ஜன்னலின் வழியே பனிக்காற்றோடு சேர்ந்த இளம் காலை வெயில் முகத்தில் படர்ந்தபோது விழிப்புத் தட்டியது.”ஆஹா… இந்தக் காலை எத்தனை அதி அற்புதமாக விடிந்திருக்கிறது.” என்று நினைத்து அதை முழுதாகக்கூட முடிக்கவில்லை மூளைக்குள் மின்னல் வெட்டியது. இதை ஏன் இருவரும் எனக்கு மட்டும் சொன்னார்கள். இல்லை எல்லோருக்கும் தெரியுமா? அதெப்படி தெரியாமல் போகும்? ஊரறிந்த ரகசியமா இது? ஆனால் எனக்குத் தெரிந்து யாருமே அவர்களுடன் பேசுவதில்லையே. அவர்களே ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதுபோல தெரியவில்லையே. பிறகு ஏன் எனக்கு மட்டும் சொன்னார்கள். எல்லாம் தெரிந்துமா ஊர் இப்படியெல்லாம் பேசுகிறது ? என்ன கேடு கெட்ட மனிதர்கள்? ச்சை இதென்ன தலை வலி. யோசித்து யோசித்து நிஜமாகவே தலை வலித்தது. எது எப்படியானாலும் இனி அவர்களுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நமக்கு தேவையில்லாத விஷயம் என நினைத்துக் கொண்டாள் ஜானு.
ஜானு திருமணமாகி க.பட்டிக்கு வந்து 3 மாதங்களாகின்றன. க.பட்டி என்பதை கானா பட்டி என்றே அங்குள்ளவர்கள் சொல்வது வழக்கம். பின்பொரு நாளில் பேருந்து நிறுத்தப் பலகையில் தான் க.பட்டி என்று எழுதப்பட்டிருந்தது. டக்கென்று ஜானுக்கு தன் தம்பியின் நினைவு வந்தது. அவன் மூன்றாவது படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை “ஆனா ஆவன்னா தெரியாதா? என்ன 3 வருசமா பள்ளியோடம் போற ?” எனக் கேட்டு அவள் அப்பா அவனை அடி பிரித்துக் கொண்டிருந்தார். இயலாமையின் உச்சத்தில், கையறு நிலையில், தானும் கண் கலங்கியவாறு, ” என்னடா தம்பி அ ஆ இ ஈ கூட தெரியாதாடா ?” எனக் கேட்க, அவன் அழுது கொண்டே, “அ ஆ இ ஈ தெரியும்க்கா ஆனா ஆவன்னா தான் தெரியாது” எனக் கூறினான். சிரிப்பதா அழுவதா என அப்போது தெரியவில்லை. இப்போது நினைத்தால் சிரிப்பு வந்தது. அவள் வீட்டை விட்டு வந்துவிட்ட 3 மாதங்களில் ஏற்றதாழ தினமும் பேருந்தில் 1 மணி நேரம் பயணம் செய்து வந்து 10 நிமிடம் இருந்து விட்டு கிளம்பிக் கொண்டிருக்கிறான் இளந்தாரி ஆகி விட்ட அதே தம்பி.
நெடிய தெருவின் இறுதியில் தேரை நிறுத்தி வைத்திருந்ததால் தேரடி வீதி ஆகி இருந்தது ஜானு இருந்த வீதி. சின்னச்சின்னதாக இருந்தாலும் அனைத்தும் மெத்து வீடுகள். ஓட்டு வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலான வீடுகளில் ஏ.சி வைத்திருந்தனர். ஆனால் மக்கள் அப்படியே தான் இருந்தனர். கிஞ்சித்தும் மனநிலையிலோ வாழ்க்கை முறையிலோ மாற்றம் ஏற்படவில்லை. வந்த ஒரு வாரத்திலேயே மசூதியின் எதிரில் மங்கிய மஞ்சள் நிறத்தில் பாழடைந்து கிடந்த ஒரு கட்டிடத்தை நூலகம் என்று அடையாளம் கண்டுகொண்டு விசாரிக்க உள்ளே சென்ற போது, அந்த நூலகர், இன்னார் மருமக தான நீயி இன்ன தேதில தான கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள வெளிய தெருவ பொழங்க தொடங்கியாச்சோ…..என நீட்டி முழங்கத் தொடங்கினார்.
தெருக்காரர்களை எல்லாம் அறிமுகப் படுத்தி வைக்கும் படலம் தொடங்கிய போது, முதலில் யாருடனெல்லாம் பெரிதாக பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பதைத் தான் சொன்னார்கள். அந்தப் பட்டியலில் முக்கியமானவர்கள், ஜெயாவும், சுபாவும். ஜெயா இவர்களுக்கு எதிர்த்த வீடு தான். அவள் தன் கணவன் இறந்த பிறகு மாமனாரைக் கைக்குள் போட்டு வைத்திருக்கிறாளாம். அடுத்தவள் சுபாவின் கணவன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான். இவள் ராத்திரி ஆனால் சாலையில் நின்று போகும் வரும் ஆண்களை வழிமறிக்கிறாளாம். ஜானுவின் கணவனையே ஒரு நாள் அப்படி செய்தாளாம். அப்போது தான் வந்த புதிது என்பதால் குறுக்கு விசாரணைகள் எதுவும் நடத்தாமல் அப்படியே கேட்டுக் கொண்டாள் ஜானு.
பிறகு தான் அந்த தெருவின் ஒரே டெய்லர் ஜெயா தான் என்பதும், எல்லாரும் நேரில் அவளிடம் அத்தனை வாஞ்சையாக பேசுவதும், சுபா அந்த தெருவில் பியூட்டி பார்லர் வைத்திருப்பதும், பார்லர் செல்வதெல்லாம் ஆடுகாலித்தனம் என யாரும் அங்கு செல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. பின்னொரு நாளில் ஜாக்கெட் தைக்க கொடுக்க ஜெயாவிடம் சென்ற போது, “என்னா ஜானு லைப்ரரி போனீங்களாம்ல…அங்க போய் ஏதாச்சும் கவர்மெண்டு பரிச்சைக்கு படிங்க. உங்க மாமனாரு வேல வாங்கி குடுத்துருவாரு. இல்லைனா காலத்துக்கும் வீட்டுக்குள்ளேயே கெடக்க வேண்டியது தான்.” என்றாள். எப்போதும் அவள் கண்களில் படர்ந்திருந்த சோகம் அவளுக்கு கவர்ச்சியாக இருந்தது. பின் அவ்வப்போது பார்த்துக் கொள்ளும் போது சிரிப்பதோடு சரி.
பின்னொரு நாளில், சுபாவையும் ஜெயாவையும் வைகை அணையில் வைத்து யாரோ பார்த்ததாக யாரிடமோ சொல்ல அந்த செய்தி தீப்பொறியாக ஊரெங்கும் பரவியது. யாரோ யாருடனோ எங்கேயோ போய் விட்டுப் போகிறார்கள். அதைப் பார்த்த யாரோ ஏன் அதை யார்யாரிடமோ சொல்ல வேண்டும். மனிதர்கள் எப்போதும் ரகசியங்களை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். வெகு இயல்பாக பொது வெளியில் உரையாடக் கூடிய எதையும் வாய்ப்பிருந்தாலும் அவர்கள் விரும்புவதில்லை. மிக கவனமாக ரகசியமாகப் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஏதோ ஒன்றை எப்படியும் அவர்களே உருவாக்கிக் கொண்டு அதை ரகசியமாக அனைவரிடமும் பகிர்கிறார்கள்.ஆனால், பல நேரங்களில் உண்மை என்பது உப்புச்சப்பில்லாத ஒன்றாகவே இருக்கிறது. மனிதர்களால் மசாலா சேர்த்து பகிரப்படும் விஷயங்கள் கூட அப்படித் தான். அது அடுத்தவர் அந்தரங்கத்தை வேடிக்கை பார்ப்பதாகவே, அவர்கள் தனிப்பட்ட சுதந்திரங்களில் அத்து மீறி நுழைவதாக, அதை விமர்சிப்பதாக, அதன் மீது கருணையின்றி கேள்விகளை எழுப்புவதாகவே இருக்கிறது. ஜானுவிற்கு இதை நினைக்க நினைக்க அருவருப்பாக இருந்தது.
மூன்று மாதங்கள் இப்படியே கடந்து விட்டன. நேற்றுத் தான் தயங்கி தயங்கி, தான் முன்பெல்லாம் மாதமொரு முறை புருவம் எடுக்கும் வழக்கத்தில் இருந்ததை புரிய வைத்து, கணவனிடமும் மாமியாரிடமும் சுபாவின் பார்லருக்கு செல்ல அனுமதி வாங்கினாள். எரிச்சலாக வந்தது. இதற்கு கூட எதற்கு யார்யாரிடமோ கெஞ்ச வேண்டும் என்ன பிழைப்பு இது என. ஆனால், வேறு வழி இல்லை.
சுபா ஏற்கனவே நன்கு பரிச்சயமானவள் போல வரவேற்றாள். முகத்திலும், பேச்சிலும் பாவனைகளிலும் அப்படியே மலையாள வாடை. லட்சணமாக இருந்தாள். பார்லர் வைத்திருக்கும் பெரும்பாலான பெண்கள் வாடிக்கையாளர்களிடம் அப்படித்தான் பழகுவார்கள்,அது ஒரு வியாபார உத்தி. அதனால் ஜானு அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
“நீங்க ரொம்ப நல்லவங்க ஜானு” என பேச்சைத் தொடங்கினாள் சுபா.
” பாத்தாலே தெரிஞ்சுடுமா ?” என்றாள் ஜானு.
” இல்ல ஜெயா சொல்லிருக்கா” என்று சொல்லி முடித்தவுடன் ஜானு பார்த்த சந்தேகப் பார்வையை எதிர்கொண்ட படியே பேசத் தொடங்கினாள்.
“ஜெயா ரொம்ப பாவம்ங்க. அவளை மாதிரி ஒரு பிறவி யாருமே பிறக்க கூடாது. 6 வருசமா ஒருத்தனை காதலிச்சுட்டு இருந்தவளை செத்துருவேன் கித்துருவேன்னு மெரட்டி இந்த மிலிட்டரி காரனுக்கு கெட்டி வச்சுட்டாங்க. கல்யாணமான 12 நாள்ல ஆக்சிடென்ட் ஆகி அவன் செத்து போய்ட்டான்.”
இடையில் “ம்ம்..”, “ஓ…” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தாள் ஜானு.
” எழவுக்கு வந்த அவ அப்பன் ஆத்தா அப்டியே திரும்பிக் கூட போய்ட்டாகங்க. ஏன்னா ஜெயா கூட பிறந்த தங்கச்சிங்க 2 பேரு இருக்காங்க அடுத்து அவுங்களை கரையேத்தணுமாம். அவ மாமியா மாமனாரு ரெண்டு பேருமே கவெர்மெண்டு பள்ளிக்கூடத்துல ஹெட் மாஸ்டரா இருந்து ரிட்டையர் ஆனவுக. அந்த பொம்பளைக்கு ஏதோ நோய் கண்டு புத்தி பிசகி போச்சு. புருஷன தவிர வேற யாரையும் அடையாளங்காண முடியல. குட்டி போட்ட நாயாட்டம் புருஷனையே சுத்திசுத்தி வரும் கெழவி. ஆனா அதுக்கு பீ மூத்திரம் அள்ளுறது, குளிக்க வச்சு துணி மாத்தி விடுறது, சோறு ஊட்டி விடுறது எல்லாம் ஜெயா தான். ஆனாலும் இவளை கண்டாலே அந்த கிழவிக்கு ஆகாது. அடிக்கும், பிராண்டி வச்சுரும், சோத்த வாங்கி மூஞ்சில துப்பி விட்ரும். இதையெல்லாம் பொறுத்துகிட்டு அந்த புள்ள அங்கேயே கெடக்கு. மாமனார் இதை எதையும் கேக்க மாட்டாரு. ஆனா இவ நல்ல துணி போட கூடாது, வெளிய தெருவ போய்ட கூடாது. அந்த புள்ள கிட்ட போன் கூட இல்லங்க ஜானு. அந்தாளு புடிங்கி வச்சுக்கிட்டாரு. ஆனா, பால் வாங்க 10 ரூவா ஜெயா கைல தான் புருஷன் குடுக்குறத பாத்துட்டா கிழவிக்கு வந்துருமே கோவம் யாத்தே…அன்னைக்கு பூராவும் அழிச்சாட்டியம் பண்ணும். இந்த புள்ளய தாங்க ஒரு சிறுக்கிக எல்லாம் நாக்கு மேல பல்ல போட்டு பேசுறாளுக.” என்று சுபா சொல்லி முடித்த போது ஜானுவிற்கு மூச்சடைத்தது.
“சரிங்க சுபா. சரி ஆயிரும் விடுங்க. நான் கிளம்புறேன்.” என கையில் காசைக் கொடுத்து விட்டு கிளம்பினாள்.
வீட்டிற்குள் நுழையும் போதே ஜெயா வீட்டிலிருந்து அவள் மாமியார் ஏதோ கத்திக் கொண்டிருந்தது கேட்டது. அவள் வாழ்க்கையை நினைத்து மிகவும் பரிதாபமாக இருந்தது. மனது கனத்தது.
“கேட்டியா ஏதாவது மாமனார் கூட கொணஞ்சுட்டு இருந்திருப்பா…கிறுக்கு கெழவி பாத்துருச்சு போல. இனி ராத்திரி புருஷன பாக்குறது வர அடங்காது கெரகம்” என அலுத்துக் கொண்டார் ஜானுவின் மாமியார். ஒரு வெற்றுப் பார்வையை மட்டும் தந்து விட்டுக் கடந்து தன் அறைக்குச் சென்ற ஜானுவிற்கு எப்படியாவது இந்த ஊரை விட்டு போய் விட வேண்டும் போல இருந்தது. இதற்கு தான் அன்று ஜெயா அப்படி சொல்லி இருப்பாள் என்று தோன்றியது.
ஏனோ ஜெயாவிடம் பேச வேண்டும் போல இருந்தது. சும்மா போக முடியாது. பிறகு எப்போதாவது தைக்க கொடுத்துக் கொள்ளலாம் என எடுத்து வைத்த, யாரோ பரிசளித்த ஒரு ஜாக்கெட் பிட்டை எடுத்துக் கொண்டு ஜெயா வீட்டிற்கு சென்றாள் ஜானு. பின் மதிய நேரம் என்பதால் இரண்டு பேரின் மாமியார்களும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
முகம் மலர சிரித்த ஜெயாவின் கண்கள் இன்னும் கூடுதல் கவர்ச்சியாக இருந்தன. “ஜெயாக்கா சாப்ட்டீங்களா?” என வாஞ்சையை வார்த்தைகளில் வெளிப்படுத்தினாள் ஜானு.
” சாப்ட்டேன் ஜானு. என்ன பளபளனு இருக்க. என்ன விசேஷமா?” என கண்ணடித்த ஜெயாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் வெட்கத்தை முகத்தில் படர விட்டுக் கொண்டு,
” இல்லக்கா பார்லர் போனேன்.” என்றாள். திடீரென்று தன்னையறியாமல் ஜெயாவை அக்கா என்றழைத்ததும், அவளும் சட்டென தன்னை ஒருமையில் அழைக்கத் தொடங்கியதும் ஜானுவிற்கு பிடித்திருந்தது.
” யாரு சுபா கிட்டயா ?” என்றாள் எதையோ யோசித்தவளாக.
“என்னாச்சுக்கா?” என்ற ஜானுவிற்கு ஒரு வெற்றுச் சிரிப்பை பதிலளித்தாள்.
” ஆனா சுபா மாதிரி ஒரு தைரியமான புள்ளய நாம பாக்கவே முடியாது ஜானு.”
ஆத்தாடி அவளுக்கு ஒரு கதை இருக்கும் போலயே…தாங்குவியா ஜானு என மனதில் நினைத்துக் கொண்டாள்.
” அவளுக்கு கல்யாணம் ஆகும் போது எத்தனை வயசிருக்கும்னு நெனைக்குற. வெறும் 15 வயசு. அக்கா கல்யாணத்துக்கு பாவாடை சட்ட போட்டு அலங்காரம் பண்ணிட்டு வந்தவளை, அக்காகாரி ஓடி போய்ட்டானு புடிச்சு அந்த ஆகாவழி பயலுக்கு கெட்டி வச்சுட்டாங்க. அவன் அக்காகாரி மேல இருக்க கோவத்தை எல்லாம் இந்த பச்சை புள்ள மேல காமிச்சிருக்கான். ராத்திரியும் பகலும் நெனைக்குறப்போ எல்லாம் குடும்பம் நடத்த கூப்புடுறது, புள்ள மெரண்டா போட்டு கண்ணுமண்ணு தெரியாம அடிக்குறதுனு சித்ரவதை பாவம். படிப்பையும் நிறுத்தி புட்டானுக. அப்றம் ரெண்டு வருஷம் கழிச்சு அவனை கெஞ்சி இவனை கெஞ்சி பஞ்சாயத்து வச்சு போராடி இந்த புள்ள பன்னெண்டாவத முடிச்சுது. தெனைக்கும் ராத்திரி ஆனா இந்த புள்ள கதறுற சத்தம் கேக்குமாம். அப்டி ஊர் மேயப் போவனுமானு கேட்டு கேட்டே அடிப்பானாம்.
ஒருவழியா தாயளி வெளிநாட்டு வேலைனு போய் ஒழிஞ்சுட்டான். போனவன் ஆளையும் காணோம் பேரையும் காணோம். காசும் அனுப்புறதில்ல. இருக்கானா செத்தானானு கூட தெரியல. இவ அவன் இவன் காலை புடிச்சு நான் இந்த ஊருக்கு வரும்போது இந்த பியூட்டீஷியன் கிளாஸ் போய்ட்ருந்தா. இந்தா இப்ப தனியா கடையை போட்டுட்டா. அவ பொழப்பு ஓடுது. இவிங்க என்னமோ பார்லர் க்கு போனா என்னமோ தேவிடியாத்தனம் பண்ண போன மாதிரி பேசுறாய்ங்க. கல்யாண மேக்கப், சடங்கு மேக்கப்னு ஊர் ஊரா ஓடிட்ருக்கா. இந்தா இப்ப இந்த டெய்லர் மிஷினை வாங்குறதுக்குள்ள நான் பட்ட பாடு எனக்கு தான் ஜானும்மா தெரியும். ஏதோ பொம்பளைங்க மட்டும் வருவாங்கன்றதுனால என் மாமனார் விட்ருக்காரு. இதுமில்லைனா எனக்கு பைத்தியம் புடிச்சுரும் பாத்துக்க.
இது கூட பரவால்ல ஜானு. என்னைக்கோ நடுராத்திரி வயித்து வலின்னு நர்ஸ் வீட்டுக்கு போக உதவிக்கு ரோட்ல வந்த எந்த நாதாரியையோ கூப்ட்ருக்கா. அன்னைல அவளை பத்தி என்னலாம் பேசுறாய்ங்கனு நெனைக்குற. காது கூசும் ஜானு”
தன் கணவனை நினைத்தால் அய்யரவாக இருந்தது. ச்சை என்ன மனிதர்கள் இவர்கள். இதற்கெல்லாம் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்றே ஜானுவிற்கு தெரியாது. ஆறுதல் சொல்வது, பெரிய மனுஷி போல பேசுவது இதெல்லாம் அவளுக்கு எப்போதும் வராது. சந்தோசமாக இருந்தால் சிரிப்பாள். மனது கனமானால் அழுவாள் அவ்வளவு தான். இப்போது அழுக வேண்டும் போல் இருந்தது.
“சரி விடுங்க ஜெயாக்கா சரி ஆயிரும். இந்த ஜாக்கெட்ட எப்ப கொடுப்பீங்க”
“இல்லமா கொஞ்சம் ஒடம்பு முடில நீ எடுத்துட்டு போ நான் சொல்றப்போ குடு சரியா” எனச் சொல்லி தலையில் கை வைத்து அனுப்பினாள். என்னவோ செய்தது.
வீட்டிற்கு வந்து யாருடனும் பேசவில்லை.தலைவலி என்று அறைக்குள் போய் அடைந்து கொண்டாள். ச்சை நிம்மதியாக அழக்கூட இந்த வீட்டில் இடமில்லை எனத் தோன்றியது. அப்படியே கணவன் வந்தது கூடத் தெரியாமல் தூங்கிப் போனாள்.
காலையில் இனி இருவரிடமும் பெரிதாகப் பேசிக் கொள்ளக் கூடாது என முடிவெடுத்து வெளியே வந்தவளை மாமியார் ஒரு புது பொரணியுடன் வரவேற்றார்.
“ஜானு விசியம் தெரியுமா ஜெயா, சுபா ரெண்டு பேரையும் காலைல இருந்து காணோமாம். எவனை இழுத்துட்டு ஓடுனாளுகன்னு தெரியல “