்ப்பை மட்டுமே.”

விக்ரம் முகத்தில் அப்பட்ட‌ ஏமாற்றம் தெரிந்தது. ஆனால் பிடிவாதமாய்ப் பேசினான்.

“எனில், இப்போது அதை விரும்பவில்லையா?”

“அப்படி இல்லை. ஆனால் திருமணம் என்பது அது மட்டுமல்ல.”

“தவிர…”

“தவிர?”

“இன்று நம் உறவு தொடர்பான குற்றவுணர்ச்சியில் இருக்கிறேன். உனக்காவது ஒரு பக்க துரோகம். நான் என் சினேகிதி, கணவன் என இருபக்கமும் துரோகம் செய்திருக்கிறேன்.”

“ம்.”

“உன்னைக் கல்யாணம் செய்தால் பைரவியை நான் நிரந்தரமாகப் பிரிய நேரிடும்.”

“பிரிந்தால் என்ன?”

“பெண் சினேகம் ஒருபோதும் உனக்குப் புரியாது. உலகில் எவரை விடவும் அவள் எனக்கு முக்கியம். அவளுக்கும் அப்படித்தான். இது தற்காலிகப் பிணக்கென்றே நினைக்கிறேன்.”

“அன்று நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.”

“அந்தச்சாமர்த்தியத் திருட்டுத்தனமெல்லாம் வெறும் ஒத்திப்போடுதல்தான். என்றேனும் ஒருநாள் அகப்பட்டிருப்போம். பெண்ணிடம் நீ எதையும் மறைத்துவிட‌ முடியாது. பைரவி சாதாரணமானவள் இல்லை. அதனால் எப்படியும் இதை உணர்ந்து கொண்டிருப்பாள்.”

“ம். ஆம். அவள் நிச்சயம் சாதாரண ஆளில்லை.”

“அன்றைய‌ ந‌ம் அலட்சியம் சிக்குவதை விரைவுபடுத்தியது என்பதுதான் வித்தியாசம்.”

“இது முன்பே உனக்குத் தெரியாதா?”

“காமம் கண்மூடித்தனமானது விக்ரம். அது மண்டைக்குள் நுழைந்து விட்ட பிறகு தர்க்க அறிவு செயல்படாது. மீறிச் சிந்தித்தாலும், காமம் அதை ஒரு சின்ன‌ அதட்டலில் அடக்கி விடும். காலங்காலமாய்க் காமம் சார்ந்த குற்றங்களுக்கு எல்லாம் காரணம் இதுவே.”

“இப்படி நிறைய லாஜிக் பேசலாம். ஆனால் வலி நிஜம்.”

“ஆனால் வலியை உத்தேசித்து மேலும் ஒரு பெருவலியை நோக்கி நகர முடியாதல்லவா!”

“எனில், இப்போது என்னதான் தீர்வு?”

“அவரவர் அப்படி அப்படியே இருந்து கொள்வதுதான் நல்லது.”

“இந்த ஒட்டுமொத்தச் சமன்பாட்டில் நான் மட்டும் ஏமாற்றப்படுகிறேன், அல்லவா?”

“துரதிர்ஷ்டவசமாய், ஆம். அதற்கு மனதார‌ மன்னிப்புக் கோருகிறேன், விக்ரம்.”

“நான் அசல் ஆண் என்பதுபோல் நீ நிஜப்பெண். நாம் சேருவதுதானே பொருத்தம்?”

“யதார்த்தத்தில் பொருத்தமானவர்கள் ஜோடி சேருவதே இல்லை.”

“ம்.”

“வாழ்க்கை கேத்திர கணிதமல்ல‌. பிசிறுகளே அதனழகு.”

“என்னால் உன்னை மறக்க முடியவில்லை, மித்ரா.”

விக்ரம் மேசையை எட்டி அவளை முத்தமிட எத்தனித்தான். மித்ரா அவனைத் தடுத்தாள்.

“போதும் விக்ரம்.”

“என் மீது அவ்வளவு வெறுப்பா?”

“இல்லை. என் மீது.”

“ம்.”

“ஒரு துரோகத்தின் மீது அமர்ந்து கொண்டு இதைத் தொடர்ந்து செய்யக் கூசுகிறது.”

“அடடா!”

“என்ன திடீர் ஞானோதயம் எனக் கேலி செய்கிறாயா?”

“ம்ம்ம்.”

“காமத்தில் புரண்டு கிடந்த போது அது தெரியவில்லை. ஆனால் இப்போது கசப்பு தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போதும் கண்மூடித்தனமாய் அதில் விழுந்து கிடப்பது சரியல்ல.”

“ம்.”

“வாழ்க்கை பொதுவாய் இரண்டாம் வாய்ப்பு வழங்காது. தரும் போது தவற விடலாகா.”

“சில நாட்கள் எடுத்துக் கொண்டு யோசித்துச் சொல்கிறாயா, மித்ரா?”

“நிறைய யோசித்து விட்டேன், விக்ரம். என் முடிவில் மாற்றம் இராது.”

விக்ரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். அவனுக்கு அழுகை வருவது போல் இருந்தது.

“கிளம்பு விக்ரம். ஓய்வெடு. அதிகம் தனிமையிலிராதே. பொழுதுபோக்குகளில் ஈடுபடு. கார்டூன் பார்.  கடவுளைத் தியானம் செய். கவிதைகள் படிப்பதைச் சற்று நிறுத்தி வை. கவனத்தை இதிலிருந்து திருப்பு. காத்திரு. காலம் எல்லாவற்றையும் மறக்கச் செய்யும்.”

“அவ்வளவு எளிதில் மறக்கக்கூடியதா?”

“ஆம். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள். நமக்குத் தொண்ணூறு நாள் முடிந்தது. இதுக்கு மேல அதில் திளைத்துக் கிடக்க ஏதுமில்லை விக்ரம். நம் உறவு ஓர் நினைவாகக் கூட எஞ்சியிருப்பதை நான் விரும்பவில்லை. மேகங்கள் கடப்பதுபோல் இது விலகட்டும்.”

“ம்.”

“வெறும் உடம்பு, விக்ரம்.”

சாக்லேட் பானம் காலியாகியிருந்தது. மித்ரா விடைபெறுவதுபோல் எழுந்துகொண்டாள்.

“ஆல் தி வெரி பெஸ்ட், விக்ரம். எல்லாம் சரியாகும்.”

“ம்.”

“ஒன்று சொல்கிறேன். கோபிக்காமல் கேட்பாயா?”

“சொல்.”

“Your dick is better than you.”

“…”

“அதுதான் யதார்த்தம். இதை உணர்ந்தால்தான் உனக்கு நிம்மதி கிடைக்கும்.”

“கிளம்புகிறேன், மித்ரா.”

“Sorry if I hurt you. Good-bye.”

விக்ரம் தடுமாறி எழுந்து மித்ராவின் கரம் பற்றிக் குலுக்கிவிட்டுக் கிளம்பினான். அவள் உள்ளங்கை குளிர்ந்திருந்தது. அவன் எப்போதும் உணரும் வெப்பம் இன்று அதிலில்லை.

“இனி மேல் நாம் சந்திப்பது நல்லதல்ல. ஊடகங்கள் உன்மீது கண் வைத்திருக்கின்றன.”

அவன் முதுகில் மித்ராவின் சொற்கள் அறைந்தன. திரும்பிப் பார்த்தான். அவள் இல்லை.

*

கல்பற்றா என்பது முன்பு பேரழகிகள் தேசமாக மட்டும் அறியப்பட்டிருந்தது. அவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்ட‌ சினிமா நடிகை ஒருத்தியை அந்தக் காலத்தில் உலகின் முதற்தர அழகி என்பார்கள். அப்போது அது கேரள வயநாடு மாவட்டத் தலைநகர். முன்சிபாலிட்டி.

இன்று உலகில் சினிமாவும் இல்லை, அழகிகளும் இல்லை. ஆனால் கல்பற்றா இருந்தது. நிறைய மாறி இருந்தது. எல்லை விரிந்து பக்கத்துக் கிராமங்களைச் சுவீகரித்திருந்தது.

2031ம் ஆண்டின் சென்சஸ்படி இந்தியாவின் குறைந்த பாலியல் விகிதாச்சாரம் கொண்ட – 1000 பெண்களுக்கு 876 ஆண்கள் – அவ்வூரைத் தேசத் தலைநகரமாக அன்றைய அதிபர் அறிவித்தது சமயோசித, ராஜ‌தந்திர முடிவு எனப் பாராட்டினர். புகைப் போட்டு பழுக்க வைக்கப்பட்டது கற்பற்றா நகரம். மெல்லத் தெற்கு தேற‌, வடக்கு வாட‌த் தொடங்கியது.

அங்கே வேகக் காற்று வீசும் ப‌ச்சைப் பள்ளத்தாக்குகளுக்கு நடுவே 98 ஏக்கரில் திறந்து பரந்த அதிபர் மாளிகை வேலை நேரம் முடியும் வேளையிலும் பரபரப்பில் இருந்தது.

சாஹித்யா தேவி கேபினெட் கூட்டியிருந்தாள். மேசையில் தன் முன் வைக்கப்பட்டிருந்த முந்திரி பகோடா எடுத்துக் கொறித்தாள். அதற்குக் காத்திருந்த மற்றவர்களும் தம் முன் வைக்கப்பட்டிருந்ததை அள்ளி வாயில் போட்டனர். சாஹித்யா பேசத் தொடங்கினாள்.

“அந்தப் பையன் விக்ரம் விஷயமாய்ப் பேச வேண்டும்.”

“சொல்லுங்கள், ஹைனஸ்.”

“நீங்கள் எல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?”

“அது ஒரு கலவையான மனநிலையையே அளிக்கிறது. குழப்பமாக இருக்கிறது.”

அது அடிமைக‌ள் வ‌ழக்கம். எஜமானர் மனதறியாமல் எதிலும் வாயைத் திறப்பதில்லை என்ற நிலைப்பாடு. பேசி அது ஒருவேளை அவருக்கு உவப்பற்றதாக இருந்து விட்டால்?

எஜமானர்களுக்கு அப்படிப்பட்ட அடிமைகளைப் பிடிக்கும். அப்படியான அடிமைகள் ஆபத்தானவர்கள் என்பது வேறு விஷயம். சாஹித்யா திருப்தியாய்ப் புன்னகைத்தாள்.

“சரி, நான் நேரடியாகவே சொல்கிறேன்.”

“…”

“ஓர் ஆண் முழுமையான ஆணாய் இருப்பது நமக்கு எப்போதும் தொந்தரவுதான்.”

“மன்னிக்கவும் தலைவி. என் கருத்து இதில் மாறுபட்டது. அனுமதித்தால் சொல்கிறேன்.”

நிஜம் பேச முனையும் அடிமைகள் ஆபத்தானவர்கள் அல்லர், தற்காலிகத் தொந்தரவுகள் மட்டுமே என்பதை அனுபவம் மிக்க‌ எஜமானன் அறிவான். அவர்களை அனுமதிப்பான்.

“சொல், சாயிஷா.”

சாயிஷாவுக்கு ஒன்று தெரியும். பொதுவாக அதிபர் கேபினெட் கூட்டினால் குழப்பமான அல்லது ஆபத்தான விஷயத்தில் முடிவைத் தான் மட்டும் எடுத்ததாக இல்லாமல் மொத்த கேபினெட்டும்தான் எடுத்தது என்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைப்பார். எதிர்காலத்தில் அம்முடிவு பிழை என்றானால் அதிபர் மட்டுமே பொறுப்பல்ல என்கிற தப்பித்தலுக்காக. அதனால் இச்சூழல்களில் அமைச்சர்கள் சுதந்திரமாகப் பேச அதிகம் தடை இருக்காது.

“அவனை வைத்து முறையாக‌ ஆராய்ச்சி செய்தால் இப்பிரச்சனைக்கு முடிவு கண்டறிய முடியலாம். பின் எல்லா ஆண்களுக்கும் இந்தக் குறைபாட்டைச் சரி செய்துவிட முடியும்.”

“செய்த பின்?”

“பெண்கள் இயற்கை முறையில் கருத்தரிக்கலாம். கலவியிலும் திருப்தி கொள்ளலாம்.”

சாஹித்யா புன்னகைத்தாள். அதன் அர்த்தத்தை மற்றவர்கள் வாசிக்க முயன்றார்கள்.

“குறி இயங்காமல் இருக்கும் வரை மட்டுமே ஆண் நமக்கு அடிமை.”

அங்கிருந்த பேர்பாதிப் பேர் மேசையைத் தட்டி ஒலியெழுப்பி அதை ஆமோதித்தார்கள்.

“கட்டுப்படுத்தப்பட்ட சில ஆண்களை மட்டுமேனும் உருவாக்கலாமே?”

“குறி வேலை செய்தால் ஆண் கட்டுப்படுத்தப்பட இயலாதவன் ஆகி விடுவான். அவன் வன்முறை அவன் மூளையிலிருந்து அல்ல, அவன் குறியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது.”

“ம்.”

“ஆண்மை மீண்டும் துளிர் விட்டால் அவனது திமிரும் உயரும். They are directly proportional.”

“அப்படியா சொல்கிறீர்கள்?”

“வரலாற்றை மறந்து விடாதே. நீண்ட நெடிய பல்லாயிரம் வருடங்கள். ஆண் நம்மை அடிமைப்படுத்தி வீட்டில் வைத்திருந்தான். வெளியே செல்ல, வேலை செய்ய உரிமை இல்லை என்பதை எல்லாம் விடு. கலவியை மறுக்கக்கூட நமக்குச் சுதந்திரம் இல்லாத காலம் ஒன்று இருந்தது. கால் அகட்டச் சொன்னால் செய்ய வேண்டும், வாய் திறக்கச் சொன்னால் முடியாதெனச் சொல்ல முடியாது. பெண் அந்த உலகில் பூரண அடிமை.”

“ஆம். ஒப்புக் கொள்கிறோம்.”

“ஆணுக்கும் ஆணுக்குமான சண்டையில் கூட பழிவாங்கல் அல்லது வெற்றிகொள்ளலின் அடையாளமாய் பெண்ணுடலே சிதைக்கப்படும். காரணம் அவள் ஆணின் உடைமை.”

“மிகச் சரி.”

“மாறாகக் கடந்த கால் நூற்றாண்டாக உலகமெங்கும் பாலியல் வல்லுறவு என்ற ஒன்றே கிடையாது. பெண் தனித்து நடமாடுகிறாள். எதிர்வரும் ஆண் ஒதுங்கி வழிவிடுகிறான்.”

“ஆம். இது ஒரு தலைகீழாக்கப் புரட்சி.”

“இன்று பெண்கள் ப்ரா அணிவதில்லை. ஏனெனில் அதைக் காட்டி ஆண்களை மயக்க வேண்டியதில்லை. இன்று முலை என்பது பிறந்த குழந்தைக்குப் பாலூட்டும் ஓர் எளிய உறுப்பு. மற்ற சமயங்களில் அது வெறும் கொழும்புத் தொங்கல். அதன் மீது ஏற்றப்பட்ட overloaded அர்த்தங்கள் ஏதுமில்லை. இந்தச் சுதந்திரத்தை இழக்கப் போகிறோமா நாம்?”

“நோ. அது மகத்தான விடுதலை. புற்று நோய், மன அழுத்தம் எனப் பலவற்றிலிருந்தும்.”

“இவ்வளவும் எப்படி நடந்தது?”

“கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பங்கேற்பு மூலம் பெண்கள் அதிகாரத்தை அடைந்து…”

“அதெல்லாம் ஒரு புடலங்காயும் கிடையாது. அந்தக் கிருமி தான் மூலக்காரணம்.”

“ஆ!”

“பிரேமலதா, லதா என அரசியலில் இருந்த‌ சில உதாரணங்களை எடுத்துப் பாருங்கள். ஆரம்பத்தில் கணவனுக்கு அரசியல் துணையாய் இருந்து பின் கிருமி நிகழ்த்திய கால மாற்றத்தால் முக்கியத்துவம் பெற்றவர்கள். அதன் வழியே அதிகாரத்துக்கு வந்தவர்கள்.”

“ஆம்.”

“அந்தக் கிருமியைக் காட்டித்தான் ஆண்களை வீட்டிலே அடைத்தோம். மெல்ல மெல்ல அவனது இடத்தைப் பறித்தோம். அவன் மீறி ஏறினோம். அவனை அடிமையாக்கினோம்.”

“சரிதான்.”

“ஆண் குறி வேலை செய்யவில்லை என்றதுமே அவனது தன்முனைப்பு காயப்பட்டது.”

“…”

“உங்களில் வயதில் மூத்த ஓரிருவருக்குத் தெரிந்திருக்கலாம். பழங்காலத்தில் கலவியின் போது ஆணை அவமதிக்க பெண்ணின் ஒரு சிறுநமுட்டுச் சிரிப்பு போதுமானது. அவன் அத்தனை தூரம் தன் தன்னம்பிக்கையை அச்சிறிய கறித்துண்டின் மீது முதலீடு செய்து வைத்திருந்தான். அது அவனது மனோதத்துவம். எத்தனை சாதித்தாலும் அவன் தன்னை ஒரு வெற்றியாளனாக உணர்ந்தது இருளில் பெண்ணிடம் கிட்டிய அங்கீகாரத்தில்தான்.”

“புரிகிறது.”

“சொல்லப் போனால் அவன் அத்தனை வெற்றிகள் ஈட்டியதும் அவற்றை அவள் காலில் இடத்தான். அதன் மூலம் தான் மற்ற ஆணை விட உயர்வென நிரூபிக்க நினைத்தான். அவனது வெற்றிகள் அல்ல, அவற்றை முன்வைத்து இறுதியில் பெண்ணை வென்றதே அசலான வெற்றி எனக் கருதினான். ஆக, குறியில்தான் அவனது வெற்றி நிறைகிறது.”

“ஆக, ஆணின் பலம், பலவீனம் இரண்டும் அவனது குறிதான்.”

“ஆம். சமகாலத்தில் நடந்துகொண்டிருப்பதும் அதே உளவியல் யுத்தம்தான். பெண்ணின் இந்த மொத்தச் சாம்ராஜ்யமும் மலரினும் மெல்லிய அந்த ஆணின் காமம் தொடர்பான தாழ்வுணர்ச்சி என்கிற‌ ஒற்றை இழையின் மீதுதான் கட்டியெழுப்பப் பட்டிருக்கிறது.”

“மன்னிக்கவும், தாயே. ஒரு சந்தேகம். கேட்கலாமா?”

“Go ahead.”

”எனில் பெண்களுக்கு திறமையே இல்லை என்கிறீர்களா?”

“அப்படி இல்லை. இதற்கும் திறனுக்கும் தொடர்பில்லை. இது சமூக அளவிலான ஒரு சதி. பல்லாயிரம் ஆண்டு முன் ஆண் அதிகாரத்தைப் பற்றியதும் இப்படித்தான். பெண்வழிச் சமூகமாக இருந்த பழங்குடிகளில் அவன் மேலே வந்தது பெண் கர்ப்பமுற்று வெளியே செல்ல முடியாமல் வீட்டிலிருந்த பத்து மாத‌ இடைவெளியில்தான். இப்போது நம் முறை.”

“மார்வலஸ். வாழ்க வாழ்க.”

“அதை விட இன்னுமொரு முக்கியமான‌ விஷயம்.”

“சொல்லுங்கள்.”

“ஆண்களுக்கு அது வந்து விட்டால் இப்பெண்களும் அவர்களுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். விறைப்பாக நிற்கும் இன்றைய நிலை மாறி இளகுவார்கள்.”

“அம்மாதிரி நடக்குமா என்ன?”

“ஆம். எனக்கே தாமதமாகத்தான் இது உறைத்தது. இருபத்தைந்து ஆண்டு முன்பு வரை உலகை ஆண்டு கொண்டிருந்தது ஆண்குறிதான். அதன் பின்னுள்ள‌ மனோவியல்தான்.”

“மறுக்க முடியவில்லை, அம்மா.”

“இந்தக் கிருமியின் வடிவை நுண்ணோக்கியில் பார்த்திருக்கிறீர்களா?”

சாயிஷா உள்ளிட்ட சில அமைச்சர்கள் வலது கையை லேசாய்த் தூக்கிக் காட்டினார்கள்.

“அது எப்படி இருக்கும்?”

“திறந்த முத்துச் சிப்பி போல்.”

“பாதி மலந்த புஷ்பத்தின் நீண்ட இதழ்கள் போல்.”

“கதாரின் அல் வக்ரா ஸ்டேடியத்தை ஹை ஆங்கிள் ஷாட்டில் பார்ப்பது போல்.”

“எல்லாமே சரி. ஆனால் எனக்கு அது வேறொன்றை நினைவுபடுத்தியது.”

“சொல்லுங்கள், அறியக் காத்திருக்கிறோம்.”

“அது ஒரு விரிந்த‌ யோனியின் வடிவில் இருக்கும். உச்சத்தில் கனிந்து துடிக்கும் யோனி. ஓர் ஆண் குறியை வென்ற களிப்பில் மிதக்கும் யோனி. இயற்கையின் செய்தியாகவே அதைப் பார்க்கிறேன். ஆண்களை பெண்கள் வென்றதற்கான குறியீட்டு அறிவிப்பு அது.”

“நீங்கள் சொன்னதும்தான் அதை அப்படியும் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.”

“கிருமி நமக்கான வரப்பிரசாதம். நம்மை வழிநடத்தும் ஒளி. நமது ஒரே கடவுள்.”

“ஆனால் கிருமி நம் உடலையும்தானே பாதித்திருக்கிறது!”

“எந்தச் சாமி இலவசமாக அருள் பாலிக்கும்? பக்தி என்பதே கொடுக்கல் வாங்கல்தான். பெண்களுக்கான இந்த‌ நோய் பாதிப்பானது மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், பூ மிதித்தல், அலகு குத்துதல் மாதிரி தெய்வமாக எடுத்துக் கொண்ட‌ நேர்த்திக்கடன்தான்.”

“நீங்கள் ஒரு சிறந்த தத்துவ ஞானியும் கூட.”

“புகழ்ச்சியை நான் விரும்புவதில்லை.”

“ஆனால் உண்மைக்கும் புகழ்ச்சிக்கும் வித்தியாசமுண்டு.”

“சரி தான். என்ன முடிவு சொல்கிறீர்கள்?”

“ஆண் குறி செயல்படுவது நாட்டிற்கு ஆபத்துதான்.”

“ஒருமனதாக அங்கீகரிக்கிறோம், அன்னையே!”

“நல்லது. இப்போது நாம் விக்ரம் விஷயத்துக்கு வரலாம்.”

“சொல்லுங்கள்.”

“அவனை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதே நம் முன்னிருக்கும் கேள்வி.”

“உங்கள் மனதைப் பேசுங்கள், தலைவி.”

“அவனே விரும்பாவிட்டாலும் இன்று அவன் ஒரு கலகக்காரன். அவனால் ந‌ம் சமூகத்தில் குழப்பங்கள் உண்டாகும். ஏற்கனவே இரு பெண்கள் பாதிக்கப்பட்டு விட்டனர். இதோடு இந்த ஆட்டம் நில்லாது. நாம் இத்தனை ஆண்டுகளாய்க் கட்டிக் காத்து வரும் பாலினச் சமன்பாடுகள் குலையத் துவங்கும். அது சாசன விரோதம். அதை அனுமதிக்க முடியாது.”

“உண்மை.”

“Let us eliminate him.”

“மரண தண்டனையா?”

“ஆம்.”

அதைக் கேட்டதும் அந்த அறையில் மௌனம் சூழ்ந்தது. பின் தம்முள் கிசுகிசுத்தார்கள்.

“இதற்கு மரணம் சற்றே அதிகப்படி இல்லையா?”

“சற்றே என்ன, நிறையவே அதிகப்படிதான்.”

“அப்புறம்?”

“செயல் அல்ல, அதன் விளைவே அதற்கு நாம் அளிக்கும் பரிசிலைத் தீர்மானிக்கிறது. சம்பள உயர்வுக்கு மட்டுமல்ல, குற்றத்துக்கான‌ தண்டனைக்கும் இதுவே அளவுகோல்.”

“ஆம். விக்ரம் விஷயத்தில் நிகழும் சமூக ஊறு கிட்டத்தட்ட ஒரு தேசத் துரோகம்.”

“ஆயுள் சிறை வைக்கலாம்தான். ஆனால் விக்ரம் அடையாளமாகிப் போவான்.”

“கொன்றாலும் அடையாளாமாவான்தானே?”

“ஆம். ஆனால் பயத்தின் அடையாளமாய்த்தான் நினைவிலிருப்பான்.”

“ம்ம்ம்.”

“தவிர, இதை நாம் வெளிப்படையாகச் செய்யப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் எல்லோருக்கும் இந்த அரசாங்கம் இதன் மூலமாகச் சொல்ல விரும்பும் செய்தி போய்ச் சேரும். அதாவது இன்று அவன் உருவாக்கும் குறியீட்டிற்கு நேரெதிரான குறியீடு அது.”

“மரியாதைக்குரிய‌ அதிபர் அவர்களே, என்னவோ மனம் முழுக்க‌ ஒப்ப மறுக்கிறது.”

“இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் நீதிமன்றங்கள் தரும் மரண தண்டனைகள் மட்டும்தான் நின்றிருக்கிறது. அரசு நிறுத்தி இருக்கிறதா என்ன?”

“இல்லை.”

“ஏன்?”

“நிறுத்த முடியாது என்று உணர்ந்ததால்.”

“எஸ். பெண்களின் அற அரசு. கருணையே வடிவான ஆட்சி என்றுதான் ஆரம்பித்தோம். ஆனால் சில பல விஷயங்களில் அஹிம்சை சாத்தியமில்லை என்பதை உணர்ந்தோம். தண்டனை பயம் சிலரின் குற்றங்களைத் தடுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோம்.”

“இதன் மூலம் நாம் உண்டாக்க விரும்பும் பயம் என்ன?”

“எதிர்காலத்தில் எவருக்கும் ஆண்குறி செயல்படலாகாது. அப்படியே செயல்பட்டாலும் அதை அரசுக்கு அறிவித்து சிகிழ்ச்சை வழியே சரி செய்து கொள்ள வேண்டும். விக்ரம் போல் அதை மூலதனமாகப் போட்டு பெண்களைக் கவிழ்க்கப் பயன்படுத்தக்கூடாது.”

“இது அவசியம்தான்.”

“இன்று அரசுக்கு எதிரான பல போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிக்கின்றன. ஆணுரிமை முதல் நக்சல்கள் வரை பல காரணங்கள். தொந்தரவு அதிகரிக்கும் போது சிலரை ரகசியமாகக் கொன்று கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரிந்தே ரகசியமாக வைத்திருக்கவில்லை. தண்டனை பயம் முக்கியம். அவ்வளவு ஏன், ஊழல் இல்லையா இன்று? பெண்கள் ஆண்களை விடவும் மோசமாக ஊழலில் இறங்கி இருக்கிறார்கள். காஷ்மீரில், வடகிழக்கில் தினம் ஏதேனும் தீவிரவாதச் சம்பவங்கள் நடக்கின்றன. நாம் ஒரு தேசமாக‌ இன்னும் மரண தண்டனையை ஒழிக்கும் சொகுசுக்கு வந்து சேர‌வில்லை.”

“ம்ம்ம்.”

“நினைவு கொள்ளுங்கள். நாம் புதிதாய் ஏதும் செய்யவில்லை. இதற்கு முன்னோடிகள் உண்டு. எமெர்ஜென்ஸிக் காலத்தில் மக்கட்தொகையைக் கட்டுப்படுத்த இரண்டே ஆண்டுகளில் 83 லட்சம் ஆண்களுக்குக் கட்டாயக் கருத்தடை செய்தார்கள். பழைய தில்லியில் அதை முன்னின்று நடத்தியது ருக்சானா சுல்தானா என்ற பெண்தான். எமெர்ஜென்ஸியைக் கொண்டு வந்ததும் ஒரு பெண்தான். ஆக, தேச நலனுக்காகக் கெட்ட பெயர் வாங்கிக் கொள்வது பெண்களுக்கு வழக்கம்தான். நாமும் விலக்கல்ல.”

“அவரது மகனை தேன்மொழி ராஜரத்னம் என்ற பெண் கொன்றதும் நினைவு வருகிறது.”

“மாண்புமிகு அதிபர் அவர்களே, நான் இதற்குச் சம்மதிக்கிறேன்.”

“நானும் சம்மதிக்கிறேன்.”

“நாங்களும் சம்மதிக்கிறோம்.”

அடிமைகள் முடிவு சீட்டுக்கட்டு விழுவது போல். ஒன்று விழுந்தால் மற்றவை தொடரும்.

“நல்லது. உங்களுக்கு நன்றி.”

“எங்கள் பாக்யம்.”

“அடுத்து இதைச் செயல்படுத்துவது எப்படி எனப் பார்க்க வேண்டும்.”

சாயிஷா இப்போது பேச ஆரம்பித்தாள். அவள் மனதில் திட்டம் உருப்பெற்றிருந்தது.

“இதை நாம் மறைமுகமாக‌வே செயல்படுத்த வேண்டியிருக்கும். ஏனெனில் சட்டத்தில் இதைச் செய்ய இடமில்லை. முதலில் நாம் விக்ரமைக் கைது செய்ய வேண்டும். பிறகு பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்லி மத்தியப் பாலியல் ஆய்வகத்துக்கு அழைத்து வர வேண்டும். இங்கே ஊசி மூலம் எளிமையாக வேலையை முடிக்கலாம்.”

“ஊசி மூலம் என்றால் வெளியே தெரிந்து விடாதா?”

“மெதுவாகச் செயல்படும் விஷம். சில வாரங்களில் உறுப்புகள் செயலிழந்து சாவான்.”

“நல்ல திட்டம்.”

“ஆனால் அவனை என்ன சொல்லிக் கைது செய்வது?”

“உலகில் கைது செய்ய முடியாத ஆளே இல்லை. எல்லோரும் ஏதோ மீறல் செய்திருப்பர்.”

“It should be surgical. கவனமாக அணுக வேண்டிய விஷயம். ரத்தம் கூடாது. சத்தம் கூடவே கூடாது. விஷயம் வெளியே கசிந்தால் பெண்களே கூட‌ இதை எதிர்க்கக் கிளம்புவார்கள்.”

“நிச்சயம்.”

“இன்னொரு விஷயம் இந்தத் திட்டம் எவருக்குமே தெரியக்கூடாது. அதிகபட்சம் இந்த அறை தாண்டி ஊசி போடப் போகும் ஒரு மருத்துவருக்கு மட்டும் தெரிந்தால் போதும். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக‌ள் நிஜமாகவே நிகழ வேண்டும். இடையே உறுத்தலற்ற சொருகலாக மட்டுமே இம்முடிவு அமல்படுத்தப்பட வேண்டும்.

“செய்து விடலாம்.”

“கைது நடவடிக்கையையும் கவனமாகக் கையாளுங்கள்.”

“பயிற்சி பெற்ற பெண் காவலர்களை அனுப்பலாம்.”

“இந்த விஷயத்தில் பெண்களை நம்ப முடியாது.”

“ஒரு பெண்ணாக இருந்து கொண்டு நீங்களே இப்படிச் சொல்லலாமா, அம்மா?”

“அதனால்தான் சொல்கிறேன்.”

“…”

“Disperse.”

*

தொலைக்காட்சியில் பெண்களை அவமதிப்பாய்ப் பேசியதற்காக விக்ரம் நள்ளிரவில் கைது செய்யப்பட்டான். அவனது தந்தை வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதற, வலுக்கட்டாயமாய் இழுத்துச் செல்லப்பட்டான். அம்மா அமைதியாய் வெறித்தாள்.

பத்து நாள் சிறையில் கழிந்த போது மத்தியப் பொதுச் சுகாதார அமைச்சகத்திலிருந்து விக்ரமைப் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சுற்றறிக்கை வந்தது. சிறை நிர்வாகம் அனுமதியளித்தது. அன்றிரவே கிளம்பித் தலைநகர் சென்று மறுநாள் பரிசோதனையை முடித்து மீண்டும் சிறை திரும்ப வேண்டும். தப்பிக்க எந்த முயற்சியும் செய்யக்கூடாது என எச்சரித்தனர். அனைத்துக்கும் தலையாட்டினான். அவன் கவலை வேறாக இருந்தது.

விக்ரமுக்குச் சிறு வயதிலிருந்தே ஊசி என்றால் பயம். பரிசோதனை என்றதுமே அவன் மிரண்டான். காலையிலிருந்து மூன்று முறை கழிவறைக்குச் சென்று வந்து விட்டான்.

தாத்தா சொல்வார், அவர் காலத்தில் நோயாளிகளே துரித நிவாரணத்தை உத்தேசித்து, “ஒரு ஊசி போடுங்க டாக்டர்” என்று கோருவார்களாம். இன்று ஊசி என்பதே அரிதாகி விட்டது. ஆனாலும் சில பரிசோதனைகளில் இன்னமும் அது இருக்கத்தான் செய்கிறது.

இந்தப் பரிசோதனை தன் ஆண்குறி தொடர்பானது என்பதை அவன் ஊகித்திருந்தான்.  ஒருவேளை அதிலும் ஊசி குத்துவார்களோ என அஞ்சினான். உடல் சிலிர்த்தடங்கியது.

மிருகக்காட்சி சாலையில் இருக்கும் வினோத ஜந்து போலத்தான் கையாள்கிறார்கள். தன்னால் இந்தத் தேசத்துக்கு ஏதாவது நல்லது நடந்தால் சரிதான் என எண்ணினான்.

தவிர, அவனால் அதை மறுக்கவும் முடியாது. இந்தப் பரிசோதனைக்கு அவன் நல்கும் ஒத்துழைப்பு நன்னடத்தையாகக் கருதப்பட்டு அவன் விரைந்து விடுவிக்கப்படலாம்.

ஏனெனில் இன்னும் அவன் நீதிமன்றத்தின் முன்பாகவே நிறுத்தப்படவில்லை. அம்மா வக்கீலை அழைத்து வந்த போது பெண் கேலி என்பது non-bailable offence என்று ஜாமீன் மறுத்திருந்தனர். இன்னும் எத்தனை நாள் சிறையிலிருக்க நேருமோ என அஞ்சினான்.

அரசாங்கம் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் சுகாதாரத் துறை ஊழியர் இருவருடன் விக்ரம் கல்பற்றா போய் இறங்கிய போது குளிர் அவன் குறி வரை பாய்ந்து சோதித்தது. மித்ராவின் தேகக் கவுச்சி ஞாபகம் வந்தது. அவனைக் கைது செய்ய வந்தவர்கள் முதல் இந்தச் சுகாதார ஆட்கள் வரை எல்லாமே ஆண்கள் என்பதை விக்ரம் கவனித்திருந்தான்.

இந்திய அதிபர் சாஹித்யா விக்ரமைச் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தாள்.

அதிபரைச் சந்திப்பது எல்லாப் பிரஜைகளுக்கும் வாய்க்கக்கூடியதல்ல. அதிகபட்சம் பொதுக்கூட்டத்தில் தொலைவிலிருந்து கைகாட்டலாம். ஒருமுறை விக்ரம் அப்படிச் சாஹித்யாவைப் பார்த்திருக்கிறான். மற்றபடி சந்திப்பெல்லாம் தூரத்துச் சொப்பனம்.

ஆனால் இன்று அவளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு தானாய்த் தேடி வந்திருக்கிறது.

அதிபரிடம் எப்படி மரியாதை காட்ட‌வேண்டும், என்ன சொற்கள் பயன்படுத்தக்கூடாது என்றெல்லாம் சொல்லித் தரப்பட்டு குறித்த நேரத்தில் அதிபர் மாளிகைக்கு வந்தமர்ந்து காத்திருந்தான் விக்ரம். ஊதுபத்திப் புகை மாதிரி அங்கே அத்தனை அமைதி வழிந்தது.

எதற்கு இந்தச் சந்திப்பு என்று அவன் யோசித்திருந்த‌ போது நள்ளிரவு தாண்டியிருந்தது. ஓர் ஊழியை அதிபர் அழைப்பதாகச் சொன்னதும் படபடப்புடன் உள்ளே நுழைந்தான்.

கண்ணை உறுத்துமளவு வேலைப்பாடுகள் கொண்ட பிரம்மாண்ட மியன்மார் தேக்குச் சிம்மாசனத்தில் சாஹித்யா அமர்ந்திருந்தாள். வீற்றிருந்தாள் எனச் சொல்ல வேண்டும்.

“வா, விக்ரம்.”

“தாயே…”

கூவியபடி நெடுஞ்சான்கிடையாக சாஹித்யாவின் காலில் விழுந்தான். அவளாக எழச் சொல்லும் வரை அவன் அப்படியே கிடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சாஹித்யா அவன் தோள்களில் கைவைத்துத் தூக்கினாள். சர்ப்பம் கொத்தியது போல் அதிர்ந்து தலையை உயர்த்திப் பார்த்தான் விக்ரம். அதிபர் எவரையும் தொடுவதில்லை என்பதை அவன் நன்கறிவான். குறிப்பாக ஆண்களின் நிழல் கூட அவள் மீது படலாகாது.

“எழுந்திரு.”

சட்டென எழுந்து கைகட்டி அறுபது பாகை குனிந்து அவள் முன்பு பவ்யமாய் நின்றான்.

“அழகாக இருக்கிறாய், விக்ரம்.”

“நன்றி, அன்னையே!”

“அப்படியொன்றும் வயதாகி விடவில்லை எனக்கு.”

விக்ரம் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் கண்களின் வீரியம் தாளாமல் தழைந்தான்.

அவளுக்கு நாற்பத்தைந்து வயது சொன்னால் நம்ப முடியாதுதான் என நினைத்தான். செழித்த உடலுக்கும் வலுத்த உடலுக்கும் இடைப்பட்ட ஒரு தேகக்கட்டு. அதிகபட்சம் முப்பத்தைந்து சொல்லலாம். காலத்தை அடித்து வீழ்த்தி வென்றிருந்தது ஒப்பனை.

அதிபர்கள் திருமணம் செய்வது வழக்கமில்லை. அவர்கள் வாழ்க்கை தேசத்துக்காக.

ஆனால் சாஹித்யா மணமானவள். ஒரு மகள் கூட உண்டு. அவளைத் தனது அரசியல் வாரிசாக முன்நிறுத்தி வந்தாள். மணமான ஓராண்டிலேயே த‌ன் பொதுவாழ்க்கையின் நிமித்தம் கணவனை விரட்டி விட்டாள். அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை.

சாஹித்யா தன் அரசியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் தனக்குத் திருமணமானதையே மறைத்து வந்தாள். ‘மிஸ்’ என்ற முன்னொட்டைப் போட்டுக் கொண்டிருந்தாள். இன்று அவள் திருமணம் பற்றி எவரும் பேசுவதில்லை. பயம். ஆனால் ஒரு விஷயம் கனகாலம் ரகசியமாகக் கதைக்கப்படுகிறது. அவள் த‌ன் புருஷனைத் தொட அனுமதித்ததில்லை.

இழக்காத கன்னிமை அவ‌ள் உடம்பு முழுக்க ஜ்வலிப்பதாகத் தோன்றியது விக்ரமுக்கு.

“பெண்களைப் பற்றி டிவியில் பிரமாதமாகப் பேசுகிறாய் எனக் கேள்விப்பட்டேன்.”

“I was cornered. நான் அப்படிப் பேச வைக்கப்பட்டேன்.”

“குற்றத்தை நியாயப்படுத்தாமல் இருப்பதுதான் திருந்தியதற்கு முதல் ஆதாரம்”

“அதற்கு வருந்துகிறேன் அம்மையே. இனி அப்படி நேராது.”

“சிறை எப்போதும் ஒரு நல்ல போதி மரம்.”

“பேசி முடித்த கணமே என் பிழையுணர்ந்து விட்டேன்.”

“நல்லது. என் வாழ்த்துக்கள்.”

“அம்மா, என்னை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுகிறேன்.”

“நீதிமன்றம் தீர்மானிக்கும், விக்ரம்.”

“உங்கள் அதிகாரம் முன் மற்றதெல்லாம் பெரிதா? நீங்கள் மனம் வைத்தால் நடக்கும்.”

“கவலைப்படாதே, விரைவில் உன் தொந்தரவுகள் அடங்கும்.”

“தலைவி, நான் சபிக்கப்பட்டவன்.

“பெண்ணிடம் ரகசியம் தங்காது. நீ உன் மனைவியிடம் சொன்னதும் இந்த உலகிற்கே அறிவித்ததும் ஒன்று தான். ஆனால் வேறு வழியில்லை. ஒரு பெண்ணுக்கும் தெரியாமல் வைத்திருந்து அதன் பயன்தான் என்ன! Deadlock situation. என்னால் உனது இப்போதைய நிலைக்கு இரங்கல் படத்தான் முடிகிறது, விக்ரம். இது ஒருவகையில் சிக்கலான ஊனம்.”

“முன்பு இதை வரமாக நினைத்திருந்தேன். இன்று இது ஒரு துயரத் தசை மட்டுமே.”

“நான் அதைப் பார்க்க வேண்டுமே!”

“ஹைனஸ்? பேடர்ன்.”

“உன் செவிகள் சரியாகத்தான் கேட்டன.”

விக்ரம் தயக்கமாய்ச் சுற்றிப் பார்த்தான். அங்கே அனுமதிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட ஆக்ஸிஜன் தாண்டி ஒன்றுமில்லை. அப்போதுதான் அந்த அறை எவ்வளவு பெரியது என விக்ரமுக்குத் தோன்றியது. பிரம்மாண்டப் பொறியில் அடைபட்ட எலி போலுணர்ந்தான்.

“இந்திய அதிபரின் உத்தரவின்றி இவ்வ‌றையில் நுழையும் தைரியம் எவருக்குமில்லை.”

கை நடுங்கியது. இடுப்பில் விரலிட்டுப் பேண்ட் பொத்தான் அவிழ்க்கச் சிரமப்பட்டான். வெம்மையும் மென்மையும் விரவிய சாஹித்யாவின் கை விரல்கள் உதவிக்கு வந்தன.

“மாதாஜி…”

“சாஹித்யா என்று கூப்பிடு, விக்ரம். அதுதான் என் பெயர்.”

“சா… ஹி… த்… யா…”

தடுமாறியபடி மிக மெதுவாக ஒவ்வொரு எழுத்தாக ஒரு மாணவன் போல் உச்சரித்தான். அவன் சொன்னது அவனுக்கே கேட்கவில்லை. சாஹித்யா குனிந்து தன் இட‌து காதினை அவனது உதடுகளுக்கு மிக‌ அருகே கொணர்ந்து மறுபடியும் அழைக்கச் சொன்னாள்.

“சாஹித்யா…”

இப்போது அவனுக்கு லேசாக தைரியம் வந்தது. அவளது வெப்பம் அதை அதிகரித்தது.

சாஹித்யா தன்னைத் திறந்த போது அவளது ரகசியங்களில் ஒட்டடை படிந்திருந்தது. அவளிடமிருந்து ஒரு புளித்த வீச்சம் எழுந்தது. விக்ரம் கண்களை மூடிக் கொண்டான்.

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. தான் கனவிலிருப்பது போலவும் கண் விழித்தவுடன் எழுந்து விடலாம் என்றும் எண்ணிக் காத்திருந்தான். கனவு நீண்டு கொண்டே போனது.

விக்ரம் சிரமப்பட்டு கண் விழித்த போது சாஹித்யா தன் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள்.

“நீ கிளம்பலாம் விக்ரம். கடந்த பொழுதை நீ உன் நினைவிலிருந்து அழித்து விடு.”

விக்ரமுக்கு உடல் வலித்தது. சிரமப்பட்டு எழுந்து துகிலணித்து நின்று தடுமாறினான்.

“இன்னொரு விஷயம்.”

“…”

“இனி நான் மாதாஜிதான். சாஹித்யா என்ற பெயரை இந்தக் கணமே மறந்து விடு.”

*

சாஹித்யா தேவி மீது வாரிசு அரசியல் குற்றச்சாட்டு இருந்தது. சரியாக ஓர் ஆண்டுக்கு முன் அவளது ஒரே மகள் கல்பற்றா நகர மேயராகத் தேர்தலில் நின்று ஜெயித்திருந்தாள்.

அவளுக்கு இருபத்தியொரு வயதுதான் நடந்து கொண்டிருந்தது. தேர்தலுக்கு ஆறு மாதம் முன்புதான் மேயர் பதவிக்கான குறைந்தபட்ச வயதை 25 என்பதிலிருந்து 21 என்பதாகக் குறைக்கப் பாராளுமன்றத்தில் அவசரமாய்ச் சட்ட திருத்தம் கொண்டு வந்திருந்தார்கள் என்பது எதேச்சையானதா எனச் சிலர் கேட்டார்கள். அவள் ஜீன்களில் தன் அம்மையின் அரசியல் ராஜதந்திரமும், ஆட்சி நிர்வாகத்திறனும் உள்ளது என்று சிலர் சொன்னார்கள்.

அவள் சாஹித்யாவின் முகச்சாயலில் இருந்தது வரவேற்பைப் பெற்றது. அவள் செல்லும் இடமெல்லாம் பெருங்கூட்டம் வழிந்தது. ‘குட்டிம்மா’ என்று அன்போடு விளிக்கப்பட்டாள்.

திருமண வயது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகி 21 என்றிருந்தது. மகளை ஒருநாள் அதிபராக்கும் கனவில் இருக்கும் சாஹித்யா அவளைத் திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டாள் என்று பேச்சிருந்தது. மக‌ளுக்கும் அது பற்றிய பயம் இருந்தது. உண்மையில் அவளுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை. ஆனால் அவள் பிறந்த கணத்திலிருந்து சாஹித்யாவை மறுத்து ஒரு சொல் பேசியதில்லை; மேலதிகக் கேள்வி கேட்டதில்லை; சொல்வதை அப்படியே செய்வதே வழக்கம். சாஹித்யா கணவனைக் கையாண்ட விதம் அவளுக்கு நிரந்தர அதிர்ச்சியையும் அச்சத்தையும் விதைத்திருந்தது.

வயோதிகத்தில் வருகிற‌ நடுக்கம் மாதிரி அதிகாரம் சாஹித்யாவைப் பற்றியிருந்தது.

நாடே அவளை ‘அன்னை’ எனக்கொண்டாட, மகள் ‘தலைவி’ என்றழைத்தாள். சாஹித்யா இல்லத்திலும் அதிபராகவே இருந்தாள். கொடுங்கனவுகளில் ஆட்சிக்கவிழ்ப்பு இருந்தது. அதன் பக்கவிளைவாய் எல்லோரிடமும் சிடுசிடுப்புக் காட்டினாள். எவரையும் நம்பாமல் இருந்தாள். எல்லோரையும் காலில் விழ வைத்தாள். மெல்லக் கல்லாய் இறுகிப்போனாள்.

வீட்டில் மகள் அந்த‌க் கல்லை முதலில் எதிர்கொள்ள வேண்டியவளாக‌ ஆனாள். Front line.

காலை உணவு மேஜையில் சாஹித்யாவும் மகளும் அமர்ந்திருந்தனர்.  சாப்பிடுகையில் அவள் பேசுவதில்லை. அப்படிப் பேசினால் அது மிக‌ முக்கியமான விஷயமாக இருக்கும்.

“நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?”

அந்த நேரடிக் கேள்வியில் மகள் நிலைகுலைந்து சாஹித்யாவை நிமிர்ந்து பார்த்தாள்.

“இந்த அரசியல் நிலையாமைகள் கொண்டது. இதன் பொருட்டு நீ இயல்பான வாழ்வைத் தொலைப்பது அவசியமற்றது என்றே தோன்றுகிறது. அதனால் நீ திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை. பிற்பாடு அதிபர் பதவிக்கான ஓட்டம் என்றெல்லாம் வரும் போது தேவைப்பட்டால் ரத்து செய்து கொள்ளலாம். அதற்கு வெகுகாலம் இருக்கிறது.”

“உங்கள் விருப்பம்.”

“வாரிசு அரசியல் செய்கிறேன், எனது சுயநலத்துக்காக உனது வாழ்வைப் பறிக்கிறேன் என்ற குற்றச்சாட்டுகளில் இருந்தெல்லாம் நான் விடுதலை பெற விரும்புகிறேன். நீயும் கூட ஒருவேளை என்னை அப்படியே நினைத்துக் கொண்டிருக்கலாம் எனப் புரிகிறது.”

“…”

“உன் எதிர்காலத்துக்கு நல்லது என்று எண்ணியே உன்னை இதில் இழுத்தேன். ஆனால் உனக்கு அவ்வளவு ஆசையில்லை என்பதைச் சமீப காலங்களில் உணர்கிறேன். உன் திருமணம் இம்முரண்கள் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புகிறேன்.”

“யாரெனத் தெரிந்து கொள்ளலாமா?”

“அதிபரின் மகளுக்கு சாதாரண மாப்பிள்ளை சரியாகுமா?”

“நிஜம்தான். உங்கள் தேர்வுகள் எப்போதும் மகத்தானவை.”

“உன் கணவனாகப் போகிறவன் இந்தியாவின் சிறந்த ஆண்.”

“ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள். யார் அது?”

“மிஸ்டர் விக்ரம்.”

“மிஸ்டரா? அவன் மணமானவன் அல்லவா?”

“இல்லை. விவாகரத்தானவன்.”

“வேறொருத்தியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தானே?”

“அதெல்லாம் பழைய கதை. இனி எந்தப் பெண்ணையும் சீண்ட‌ மாட்டான்.”

“ம்.”

“உனக்குச் சம்மதம்தானே?”

அது ஒரு பாசாங்குக் கேள்வி என அவளுக்குத் தெரியும் என்பதால் எரிச்சலுற்றாள்.

“எனக்கென தனித்த கருத்து ஏதுமில்லை. உங்களுக்குச் சரியென்றால் எனக்கும் சரி.”

“நான் எது செய்தாலும் உன் நன்மைக்கே.”

“நான் உங்களைப் பூரணமாக நம்புகிறேன்.”

“மகிழ்ச்சி, மகளே!”

“எப்போது திருமணம்?”

“மிக மிக விரைவில்.”

“இப்போது விக்ரம் சிறையில் இருக்கிறானே?”

“இன்று மாலைக்குள் அவன் விடுதலைக்கான உத்தரவு வெளியாகும்.”

“ம்ம்ம்.”

“இந்த அதிபர் மாளிகை இத்தனை ஆண்டுகள் ஆண் வாசனையற்று இருந்தது. இப்போது முதல்முறை ஒருவன் வந்து அலங்கரிக்கப் போகிறான். அவனை வரவேற்கத் தயாராகு.”

“ம்ம்ம்.”

சாஹித்யா அலுவலகம் வந்ததும் முதல் வேலையாக விக்ரமுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு சாயிஷாவுக்குத் தகவல் அனுப்பினாள். மேற்கேள்வி கேட்கக்கூடாதென அவளுக்குத் தெரியும். தாமதம் செய்யாமல் பரிசோதனையகத்தைத் தொடர்பு கொண்டு கொலைக்கு அமர்த்தப்பட்ட மருத்துவரிடம் “Abort Mission” என்றாள்.

அந்தப் பெண் தயார் செய்து வைத்திருந்த விஷ‌ சிரிஞ்சின் ஊசி முனை உடைத்தாள்.

*

அன்று பகல் முழுக்கப் பரிசோதனைகள் இருந்தன. ரத்தம், சிறுநீர், மலம், விந்து மாதிரி, நேஸோஃபேரிங்கியல் ஸ்வாப், எக்ஸ்-ரே, அப்டாமினல் ஸ்கேன், ரத்த அழுத்தம், உடல் வெப்பம், ஆக்ஸிஜன் அளவு, எடை, உயரம், கண், காது, பல் சோதனை, எக்கோ, டிஎம்டி என அலைக்கழித்தார்கள். ஆணுறுப்பைச் சிறப்பு மருத்துவர் வந்து பரிசோதித்தார்.

விரைப்பையை மெல்ல‌ அழுத்திப் பார்த்தார். வலித்தது. லேசாகக் குரலெழுப்பினான்.

அதே தனி விமானத்தில் ஊர் திரும்பி மீண்டும் சிறையில் நுழைந்த போது சோர்வாய் உணர்ந்தான் விக்ரம். அவன் உள்ளே வந்த போதே மறுநாள் காலை அவன் விடுதலை செய்யப்படும் செய்தி வந்திருந்தது அவனுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அவனுக்கு அது நம்ப முடியாத மகிழ்ச்சியாக இருந்தது. மேலே பரவிய‌ சாஹித்யா நினைவுக்கு வந்தாள்.

தன் திறமையால்தான் பிழைத்துக் கொண்டேன் என நினைத்தான் விக்ரம். மகிழ்ச்சி என்பதை விட, ஒருவிதமான‌ திமிராக உணர்ந்தான். அந்த‌ நிறைவில் சாப்பிடக் கூடத் தோன்றவில்லை. நிறையத் தண்ணீர் குடித்து, செல்லில் புகுந்து தூங்கிப் போனான்.

*

அவர்களுக்குப் பெயரில்லை. அல்லது அது நமக்கு அவசியமில்லை. அவர்கள் ஆண்கள் என்பது மட்டும் போதுமானது. அவர்கள் முன்வைக்க விரும்பும் அடையாளமும் அதுவே.

“உத்தரவு வந்து விட்டது. விக்ரமுக்கு நாளை காலை விடுதலை.”

“தொலைக்காட்சியில் பார்த்தேன். ஊரே இவன் கதைதான் பேசுகிறது.”

“இவன் இருப்பது உலகின் எந்த ஆணுக்குமே நல்லதல்ல.”

“ஏன் அப்படிச் சொல்கிறாய்? இவன் நம்மில் ஒருவன் அல்லவா!”

“இவன் நம்மைப் போன்றவன் இல்லை. இவனுக்குக் கொம்பு முளைத்திருக்கிறது.”

“ஆமாம். ஆனால் அது நல்லதுதானே? இவன் ஒரு விடியலின் தொடக்கம்.”

“முட்டாள். இல்லவே இல்லை. இவன் இருண்மையின் முகம். ஆழமாக யோசி.”

“நீ சொல்வதே எனக்குப் புரியவில்லை.”

“மனு சொல்வதென்ன? பெண்கள் பலவீனர்கள். தவறு செய்யத் தயாராக இருப்பவர்கள்.”

“மனு ஸ்மிருதியைப் படிக்கிறாயா, அதுவும் அரசு ஊழியனாய் இருந்து கொண்டு?”

“அதை விடு. சிறுகுற்றம். அவசியப்பட்டால் பெருங்குற்றம் செய்வோம்.”

“…”

“த‌ன் மனைவியின் சினேகிதியை இவன் மோகித்த கதை தெரியுமல்லவா?”

“அதுதான் டைம் தமிழ்ப் பதிப்பில் ‘இரண்டாம் ஆதாம்’ என்ற தலைப்பில் வந்தானே!”

“ஆம். ‘புதிய பூமியின் முதல் ஆண் பயம் ஏற்படுத்துகிறான்’ என்று அக்கட்டுரை முடியும்.”

“ம்.”

“நாளை இவன் உன் மனைவியைக் கெடுக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?”

“வாயை மூடு. அவள் மரியாதைக்குரியவள்.”

“மறுக்கவே இல்லை. எனக்கு அவர் மூத்த சகோதரி போன்றவர்.”

“அப்புறமும் ஏன் அவள் பற்றி நாறமொழி சொல்கிறாய்?”

“நான் ஒரு சாத்தியத்தைச் சொல்கிறேன். அல்லது ஓர் ஆபத்தை முன்னறிவிக்கிறேன். வலுவாய் எச்சரிக்க முனைகிறேன். உலகின் எந்த ஆணிடமும் இதையே சொல்வேன்.”

“ம்.”

“உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார். இவன் ஆபத்தானவன் என்பது விளங்கும்.”

“பெண்கள் அதிகாரம் மிக்கவர்கள். அவ்வளவு பலவீனமாய் நடந்து கொள்வார்களா?”

“காமம் என்பதன் சக்தி உணராமல் பேசுகிறாய். அது ஆழிப் பேரலை.”

“ஆனால் ஒரு துண்டு உறுப்புக்காக கள்ளத்தனத்தில் இறங்குவார்களா?”

“இதில் size doesn’t matter என்பது பழமொழி. விஞ்ஞானமும் கூட.”

“ம்.”

“இவன் நம்மவன் அல்லன். நம்மிலிருந்து வேறுபட்டவன். அந்நியன்.”

“…”

“இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், நம்மை விட உயர்ந்தவன்.”

“ஆம், மல்லாக்கப்படுத்தால் ஐந்தாறு இஞ்ச் அதிக உயரம் இருப்பான்.”

“கேலி என்றாலும் நிஜம்தான். அது பெண்களை வணங்கக்கூட வைக்கும்.”

“சரி, அதற்கு நாமென்ன செய்ய முடியும்? அவன் அதிர்ஷ்டம். வாழ்கிறான்.”

“அப்படியில்லை. நம்மால் இந்த ஏற்றத்தாழ்வைச் சரி செய்ய முடியும்.”

“இதெல்லாம் வீண் பேச்சு. நேர விரயம். யாரும் கேட்டாலே சிக்கல். விடு.”

”அவனுக்கும் நமக்குமான வித்தியாசத்தை நம்மால் உடைக்க முடியும்.”

“எப்படி? நாம் அடிமைகள். அரசி உத்தரவுக்குக் காத்திருக்கும் எளியர்கள்.”

“இந்த எல்லைக்குள் இருந்து கொண்டு செய்யலாம். எவருக்கும் சந்தேகம் எழாதபடி.”

“…”

“இன்னும் சொன்னால் இப்போது நமக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. கடைசி வாய்ப்பு.”

“கேட்கவே பயமாக இருக்கிறது. இங்கே சிறை வளாகத்தில் ஒவ்வொரு அங்குலமும் ஒவ்வொரு கணமும் சிசிடிவியால் பதியப்படுகிறது என்பதை அறியாதவனல்லன் நீ.”

“அந்த மின்-கண்கள் இல்லாத இடமும் ஒன்றுண்டு எனத் தெரியாதவனல்லன் நீ.”

“டாய்லெட்?”

“ஆம்.”

“இவனைக் கொல்லப் போகிறாயா?”

“இல்லை. கொம்பை நீக்கி விடுவோம்.”

“விவரமாகச் சொல்.”

“இப்போது மணி ஒன்பது. பத்து மணிக்கு நமக்கு ட்யூட்டி முடிந்ததும் வழக்கம் போல் கிளம்பி விட வேண்டும். சிறையின் சமையலறைக்குச் சரக்கு இறக்கும் பின்பக்க வழி ஒன்றிருக்கிறது எனத் தெரியும்தானே? அங்கே வாரம் ஒருமுறை பின்னிரவில் லாரியில் இறைச்சிக் கூடைகள் இறக்கப்படும். சிறைக் கைதிகளுக்கு மாட்டு மாமிசம் தருவதில் விமர்சனங்கள் இருப்பதால் இந்த ஏற்பாடு. அட்டவணைப்படி இன்று இரவு அந்த லாரி வரும் நாள். நாம் இருவரும் அந்த லாரியில் கறியோடு கறியாக சிறைக்குள் நுழைந்து விட வேண்டும். அந்த லாரி ட்ரைவரை நான் பேசிச் சரி செய்து விட்டேன். அங்கிருந்து ஒற்றைச் சுவர் ஏறிக் குறித்தால் கைதிகள் கழிவறை. அங்கே மேல் சுவரில் படுத்துப் பதுங்கிக் காத்திருக்க வேண்டும். இரவிலோ, அதிகாலையிலோ விக்ரமை இயற்கை அழைத்தே ஆக வேண்டும். அவன் கழிவறைக்குள் வந்து உட்தாழிட்டதும் நாம் உள்ளே குதித்து வேலையை முடிக்க வேண்டும். நீ அவன் வாயைப் பொத்தி விட்டால் போதும். மற்றதை நான் பார்த்துக் கொள்வேன். லாரி பொதுவாய்ச் சரக்கு இறக்கியதும் கிளம்பி விடும். இன்று பழுது எனக் கூறிச் சில மணி நேரம் காத்திருக்கச் சொல்லி இருக்கிறேன். ஆக, லாரியேறி வந்த வழியே வெளியேறி விட வேண்டும். வீட்டுக்குப் போய்த் தூங்கி விட்டு காலையில் எழுந்து வழக்கம் போல் பணிக்கு வர‌ வேண்டும். இதுதான் திட்டம்.”

“…”

“சிறைக் கைதிகளில் யாரோ செய்திருக்கிறார்க‌ள் என்ற கோணத்தில்தான் விசாரணை போகும். காவலர்கள் மீது சந்தேகம் வந்தாலும் நைட் ட்யூட்டியில் இருந்தோருக்குத்தான் சிக்கல். எல்லாவற்றுக்கும் மேல் நாம் விக்ரமைக் கொல்லப் போவதில்லை. காரணம் நம் நோக்கம் அவனை இல்லாமல் ஆக்குவதல்ல. அவனை நம்மில் ஒருவன் ஆக்குவதுதான்.”

“…”

“என்ன பார்க்கிறாய்?”

“பிறவி க்ரிமினல் போல் பேசுகிறாயே என வியக்கிறேன்.”

“எல்லோரும் பிறவி க்ரிமினல்தான். தேவைப்படும் போது திறமைகள் வெளிவரும்.”

“ஒரு சந்தேகம்.”

“என்ன‌?”

“லாரி ட்ரைவரை எப்படிச் சம்மதிக்க வைத்தாய்?”

“உன்னைச் சம்மதிக்க வைத்ததைப் போலவேதான்.”

“என்ன‌…?”

“அட‌, அவனும் ஓர் ஆண்தானே!”

*

திருமணமான பின் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் தம்பதிகள் மருத்துவமனை சென்று கணவனின் விந்தணுக்களை ஊசி மூலம் உறிஞ்சி பெண்ணின் கருப்பையில் செலுத்தி விடுவார்கள். பொதுவாக இரண்டு, மூன்று சிட்டிங்குகள் தேவைப்படும். பின் பெண் கருவுற்றது உறுதியானதும் முற்காலம் போல வழமையான பேறுகால கவனிப்பு.

ஆண்களுக்குக்கர்ப்பம் சுலபமாகவேஇருந்தது. Testicular Sperm Aspiration (TESA) முறையில் லோக்கல் அனஸ்தீஷீயா தயவில் வலியின்றி விந்துதானம் செய்துவிட்டு காறி எச்சில் உமிழ்ந்ததுபோல் பஞ்சால் துடைத்துக்கொண்டு தினசரிகளுக்குத் திரும்பிவிடலாம்.

“ஒண்ணுமில்ல, லேசா எறும்புகடிக்கற மாதிரிதான்இருக்கும். Bear with it.”

“கொட்டையில் எறும்பு கடிச்சாலே தொந்தரவு அதிகமா இருக்கும்ங்களே?”

பெண்களுக்கு இன்னும் எளிது. மயக்கமருந்தெல்லாம் கிடையாது. அலுங்காமல் ஊசிமூலம் உட்செலுத்தி விடுவார்கள் – Intrauterine Insemination (IUI). சிலநிமிடங்கள் மல்லாக்கப்படுத்திருந்துவிட்டு வேலையைப்பார்க்கலாம். இரண்டுவாரங்களுக்குப்பின் கர்ப்பப் பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். பிரச்சனை அடுத்த பத்துமாதங்களில்தான்.

ஒரு பெண் ஒரே குழந்தைதான் பெற வேண்டும் எனக் கட்டுப்பாடு இருந்தது.  அதற்கு மேல் அவளைச் சிரமப்படுத்தக்கூடாது என்று காரணம் சொன்னார்கள். உண்மைக் காரணம் குழந்தை அதிகரித்தால் அது பெண்களைக் குடும்பத்துள் அமிழ்த்தித் தளை இட்டு விடும் என்று தேசத் தலைமை கருதியதே என்று கிசுகிசுத்தார்கள். அது நீண்டகால நோக்கில் பெண் சக்தி பிரம்மாண்டம் கொள்வதற்குத் தடையாகும் எனக் கருதினார்கள்.

பிள்ளை பெற மனைவியைக் கணவன் கட்டாயப்படுத்தக்கூடாது என அரசியல் சாசனம் சொன்னது (Right for women not to get pregnant). வற்புறுத்தியோர் தண்டிக்கப்பட்டார்கள்.

இந்த மென்சிக்கல்களை நிரந்தரமாகத் தீர்க்க ஆண்களைக் கருத்தரிக்க வைக்கும் ஆராய்ச்சியும் நடந்து வந்தது. ஓர் ஆட்டுக்கு நடத்திய பரிசோதனையில் பிரசவத்தில் தந்தையும் குட்டியும் செத்துப் போயின. நீலச் சிலுவைக்காரர்கள் கொதித்தார்கள்.

Extended Neonatal Incubator என்ற பெயரில் கருப்பைக்குப் பதில் கருவை முழுக்க வெளியே பரிசோதனைக்கூடத்தில் வளர்ப்பதுஎப்படி என்றும் யோசித்துவந்தார்கள். ArtificialWomb!

மித்ரா கருவுறுதலை ஒத்திப் போட்டிருந்தாள். அவள் கணவனுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் அவனால் அவளை மீறிஏதும் சொல்ல முடியாதிருந்தது. அவளுக்குக் குழந்தை பெறுவதும், அதை வளர்ப்பதும் மிக இஷ்டமான காரியம்தான் என்றாலும் அவள் மனம் வேறொரு திட்டத்தில் இருந்தது. குழந்தையைச் சாக்காக வைத்து பணியை ராஜினாமா செய்து வீட்டோடு இருந்து விடுவது. ஆனால் அதற்குரிய பொருளாதாரச் சூழல் இன்னும் வாய்க்கவில்லை என்பதால் சில ஆண்டு தொடர்ந்து விட்டுச் சற்று சேமிப்பு வலுத்ததும் பிள்ளை பெறலாம் என நினைத்திருந்தாள். தவிர, செவிலியாய் இருந்தது அவளுக்குப் பிடித்தும் இருந்தது. அதை விட வேண்டுமா எனத் தெரியாத குழப்பத்தில் இருந்தாள்.

விக்ரம் பிரச்சனை எழுந்ததும் அதில் மனம் கசந்திருந்த‌ தன் புருஷனைச் சமாதானம் செய்யும் நோக்கில் உடனே குழந்தை பெற்றுக் கொண்டால் என்ன எனத் தோன்றியது.

ன்று காலை குளியலின் போதுதான் இந்த எண்ணம் எழுந்தது. சிந்தித்து தீர்மானிக்க‌க் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொண்டான். அவளுக்கு உணவு பரிமாறிய கணவனைக் கண்ட போது பாவமாய் இருந்தது. எத்தனை அப்பாவியான முகம்! எனக்கெனவே தனது வாழ்வை அர்ப்பணித்தவன். எனக்காக எதுவென்றாலும் செய்வான். அவனுக்கென நான் திரும்பக் கொடுத்த மகிழ்ச்சி என்ன? அதற்கு மேல் யோசனை அவசியப்படவில்லை.

இரவு பணி முடிந்து இருவரும் வீடு திரும்பியதும் அவனிடம சொல்லியணைக்க முடிவு செய்தாள். புதிதாய் மணமான ஆண்போல் வெட்கம்வந்தது அவளுக்கு. புன்னகைத்தாள்.

*

தன் மருத்துவமனையிலேயே ஓர் அடிப்படைப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்தாள். ரத்தமும் சிறுநீரும் மாதிரி கொடுத்து நோயாளிகளைக் கவனிப்பதில் மும்முரமானாள்.

மாலையில் முகம் கழுவித் துடைத்துப் ப‌ரிசோதனையகம் இருந்த‌ தளத்திற்கு ரிப்போர்ட் வாங்கச் சென்ற போது அங்கிருந்தவள் உற்சாகமாய் அவளது கைபற்றிக் குலுக்கினாள்.

“வாழ்த்துக்கள், மித்ரா! நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள். எங்கே இன்செமினேஷன் செய்தீர்கள்? இங்கே நாமே செய்கிறோமே! நாளைக்கு டாக்டரைப் பார்த்து விடுங்கள்.”

மித்ராவுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது. அவசரமாய் எழுந்து வாஷ்பேஷின் தேடினாள்.

*

பைரவியும் மித்ராவும் விக்ரமின் கழுத்தைப் பிடித்து நெரித்தார்கள். அவனுக்கு மூச்சுத் திணறி, கண்கள் பிதுங்கின. அப்போது சாஹித்யா அங்கு திடீரெனப் பிரசன்னமாகி தன் ஒவ்வொரு கையாலும் ஒவ்வொருத்தியின் கழுத்தைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்.

“கையை எடுங்கள், முண்டங்களே. விக்ரம் இனி எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்.”

அவர்கள் அவள் சொன்னதைக் கேட்காமல் மேலும் அவனது கழுத்தை இறுக்கினார்கள். சாஹித்யா கோபமுற்றுத் தன் கையை அவர்கள் கழுத்திலிருந்து எடுத்துச் சொன்னாள்.

“இதற்காகத்தானே அடித்துக் கொள்கிறீர்கள். இனி இது யாருக்கும் கிடைக்காது.”

சொல்லிக் கொண்டே விக்ரமின் கால்களிடையே கைவைத்துக் கசக்கத் தொடங்கினாள்.

உயிரே அறுந்து விடும் வலி. அலறிக் கொண்டே விழித்தான் விக்ரம். தான் சிறைக்குள் இருப்பதும் அதுவரை கண்டது கனவென்றும் உறைக்க முழுதாய் ஒரு நிமிடம் பிடித்தது.

மார்பு தறிகெட்டு அடித்துக் கொள்ள உடலெங்கும் வியர்த்திருந்தது. சிறுநீர் முட்டியது. உடலூறிய‌ சோம்பல் சமரசம் செய்து அதை ஒத்திப் போடச் சொல்லிக் கண்ணடித்தது.

இருட்டு இன்னுமிருந்தது. எழுந்து நடந்தான். பூச்சிகள் புரியாத பாஷையில் எச்சரித்தன.

*

வைகறைக்கும் முந்தைய பொழுதில் கழிவறையில் நுழைந்தும் இரண்டு பேர் உள்ளே குதிக்க‌, இந்நேரத்திலுமா துப்புரவுப் பணி செய்கிறார்கள் என்று நினைத்தான் விக்ரம்.

அவர்களில் ஒருவன் பின்பக்கமிருந்து வாயைப் பொத்தியதும்தான் ஏதோ விபரீதம் என உணர்ந்தான். அந்தச் சிறிய செவ்வகக் கழிவறையில் மூன்று பேர் எனும் போது திமிறச் சாத்தியமிருக்கவில்லை. பொத்திய கையில் எச்சில் வழிய வினோத ஒலி எழுப்பினான்.

எதிரிலிருந்தவனை எங்கோ பார்த்தது போலிருந்தது விக்ரமுக்கு. நினைவுக் கிடங்கில் தேட முற்பட்டான். கண்ணுக்கிடுகையில் கைதவறிய சோப்புபோல் அகப்பட மறுத்தது.

அவன் முகத்தில் சலனமின்றி சட்டைக்குள் சொருகி வைத்திருந்ததை உருவி ஏந்தினான். அந்த‌ அசட்டு இருளிலும் புத்தர் புன்னகைப்பதைப் போல் ஸ்கேல்பல் கத்தி பளபளத்தது.

அதன் ஒளி விக்ரம் கண்களில் பயமாய்ப் பிரதிபலித்தது. எதிரே இருந்தவன் நிதானமாய் விக்ரம் அணிந்திருந்த வெண்ணிறச் சிறைச் சீருடையின் நாடாவைச் சுருக்கவிழ்த்தான்.

***