டீக்கடை பெஞ்சில் அமர்ந்து பேப்பர் படித்த மணி , ஒரு பெட்டிச் செய்தியை பார்த்து , புருவத்தை அகல விரித்தவன் பேப்பரை வாகாக நாலாய் மடித்து , செய்தியை கண்களால் ஜூம் செய்தான் “ ஏலேய், சிவா இங்க பார்ரா ,பள்ளிக்கூடத்தில பிள்ளைகளை சேக்குறதுக்கு ,டி.சி தேவையில்லையாமுல்ல, பேப்பர்ல போட்டிருக்கான்” என்றான். “ அட ஆமாம்ப்பா 2010 லையே இந்த சட்டம் நடைமுறைக்கு வந்திருச்சுப்பா” , இதுக்கு ஆர்.டி.இ 2009 சட்டமுன்னு பேரு “என்றான் சிவா.
“ஏப்பா சிவா , நாம படிக்கிறபோது , ஒரு பள்ளிக்கூடத்தில சேரணுமுண்டா எவ்வளவு கஷ்டமுப்பா .”
“அன்னைக்கி, டி.சி இல்லாம எவனாச்சும் சேப்பானா ?” என்றான் மணி.
“ ஏய் ,டி.சி மட்டுமில்லப்பா , பிறந்த சர்ட்டிபிகேட், சாதி சர்ட்டிபிகேட் எதுவும் தேவையில்லை”.” பள்ளிக் கூடத்தில போயி அந்த ஹெட்மாஸ்டர் கிட்ட,எம் புள்ளைய சேத்துக்கோங்கன்னா , சேத்துக்கிறனும்” “ அப்படி அந்த வாத்தியார் சேக்கலைன்னா 3 வருஷம் தண்டனை கூட உண்டு “என்றான் சிவா .
“ஏப்பா ,என்னத்துக்குப்பா, இப்படி சட்டம் வந்துச்சு ??” என்றான் மணி
“ புருஷன் பொண்டாட்டி சண்டையில் ,பொண்டாட்டி புள்ளைகளை கூட்டிக்கிட்டு அவக அம்மா ஊருல போயி , டி.சி இல்லாம சேத்துக்கலாம், ஆறு மாதம் ஆடு கிடை போடப் போறவய்ங்க , கரும்பு வெட்டப் போறவய்ங்க , ஆந்திராவில் முறுக்கு போட போறவய்ங்க, எந்த ஊர்ல வேணும்னாலும், எந்த ஸ்கூல்ல வேணும்னாலும் எட்டாப்பு வரைக்கும் பிள்ளைகளைச் சேத்துக்கலாம்.யாரும் டி.சி கேட்க மாட்டாங்க . எங்கிட்டாவது இந்த பிள்ளைகள் படிச்சா போதும்ன்னு, நல்ல மனசோட அரசாங்கம் போட்ட சட்டம்தானப்பா இது” என்றான் சிவா.
“ ஏய் ,எங்க அக்கா மகன் ஒருத்தன், பள்ளி கூடம் போகாம ஊரைச் சுத்துறான்பா , அவனை இன்னைகே போயி சேத்து விட்டுறேன் ” என்றான், மணி
திருநகர் , கல்வித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ராம்தாஸ்.ஒரு நேர்மையான அதிகாரி. யாருக்கும் என்ன உதவி வேணும் என்றாலும் செஞ்சு குடுப்பார். கடந்த மூன்று வருடமா இந்த ஆர்.டி.இ சட்டம் சம்மந்தமான பைல்களையும் , இடைநிற்றல் மாணவர், புலம் பெயர்ந்து வந்த ,சென்ற மாணவர்களின் , படிப்பு தொடர்வதற்கு தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.
மஞ்சள் பையுடன் ஒரு நபர் , ராமதாஸ் இருக்கும் டேபிள் நோக்கி வந்தார். “ சார் என்ட பையனையும் , பொண்ணையும் ஸ்கூல்ல ஆறாப்பு ஏழாப்பு சேக்கணும் சார்.”. அந்த சந்தைப் பள்ளிக்கூடத்தில சேத்துக்க மாட்றாங்க சார் “ .” டி.சி எதுவும் எங்கிட்ட இல்லாததால, உங்ககிட்ட ஒரு லெட்டர் எழுதி வாங்கீட்டு வரச் சொல்றாங்க” என்றார்..
ராமதாஸ் சற்றே கோபமாகி பக்கத்து டேபிள் காரரிடம் “ ஏம்ப்பா ,அந்த ஹெட்மாஸ்ட்டருக்கு , இதெல்லாம் தெரியாதா ???.டி.சி இல்லாட்டி , ஆர்.டி.இ பிரகாரம் , நேரடி சேர்கைன்னு போட்டுச் சேர்க்க வேண்டியது தானே என்றார். .பிறகு அந்த ஹெட்மாஸ்டருக்கு போனைப்போட்டு ” ஏன் சார், நீங்களே பண்ணீருக்கலாம்ல ,எங்கிட்ட ஏன் அனுப்பி விட்டீங்க?” என்று கடித்தார்,..
அவரோ “ அது இல்லை சார், அந்த பசங்க இலங்கை அகதிங்க “ அதுதான் பிரச்சனையே என்றார். அப்போதுதான் ராமதாஸுக்கு பொறி தட்டியது.. ஆர்.டி.இ பிரகாரம் இந்தியாவுக்குள் எந்தப் பள்ளியில் வேண்டுமானலும் டி.சி இல்லாமல் படிக்கலாம். ஆனா அது இந்தியக் குழந்தைகளுக்கு மட்டும் .“ இலங்கை அகதிகள் “ என்று சொன்னதால் ராமதாஸ் “சரிப்பா நாளைக்கு ,புரூப் ஏதாவது எடுத்துவா ,பார்க்கலாம் என்று அந்த நபரை அனுப்பி விட்டார்.
பின்னர் , மதுரையில் உள்ள , தன் நண்பரிடம் “ சார் இலங்கை அகதி பசங்க அட்மிஷன் கேட்டு வாராங்க “ அவங்களை எப்படி ஆர்.டி.இ பிரகாரம் சேக்கிறது?? என்றார்..அவர் நண்பரும் குழம்பியபடியே “ எப்பா ,”அகதிங்க விவகாரம் , எதுக்கும் கலெக்டர் ஆபீசில் இருந்து ,ஒரு என்.ஓ.சி வாங்கீட்டு வரச் சொல்லு.. அங்க கலெக்டர் ஆபீஸில் “இலங்கை அகதிக்கென்றே “ தனி செக்ஷன் இருக்கு” என்றார்
மறுநாள் , தன் குழந்தைகளையே நேரில் அழைத்து வந்த தந்தையிடம் என்.ஓ.சி குறித்த தகவல் கேட்டதற்கு ,தெளிவான பதில் இல்லை. மேலும் “ சார் ,நாங்க அகதிங்க இல்லை, முகாமில் இருப்பவர்கள் தான் அகதிங்க , நாங்க முகாமை விட்டு வெளியில் வசிக்கிறோம் என்றார்.
ராமதாஸ் ”ஏதாவது புரூப் வச்சிருக்கீங்களா என்றார் ?”ஆமாம் சார் , இந்தா விசாவோட ஜெராக்ஸ் இருக்கு சார்” என்றார்..அதைப்பார்த்த ராம்தாஸ் அதிர்ந்து போனார் “ விசா காலாவதி ஆகி , மூன்று மாதம் ஆகி இருந்தது. அதுவும் டூரிஸ்ட் விசாவில் வந்திருந்தனர்.’சார் முதல்ல ,விசாவை ரெனிவல் பண்ணீட்டு வாங்க “என்றார்
அந்த குழந்தைகளின் தந்தையோ “ சார் ,ரெனியூ பண்ணனும்னா ,15000 ரூபாய் கேப்பாங்க சார் ,நாங்களே எங்கட உசிரைக் கையில் புடிச்சிட்டு நாடு விட்டு நாடு ஓடி வந்திருக்கோம் சார், எப்படியாவது என் பிள்ளைங்க படிக்கணும் சார்” என்றார் . .கண்ணீர் பொங்கி நின்ற அந்தத் தந்தையையும் குழந்தைகளையும் பார்த்த ராமதாஸுக்கு மனம் பாரமானது ..” என்ன செய்ய? சட்டம்னு ஒன்னு இருக்குதே அதை மதிக்கனும்ப்பா ,போயி ,ரெணிவல் பண்ணீட்டு வா , அடுத்த நாளே, பரிந்துரைக் கடிதம் கொடுத்தணுப்புகிறேன் என்றார். சோகமாக அவ்விடம் விட்டு தன் குழந்தைகளுடன் நகர்ந்தார் அந்த தந்தை.
அடுத்த நாள் , ராமதாஸ், இதுகுறித்து விசாரிக்க ,கலெக்டர் ஆபீஸில் உள்ள,இலங்கை அகதிகள் டிப்பார்ட்மெண்டுக்கே ,நேரில் போனார். அங்கிருந்த எவரும் இவருக்குத் தேவையான பதிலைச் சொல்லவில்லை. அதில் ஒருவர், அவரை கையைப் பிடித்து கூட்டிப் போய் , அங்கே நின்றிருந்த கியூ பிராஞ்ச் போலீஸிடம் ,கோர்த்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.
மீண்டும் ராமதாஸ் ,”சார் , இலங்கை அகதிங்க ,முகாமில் இல்லாமல் இருக்காங்க , விசா எக்ஸ்பயரி ஆயிருச்சு , பிள்ளைங்க படிக்கனும்னு சொல்றாங்க , கல்வித்துறையில நாங்க சேக்கலாமா??? வேண்டாமா ???” என்றார்.உடனே அந்த போலிஸார் இருவரும் “ சார் அகதிகள்ல ரெண்டு வகை , ஒண்ணு முகாமில் வசிக்கணும் , இல்லை எங்க பெர்மிஷனோட முகாமை விட்டு வெளியில் வசிக்கணும் .அவங்க படிக்க, முகாம் பிள்ளைகளுக்கென்றே தோப்பூரில் ஒரு ஸ்கூல் இருக்கு , இதையெல்லாம் விட்டுட்டு, அந்தாளு டூரிஸ்ட் விசாவில் வந்ததால் சந்தேகமா இருக்கு . நாளைக்கு அந்த ஆளு உங்களைப்ப்பார்க்க வந்தா, தனக்கன் குளத்தில் இருக்கும் எங்க ஆபீஸீல் வந்து என்.ஓ.சி வாங்கீட்டு போகச் சொல்லுங்க என்றனர்.சரி என்று ராம்தாஸ் மீண்டும் அலுவலகம் திரும்பினார்.
ஐந்து நாட்கள் கழித்து , மீண்டும் அந்த இலங்கை அகதி திரும்ப வந்தார்.. அவரிடம் சார் “ கியூ பிராஞ்ச் “ போலீஸார் உங்களை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள் என்றார். உடனே அந்த குழந்தைகளின் தகப்பனார் அழுதே விட்டார் .” நாங்க உயிர்பிழைச்சு ஓடி வந்திருக்கோம் சார் , எம்புள்ளைங்க படிக்கிறதுக்குத்தானே சார் ,கேட்குறேன் பிளீஸ் சார் என்றார்.”என்னப்பா செய்யுறது ? ,சட்டம் அப்படிச் சொல்லுதே ‘என்று சொல்லி ராம்தாஸ் அவரை அனுப்பி வைத்தார் .” மறக்காம போயி கி.யூ பிராஞ்ச் போலிஸைப்பாருங்க சார் “என்றார்.
அதன் பிறகு, அந்த இலங்கை அகதி தகப்பனின் கையறு நிலையை நினைத்து, ராமதாஸுக்கு ஏதோ செய்தது. இண்ட்டர் நெட்டில் கூகுளில் “இலங்கை ஹை கமிஷன்” என்று போட்ட போன் நம்பரை தேடிப்பிடித்து போனைப் போட்டார்.’ மே ஐ ஸ்பீக் டு ஸ்ரிலங்கன் ஹைகமிஷன் ? “என்றார் .மறுமுனையில் “சொல்லுங்க சார் , உங்களுக்கு என்ன வேண்டும் என்று தமிழில் கேட்டார் அப்பெண்மனி . ராமதாஸ் விபரம் முழுவதும் சொல்ல “ சார் , அந்த நபர் வைத்திருப்பது ,பேக் விசா. ,உடனடியா பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் , கம்ளைண்ட் பண்ணுங்க .” டூரிஸ்ட் விசாவில் இந்தியா வரும் ஒரு நபர் ,இந்தியாவைச் சுற்றிப் பார்க்கலாம் , நண்பர் வீடுகளுக்குச் செல்லலாம். தொழில் செய்யவோ , படிக்கவோ , மருத்துவத்திற்காகவோ டூரிஸ்ட் விசாவில் வர முடியாது. ஸ்டூடண்ட் விசா எடுத்து , தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறை அனுமதி பெற்ற பிறகே , தமிழகத்தின் ஏதாவது ஒரு பள்ளியில் அவர்கள் படிக்கமுடியும்.என்று சொல்லி ,அதற்கான ஆவணங்களை ராமதாஸ் அலுவலக மெயிலுக்கு அனுப்பினார் அந்தப் பெண்.
சில வாரங்கள் கழித்து , தன் பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு அந்த இலங்கை அகதி மீண்டும் வந்தார் . ராமதாஸ் சற்றே கோபமாக ,” ஏங்க, ஏன் என் உயிரை வாங்குறீங்க?? இந்த ஆவணங்களைப் பாருங்க ,ஸ்டூடண்ட் விசா இருந்தால் தான் படிக்க முடியும் இல்லாட்டி இல்ல , எடத்தை காலி பண்ணுங்க.”என்றார்.
அந்த குழந்தைகளின் தந்தை ,” சார் ,நாங்க எல்லாத்தையும் இழந்துட்டு தப்பிச்சு வந்திருக்கோம் ,இப்ப மறுபடியும், இலங்கையில் போய் ஸ்டூடண்ட் விசா எடுக்கச் சொன்னா ,நாங்க எங்க சார் போவோம்?. எம் புள்ளைங்க படிக்கணும் சார் .ஆர்.டி.இ சட்டம் இந்தியக் குழந்தைகளுக்குத்தான் என்றால் , இலங்கை அகதிகளின் குழந்தைகள் ,குழந்தைகள் கிடையாதா சார்,?? நாங்களும் தமிழர்கள்தானே சார் ,என்று கெஞ்சினார்.
“ஏங்க என்னா இது வம்பாப் போச்சு , உங்க பிள்ளைங்க படிப்பைப் பார்த்தால் என் வேலை போயிடும்.முதலில் இடத்தைக் காலி பண்ணுங்க என்றார் . கண்ணீர் தேம்பிய கண்களோடு கடைசியாய் , ராமதாஸை நோக்கி தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு ,விறுவிறுவென்று சென்று விட்டார் அந்தக் குழந்தைகளின் தந்தை.
வீட்டிற்கு வந்த , ராமதாஸுக்கு மனசு ஏதோ ,உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த இலங்கை அகதி கேட்ட கேள்வி, இன்னமும் மனதைக் குடைந்தது . ஆறு மாதங்கள் கடந்திருக்கும். இராமதாஸ் தன் இரு சக்கர வாகனத்தில் அலுவலகம் முடிந்து பைப்பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். நாற்கரச் சாலையின் அந்தப் பக்கம் ஒரு சிறுவனும் , சிறுமியும் பள்ளி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர். ராம்தாஸ் பொறி தட்டியவராய் சற்றே வாகனத்தின் வேகத்தைக் குறைத்து அவர்களை உற்றுப் பார்த்தார் . ஆம் அவர்கள் அந்த அகதிக் குழந்தைகள்தான் .
அகதியின் பள்ளி
சிறுகதை : பா.ரமேஷ்
மதுரை – 16 செல் : 9788893930