கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
எம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
அணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே. 5
எங்கள் வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய கொட்டாரம் இருக்கிறது. எங்கள் கொட்டாரத்தில் ஒரு ஏழிலைப் பாலை மரம் ஒன்று இருக்கிறது. அந்த ஏழிலைப் பாலைமரத்தைத் தாண்டிப் போனால் அங்கே ஒரு நொச்சிமரம் இருக்கிறது. அந்த நொச்சி மரத்தின் இலைகள் மயில்களின் கால் விரல்களைப்போல் அவ்வளவு அச்சு அசலாக இருக்கிறது.
நொச்சி பூத்திருக்கிறது.
நொச்சி மரத்தில் இருந்து பூக்கள் உதிர்ந்து கொண்டிருக்கின்றன.
மென்மையாய் உதிர்ந்து கொண்டிருக்கிற அந்த மெல்லிய பூக்கள் கீழே விழுகிற சத்தம் எனக்குக் கேட்கிறது.
இந்தச் சத்தத்தை எதிர்பார்த்துத்தான் நான் இந்த இரவெல்லாம் உறங்காமல் கண் விழித்திருந்தேன்.
என் காதலன் வந்திருக்கிறான்.
நொச்சிமரத்தில் பூக்களை உலுப்புவது அவன்தான்.
இது நடுச்சாமம்.
நல்லவேளை.இந்தப் பெரிய ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
-கொல்லன் அழிசி
குறுந்தொகை 138