இஃதொன்றும் எளியது அல்ல. மிகவும் கடினமானது. தினந்தோறும் நாமிதில் இயங்கப் போகிறோம். ஆனால் நான் அதை செய்யவிரும்புகிறேன் ஏனெனில் நான் உன்னோடு எல்லாவற்றிலும் எப்போதும் என் எல்லா தினங்களிலும் இருக்கவே விரும்புகிறேன்.
-நோவா இன் தி நோட்புக்
காதல் படங்களுக்கென்று நிரந்தர மார்க்கெட் ஏன் உண்டானது. சண்டை காட்சிகளைப் போலத்தான் காதலும். இயல்பு வாழ்க்கையில் எப்படி டஹால் டுஹால் என்று சப்தமெழுப்பி சண்டைபோட முடியாதோ அப்படியே காதலும் எத்தனையோ பேரின் எட்டாக்கனி. காதலிக்கிற பலருக்கும் கூட சினிமாவில் காட்டுகிற காதலின் குளிர்தினங்கள் வாய்ப்பதில்லை. இன்றைக்கு வேண்டுமானால் காதலதன் அடுத்த கட்டத்தை சினிமாக்களில் தோன்ற செய்ய சிலபலர் முயன்று கொண்டிருக்கலாம். என்றென்றைக்கும் அது ஏட்டுச்சுரைதான். கவைக்குதவியதில்லை. இது நிதர்ஸனம் என்றாலும் காதல் என்ற வார்த்தையே தடைசெய்யப்பட்ட ஒன்றெனக் கருதிய காலங்களில் காதலைத் தொடர்ந்து சினிமாக்கள் ஆதரித்தும் போற்றியும் வந்தன. ஒருவகையில் மக்கள் மனங்களைக் கூட்டுக்காற்று ஒன்றின் வருடலாய் ஆற்றுப்படுத்துவதற்கான ஜரிகைப் பொய் முயல்வெனவே இத்தகைய படங்களைக் கொள்ளவும் சொல்லவும் முடியும் இன்னொரு பக்கம் சினிமா காதலைத் தன் கை கோர்த்து நடை போட்டதைப் பார்த்துத் தாமும் காதலிக்க வேண்டுமென்று விரும்பி அதனுட் புகுந்தவர்களும் இல்லாமல் இல்லை.
காதலில் வென்ற கதைகளைவிட தோற்ற கதைகள் புனிதங்கொண்டன. நிரந்தரமாய் அவை ஈரம் காயாமல் மனமலர்களைத் தூவிக் கொண்டாடப்பட்டன.அந்த வகையில் எத்தனை வேடங்களைத் தாங்கி ஓங்கிப் பேரெடுத்தாலும் எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற பெரும் செல்வாக்குப் பெற்றவர்களுக்கும் கூட முழுக்க முழுக்க காதலில் முகிழ்ந்த படங்களும் உருவாக்கப்பட்டன. எப்போதாவது வருகிற பண்டிகைகளைப்போல அவற்றைப் போற்றி மகிழ்ந்தார்கள் ரசிகர்கள். ராமாநாயுடு தயாரிப்பில் டி.எஸ்.ப்ரகாஷ்ராவ் இயக்கிய வசந்தமாளிகை ஒரு கலைப்பேழை. காதலைத் தாங்கிப் பூத்த சிப்பி. அன்பென்னும் தடாகத்தின் ஆரவாரம். நெடுநேரத் தூறல்.
அழகாபுரி ஜமீனின் இளைய வாரிசு ஆனந்த். சிறுவயது முதலே அன்னை பாசம் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவன். செல்வத்துக்கு விலையாகத் தன்னை வளர்த்த ஆயா உயிரை விட்டதைக்கூட ஆட்சேபிக்க முடியாமல் மனம் புழுங்கியவன். அண்ணன் விஜய் ஒரு சுயநலமி. ஒரு விமானப் பயணத்தில் லதாவை சந்திக்கும் ஆனந்த் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவள் மானத்தைக் காப்பாற்றுகிறான். அவளைத் தன் பர்ஸனல் உதவியாளினியாக நியமிக்கிறான். ஆனந்தின் எஸ்டேட்டுக்கு வரும் லதா அவனொரு குடிகாரன் நிதமும் ஒரு பெண் துணையை விலை கொடுத்து வாங்குபவன் என்பதெல்லாம் அறிந்து அங்கே இருந்து நீங்கிவிட முயல அவளைத் தடுத்து அங்கே பலவருடமாக வேலைபார்க்கும் பொன்னையா வேண்டிக் கேட்டுக் கொள்வதற்கிணங்கி அங்கேயே தொடர்கிறாள். அவளை ஆனந்தின் அம்மாவுக்கோ மற்றவர்களுக்கோ பிடிக்கவில்லை. ஆனாலும் ஆனந்துக்காக அங்கே இருக்கிறாள். அவனைக் குடிக்கவிடாமல் தடுக்க முனையும் லதாவை அடித்து விடுகிறான் ஆனந்த். காயத்தோடு நிற்பவளிடம் தன் பால்யத்தின் கதையைச் சொல்கிறான்.
தனக்கென்று யாருமே இல்லை என்று ஏங்குபவனை லதா ஆற்றுப்படுத்துகிறாள். ஆனந்த் குடிகாரன் என்று அவனுக்குத் தன் தங்கையை திருமணம் செய்துதர மறுக்கிறாள் அவனது அண்ணி. அதே அண்ணி ஆனந்த் குடியை நிறுத்தியபிறகு தங்கை கவுரியை அவனுக்கு திருமணம் செய்துவைக்குமாறு கேட்கும்போது ஆனந்த் அதை மறுக்கிறான். தன் வருங்கால மனைவிக்காகக் கட்டிக் கொண்டிருக்கும் வசந்த மாளிகையைப் பார்ப்பதற்காக லதாவை அழைத்துச் சென்று தன் மனம் கவர்ந்தவளின் படத்தைச் சென்று பார்க்க சொல்கிறான். அங்கே சுற்றிச் சுற்றி கண்ணாடிகள் இருக்கின்றன. திரும்பும் பக்கமெல்லாம் தன் உருவமே தெரிவது கண்டு ஆனந்தக் கண்ணீரோடு ஆனந்தை ஆரத் தழுவுகிறாள் லதா.
காதல் நெடுங்காலம் நீடிப்பதற்குள் சதி செய்து விஜய் இருவரையும் பிரித்து விடுகிறான். அதற்கு ஆனந்தின் அம்மாவும் உடன் நிற்கிறாள் திருட்டுப் பட்டம் கட்டி லதாவை அவமதிக்கிறார்கள். ஆனந்தின் அம்மாவை சந்தித்துத் தன் குமுறல்களைக் கொட்டிவிட்டு ஆனந்தைவிட்டு நீங்கிச் செல்கிறாள் லதா. அதன் பிறகு லதாவுக்கு வேறொருவரொடு திருமணம் நிச்சயமாகிறது. அவள் நினைவாகவே மீண்டும் குடியை நாடி மதுவின் மடியில் தஞ்சம் புகும் ஆனந்தும் லதாவும் கடைசியில் ஒன்று சேர்வதோடு பூர்த்தியாகிறது வசந்த மாளிகை.
தெலுங்கிலிருந்து மறுவுருக் கண்டு தமிழில் கட்டப்பட்டது வசந்த மாளிகை. தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கான தேவை எப்போதைக்குமானது. இன்றும் ஒரு அழுத்தந்திருத்தமான காதல் கதை படமானால் அதை வரவேற்பதற்கு மக்கள் தயார் என்பதே சூழல்., காதலைத் திரைப்படத்துக்கான முதன்மை கச்சாப் பொருள் எனவே கருதமுடிகிறது. காலம் சினிமாவின் ஆடைகளை அவ்வப்போது மாற்றுகிறதே தவிர அதன் ஆன்மாவைத் தொடுவதே இல்லை. சினிமாவின் ஆன்மா காதலைத் தன் விரலின் புனித மோதிரமெனவே அணிந்து கொண்டிருக்கிறது. ஏழை பணக்கார வித்யாசத்தை அற்றுப் போகச் செய்து காதலைப் போற்றிய பல படங்களை நம்மால் வரிசைப் படுத்த முடியும். அவற்றில் பலவும் வணிக வெற்றி அடைந்தவையே. ஆனாலும் தேவதாஸ் முதலிய படங்கள் காதலில் சேரவியலாத இணையின் தோல்வியைப் புனிதம் செய்தபடி ஓங்கி ஒலித்தவை. வசந்தமாளிகையும் அப்படியான முடிவை முன் வைத்திருக்க வேண்டிய படம்தான். விளிம்பி வரைக்கும் சென்று திரும்பிய மலைவாகனம் போலத் தான் கருதவேண்டி இருக்கிறது வசந்தமாளிகை படத்தின் கதையினை.
பணக்காரத் தனிமை என்பது பலவிதமான கதா இடுபொருளாகப் பயன் பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த அன்பே வா ஒரு உதாரணம். இங்கே வசந்தமாளிகை படம் காதலின் குழப்பங்களை மட்டுமன்றி அதன் புறவய எதிர்ப்புக்களைத் தாண்டி வெற்றியடைவதைப் பேசிய படம். சிவாஜி கணேசன் தன் சின்னச்சின்ன அசைவுகளிலும் செல்வந்தத்தைப் பிரதிபலித்துத் தந்தார். அவரை விஞ்சுமளவுக்கு வாணிஸ்ரீயின் உணர்வுப்பூர்வ நடிப்பு அமைந்தது. நாகேஷ், செந்தாமரை, பாலாஜி, ரங்காராவ், சுகுமாரி, ஸ்ரீகாந்த் எனப் பக்கபலங்கள் கச்சிதம் செப்பின.
கனிவிட்ட மாமரம் அணிலுக்கு மாத்திரம் காதலிலே என்ன சாத்திரம்
கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்துவேன் ஆழத்தை இங்குதானே காணலாம்
இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய மூக்கினில் சிக்கிடும் மீன் மட்டுமே
இதன் தேவைகள் வாழட்டுமே
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளை தண்டிக்க என்ன வழி
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனிநான் தொடமாட்டேன்
காதல் படம் என்றாலே பாடல் படம் என்றாக வேண்டியது நியதி. வசந்தமாளிகை பாடல்களின் படம் கிடைத்த இடத்திலெல்லாம் அடித்தாடினார் கண்ணதாசன். கேவி.மகாதேவனின் உச்சபட்ச இசை இப்படத்தின் பாடல்களெங்கும் தளும்பியது. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பாடல் இன்றும் இளமை துள்ளுகிற உல்லாசப் பாடலாக விரும்பப் படுகிறது. கலைமகள் கைப்பொருளே பாடல் பிரார்த்தனைவழி மனிதநேயம். குடிமகனே பெருங்குடி மகனே என்ற பாடல் உற்சாகத்தின் ஊற்று. மயக்கமென்ன பாடல் காதலின் கூட்டுப் பிரார்த்தனை யாருக்காக இது யாருக்காக பாடலோ காதலின் மேல் முறையீடு. இரண்டுமனம் வேண்டும் படத்தைத் தாண்டிய இசைவழி முகவரி. மொத்தத்தில் மகாதேவனும் கண்ணதாசனும் சவுந்தரராஜனும் சுசீலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் சேர்ந்து நடத்திய இசை யாகம் இந்தப் படம்.
வசந்தமாளிகை காதல் பாடல் கோயில்
முந்தைய தொடர்: http://bit.ly/2KLNEdF