‘எனதுயிரே எனதுயிரே’ பாடல் ஒலித்தவுடன், திடுக்கிட்டு எழுந்தேன். யார் அது இந்த நேரத்தில்? எனது போனின் காலர் டியூன் அந்தப் பாடல்தான். மணியைப் பார்த்தவன், போன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கவும் யார் என்று பார்த்தேன். இளங்கோ. என் உயிர்த்தோழன். எனக்கு வாழ்க்கையில் எல்லாமே அவந்தான். ஏன் இந்த நேரத்தில் அடிக்கிறான் என நினைத்துகொண்டே போனை எடுத்தேன்.
‘சொல்லுடா’
‘மாப்புள நல்லா இருக்கியா” என்றவன் ஒருவித பதட்டத்துடன், ‘டேய் நான் வந்துகிட்டு இருக்கேண்டா’ என்றான்.
‘எங்கடா?”
‘சென்னைக்குத்தாண்டா. இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துடுவேன். பஸ் ஸ்டாண்ட் வந்து என்ன பிக்அப் பண்ணிக்க’
“வரேன். என்ன விஷயம்?”
‘இருக்கு வந்து சொல்றேன்’ போனை கட் செய்தான்.
‘என்னவாக இருக்கும்’ போன வாரம் அவன்தானே எல்லா உதவிகளையும் செய்தான். என் இன்றைய அனைத்து சந்தோகங்களுக்கும் அவன்தானே காரணம்!
நினைவு சற்றே பின் நோக்கிச் சென்றது.
எனக்கு எப்பொழுது இளங்கோ நண்பனான். தெரியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து…. இப்படியும் சொல்லலாம், ஒன்றாம் வகுப்பில் இருந்து….
நிறைய நண்பர்கள் இருந்தாலும், அவன் எனக்குத் தனி. எனக்கும் அவனுக்கும் எல்லாவிதத்திலும் ஒத்துப்போகும். எனக்குப் பிடித்தது மட்டும்தான் அவனுக்கு பிடிக்கும். எனக்கு பிடிக்காத எந்த விசயமும் அவனுக்கும் பிடிக்காது.
ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்குப் பிடிக்கும், ஆனால் அவனுக்கு பிடிக்காமல் இருந்தது.
என்ன அது?
திவ்யா!
தெரிந்துகொள்ள சற்றே பின் நோக்கிச் செல்ல வேண்டும்.
அப்பொழுது நாங்கள் திருச்சியில் பிஷப் ஹீபர் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தோம். பள்ளி முடிந்ததும் நாங்கள் எல்லோரும் மூன்று நான்கு கிலோ மீட்டர் நடந்தே திருச்சி டவுண் ஸ்டேஷன் வருவோம். ஒரு நாள் பள்ளியில் இருந்து கிளம்ப நேரம் ஆகிவிட்டது. எல்லோரும் என்னைவிட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள். எப்பொழுதும் தெப்பக்குளத்து அருகில் உள்ள சிந்தாமணி சூப்பர் மார்க்கெட்டில், ஒரு சமோசாவும் டீயும் சாப்பிட்டு விட்டுத்தான் செல்வோம். சரி நண்பர்கள் அங்கே இருக்கலாம் என நினைத்து அவசர அவசரமாக அங்கே சென்றேன். இளங்கோவும் சென்றுவிட்டான். நான் மட்டும் தனியே வேக வேகமாக சென்றேன். மாலை 4.40 க்கு ட்ரெயின். ஏறக்குறைய அனைவருமே அந்த டிரெயினை பிடித்து விடுவோம். அதை விட்டால் அடுத்த டிரெயின் 5.45க்குதான். அந்த வண்டியில் சென்றால் இருட்டிவிடும். ரயில்வே ஸ்டேசனை நெருங்கி விட்டேன். டிரெயின் சத்தம் கேட்டது. ஏறக்குறைய ஓடினேன். என் கண் முன்னே டிரெயின் போய்க்கொண்டு இருந்தது.
ஓடிப்போய் போய்க்கொண்டிருக்கும் டிரெயினில் ஏறி பழக்கம் இல்லை. வேறு வழி இல்லை. அடுத்த டிரெயினில் தான் செல்ல வேண்டும். கையில் வேறு பணம் இல்லை. அதனால் பஸ்ஸில் செல்லும் வாய்ப்பும் இல்லை. அடுத்த டிரெயினில் தான் போக வேண்டும். வயிறு கபகப என்று பசிக்க ஆரம்பித்தது. இன்று டீயும் சமோசாவும் வேறு சாப்பிடவில்லை.
சரி இருக்கும் காசிற்கு ஒரு டீயாவது குடிக்கலாம் என நினைத்து அங்கிருந்து கிளம்பும் போதுதான் கவனித்தேன். யாரோ ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது. யார் என்று திரும்பி பார்த்தேன். அங்கே இருந்த பெஞ்சில் ஒரு பெண் விசும்பிக்கொண்டிருந்தாள். அவளின் சீருடையின் மூலம் அவள் எந்த பள்ளி என்று தெரிந்து கொண்டேன். அருகில் சென்று விசாரிக்கலாமா? என ஒரு கணம் தயங்கி நின்றேன். ஆனால், விசும்பல் ஒலி அதிகமாக கேட்கவே மனசு கேட்காமல் அருகில் சென்று, “ஏங்க ஏதாவது பிரச்சனையா?’ என்று கேட்டேன்,
பதில் சொல்லாமல், ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினாள். ஆனால், அழுகை நிற்கவில்லை.
“பராவாயில்லை சொல்லுங்க’’ என்று கேட்க, நிமிர்ந்து பார்த்தவள் கண்களை நோக்கினேன். அழுது அழுது கண்கள் சிவந்து இருந்தது. சற்று உற்று பார்த்தேன். பாவாடை, சட்டை அணிந்திருந்தாள். தலை நன்றாக வாரி சீவி இருந்தாள். நல்ல கலர். அம்சமான உடல் வாகு. மிக அழகாக இருந்தாள் என சொல்ல மாட்டேன். ஆனால் அம்சமான அழகு.
மீண்டும் கேட்டவுடன், சொல்ல தயங்கினாள். ஆனால் அவளின் இரு கைகளும் வயிற்றை அமுக்கி பிடித்து இருந்தன. ஓரளவு புரிந்தது போலும் இருந்தது. ஆனாலும் ஒரு குழப்பம்.
“ஏங்க வயிற்றை வலிக்குதா??
‘ஆமாம் என்பது போல் தலை ஆட்டினாள்.
“ரொம்ப முடியலையா?”
அதற்கும் பதில் சொல்லவில்லை.
‘’மாத்திரை ஏதாவது வாங்கி வரவா?”
வேகமாக தலை ஆட்டியவள், முதல் முறையாக வாயை திறந்தாள்,
“மாத்திரை வேணாம், ஆனா வேற ஒண்ணு வேணும். வாங்கித்தர முடியுமா?’’
என்ன கேட்கிறாள், என்று புரிந்துகொண்டவன், வேகமாக மெடிக்கல் சென்று, அவள் எதிர்பார்த்ததையும் வாங்கிக் கொண்டு, கூடவே வயிற்று வலி மாத்திரையும் வாங்கி வந்து கொடுத்தேன். என் முகத்தை பார்க்காமல், கீழே குனிந்து கொண்டே வாங்கி கொண்டாள்.
“என் பின்னாடி வாங்க?” என்று சொன்னதும் சத்தம் போடாமல், பின்ன வந்தவளை அருகில் இருந்த பாத்ரூமை காட்டினேன். அவள் உடனே ஒரு ஓட்டமாக ஓடினாள். காவலுக்காக அங்கேயே நின்றேன்.
15 நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் நன்றியுடன் என்னை பார்த்து, ‘தேங்க்ஸ்’ என்று மட்டும் சொல்லி விட்டு விறு விறு என்று பிளாட்பாரத்தில் இருக்கும் பென்சை நோக்கி சென்றாள்
உடனே டிரெயின் வரவே, இருவரும் டிரெயினில் ஏறினோம். லால்குடி வரும் வரை அவள் என்னை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை. நானும் அதைப் பற்றி எந்த கவலையும் படவில்லை.
வேறு யாரிடமும் இதைப்பற்றி சொல்ல வில்லை. இளங்கோவிடம் மட்டும் நடந்ததை சொன்னேன்.
அடுத்த நாள் வழக்கம் போல் 8.15 டிரெயினுக்கு சென்றேன். இளங்கோ தான் என் தோளை தட்டி சொன்னான்,
‘மாப்புள, யாருடா அது? உன்னையே பாக்குது. நீ நேத்தி சொன்னியே அந்த பொண்ணா?’
திரும்பிப் பார்த்தேன். என்னை ஒரு கணம் உற்று நோக்கியவள் தலையை குனிந்து கொண்டாள். அவள் பார்க்காத போது மீண்டும் பார்த்தேன். ஸ்கூல் சீருடைதான். பார்க்க பளிச் என்று இருந்தாள். தலை குளித்து முடியை வாராமல் போனி டயல் போட்டிருந்தாள். பார்க்க கண்ணுக்கு அழகாக லட்சணமாக இருந்தாள். எனக்கும் அவளுக்கும் ஏணி வைத்தால் கூடாது. நான் எல்லாம் அவளை பார்க்க கூடாது? ஏன்? ஏன் என்றாள், அது அப்படித்தான்.
நான் எல்லாம் அவர்கள் குடியிருக்கும் தெருவிற்கே செல்ல தகுதி இல்லாதவன்.
இதற்கு மேல் நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். இளங்கோ எத்தனையோ முறை திவ்யா என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லியும் நான் அவள் பக்கம் திரும்பவே இல்லை. திருச்சி டவுன் ஸ்டேஷன் வந்ததும் விறு விறு என்று சென்று விட்டேன். இப்படியே ஒரு வாரம் சென்றது.
அன்று பள்ளியில் இருந்து கிளம்ப தாமதமாகிவிட்டது. அன்றும் என்னால் 4.40 டிரெயினை பிடிக்க முடியவில்லை. சரி, செகண்ட் டிரெயினுக்கு செல்லலாம் நினைத்து வேக வேகமாக நடந்தேன். இதே போல் போன வாரம் நடந்த சம்பவங்களை அசைப்போட்டுக்கொண்டே ஸ்டேஷனை அடைந்தேன். என்னை அறியாமல் கண் அன்று திவ்யா அமர்ந்திருந்த பெஞ்சை நோக்கி சென்றது. என்ன ஆச்சரியம். அதே பெஞ்சில் திவ்யா அதே கோலத்தில் அமர்ந்திருந்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். ஒரு வாரத்தில் எப்படி? என்னைப் பார்த்து பார்வையால் அழைத்தாள்.
முதலில் சிறிது யோசித்தவன் தயங்கியபடி அவள் அருகில் சென்றேன்.
“என்னாச்சுங்க?”
“ஓண்ணும் இல்லையே?’
‘அப்புறம் வயித்துல கை வச்சிருந்தீங்க”
‘அப்பத்தானே பக்கத்துல வருவீங்க?”
‘புரியலையே’
‘நீங்கதான் சரியான டியூப் லைட் ஆச்சே’
“என்னங்க சொல்றீங்க’’
‘உங்க கிட்ட பேச எவ்ளோ முயற்சி பண்ணேன். கண்டுக்கவே மாட்டேங்கறீங்க’
‘எதுக்கு பேசணும்’
‘செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லத்தான்’
‘அதான் அன்னைக்கே சொல்லிட்டீங்க இல்ல’
‘ அன்னைக்கு டென்ஷன்ல சரியா சொல்லலை’
‘ஹலோ ரொம்ப போட்டு மனச குழப்பிக்காதீங்க. புரியுதா. நான் யாரா இருந்தாலும் அந்த உதவியை செஞ்சுருப்பேன்’
‘அப்புறம் ஏன் இப்போ பக்கத்துல வந்தீங்களாம்’
‘திருப்பியும்…’
‘வாரவாரமா… என்றவள், கல கல என சிரிக்க ஆரம்பித்து விட்டாள். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
உடனே டிரெயின் வரவே, அவரவர் கம்பார்ட்மெண்ட்டில் ஏறினோம்.
அடுத்த அடுத்த நாட்களில் பார்வையாலே என்னை பருகினாள். என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நான் செய்த அந்த ஒரே ஒரு உதவிக்காக என்னை அப்படி பிடித்து விடுமா என்ன? என்னை எனக்கே பிடிக்கவில்லை. அவளுக்கு எப்படி?
நாட்கள் நகர்ந்தன. அரையாண்டு தேர்வு ஆரம்பமானது. கஷ்டப்பட்டு மனதை ஒரு நிலை படுத்தி படித்தேன். கடைசி பரிட்சை அன்று காலை. டிரெயினை விட்டு இறங்கினேன். பின்னால் பழக்கப்பட்ட குரல்.
‘ஏய் இன்னைக்கு பஸ்ல போயிடாதடி. மதியம் 2.20 ட்ரெயின்ல போலாம் ,வெயிட் பண்ணு. ப்ளீஸ்’
என்று திவ்யா அவள் தோழியிடம் சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்து ஒரு புன்முறுவல் பூத்து விட்டு விறு விறு என்று சென்றாள். அவள் தோழியிடம் உண்மையிலேயே சொன்னாளா இல்லை எனக்கு சொன்னாளா என்ற குழப்பத்துடன் பள்ளி சென்றேன். பரிட்சை முடியும் வரை திவ்யா நினைப்புதான். மூளை இது தவறு என்று சொன்னாலும், மனம் அதை கேட்பதாக இல்லை. இளங்கோ பரிட்சை முடிந்ததும் என்னை எவ்வளவோ பஸ்ஸில் செல்ல அழைத்தும் நான் போகவில்லை. நல்ல பசி வேறு. அருகில் உள்ள கல்கட்டா ஸ்வீட் ஹவுஸில் ஒரு தயிர் சாதம் மட்டும் சாப்பிட்டு விட்டு ரயில்வே ஸ்டேசனை நோக்கி நடந்தேன். போகும் போதுதான் அவளின் புத்திசாலித்தனத்தை உணர்ந்தேன். பரிட்சை முடிந்ததும் எல்லோரும் பஸ்ஸுக்கு செல்ல பரப்பார்கள். டிரெயினில் கூட்டமே இருக்காது.
ரயில்வே ஸ்டேஷனில் யாருமே இல்லை. பெஞ்சிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்தேன். மூன்று மணி சுமாருக்கு, திவ்யா வந்தாள். கையில் டிபன் பாக்ஸ். அவள் எங்கும் செல்லவில்லை. எந்த கூச்சமும் இல்லாமல் வெகு இயல்பாக என் பெஞ்ச் அருகில் வந்து அமர்ந்தாள். நான் எழுந்தேன்.
‘ஹலோ ஏன் எழுந்துருக்கீங்க? உக்காருங்க. சாப்புட்டீங்களா?”
‘ம்’
‘உண்மையை சொல்லுங்க’
‘கொஞ்சம் தயிர் சாதம் சாப்புட்டேன்’
‘நான் இன்னும் சாப்புடலை’
‘ஏன்’
‘உங்க கூட சாப்பிடலாம்னு’
‘ அய்யோ வேணாங்க. பயமா இருக்கு’
‘ ஒண்ணும் பயப்பட தேவை இல்லை. இந்தாங்க’ என்று ஒரு டிபன் பாக்ஸ் கொடுத்தாள்’
நான் மீண்டும் தயங்கி நின்றேன்.
‘இங்க பாருங்க ரவி, நீங்க சாப்பிட்டாத்தான் நான் சாப்பிடுவேன்’
பயந்து கொண்டே டிபன் பாக்ஸை திறந்தேன். வாசனையுடன் வெஜிடபுள் பிரியாணி. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை யார் வீட்டிலிருந்தோ அம்மா வாங்கி வந்து கொடுத்தாள். வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தேன்.
‘ஹலோ, மெதுவா சாப்புடுங்க. எனக்கு வேணாமா?’ என்றவள், டிபன் பாக்ஸிலிருந்து எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
எனக்கு கண்களில் கண்ணிர். இது போன்ற உச்சகட்ட சந்தோசம் எல்லாம் நான் அனுபவித்ததே இல்லை. அப்பா சிறு வயதில் போய் விட்டார். எங்கே? செத்தா? அது எல்லாம் அம்மாவிடம் கேட்டதே இல்லை. அம்மாவிற்கு அடுத்து இவ்வளவு அன்பு செலுத்தும் ஒரே ஜீவன் இவள்தான்.
‘ஏம்பா அழறீங்க?”
‘அம்மா ஞாபகம் வந்துடுச்சு’
‘கவலைபடாதீங்க. அதான் நான் இருக்கேன்ல”
இப்பொழுது தெரிந்து இருக்குமே, நான் யார் என்று? நான் ஒரு அம்மா அப்பா இல்லாத ஒரு அநாதை. ஒரு பாதிரியாரின் பாதுகாப்பில் இருக்கிறேன். அம்மா இறந்த பிறகு அந்த கோவில் பாதிரியார்தான் என்னை காப்பாற்றி வருகிறார்.
இதுவெல்லாம் திவ்யாவிற்கு தெரியுமா? எனக்குத் தெரியாது. சொல்ல வாய் எடுத்தேன்.
‘நீ ஒண்ணும் சொல்ல வேணாம். எல்லாம் எனக்குத் தெரியும்’
இப்படித்தான் எங்கள் பழக்கம் ஆரம்பித்தது. அந்த வயதில் இது காதல் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. திவ்யாவிற்கு என்னை பிடிக்கும். அவளுக்கு என்னை பிடிக்கும் அவ்வளவுதான்.
இப்படித்தான் பழக ஆரம்பித்தோம். எங்கள் நட்பை எந்த வித பாதிப்பும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் வளர்த்து கொண்டோம். அவள் எஸ் ஆர் ஸி கல்லூரியிலும், நான் செயின் ஜோசப் கல்லூரியிலும் படித்தோம். அதிகம் சந்திக்க மாட்டோம். பார்வையால் பேசிகொள்வதோடு சரி.
காரணம். அவள் அப்பா ஊரில் பெரிய அரசியல் வாதி. அவளுக்கு மூன்று அண்ணன்கள். நான் எல்லாம் அவர்கள் தெருவிற்கே செல்ல முடியாது. அப்படி போய் திவ்யாவை பார்க்க சென்றால், அவ்வளவுதான். கோயில போய் தெய்வத்தை தரிசிக்கத்தான் முடியும். தெய்வத்தை வேறு கோணத்தில் பார்க்க முடியுமா? நான் திவ்யாவை ஒரு தெய்வமாகத்தான் பார்த்தேன். தொழுதேன்.வணங்கினேன்.
இப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்த ஒரு நிலையில்தான், சென்ற வாரம் எனக்கு ஒரு கடிதம் வந்தது. யார் நமக்கு கடிதம் எல்லாம் எழுத போறாங்க என்று நினைத்துக் கொண்டே கடிதத்தை பிரித்தால், என்ன ஒரு ஆச்சர்யம்!! திவ்யாதான் எழுதி இருந்தாள். இரண்டே வரி.
‘ரவி, அவசரமாக இன்று மாலை கோவிலில் சந்திக்க முடியுமா? உங்களுக்காக கோவிலில் காத்திருப்பேன்’
ஆறு மணி ஆகட்டும் என காத்திருந்தேன். கோவிலில் திவ்யாவை பார்த்த எனக்கு அப்படி ஒரு ஆச்சர்யம். கோவிலிருந்து அம்மனேதும் வெளிப்பிரகாரத்திற்கு வந்து விட்டதோ? ஆம், திவ்யா புடவையில் இருந்தாள். என் கண்ணே பட்டு விடும் போல் இருந்தது. அப்படி ஒரு அழகு. தலை நிறைய மல்லிகைப்பூ. அம்சமாக இருந்தாள். முதல் முறையாக அவளை ஆசையாக பார்த்தேன். என் பார்வையின் நோக்கத்தை புரிந்து கொண்டவள், முதல் முறையாக வெட்கப்பட்டாள்.
‘எதுக்கு வர சொன்னீங்க?”
‘ரவி, எனக்கு மாப்பிள்ளை பார்க்க இன்னைக்கு நைட் வராங்க’
‘நல்ல விசயம் தானே?”
‘லூஸாப்பா நீ?”
‘ஏன் இப்படி சொல்ற?”
‘மனசுல ஒருத்தர வைச்சுகிட்டு இன்னொருத்தர எப்படி கல்யாணம் பண்ணிக்கிறது???”
‘அப்படியா, யார் ஒன் மனசுல இருக்கா’
நான் எதிர்பார்க்கவே இல்லை. ஓங்கி பளார் என்று என் கன்னத்தில் அறைந்தாள். ‘யார்ன்னு உனக்கு தெரியாது? கடந்த ஐந்து வருசமா நீ தான் உலகம் வாழ்ந்துட்டு இருக்கேன். யார் உன் மனசுலனு கேக்கற?”
நான் பேச வாயெடுத்தேன்,
உடனே, ‘நீ ஒண்ணும் சொல்ல வேணாம். உன் குலம் கோத்திரம், நான் ஏழை, நீ பணக்காரி, உங்க அப்பா பெரிய ஆள், நான் அநாதை. எதுவும் சொல்லாத. எல்லாம் நான் பாத்துக்குறேன். உனக்கு என்ன பிடிச்சு இருக்கான்னு கூட கேட்க மாட்டேன். எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு. இந்த பிறவில மட்டும் இல்ல, இன்னும் எத்தனை பிறவி எடுத்தாலும் நீதான் என் புருசன். இன்னைக்கு நான் எப்படியாவது சமாளிச்சுக்குறேன். இந்த வாரத்துல எப்படியாவது என்னை எங்கேயாவது கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க. நீ ரொம்ப நல்லவன்டா. நான் தான் உன்ன காப்பத்த முடியும். புரியுதா? என்னைக்குனு நான் எப்படியாவது தெரிய படுத்தறேன்’ என்று சொல்லிட்டு விறு விறு என்று சென்று விட்டாள்.
நான் திக் பிரமை பிடித்தவன் போல் அங்கேயே நின்றேன்.
யாரிடம் ஆலோசனை கேட்பது? இளங்கோவிடம் மட்டும்தான் கேட்க முடியும்?
அவனைத்தேடி சென்றேன். ஒன்று விடாமல் அனைத்தையும் சொன்னேன்.அவனுக்கு ஏனோ திவ்யாவை பிடிக்கவில்லை. நான் அவள் தான் என் வாழ்க்கை என்று பிடிவாதம் பிடித்தவுடன், முதலில் பயந்தவன், திவ்யா மீது நான் வைத்திருக்கும் அளவற்ற காதலாலும், என் பிடிவாதத்தாலும், எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதாலும், ஒரு வழியாக ஒப்புக்கொண்டான்.
அடுத்த ஒரு வாரம் அமைதியாக சென்றது. நாங்கள் பார்த்து கொள்ளவே இல்லை. ஆனால் என் மனம் முழுவதும் திவ்யாவே நிறைந்திருந்தாள். காதிலில் நானும் விழுந்திருக்கிறேன், இவ்வள்வு நாட்களாக என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்திக்கிறேன். இல்லை என்றால், ஏன் எனக்கு மனம் முழுவதும் திவ்யாவே இருக்கிறாள். காதலிக்கும் போது எல்லோருக்கும் ஏற்படும் அதே உணர்வு எனக்கும், சாப்பிட பிடிக்கவில்லை, தூக்கம் வரவில்லை.
திவ்யாவின் தகவலுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால், அவளின் அப்பாவையும், அண்ணன்களயும் நினைத்தால் பயமாக இருந்தது. வெளியூர் சென்று திருமணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
அதே நினைப்பில் தூக்கம் வராமல் படுக்கையில் தவித்துக்கொண்டு இருந்தேன்.
அப்போது பாதிரியார் என் அறையின் உள்ளே வந்து, “ரவி, உனக்கு ஒரு லெட்டர் வந்துருக்கு பாரு?” என்று ஒரு கடிதத்தை கொடுத்துவிட்டு சென்றார்.
அவசரம் அவசரமாக பிரித்து படித்தேன்.
‘அன்பின் ரவி, நாளை மாலை நீங்கள் 6 மணிக்கு கிளம்பி, தஞ்சாவூர் சென்று எனக்காக காத்திருங்கள். நான் கோவில் போவதாக சொல்லி வந்து விடுகிறேன். நாளை வியாழக்கிழமை. வெள்ளிக்கிழமை காலையில் நம் கல்யாணம் அதன் பிறகு, எங்கே செல்கிறோம் எங்கே தங்க போகிறோம் என்பது எல்லாம் சஸ்பன்ஸ். நாளை மாலை சந்திக்கலாம்’
அவ்வளவுதான். என் மனம் அலைபாய ஆரம்பித்தது. சந்தோசம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் எப்படி இவர்களை எதிர்த்து வாழ போகிறோம் என்ற பயம். இருந்தாலும் வருவது வரட்டும் என நினைத்து வியாழக்கிழமை இரவுக்காக காத்திருந்தேன்.
இளங்கோவிடம் யாருக்கும் எதுவும் சொல்லிவிடாதே. எல்லாம் நல்லபடியாக முடிந்தவுடன் உனக்கு போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.
அடுத்த நாள் மாலை. யாருக்கும் சொல்லாமல் பஸ் ஸ்டான்டு செல்ல நினைத்தேன். பின் பாதிரியாரின் அறைக்கு சென்றேன். அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா என ஒரு கணம் தயங்கி நின்றேன். பின் சொல்ல வேண்டாம் என்று கிளம்பினேன். ஒரு வித மனக்குழப்பத்துடன் பஸ்ஸிற்காக நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக சென்று கொண்டிருந்தது.
திவ்யா விட்டிற்கு தெரிந்து அவர்கள் வந்து விட்டால் என்ன செய்வது? அவர்கள் அண்ணன்கள் வந்துவிட்டால்? பயத்துடன் நிற்கையில் தஞ்சாவூர் பஸ் வந்துவிட்டது. ஏறி உட்கார்ந்த உடன் தான் நிம்மதியாக உண்ர்ந்தேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் தஞ்சாவூர் சென்று அடைந்தேன்.
திவ்யாவிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன்.
சரியாக ஒரு மணி நேரம் கழித்து திவ்யா வந்தாள். வந்தவள் முகம் சரியில்லை. அழுதிருப்பாள் போலிருக்கிறது. ஒன்றும் கேட்டு அவளை தொந்தரவு படுத்த விரும்பவில்லை.
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள். ‘சென்னை போயிடலாங்க”
சரி என்று சென்னை பஸ் ஏறினோம்.
சென்னையில் திவ்யா கொடுத்த முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்றோம். நல்ல வேளை. வீட்டில் யாரும் இல்லை. திவ்யாவின் ஒண்ணு விட்ட பெரியப்பா வீடு. எனக்கு ஒரே குழப்பம். திவ்யா ஏன் இந்த வீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்? கேட்டதற்கு, ‘அவங்கதான் வீட்ல இல்லையே. அப்புறம் என்ன?” என்றாள்.
அந்த வீட்டின் செக்யூர்ட்டி, திவ்யாவை பார்த்தவுடன் வணக்கம் வைத்து, வீட்டை திறந்து விட்டான். வீட்டிற்கு சென்றவுடன் ஆசையாக கட்டி அணைக்க நெருங்கினேன், தட்டி விட்டவள், எல்லாம் நாளைக்குத்தான் என்றாள். அடுத்த நாளும் அப்படியே சென்றது.
இன்றுதான் கோவிலில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். நினைவுகளில் மூழ்கி இருந்த எனக்கு மீண்டும் செல்போன் ஒலி கேட்டது. எடுத்தேன், இளங்கோ தான்.
‘ஹலோ’
‘யேய் பஸ் ஸ்டாண்ட் வந்துட்டேன். சீக்கிரம் வா’
‘இதோ வரேன்’ என்றவன், திவ்யாவை தேடினேன். பாத்ரூமில் சத்தம் கேட்கவே, அவளை தொந்தரவு செய்யாமல், ஒரு ஆட்டோவை பிடித்து பஸ் ஸ்டாண்ட் சென்றேன். பஸ் ஸ்டாண்ட் பக்கம்தான் என்றாலும், அதிகாலை என்பதால் ஆட்டோவில் சென்றேன்.
எனக்காகக் காத்திருந்தவன், என்னைப் பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டு கண் கலங்க ஆரம்பித்தான்.
‘ஊர்ல இருந்து வந்து மூணு நாள் தானே ஆவுது. அதுக்குள்ள என்னடா?”
‘நீ நல்லா இருக்க இல்லை’
‘ஏன் கேக்குற’
சொல்ல ஆரம்பித்தான்.
‘நீ ஊர்ல இருந்து கிளம்புன அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?’ திவ்யா வீட்டை விட்டு பஸ் ஸ்டாண்ட் கிளம்பி இருக்கா. எப்படியோ அவங்க அண்ணன்களுக்கு விசயம் தெரிந்து, பஸ் ஸ்டாண்ட் போய் தேடி இருக்கிறர்கள்….
‘இளங்கோ ஒரு நிமிசம் வீடு வந்துடுச்சு. இரு ஆட்டோவை அனுப்பிடலாம்’
ஆட்டோ போன பிறகு,’ம் . சொல்லு என்றேன்’
பஸ்ஸில் இருந்த திவ்யாவை கீழே இழுத்து வந்து திட்டி இருக்கிறார்கள். திமிறிய திவ்யா, அவர்கள் கைகளை விட்டு விலகி ரோட்டில் ஓடி இருக்கிறாள். அப்போது,
எதிரே மெட்றாஸ் செல்லும் பஸ் வேகமாக வந்திருக்கிறது. அந்த பஸ்ஸில் திவ்யா…
‘என்னடா சொல்ற?”
‘அந்த பஸ்ஸில் இருந்து திவ்யா தூக்கி வீசி எரியப்பட்டு அந்த இடத்துலேயே…’
அவன் சொல்லி முடிப்பதற்குள், ‘திவ்யா திவ்யா’ என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் ஓடும் என்னை விநோதமாக பார்த்த படி நின்றான் இளங்கோ.