சமுதாய கட்டமைப்பில் ஆதிவாசி காலத்திலிருந்து விடுபட்டு நாகரிகக்காலத்திற்கு மாறியதன் விளைவாக இன்று பல்வேறு முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் கண்டுள்ளோம். அறிவியல் கண்டுபிடிப்பில் ஒன்றுக்கொன்று முரண்படும் நிலையில், அந்தக் கண்டுபிடிப்பு வெற்றி அடைகின்றது. முரண்படும் கருத்துக்கள், விளைவுகள் என்றும் நல்ல மாற்றங்களையே நமக்கு ஏற்படுத்தித் தருகின்றன. அறிவியல் இல்லாத மற்ற வளர்ச்சிகளில் நாம் முரண்படுவதால் மாற்றங்களும், வளர்ச்சிகளும் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று நாம் முரண்பட்டு சிந்திப்பது இல்லை. நம்மில் பலர் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பிற்காகவோ அல்லது ஒரு கொள்கைக்காகவோ பேசும் சூழல் உருவாகும்போது ஏன் நீங்கள் முரண்பட்டு பேசுகிறீர்கள் என்று நாம் உடனடியாக கேட்போம். இந்த முரண் என்பது அந்த தகவலோடு நாம் ஒன்றிப்போவாத தன்மையைக் குறிக்கின்றது. ஆக மனித மனம் நல்ல எண்ணங்கள், கெட்ட எண்ணங்கள் என்பவற்றை அவர்களுக்குத் தகுந்தாற்போல, சாதகமாக மாற்றி அமைத்துக் கொள்ளப் பார்ப்பதாகும்.

எந்தவித கண்டுபிடிப்புகளும் இல்லாத நிலையில் ஆதிவாசியாக இருந்தபோதுகூட அத்தியாவசியம் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இன்று எல்லாமே ஒருவித மயக்க நிலையிலே இருப்பது போல் தோன்றுகின்றது. மாற்றங்கள் என்ற பெயரில் எல்லா உண்மைகளையும் தொலைத்துக் கொண்டு வருகின்றோம். ஆண்டாண்டு காலமாக உண்மைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றோம், என்று நாம் பேசி வருகிறோம். ஆனால் உதாரணத்துக்குக்கூட அவற்றைக் கடைப்பிடித்து வாழ மறந்துவிடுகிறோம்.

அஞ்சுவது அஞ்சாமை என்ற வள்ளுவப் பெருந்தகையின் வரிகள் இன்று எதற்கெல்லாமோ பயன்பட்டு வருகிறது. வாழ்க்கையின் விழுமியங்கள் அகம், புறம் என்ற இரண்டிற்குள் சுழல்கிறது. அந்த விழுமியங்களை நாம் பேணிப் பாதுகாப்பதில்தான் தவறிவிடுகிறோம். அகம் சார்ந்த விழுமியங்களில்

“அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று”

என்று வள்ளுவர் கூறிய இலக்கியங்கள் கூறுகின்றன. விழுமியங்கள் பின்பற்றப்படுகிறதா என்றால் நம்மில் பலருக்கு கேள்விக்குறிதான் மிஞ்சுகிறது. அன்பு, பண்பு. அறிவு, செறிவு. ஒப்புறவு, முறை போன்ற பல விழுமியங்களை அக வாழ்வு விழுமியங்களாகும். ஆனால் நடைமுறை வாழ்வில் அகம் சார்ந்த விழுமியங்களின் மதிப்புகள் குறைந்து வருகிறது.

சங்க காலம் பொற்காலம் என்று போற்றப்பட்ட காலகட்டத்திலும் தப்புகளும், குற்றங்களும் நடந்துள்ளன. ஆனால் நூறில் ஒரு பங்கு என்றுதான் கூற வேண்டும். இன்று அகம் சார்ந்த விழுமியங்களின் மதிப்பில், பண்பாட்டு அளவில் நூறில் ஐம்பது விழுக்காடு குற்றங்களும், தப்புகளும் தெரிந்தும் தெரியாமலும் செய்யப்படுகின்றன. இவைகள் மனித வளத்தின் எழுச்சியைக் காட்டவில்லை.

“பிறவில் விழைபவன் கிளையொடும் கெடுப” என்று இராமாயணம் கூறினால் என்ன, நாங்கள் கடைப்பிடிப்பதை கடைப்பிடித்து வாழ்வோம் என்ற நிலை உருவாகிவிட்டது. அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டன. தமிழரின் அடையாளமாக பல விளங்குகின்றன. அவற்றில்,

“உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும்
செய்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்றென”

என்றது தொல்காப்பியம். இன்று மண்ணு திங்கப் போற உடம்புதானே, என்ன செய்தால் என்ன என்ற நிலை வந்துவிட்டது. எழுநூறு கோடி மக்கள் தவறுகளையும், குற்றங்களையும் செய்யவில்லை. ஆனால் நல்லவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பெரும்பாலும் இவைகள் நடப்பதற்குக்காரணம் விட்டுக்கொடுக்காதத்தனம், நம்பிக்கையின்மை, பொறாமை, அளவற்ற ஆசை, பிறரால் துன்பப்படுத்தப்படுதல் என பலக்காரணங்களை கூறலாம். எது எப்படி இருந்தாலும் “ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பை பொதுவில் வைப்போம்” என்ற பாரதியாரின் கூற்றினை உணர்ந்து செயல்படுதல் நலம்.

நமது பர்சினாலிட்டி பற்றிய விழுமியங்கள் எது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிறரை உணர்ந்தவன் அறிவாளி. தன்னை உணர்ந்தவன் ஞானி என்பது சான்றோர் வாக்கு. வேதியல் மாற்றங்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான ஒன்றுதான். அம்மாற்றங்களின் தன்மையில்தான் அகவாழ்வின், ஒழுக்கச் சிந்தனைகளின் மதிப்புகள் நிர்ணயம் செய்யப்படுகின்றது. அகவாழ்வில் ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம், பிள்ளைப்பேறு அதன்பிறகு அப்பிள்ளைகளை நல்லக் குழந்தைகளாக வளர்த்து சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்க வைப்பதுதான் அகவாழ்வின் விழுமியங்களாகப் போற்றப்படுகின்றன. உச்சக்கட்டமாக ஒரு ஆணும். பெண்ணும் இந்த விழுமியங்களை மீறும்போதுதான் சமுதாயத்திற்கு எதிராக அவர்கள் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.

காலம்காலமாக மேலைநாடுகளுக்கும், நம் நாட்டின் பண்பாட்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. “நரை கூடி கிழப் பருவம் எய்தினாலும்” கணவன் மனைவிக்குள் ஏற்பட்டக் காதல் உண்மைத்தன்மையாய் இருக்கும் என்பது தமிழர் பண்பாடாக உள்ளது. ஆனால் இன்றைய நடைமுறை வாழ்வில் நரை வந்துவிட்டால் அதை மறைக்க சாயம் (டை போடுங்கள்) பு+சுங்க அதுதான் மனிதனின் பர்சனாலிட்டி பத்தின விஷயம். அதன் பிறகு கற்புக்கோ, நட்புக்கோ, வளர்ப்பிற்கோ இழுக்கு நேர்ந்தால் அதைப்பற்றி யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். வண்ணப்பூச்சுக்களும், அழகு சாதனங்களும் பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்கின்றன என்ற நிலை வந்து விட்டது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பன்பும் பயனும் அது”
என்ற வாழ்வியல் விழுமியங்கள் இரண்டாம் நிலையாகிவிட்டது.
“உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓராகும்மே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே”

என்பது எங்கு போனது. உடுப்பதில் உள்ள விழுமியங்கள் நாகரிகம் என்ற பெயரில் நச்சுநசுக்கபட்டு வருகின்றது. தவறான உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் சமுதாய சீர்கேடுகளையும் கண்டால் தட்டிக்கேட்க வேண்டுமே தவிர, சமுதாய சீர்கேட்டினை உருவாக்கியவர்களாக நாம் இருத்தல் கூடாது.

அகவாழ்வியலின் விழுமியங்கள் ஒருபுறமிருக்க அதற்கு இணையாக புறவாழ்வின் விழுமியங்களும் புறந்தள்ளப்பட்டு வருகின்றன. அரசியல், பண்பாடு, கலை, நாகரிகம், கொடை, போர், ஆட்சி என்ற நிலைகளில் எத்தனை எத்தனை மாற்றங்கள். தமக்கான சுய உணர்வு பாதிக்கப்படும் வரை யாரும் எதைப்பற்றியும் கண்டு கொள்வதில்லை. கவலைப்படுவதும் இல்லை. நம்மில் பலர் நம் நாடு ஆங்கிலேயர்களுக்கே அடிமையாக இருந்திருக்கலாம் என்று எண்ணுகின்றனர். பொதுவுடைமை நாடு, ஜனநாயக நாடு என்றெல்லாம் தாண்டி எத்தனை அட்டூழியங்கள் செய்யமுடியுமோ அத்தனையும் நடைபெறுகிறது.
மக்களை வருத்தி வரிபெற்ற மன்னனை இடித்துரைத்து, தவறை சுட்டிக்காட்டி திருத்தியவர்கள் நம் முன்னோர்கள்.

“காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
——————————————————————
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே”

நம்முன்னோர்கள் மறத்தின் தன்மையில் அறத்தை என்றும் மீறியதில்லை. முன்னோர்களின் வழிவந்த நாம் இன்று புரியும் மறமும், அறமும் எல்லை மீறியதாகவே உள்ளன. சொந்த நாட்டிலே கட்சியின் பெயரால், பதவியினால் யார் யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடந்துவிடுமோ என்ற பயம் தலைதூக்கி எதற்கும் துணிந்தவர்களாக அதர்மத்துடன் செயல்பட தொடங்குகின்றோம்.

“அறிவு அற்றம் காக்கும் கருவி” என்ற வள்ளுவரின் சிந்தனைகளை சீர்தூக்கிப் பார்த்தால், பதவி ஆசைக்களுக்காகவும், பணத்தாசைக்காகவும் நாம் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டும், கீழ் மேல் என்று பேசிக் கொண்டும் இருக்கமாட்டோம். மக்களின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட பொதுச்சட்டங்கள் இன்று அவரவரின் சுய விருப்பு வெறுப்பிற்கு பயன்படுகிறது. கட்சிக்காகவும், அரசியலில் ஆட்சிக்காகவும் அவர்;களின் தகுதிகள் அதிகபட்சம் கொலை செய்ததாகவும், கொல்லையடிப்பதாகவும் ஏமாற்றத் தெரிந்ததாகவும் இருந்துவிட்டால் போதும். அதுதான் தகுதிகள் என்றாகிவிட்டது. இந்த தகுதிகள் ஆரம்பகால கட்ட அரசியலில் இல்லை.

ஒருவருக்கொருவர் வீரத்தையும் வெற்றியையும் நிரூப்பிக்கும் பொருட்டு சிறந்த ஆண்மகனாக விளங்கும் பொருட்டும் ஆட்சி நடத்தியுள்ளனர். தாம் செய்த தவறுக்காக உடனே தமது உயிரை மாய்த்துக் கொண்டவன் பாண்டியன் நெடுஞ்செழியன். தவறாக தீர்ப்பு வழங்கிவிட்டதால் தம் உயிரையே விட்டது ஒருகாலம். ஆனால் இன்று தெரிந்தே தவறான தீர்ப்பை வழங்கச் சொல்வது இக்காலமாகிவிட்டது. கால மாற்றங்களும், வளர்ச்சிகளும் ஒருவருக்கொருவரை எப்படி பழிவாங்கலாம், வீழ்த்தலாம் என்ற நிலையிலேயே உள்ளன.

சமுதாய வளைதளங்களில் ஆட்சியின் பெயராலும் அதிகாரத்தின் பெயராலும் தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்கின்றன. எந்த ஒரு செயலும் தம்மைப் பாதிக்காதவரை அவர்ளுக்கு அதன் விளைவுகள் தெரிவதில்லை, இவற்றினால் பாதிக்கப்படுபவர்கள் விளிம்புநிலை மக்கள்தான்.
அக, புற வாழ்வின் விழுமியங்களை நாம் மறுபரிசீலனை செய்ய கடமைப்பட்டுள்ளோம். இந்தியனுக்கு இன்று மட்டுமல்லாது ஆங்கிலேயர்கள் வந்துவிட்டுப் போன நாளில் இருந்து அயல்நாட்டின் மோகம் குறையவில்லை. அவர்கள் போல் உடை உடுத்துவது, அவர்கள் போல் அலங்காரம் செய்து கொள்வது, ஆங்கிலம் பேச நினைப்பது என்ற நிலைகள் மெல்ல மெல்ல ஊடுருவி இன்று கற்பொழுக்கத்திலும், பண்பாட்டுக் கலாச்சாரத்திலும் அந்நாட்டினரை ஏன் பின்பற்றக் கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். மேலைநாடுகள் அனைத்தும் இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் பின்பற்ற நினைக்கிறது. ஆனால் நாம் நடை, உடை, பாவனையை மாற்ற நினைப்பது தப்பில்லை. வாழ்க்கையின் அஸ்திவாரத்தை மாற்ற நினைப்பதுதான் தப்பு.

மனிதனுடைய பர்சினாலிட்டி பத்தின விஷயமாக நாம் நினைப்பது எல்லாம் நம்மை அழகுபடுத்திக் கொள்ளவும் ஆடம்பரமாக வாழவும், பிறரை ஏசிபேசவும், பொய்சொல்லவும், திருடவும் கற்றுக்கொண்டு வருகிறோம். இவை எல்லாம் இன்று முக்கிய கொள்கைகள் ஆகிவிட்டன. வண்ணப்பூச்சுகளும், உதட்டுச் சாயங்களும், அலங்கார நகைகளும், களிப்பாட்டங்களும் ஒருவரின் ஒழுக்கத்தையும், நேர்மையையும் தீர்மானிக்க முடியாது.

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கஞ்சாவிற்றல், விபச்சாரம் செய்தல், கள்ளத்தொடர்பு, ஏமாற்றுதல் இவையெல்லாம் ஒருவரின் முக்கியத் தகுதியாகிவிட்டால் சமுதாயத்தின் நிலைப்பாடுகள் எப்படி இருக்கும். மேலைநாட்டினர் நம்மை பார்த்து சூடுபோட்டுக் கொள்வதில்லை. மேலைநாடுகளில் பிறந்த குழந்தை முதல் குமரிகள், இளைஞர்கள் வரை எல்லோருடைய முடியின் தன்மை செம்பழுப்பு அல்லது வெள்ளையாகத்தான் இருக்கின்றது. அதற்கு அவர்கள் கருப்புநிற மையையோ, வண்ணத்தையோ பயன்படுத்தவில்லை. கல்வி முறையிலும், தொழில் முறையிலும் மனப்பாடம் கிடையாது. தொழில்சார்ந்த கல்வி முறைகள் வளர்ச்சியடைகின்றது. இதுபோல் பல நல்லவற்றை கடைப்பிடித்தால் நாடும், மக்களும் செழிப்புறுவார்கள். அவற்றை விடுத்து வாழ்வியலின் சாராம்சத்தை சீர்;குலைக்ககூடாது. அக, புற வாழ்வின் விழுமியங்கள் நன்முறையில் நாம் கடைப்பிடித்தால்தான் அதன் எச்சங்கள் நம் தலைமுறையும், அடுத்த தலைமுறையும் நல்ல முறையில் உருவாக்கும்.