“கடவுள் அடையாளபூர்வமாக வன்முறையை நேசிக்கிறார். நீங்கள் அதனை அப்படியல்ல என்று புரிந்துகொள்கிறீர்கள்”
-லியனார்டோ டி காப்ரியோ நடித்து மார்ட்டின் ஸ்கார்கேஸ் இயக்கிய SHUTTER ISLAND படத்திலிருந்து
வன்மம் என்பது ஒரு சொல் அல்ல. கொடுமைகள் பலவற்றுக்கும் பின்னாலிருக்கக்கூடிய தூண்டு திரியாக வன்மம் ஆழத்தில் புதைந்திருக்கிறது. கண்ணி வெடிகளைப் போலவே இருப்பிடம் தெரியாமலிருக்கக்கூடிய வன்மம் விளைவுகளால் குருதி சுவைக்கிறது. வரலாற்றில் வன்மத்தின் பக்கங்கள் ரத்தத்தில் தோய்ந்தவை. பழிவாங்கும் திரைப்படங்களுக்கு உலகமெங்கும் நிரந்தரமாய் இருக்கும் ரசிகக் கூட்டம் பெரிது. என்ன ஒன்று பழிவாங்கும் திரைப்படங்களில் அத்தி பூத்தாற் போலத் தான் யதார்த்தத்தை மீறாத படங்களின் வருகை நிகழ்கின்றது.
பெருவாரிப் படங்கள் நட்சத்திர அதீதங்களே அடுத்துக் கெடுத்தல் குழி பறிப்பது உடனிருந்து காட்டிக் கொடுப்பது நம்பிக்கை துரோகம் கழுத்தறுத்தல் போன்றவை பொதுவில் நிறுவ முடியாத தனித்த நியாயங்களைத் தனதே கொண்டவை தண்டனையை நன்கு அறிந்த பிற்பாடு முயலப் படுகிற குற்றங்களின் பின்னால் நிலவும் உளவியல் நுட்பமாக அவதானிக்கப் படவேண்டியது. கருணை இன்றி நிகழ்த்தப்படுகிற கொலைகள் கதைகளாகவும் அச்சங்களாகவும் கூட்டப் பெருமிதங்களாகவும் தொடர்கின்றன.
தீர்ப்பை நோக்கியதாக ஒரு கலைப்படைப்பு இருந்தாக வேண்டும்.கடுமையான எதிர்க்குரலை ஆட்சேபங்களை எள்ளல்களை ஒரு சினிமா நிகழ்த்தவேண்டும். வன்முறையை விடக் கொடுமையானது அதன் பின்னாலிருந்து தூபம் போடும் வன்மத்தின் சுயநலம். மனித பிடிவாதம் எத்தகைய எல்லை வரைக்கும் செல்லும் என்பதை மனித முரண்களுக்கு அப்பாலான நன்மை தீமைகளின் வழி வழியாக அழுத்திச் சொன்ன திரைப் படைப்புகளில் முக்கியமான ஒன்று விக்ரம் சுகுமாரனின் மதயானைக்கூட்டம்.
ஒவ்வொரு படத்துக்கும் தீம் மியூசிக் என்பதை போலவே ஒருமித்த பின்புல வண்ணம் ஒன்று இருக்கும் முதல் பதாகையில் இருந்து படத்தின் எண்டு கார்டு வரைக்கும் சற்றுத் தூக்கலாக ஒற்றை நிறம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உருவாக்கத்தில் இது ஒரு பின்புல உத்தி. வகையில் குருதி வண்ணத்தை நிகர்த்த செஃபியா டோனை இந்தப் படத்தில் பின்புல வண்ணமாக உணரச் செய்ததில் இருந்து தனது திரைமொழியை துவக்குகிறார் விக்ரம்.
வீரனின் தங்கை செவனம்மா.அவளது கணவர் ஜெயக்கொடி இரண்டாம் திருமணம் செய்ததில் இருந்து அவரிடம் அண்ணனும் தங்கையும் பேசுவதே இல்லை. இரண்டாம் குடித்தனத்தில் ஜெயக்கொடி திடீரென்று மரணமடைய வண்டியில் பிணத்தை ஏற்றிக் கொண்டு தங்கை வீட்டுக்குக் கொணர்ந்து சேர்க்கிறார் வீரா.செவனம்மாவின் ஒரே மகன் பூலோகராசா சித்தி தம்பி பார்த்திபன் தங்கை ப்ரேமா என எல்லோரையும் அன்போடு போற்ற நினைப்பவன். அவனது பரிந்துரையால் நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இரண்டாவது குடும்பம் ஜெயக்கொடியின் உடலை பார்த்து இறுதி அஞ்சலி செலுத்த வாய்ப்புக் கிடைக்கிறது.
வீரா ஜெயக்கொடி மரணத்தின் போது செய்ய வேண்டிய செய்முறையினைப் பிற்பாடு செய்வதாக செவனம்மாவிடம் தெரியப்படுத்த அவளும் அதனை ஒப்புக் கொள்கிறாள். அதை அறிய நேரும் போது ஆட்சேபிக்கும் பூலோகராசா வீராவையும் அவர் குடும்பத்தையும் கண்டபடி ஏச தள்ளு முள்ளுவாகையில் வீராவின் மகன் தோட்டத்தில் இருக்கும் தேங்காய்க் கத்தி வெட்டி அங்கேயே மரிக்கிறான். தன் மகன் இறந்ததற்குக் காரணம் என பார்த்திபனைக் கொல்ல சபதம் எடுக்கிறார்.
தம்பியைக் காப்பாற்ற உதவுகிறான் பூலோகராசா. முதலில் தானும் உதவும் எண்ணத்தில் அத்தனை நாட்கள் எதிர் கொண்டு பார்த்தே இராத தன் கணவனின் இரண்டாம் மனைவியான பார்த்திபனின் அம்மாவைத் தன் தோட்டவீட்டில் மறைத்து வைக்கிறாள் செவனம்மா. கேரளாவிற்குத் தப்பிச் சென்று விடும் பார்த்திபன் தன் தோழி உதவியோடு அங்கேயே மறைந்து வாழ்கிறான். தன் மகன் சாவுக்கு பழிக்குப் பழியாக பார்த்திபனைக் கொன்றே ஆக வேண்டும் எனத் துடிக்கும் வீரா தங்கையிடம் உதவி கேட்கிறார்.
அண்ணன் பாசம் கண்ணை மறைக்க தன்னை நம்பிப் புகலிடம் வந்திருக்கும் பார்த்திபனின் அம்மாவுக்கு உணவில் விஷம் கலந்து தருகிறாள் செவனம்மா. அவள் இறந்ததும் பார்த்திபன் இறுதிச் சடங்கு செய்ய வந்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. ஊர் திரும்பும் பார்த்திபன் இறுதிச்சடங்குகள் அனைத்தையும் செய்து முடித்ததும் வீராவும் அவரது மகனும் மற்றும் உறவினர்களும் கூட்டமாய் தாக்கத் தொடங்குகின்றனர்.கடைசி வரை எல்லோரையும் சமாளிக்கிற பார்த்திபனின் மீது மறைந்து தூரத்திலிருந்து வளரியை எறிந்து கொல்கிறார் வீரா. போலீஸ் வந்து வீராவைக் கைது செய்து அழைத்துச் செல்கிறது. பார்த்திபனின் ரத்தக் கறையை நீர் கொண்டு கழுவி விட்டபடி ஓவென்று அழுகிறாள் செவனம்மா. படம் நிறைகிறது.
விஜி சந்திரசேகர் முருகன்ஜி இருவரையும் தாண்டி வீராவாக வந்த வேலராமமூர்த்தி தமிழ் சினிமாவின் அடுத்த குணச்சித்திரப் பேருரு என்பதைத் தன் இயல்பான நடிப்பால் நிறுவினார். தமிழ் சினிமாவின் புதிய வரவாக இப்படத்தில் நடித்த கதிர் அதிகம் பேசாமல் தன் முகமொழி மூலமாகவே மறக்க முடியாத நல் நடிப்பை நேர்த்தினார். ஏகாதசியின் வரிகளுக்கு என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் உறுதுணையாயிற்று. ராகுல் தர்மனின் ஒளிக்கூட்டு நேரலையின் நுட்பத்தோடு கதையைக் காணச்செய்தது.
பெருமிதமாய்ப் பராமரிக்கப் பட்டு வந்த பல கருத்தாக்கங்களைத் தன் முதல் படம் மூலமாகவே உடைத்து நொறுக்க முனைந்த விக்ரம் சுகுமாரனின் தெளிவான திரைக்கதையும் கதாபாத்திரங்களுக்கு அவர் தேர்ந்தெடுத்த நடிகர்களின் அச்சுப் பிசகாத பொருத்தமும் இயல்பான தெற்கத்தி வசனங்களும் சொல்ல வந்ததை கொஞ்சம் கூடப் பாவனையோ சுற்றி வளைத்தலோ இல்லாமல் நேரடியாகச் சொல்ல முற்பட்ட துணிவும் எனப் பல காரணங்களுக்காக மதயானைக்கூட்டம் கவனத்தில் கொள்ள வேண்டிய திரைப்படமாகிறது.
மதயானைக் கூட்டம்: பெருவழி வன்மம்