ஆடிய தொழிலும், அல்கிய பொழிலும்,
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு
ஊடலும் உடையமோ- உயர் மணற் சேர்ப்ப!
திரை முதிர் அரைய தடந் தாள் தாழைச்
சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய, 5
இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,
நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன்,
கள் கமழ், பொறையாறு அன்ன என்
நல் தோள் நெகிழ மறத்தல், நுமக்கே?
எங்கள் கிராமத்தில் ஒரு ஆறு இருக்கிறது.
அது ஒரு காட்டாறு.
அந்த காட்டாற்றில் தண்ணீர் உப்பாக இருக்கிறது.
இந்த உப்பாற்றில் ஏகப்பட்ட இறால் மீன்கள் இருக்கு. இந்த இறால் மீன்களுக்கு நல்லருசி. எங்க எங்க இருந்தெல்லாமோ நாரைகள் இந்த இறால் மீன்களின் ருசிக்காக எங்கள் கிராமத்துக்கு வருகின்றன.
எங்கள் உப்பாறு நெடுகிலும் நாரைகள் நின்று கொண்டிருக்கின்றன.
எங்கள் உப்பாறு நெடுகிலும் தாழை மரங்களும் நின்று கொண்டிருக்கிறது.
தாழை மரங்களில் ஒரு மரம் கூட நேராக இல்லை. எல்லாத் தாழை மரங்களும் கோணித்து கொண்டுதான் இருக்கிறது.
தாழை மரங்களில் இருந்து பழுத்துக் கீழே விழுந்த மடல்களின் தழும்புகள், தாழை மரங்களில் வரந்தை வரந்தையாக இருக்கிறது.
தாழை மடல்களின் ஓரங்கள் முள்ளு முள்ளாக இருக்கிறது.
எங்கள் உப்பாற்றில் ருசியான இறால் மீன்களைப் பிடித்துப் பிடித்து வகுத்துக்கும் இரை மேய்ந்த நாரைகள் தாழை மரத்தில் வந்து உட்காருகின்றன.
தாழை மரத்தில் வந்து நாரைகள் உட்கார்ந்ததும் தாழை மரத்தின் மடல்கள் வளைகின்றன. வளைந்த அந்தத் தாழை மடல்கள் ஒடிகிறது.
நாரைகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய பெலம் தாழை மரங்களுக்கு இல்லை.
நாரைகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய பெலம் தாழை மரங்களுக்கு இல்லாவிட்டாலும் தாழை மரங்களில்தான் நாரைகள் தங்குகின்றன.
நாரைகளைத் தாங்கிக்கொள்ளக்கூடிய பெலம் தாழைகளுக்கு இல்லாவிட்டாலும் தாழை மரங்கள் தான் நாரைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது.
உலோச்சனார்
நற்றிணை 131