நாம் வாழ்ந்து கொண்டிருப்பது நாடகத்தனமான உலகத்தில் அல்ல. அது பொருள்சார் உலகம். மேலும் உண்மையென்பது உணர்ச்சியூட்டலில் அல்ல பொருள்சார் விஷயங்களின் உண்மையான அளவீடுகளில் உறைந்திருக்கிறது

– ரிச்சர்ட் ஃப்ளநாகன்

எழுத்தாளர் விசுவின் ஆரம்பப் படங்களிலிருந்து முற்றிலும் மாறிப் பயணித்தவை அவர் இயக்கிய படங்கள். பட்டினப் பிரவேசம் படத்தின் கதை வசனத்தை கண்ணுற்றவர்கள் அவருடைய நாடக பாணிப் படங்களை நம்பமுடியாத வியத்தலோடுதான் அணுகுவர். சதுரங்கம், அவன் அவள் அது, நெற்றிக்கண், புதுக்கவிதை, கீழ்வானம் சிவக்கும் என அவர் எழுத்திற்குப் பெருத்த வரவேற்பு இருந்தது. பின்னாட்களிலும் அவர் நல்லவனுக்கு நல்லவன் மிஸ்டர்பாரத் என ரஜனி படங்களுக்கு வசனம் எழுதியதும் கூறத்தக்கதே.

குடும்பம் ஒரு கதம்பம் படம் விசுவின் அடுத்த கால நகர்வைத் தீர்மானித்துத்தந்தது. அதன் வெற்றி விசுவின் மீதான வெளிச்சத்தைக் கூடுதலாக்கியது. பாலச்சந்தரின் ஆரம்ப காலக் கதைத் தேர்வுகளின் சுத்திகரிக்கப் பட்ட வடிவங்களைத் தன் கையிலெடுத்து வென்றவர் விசு. எண்பதுகளில் தொடங்கி தொண்ணூறுகளின் இறுதிவரைக்கும் மத்யம சமூகத்தின் வாழ்க்கை குறித்த யதார்த்தத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஊசலாடிய கதைகளைப் படமாக ஆக்கினார். அவற்றிற்கென தனித்த ரசிகர்கள் உருவானார்கள். விசு பாணி என்றே ஒரு விதமான பட நகர்வு முறை கருதப்பட்டு அழைக்கப்படுகிற அளவுக்கு நெடிய வசனங்கள் பேசித் திருப்புகிற உரையாடல்கள் தொடர்ந்து ஒலிக்கப்படுகிற கேள்விகள் என்று தன் படவுலகத்தை நாடக பாணியை அடிப்படையாகக் கொண்டுதானே தயாரித்துக் கொண்டவர் விசு. அவரது வசனங்கள் கதையின் போக்கை அதன் மீதான யூகத்தை மற்றும் துல்லியத்தை கொஞ்சமும் பிசிறின்றிப் பார்க்கிற அத்தனை பேருக்கும் தெளிவாகப் புரியவைத்துவிட வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டன.

விசு தன் கதைகளைக் குடும்பத்தின் மீதான பழைய மற்றும் புதிய விலக்கங்களுடனேயே அமைத்தார். அவை வெற்றி பெற்றன. அதிலிருந்து விலகி அவர் எடுக்க விழைந்த சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம், புயல் கடந்த பூமி போன்ற படங்கள் பெரும் தோல்வியைப் பெற்று மீண்டும் மீண்டும் அவரை ஒரே திசையில் திருப்பின. நடிகராகவும் தனக்கு வழங்கப்படுகிற வேடங்களை ஏற்றுப் பரிமளிப்பதில் கச்சிதம் காட்டியவர் விசு. அவருடைய வசனங்கள் குறிப்பிட்ட காலம் தமிழ் சினிமாவின் வெற்றிகரமான முதலிடத்தில் அவரை நிறுத்தியிருந்தன என்றால் அது மிகையாகாது.

கூட்டுக்குடும்பம் எனும் வாழ்வு வடிவத்தைப் போற்றியபடி அதன்மீதான விசாரணையை நிகழ்த்திய வகையில் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மாபெரும் வெற்றியைக் குவித்தது. தேசிய விருதுகளில் சிறந்த தமிழ்ப் படத்திற்கென தங்கப் பதக்கத்தை வென்றெடுத்த முதற்படமாக சம்சாரம் அது மின்சாரம் அமைந்தது தற்செயலும் தகுதியும் சந்தித்த வேளை நிகழ்ந்த அற்புதம். ஏவி.எம் நிறுவனம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் இன்றளவும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பப்பட்டு வருவது அதற்கும் தமிழ் நிலத்துக்கும் இடையிலான மாறாத பந்தமொன்றை விளக்கித் தருகிற சாட்சியம்

அம்மையப்பனுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலைபார்க்கும் சிதம்பரம் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் சிவா இன்னும் பன்னிரெண்டாம் வகுப்பைத் தாண்டாத பாரதி என மூன்று மகன்கள் சரோஜினி ஒரே மகள். கோதாவரி அம்மையப்பனின் இல்லத்தரசி. மூத்தவன் சிதம்பரத்தின் மனைவி உமா சிவாவின் மனைவி வசந்தா என எல்லோரும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். சுயநலவாதியான சிதம்பரம் எப்போது படிப்பை முடிப்பான் எனத் தெரியாத பாரதி. மாற்று மதத்தில் காதல் திருமணம் செய்து அதில் முரண்படுகிற சரோஜினி எனக் குடும்பத்தின் எல்லா விழுதுகளின் படர்தலிலும் பிரச்சினை மொட்டுவிட எப்படித் தீர்க்கிறார் என்பதுதான் கதை. சொல்ல வந்த கதையை சொன்ன விதத்தில் ரசித்தார்கள் என்பதைவிட போற்றினார்கள் எனச் சொல்ல வேண்டும்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சந்திரசேகர், ரகுவரன், மனோரமா, இளவரசி, டெல்லி கணேஷ், கமலாகாமேஷ், லட்சுமி, கிஷ்மு, திலீப் மாதுரி என வேடமேற்றவர்கள் அனைவருமே கனகச்சிதமாக நடித்திருந்தனர். சங்கர் கணேஷின் இசையில் எல்லாப் பாடல்களுமே அந்தக் காலத்தின் பெருவிருப்பப் பாடல்களாகத் திகழ்ந்தன.

கத்தி மீது நடந்தாற்போல் சாதாரணக் கதைக்கு எதை முடிவாக அறிவித்தாலும் திருப்தியின்றிப் போவதற்கும் சாதாரணமான மற்றொன்றாகவே மாறுவதற்கும் நிறையவே வாய்ப்புகள் உண்டு. இந்தப் படம் கொண்டாடப்பட்டதற்கு முதன்மையான காரணம் இதன் க்ளைமாக்ஸ். திரைப்படம் தீர்வு சொல்லி அதனை நிச வாழ்க்கைக்கு மாற்றிக் கடைப்பிடிப்பதெல்லாம் அரிதினும் அரிய நிகழாநிகழ்வு. ஆனால் இந்தப் படம் முன் வைத்த தீர்வு அடுத்த சமீப காலத்தில் மக்களின் மனோநிலையை முன் கூட்டி யூகித்த கச்சிதமாகவே திகழ்ந்தது. தொண்ணூறுகளில் உடைந்து சிதறிய கூட்டுக் குடும்பம் எனும் அமைப்பு இரண்டாயிரத்துக்கு அப்புறம் அபூர்வங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டது. அந்த வகையில் சம்சாரம் அது மின்சாரம் எதையும் நியாயப் படுத்தாமல் அதே நேரம் போலிப் ப்ரார்த்தனைகளைக் கைவிட்டு உதறி இதுதான் நிகழச் சரியாக இருக்கும் என்பதை துல்லியமாகவும் உறுதிபடவும் பேசிய விதத்தில் தமிழின் முக்கியமான படங்களில் ஒன்றாகிறது

சம்சாரம் அது மின்சாரம் வாழ்க்கை நாடகம்