அன்று எப்பொழுதும் போல் சந்து, மலரக்கா வீட்டிற்கு வந்தான். அவள்  அவனுடைய அக்கா அல்ல. ஆனால் ஊரில் உள்ள ஒட்டு மொத்த வாண்டுகளும் அவளை அப்படி தான் அழைத்தன. வெறும் 40 குடும்பங்களைக் கொண்ட அந்த மிக சிறு மலைகிராமத்தில் மலரக்கா ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தாள். அந்த ஊரின் கதை சொல்லியாக இருந்தாள். அந்த ஊரில் உள்ள ஒரு 25 வாண்டுகளுக்கும் மலரக்கா தான் கதை சொல்லி. இரவு 7 மணி ஆனாலே அனைத்து சிறுவர்களும் மலரக்கா வீட்டு வாசலுக்கு வந்துவிடுவார்கள். அவர்களோடு  அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர், சில பெரியவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அவள்  வீடே களைகட்டும். இரவு உணவு முடித்து விட்டு அங்கு வந்து பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் அந்த இடமே மக்கள் குரல்களால் நிரம்பி இருக்கும். இதெல்லாம் மலரக்கா கதை சொல்ல ஆரம்பிக்கும் முன் தான் அவள் கதை சொல்ல தொடங்கியவுடன் அனைவரும் அமைதி ஆகி விடுவர். அந்த இடத்தில தடித்த ஆனால் உறுதியான மலரக்காவின் உரத்த குரல் மட்டும் தான் கேட்கும்.

தினம் தினம் புதிது புதிதாக கதை சொல்வாள்.  எப்படி தான் இத்தனை கதைகள் இவள் தெரிந்து வைத்திருக்கிறாளோ! யானை கதை, அரசர் கதை, கோழி கதை, வேடன் கதை, மரம் கதை என பலதும் கூறுவாள். அந்த கதையில் வருபவர்களைப் போலே நடித்து அத்தனை பேர் கவனத்தையும் தன் பக்கம் இழுத்து வைத்திருப்பார். சில சமயம் சொன்ன கதையே திரும்பி கூறுவாள் ஆனால் மலரக்கா வாயில் எத்தனை முறை ஒரு கதை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. அத்தனை குழந்தைகளுக்கும் மலரக்கா தான் ரோல் மாடல். அவள் என்ன சொன்னாலும் கேட்பார்கள். குழந்தைகள் எப்பொழுதுமே தங்கள் கதை சொல்லிகளால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என தீர்க்கமாக நம்புவார்கள். மூன்றாவது படிக்கும் சந்துவிற்கும் அப்படி தான். எப்பொழுதும் பெரும் துள்ளலோடு அனைவரிடமும் வம்பிழுத்து கொண்டு லோட லோட வென பேசி கொண்டு துள்ளி குதித்து கொண்டிருக்கும் சந்து அன்று ஒரு ஓரமாய் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அதை மலரக்கா கவனித்து கொண்டே எல்லாருக்கும் கதை சொல்ல தொடங்கினாள்,

“ ஒரு ஊர்ல ஒரு குரு இருந்தாராம்”

“ ‘குரு’ னா யாருக்கா?”

“ ’குரு’ னா உன் ஸ்கூல்ல உனக்கு சொல்லி தாரங்கள உங்க டீச்சர் அவுங்க எல்லாரும் தான். அந்த ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பெரிய குரு இருந்தாரு. அவரு வீட்லேயே தங்கி எல்லா மாணவர்களும் அவரு கிட்ட இருந்து பாடம் கத்துபாங்க. ஒரு குழுவுக்கு முழுசா கத்து கொடுத்த உடனே தான் அடுத்த குழு மாணவர்கள அவரு சேத்துப்பாரு. அந்த மாதிரி புதுசா கத்துக்க ஒரு குழு சேர்ந்தாங்க. ஆனா அந்த குரு அவுங்க யாருக்கும் எதுவுமே சொல்லி தரல. தினமும் நாள் முழுக்க அந்த மாணவர்கள் சும்மாவே உட்கார்ந்திருந்தாங்க. இப்படியே ஒரு மாசம் ஆயிடுச்சு. பொறுமையிழந்த மாணவர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா?  எல்லாரும் கும்பலா சேந்து போய் குரு கிட்ட  எங்களுக்கு எதாவது சொல்லி தாங்கன்னு கேட்டாங்க. அதுக்கு அவரு எப்ப நீங்க உங்களுக்கு தேவையானத கேட்டு வாங்க தயார் ஆகி விட்டீர்களோ அப்பொழுது நானும் உங்களுக்கு கல்வி கற்பிக்க தயார் ஆகிவிட்டேன்னு சொல்லி எல்லார்க்கும் சொல்லி தர தொடங்கினாராம்”

“இதுலேந்து என்ன தெரிஞ்சுக்கிடீங்க? உங்களுக்கு தேவையானதோ உங்களுக்கு நியாயமா  வந்து சேர வேண்டியதோ உங்களுக்கு உரிமையானதோ உங்களுக்கு கிடைக்காதப்போ அத நியாயமான வழில கண்டிப்பா கேட்டு வாங்கணும். அதுக்கான முயற்சிய நீ கண்டிப்பா எடுக்கணும். அப்டியே என்னிக்கும் விட்டுட கூடாது. புரிஞ்சுதா?” என்று கூறி முடித்தார் அத்தனை குழந்தைகளும் ‘புரிந்தது’ என கத்தினார்கள். பின் அவரவர் வீட்டிற்கு ஓடி சென்றார்கள்.

எழுந்து செல்ல முற்பட்ட சந்துவை,

“டேய் சந்து , இங்க வா . என்ன ஒரு மாதிரி இருக்க” என மலரக்கா அழைத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லையே”

“என்கிட்ட சொல்ல மாட்டியா?”

“அப்படியெல்லாம் இல்ல, என்ன கூட்ரோடு தாண்டி இருக்குற பள்ளிகூடத்துக்கு மாத்திட்டாங்க. திங்கள்கிழமை லேந்து அங்கதான் நான் போகனும்”

“அதுவா அது ரொம்ப தூரமாச்சே அங்க ஏன் மாத்துனாங்க”

“நான் படிச்ச பள்ளிகூடத்துல 12 பேர் தான் இருக்கோம்னு இத மூடிட்டாங்க”

“அரசாங்க பள்ளி கூடம் தான அது. அது எப்படி 12 பேர் இருந்தா மூடலாம். யாருமே இல்லனாலும் அது நடந்து தான ஆகணும்”

“அந்த பள்ளிக்கூடம் ரொம்ப தூரமா இருக்கா…தினமும் போயிட்டு என்னால வர முடியாதுன்னு அப்பா வேணாம்னு சொல்டாரு.”

“சரி தான், நம்ம இருக்குறது மலை. இங்கிருந்து ஒரே ஒரு ஒத்தயடி பாதை போகுது. அதுவும் 2 கி.மீ.க்கு ரெண்டு பக்கமும் காடு. அப்புறம் நாலஞ்சு சின்ன சின்ன கிராமம். அங்க தான் உன் பழைய பள்ளிக்கூடம் இருக்கு. அங்கிருந்து கொஞ்சம் தூரம் மலையடி அது சின்ன ஊர். அங்க ஒரு நாளைக்கு மூணு தடவ தான் பஸ் வரும் அதுவும் இங்க இருக்குற பாக்டரி ஷிப்ட் கணக்கு படி தான் வரும். அந்த பஸ்ல போன ஒரு 5 நிமிஷத்துல கூட்ரோடு. அங்க இருந்து கொஞ்ச தூரம் நடந்தா உன் புது பள்ளிகூடம். இவ்ளோ தூரம் நீ எப்டி போவ?”

“நீ தான இப்ப சொன்ன, நமக்கு தேவையானதா நம்ம தான் கேட்டு வாங்கனும்னு”

“ஆமா”

“அப்ப நா எப்படியாச்சும் பள்ளிகூடம் போகதான் போறேன்”

“எப்டியாச்சும் போய்டு, இப்ப வீட்டுக்கு போ. தேட போறாங்க”. என அவன் கன்னத்தைக்   கிள்ளினாள். அந்த கையில் அதே கற்பூரத் தைல வாசம். இவனுக்கு தெரிந்தது முதல் மலரக்கா அங்கு உள்ள ஒரு தைல பாக்டரியில் தான் வேலைக்கு சென்று வந்தாள். அந்த மணம் எப்பொழுதும் அவள் உடையில் இருந்தும் கையில் இருந்தும்  மணக்கும். அன்புக்குரியவர்களின் மணங்களை மனம் எப்போதும் அடையாளம் கண்டு கொண்டுவிடும். அவர்கள் வாசத்தை, அவர்களை நினைக்கும் போதெலாம் உணர முடியும். சந்துவிற்கு அந்த தைல வாசம் மலரக்காவின் வாசம். அந்த வாசம் எப்போதும் அவனுக்கு ஒரு நெருக்கத்தைத் தரும். அன்று அது நம்பிக்கையை அள்ளி கொடுத்தது.

“ ஒரு ஊர்ல ஒரு வியாபாரி இருந்தானாம். அவன் ஒரு நாள் பக்கத்து ஊருக்கு போய் அங்கிருந்து சரக்கெல்லாம் வாங்கிட்டு மாட்டு வண்டியில இரவு ஊர் திரும்பிட்டு இருந்தாராம். அப்பொ திடீர்னு பார்த்தா பயங்கரமா மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சாம். போற வழில அந்த வண்டியோட சக்கரம் சேறுள்ள மாட்டிகிச்சு. அந்த வண்டியால நகர முடியல. மழை வேற பெஞ்சுட்டே இருந்துது. அவன் இறங்கி யாரவது உதவிக்கு வருவாங்கனு காத்திருக்க ஆரம்பிச்சான். மழை நிக்கவே இல்ல. அவனும் காத்திருந்தான்…..காத்திருந்தான்….. காத்துக்கொண்டே இருந்தான்…… நள்ளிரவுக்கு மேல் ஆகிடுச்சு. அப்புறம் தான் வேற வழி இல்லாம வண்டியோட சக்கரத்த தானே தள்ளி முயற்சி செய்தான். சிறு முயற்சியிலேயே சக்கரம் சேறுலேந்து வெளில வந்துடுச்சு. இத அவன் முன்னாடியே பண்ணிருந்தா அவ்ளோ நேரம் மழைல நினைஞ்சுருக்க வேண்டி இருக்காது. இதுலேந்து தெரிஞ்சுக்க வேண்டியது ‘தன் கையே தனக்குதவி’

என்று அன்று இரவு கதை சொல்லி முடித்தாள் மலரக்கா.

“இப்ப எல்லாரும் வீட்டுக்கு போங்க” என குழந்தைகளை போக சொன்னாள்.

“அக்கா இன்னிக்கு சந்து என்ன பண்ணான் தெரியுமா? கையில அட்டைய வச்சுகிட்டு நம்ம ஊரு முன்னாடி போற ரோட்லேயே நாள் பூரா நின்னுட்டு இருந்தான்” என்று ஒரு குழந்தை சந்துவை போட்டு கொடுத்தது.

“ஆமாக்கா நானும் பார்த்தேன்”

“நானும் பார்த்தேன்” என பல வாண்டுகள் ஒன்று சேர்ந்து கொண்டன. சந்து ஒரு ஓரமாக முகம் வாடி நின்று கொண்டிருந்தான்.

“சரி சரி எல்லாரும் வீட்டுக்கு போங்க” என அனுப்பிவிட்டு சந்துவை அருகில் அழைத்து

“அங்க நின்னு என்ன பண்ணிட்டு இருந்த அதுவும் நாள் பூரா” என கேட்டாள்

“நான் அம்மாகிட்ட முன்னாடி ஒரு தடவ எங்கேங்கலாம் பஸ் நிக்கும்னு கேட்டுருக்கேன். அப்ப அவுங்க பேருந்து நிறுத்தம்னு போட்ருக்க இடத்துலலாம் நிக்கும்னு சொன்னாங்க. அதான் பேருந்து நிறுத்தம்னு எழுதி இந்த அட்டைய புடிச்சிட்டு நின்னா நம்ம ஊருக்கும் பஸ் வரும்ல நா பள்ளிகூடம் போவேன்ல. ஆனா நாள் பூரா நின்னு பாத்தேன் பஸ் வரவே இல்ல. “ என்று அப்பாவியாக பதில் கூறினான் சந்து.

இதை கேட்டவுடன் குபீரென சிரித்தாள் மலரக்கா.

“அட்டைய புடிச்சிட்டு நின்னா பஸ் வந்துருமா. அம்மா உன்கிட்ட சும்மா சொல்லிருக்காங்க”

சந்து சோகமானான். பின் திடீரென்று உற்சாகமாகி,

“இன்னிக்கு கதைல நீ சொன்ன மாதிரி, நா பஸ்க்காக காத்திட்டே இருக்க மாட்டேன் நானே போக போறேன். அதுக்கு ஒரு யோசனை இருக்கு”

“என்ன?”

“அத பண்ணிட்டு உனக்கு சொல்றேன்” என கூறிவிட்டு வீட்டுக்கு ஓடி சென்றான் சந்து.

“ ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவரு ஒரு நாள் அவர் ஊர்ல இருக்குற மக்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்களான்னு தெரிஞ்சுக்க ஆசப்பட்டாரு. அத அவரு அமைச்சர்கிட்ட சொன்னாரு. அவரு உடனே அதனால என்ன மக்கள உங்ககிட்டேயே நேரா கூட்டிட்டு வந்து சொல்ல சொல்றேன்னு சொல்லிட்டு மக்கள் ஒரு 20 பேர தேர்ந்தெடுத்தார். அவுங்ககிட்ட மன்னர்கிட்ட போய் எந்த குறையும் இல்லனு சொல்லனும் அப்டி சொன்னா நான் காசு தருவேன் சொல்லலைனா சவுக்கடி தருவேன்னு மிரட்டி கூட்டிட்டு வந்தாரு. அதே மாதிரி எல்லாரும் ராஜா கிட்ட பொய் சொன்னாங்க. அதுல உங்கள மாதிரி ஒரு சின்ன பையன் இருந்தான் அவன் மட்டும் ராஜா கிட்ட, எங்களுக்கு எதுவுமே சரியா கிடைக்க மாட்டுது நீங்க அறிவிக்கிற திட்டங்கள்  எதுவுமே எங்கள வந்து சேர மாட்டுது  நாங்க யாருமே நல்லா இல்ல இது தான் உண்மை. இந்த அமைச்சர் எங்கள பொய் சொல்ல சொல்லி மிரட்டினாரு அதான் இவுங்க எல்லாரும் பொய் சொல்றங்கனு உண்மைய சொல்லிட்டான்.

அரசர் அதிர்ந்து போய்ட்டாரு. உடனே எல்லாரையும் விசாரிச்சு நாடு உண்மையா எப்படி இருக்குன்னும் அந்த அமைச்சர் பண்ண ஏமாத்து வேலையையும் தெரிஞ்சுகிட்டாரு. உடனே அந்த அமைச்சர கண்டிச்சாரு. அந்த பையன பாராட்டி நிறைய பரிசுகள் குடுத்து இதே மாதிரி எப்பவும் உண்மைய பேசணும்னு சொல்லி அனுப்பி வச்சாரு. அந்த பையன் மாதிரியே நீங்க எல்லாரும் எப்பவும் உண்மைய தான் பேசனும். சரியா”

கதை முடிந்தவுடன் குழந்தைகள் தங்கள் வீடுகள் நோக்கி செல்ல தொடங்கினர். சந்து மட்டும் மலரக்கா அருகில் வந்தான். சந்துவை அருகில் பார்த்த மலரக்கா அதிர்ந்தாள். அவன் தோலில் பல இடங்களில் சீராய்ப்புகள் இருந்தன. முட்டியில் காயம் பட்டு ரத்தம் கட்டி இருந்தது.

“என்னடா சந்து என்னாச்சு?” என படபடத்தாள்.

“சைக்கிள் ஓட்ட கத்துகிட்டா நானே பள்ளிகூடத்துக்கு போயிட்டு வந்துற முடியும்னு என் பக்கத்து வீட்டு ராசன்னா கிட்ட சைக்கிள் வாங்கினேன். நம்ம ஊர்லே அவர்கிட்ட மட்டும் தான சைக்கிள் இருக்கு. அவரும் தினமும் பள்ளிகூடம் போயிட்டு வர தரேன்னு ஒத்துக்கிட்டாரு. ஆனா இன்னிக்கு ஓட்ட கத்துக்கும் போது ஒரு பெரிய கல்லு கீழ இருந்துது எப்படி ஓட்றதுன்னு தெரியாம சைக்கிள் அதுல இடறி அப்படியே ரோட்ல சைக்கிள் சரிஞ்சுட்டே போய்டுச்சு நானும் பக்கத்துல சரிஞ்சுகிட்டே போயிட்டேன். அதுல தான் எனக்கு இந்த காயம்”

“இவ்ளோ தானா சரி ஆய்டும். போக போக நல்லா சைக்கிள் ஓட்டலாம்”

“இல்ல, சைக்கிள் உடஞ்சிடுச்சு. அது ரொம்ப பழைய சைக்கிளாம். பாவம் ராசன்னா எனக்கு குடுத்து இப்ப அவராலையும் ஓட்ட முடியாம போய்டுச்சு” என்று கூறி சிறிது நேரம் மௌனம் ஆனான். பின், “அக்கா ….”

“சொல்லு”

“அக்கா இப்ப நீ சொன்ன கதைல வர மாதிரி நான் போய் பள்ளிகூடத்த மூட வேணாம்னு சொல்லலாம்ல. ஒருவேளை அவுங்களுக்கு நம்ம கஷ்டபட்றது தெரியாம இருக்கலாம்ல”

“நம்ம போய் யாருகிட்டேயும் சொல்ல முடியாது சந்து”

“அக்கா தயவுசெஞ்சுக்கா……யார்கிட்ட பேசணுமோ அவுங்ககிட்ட கூட்டிட்டு போ. ப்ளீஸ்க்கா…நம்ம போய் அவுங்ககிட்ட சொல்லலாம். நம்ம உண்மைய போய் சொல்லலாம். நா பள்ளிகூடத்துக்கு போகனும்” என கண்ணைக் கசக்கிக் கொண்டு அழத் தொடங்கினான். மலரக்காவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தான் கூறும் கதைகள் எத்தகு மனிதர்களை இந்த குழந்தைகளிடமிருந்து வார்த்து எடுத்து கொண்டிருக்கிறது என பிரமிப்பாக சந்துவைப் பார்த்தாள். முயற்சியை விரும்புவர்களாய், தனக்கானதை பெறும் துணிவு உடையவர்களாய், மனிதர்களை நேசிப்பவர்களாய், அளவற்ற அன்புடயவர்களாய், உண்மையை நம்புபவர்களாய், பிறரையும் தம்மை போன்று நினைப்பவர்களாய் ஒரு அற்புத மனிதத்தை அவர்களிடம் கதைகளால் உருவாக்க முடியுமெனில் அந்த கதைகளின் வீரியத்தையும் தான் எடுத்து கொண்டது எவ்வளவு பெரிய சமூக பொறுப்பு என்பதையும் உணர்ந்து மெய்சிலிர்த்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் சுதாரித்துக் கொண்டு,

“சரி அழ கூடாது. நாளைக்கு காலைல நம்ம மாவட்ட கலெக்டர் ஆபிஸ் போகலாம். கலெக்டர் பாத்து சொல்லாம். நீ பள்ளிகூடத்துக்கு போவ. அழ கூடாது” என அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் தன் சேலை முந்தானையால் துடைத்து அவனை அணைத்து கொண்டாள். அந்த கற்பூரத் தைல வாசனை அவன் மீதும் படர்ந்தது. யாராலும் தர முடியாத ஆதரவையும் ஆறுதலையும் அந்த வாசம் அன்று தந்தது. எல்லாரும் தன் பேச்சை பெரிதாக எடுத்து கொள்ளாமல் கடந்து போவதை மீண்டும் மீண்டும் காணும் குழந்தைகள் தான் பேசுவதை காது கொடுத்து கேட்டு அதை மதித்து மறுமொழி கூறும் அந்த ஒருவரிடமே தன் மொத்த நம்பிக்கையையும் வைத்திருப்பார்கள். அவர்களிடமே தங்கள் வெயிலுக்கு நிழல் தேடுவார்கள். அவர்கள் பெரியவர்களிடம் எதிர்பார்ப்பது அவர்களின் திறன் மீதான நம்பிக்கை மட்டுமே. அவர்களை அவர்கள் பார்வையின் ஊடே புரிந்து கொள்பவர்களால் மட்டுமே அந்த நம்பிக்கையை அவர்கள் மீது வைக்க முடியும்.

“என்ன மலரு போன வேல முடிஞ்சுதா” என வீட்டிற்குள் நுழைந்த மலரக்கவையும் சந்துவையும் பார்த்து கேட்டாள் மலரக்காவின் தாய். அந்தி சாய்ந்திருந்தது விடியற்காலையில் மாவட்ட தலைநகர் நோக்கி சென்றவர்கள் இப்பொழுது தான் திரும்பினார்கள். மிகவும் அயர்ந்து இருந்தார்கள்.

“என்ன இப்படி கேக்குற. காலைலேந்து கலெக்டர் ஆபீஸ்லதான் உக்காந்திருந்தோம். கேட்டதுக்கு யாரும் மதிக்கவே இல்ல. அப்புறம் ஒருத்தர் வந்து அவருக்கு இன்னிக்கு வேல இருக்கு அதெலாம் பாக்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டாரு. நாங்க எதுக்கு வந்துருக்கொம்னு கூட யாரும் கேக்கல”

“இப்டி தான் நடக்கும்னு உனக்கு தெரியாதா. இதுக்காக ஒரு நாள் கூலிய விட்டுட்டு இந்த பைய கூப்டான்னு போனியே” என அலுத்துகொண்டாள் அவளின் தாய்.

“என்ன இப்டி சொல்ட்ட. இது இவன் பிரச்சன மட்டுமா. நம்ம ஊர்ல இதுவரைக்கும் அஞ்சாவது வரைக்கும் தான் படிச்சிதுங்களே புள்ளைங்க. அதுவும் இந்த பள்ளிகூடம் இருக்கிறதுனால. ஒரு மூணு பேரு எட்டாவது வரைக்கும் போனாங்க எப்டியோ. இப்போதைக்கு தொடக்க பள்ளிகூடம் போற வயசுல இருக்றது இவன் மட்டும் தான். மத்ததுக்கு எல்லாம் 4 வயசு மூன்றரை வயசு. இப்ப மூடிட்டா இதுங்க இதுங்களுக்கு அப்புறம் வரதுங்க எல்லாரும் எங்க போய் படிப்பாங்க. அப்படியே நின்னு போய்டாதா. பக்கத்துல தான் ஒரு கான்வென்ட் இருக்கு அங்க போய் சேக்க முடியுமா நம்மளால”

“அக்கா, இது மூடறவுங்களுக்கு தெரியனும்ல. அந்த கதைல வர ராஜாவுக்கு தெரிஞ்ச மாதிரி”

“அந்த கதைல ராஜாவுக்கு எதுவும் தெரிஞ்சிருக்காதுன்னு நினைக்கிறியா? இல்ல அந்த பையன் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிடதுக்கு அப்புறம் அவுங்களுக்கு நல்லது பண்ணிருப்பாருனு நினைக்கிறியா? கண்டிப்பா எதுவும் நடந்திருக்காது. சரி நீ ஒன்னாவது அங்க சேரும் போது எத்தன பேர் இருந்தாங்க உன் பள்ளிகூடத்துல”

“நிறைய பேர் ஒரு 40 பேர்”

“அவுங்களாம் இப்ப எங்க”

“தெரிலையே”

“ஒன்னு நீங்க படிக்க கூடாது இல்லனா கான்வென்ட்ல தான் படிக்கனும் அவ்ளோ தான் ”

“என்னக்கா சொல்ற……எனக்கு ஒண்ணுமே புரில.  இப்ப நா பள்ளிகூடம் போகவே முடியாதா”

“எங்க பாக்டரில காலைலேயும் சாயங்காலமும் லோடு லாரி வரும். கூட்ரோடு தாண்டி தான் வரும் போகும். அத ஓட்டுற அண்ணாகிட்ட நா கேட்டு பாத்து நாளைக்கு சொல்றேன். உன் பழைய பள்ளிகூடத்துக்கு கிட்ட நின்னு ஏத்திக்க முடியுமான்னு கேட்டு பாக்குறேன். நாளைக்கு சாயங்காலம் சொல்றேன் சரியா. அதுவும் இல்லனா வேற வழி யோசிப்போம்.” என்றாள். அதற்கு ஒத்துக் கொள்வது போல் சந்து மெதுவாக தலையாட்டினான்.

அதற்குள் குழந்தைகள் எல்லாரும் கதை கேட்க ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள். சிறிது நேரத்தில் அனைவரும் குழுமிவிட்டர்கள். சந்து அவர்களுடன் சென்று உட்கார்ந்து கொண்டான். அவள் வீட்டின் முன் எரிந்த மஞ்சள் நிற குண்டு பல்பின் கீழ் காலை தொங்க போட்டு உட்கார்ந்து கொண்டாள். அந்த பல்பு வெளிச்சத்தில் அவள் முகம் அங்கிருந்த அத்தனை பேருக்கும் தெரிந்தது. சிறிது நேர சலசலப்பிற்கு பின் எல்லாரும் அமைதியானார்கள். நிதானமாக தன் தடித்த, உறுதியான உரத்த குரலில் கதை சொல்ல தொடங்கினாள்.

“ஒரு காடு இருந்துச்சாம். அந்த காட்ல நிறையா மான் இருந்துச்சாம். அந்த காட்டுக்கு நடுவுல ஒரு  ஆறு அந்த ஆறுனால அந்த காட்ல அங்கங்க நிறையா குட்டை நிரம்பும். அப்டி ஒரு குட்டைய சுத்தி நிறைய புல்லு நல்லா செழிப்பா வளர்ந்து இருந்துது. அந்த காட்ல இருக்குற மான்லாம் அங்க தான் புல் தின்னும். அந்த காட்டுக்கு புதுசா ஒரு சிங்கம் வந்துச்சு. அந்த சிங்கத்துக்கு இங்க இருக்குற மானலாம் எப்படி சாப்பிட்றதுனு திட்டம் போட்டுச்சு. அதுக்கு உதவியா இதே காட்ல இருக்குற ஒரு நரிய உதவிக்கு கூப்டுகுச்சு. அந்த நரி கிட்ட நீ அந்த மானலாம் புடிச்சிட்டு வந்தா உனக்கும் பங்கு தரேன்னு சொன்னுச்சு. உடனே அந்த நரி சிங்கத்த இன்னொரு  புல்வெளிக்கு நடுவுல மறஞ்சுக்க சொல்லிட்டு மான் மாதிரி வேஷம் போட்டுகிட்டு அதுங்க கூட்டத்தோட சேந்துடுச்சு. ஒரு மான் கிட்ட இந்த நரி போயி இங்க இருக்குற புல்ல விட எனக்கு தெரிஞ்ச இடத்துல நல்லா இருக்கும்னு கூட்டிட்டு போச்சு. அங்க போன மான அந்த சிங்கம் அடிச்சு சாப்ட்டுடுச்சு. இதே மாதிரி ஒவ்வொரு மான் கிட்டேயும் பேசி பேசி அழைச்சிட்டு வந்துட்டே இருந்துச்சு. ஒன்னு ஒன்னா சிங்கமும் சாப்டுகிட்டே இருந்துது.

ஆனா நரியால அவ்ளோ சுலபமா மான்கள் எல்லாத்தையும் சமாதானம் படுத்தி அழைச்சிட்டு போக முடில. நிறையா மான்கள், ‘இங்கேயே நல்லா தான இருக்கு அப்ப எதுக்கு அங்க?’ அப்டின்னு அங்கிருந்து வரவே இல்ல. இதுக்கும் ஒரு திட்டம் போட்டுச்சு அந்த நரி. அந்த ஆறுலேந்து குட்டைக்கு வர தண்ணி வழிய கைல கிடைச்சதலாம் வச்சு கஷ்ட பட்டு ஒரு வழியா அடைச்சுடுச்சு. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா குளம் வத்த ஆரம்பிச்சுது ஒரு கட்டத்துல வறண்ட நிலம் ஆய்டுச்சு. புற்கள் எல்லாம் காஞ்சு அந்த இடமே வெத்து நிலம் ஆய்டுச்சு. அந்த மான்கள் எல்லாம் ஏன் புல்லு முளைக்கலன்னு யோசிக்காம நரி சொன்ன  புல்வெளிக்கு போக ஆரம்பிச்சுடுச்சுங்க. அந்த சிங்கம் எல்லா மான்களையும் தேவைகேற்ப சாப்டுட்டு சந்தோஷமா  வாழ்ந்துச்சு.”

என அந்த கதையை முடித்தாள் மலரக்கா. அவள் முகத்தில் வேதனை படர்ந்திருந்தது. அந்த இடத்தில் சிறிது நேரம் பலத்த அமைதி நிலவியது.

கதைகளில் இருந்து எப்பொழுதும் நடக்க வேண்டியதை நினைத்து கொள்ளும் சந்து இன்று நடந்தவற்றை நினைத்து கொண்டான். தெரியாத ஏதோ ஒன்று மங்கலாக தெரிந்தது. நாளைக்கு அந்த அண்ணா ஒத்துக் கொள்வாரோ என எண்ணி பயம் வந்தது. தைல வாசனையை நினைத்து கொண்டான். நடக்கும் என மனமாற நம்பத் தொடங்கினான். கதைசொல்லிகளால் சிதறிய தருணத்தில் ஒட்ட வைக்கும் நம்பிக்கையை தர முடியுமெனில் அவர்களால் எல்லாம் முடியும் தான்.