மெய்யே வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்     5
தாம்பசந் தனஎன் தடமென் தோளே.

ஒரு பெரிய மலை.

அந்தப் பெரிய மலையில் ஒரு பெரிய மரம்.

ஒரு ஆண்குரங்கு அந்த மரத்தில் ஒரு பெரிய கிளையில் உட்கார்ந்திருக்கிறது. அந்தக் குரங்குக்கு முகம் மட்டும் கறுப்பாக இருக்கிறது. முகம் கறுப்பாக இருந்தாலும் அந்தக் குரங்கு அழகாக இருக்கிறது.

அந்த ஆண்குரங்கு அந்தப் பெரிய கிளையில் இருந்து அது இன்னொரு கிளைக்குத் தாவுகிறது. அது தாவிப்போய் ஒரு சிறிய கிளையைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறது. அந்தப் பெரிய குரங்கின் பளுவைத் தாங்கிக்கொள்கிற பலம் அந்தச் சிறிய கிளைக்கு இல்லை. கிளை ஒடிகிறது. ஒடிந்த கிளை கீழே கீழே இறங்கி இறங்கி வந்து அது பள்ளத்தாக்கின் ஆழத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. ஒடிந்த கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த அந்தக் குரங்கு பள்ளத்தாக்கில் விழுந்து மரணம் அடைகிறது.

அந்தக் கிளை தன்னைத் தாங்கும் என்று அந்தக் குரங்கு கணக்குப் போட்டது. கணக்கு தப்பாகிவிட்டது.

-கபிலர்
குறுந்தொகை 121