தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
‘குளிர் படு கையள் கொடிச்சி செல்க’ என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல் 5
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ- தீம் சொல்
செறி தோட்டு எல் வளைக் குறுமகள் 10
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?
ஒரு தினைக்காடு.
இந்தக் தினைக்காட்டுக்குக் கருது பொறுக்க ஆளுக்க வந்துருக்காக.
உயரமான ஒரு காவல் பரணில் இருந்துகொண்டு, இந்தப் பெரிய தினைக்காட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கிற அழகான ஒரு இளம் பெண் காவல் பரணில் இருந்து இறங்கிக் கீழே வந்து கொண்டிருக்கிறாள்.
கருதுபெறக்க வந்திருக்கிற ஒரு பாட்டி, அழகான அந்த இளம் பெண்ணிடம் சொல்லுதாவ…
“தாயி… நீ.. வீட்டுக்குப் போம்மா…”
பாட்டி பேச்சக் கேட்டுக்கிட்டு அழகான அந்த இளம்பெண் – உடனே வீட்டுக்குப் போகவில்லை.
தினைக்காட்டில் கருது பொறுக்கிய தினைப்பயிர்கள் வெறும் தட்டைகளாக, மொட்டக்கட்டையாக நின்று கொண்டிருப்பதை, அழகான அந்த இளம்பெண் வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
நேற்று வரைக்கும் தினைக்கருதுகளைத் திங்க கிளிகள் படைபடையாக வந்து கொண்டிருந்தது. அழகான இந்த இளம் பெண் கிளிகளை விரட்டிக் கொண்டிருந்தாள்.
இந்த இளம்பெண் இந்தத் தினைக்காட்டில் பரணில் உட்கார்ந்து கொண்டு ஒரு அரசகுமாரியைப் போல் முழு சுதந்திரத்தோடு இந்தத் தினைக்காட்டை அரசாட்சி செய்து கொண்டிருந்தாள்.
அழகான இந்த இளம் அரசகுமாரியைச் சந்திக்கிறதுக்கு ஒரு அரசகுமாரன் இங்கே தினமும் வந்து கொண்டிருந்தான்.
இந்த இளம் காதலர்களுக்கு இந்தத் தினைக்காடு மகிழ்ச்சியை வழங்கியது.
அழகான இந்த இளம்பெண் அவள் காதலனை இனிச் சந்திக்க முடியாது என்பதனால், வருத்தப்பட்டுக்கொண்டு தயங்கித் தயங்கி அங்கேயே நின்று கொண்டிருக்கிறாள்.
உரோடகத்துக் கந்தரத்தனார்
நற்றிணை 306