அனியத்திப் புறாவு என்றொரு மலையாளப் படம். தங்கைப் பறவை என்று சுமாராக அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம். அதைத் தமிழில் எடுக்கலாம் என்று சங்கிலி முருகன் முடிவெடுத்தபோது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை தமிழ்த் திரை வசூல் சாதனைகளை எல்லாம் அதுவரைக்குமான கணக்குகளை அழிக்காமல் தன் பெயரை முதலிடத்தில் எழுதப் போகும் படமாக அது உண்டாகப் போகிறதென்று. அதனை வாங்கி வெளியிட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு என்னவோ அதிர்ஷ்டபலிதம் இருந்திருக்க வேண்டும். எல்லாம் அவர் வசமாயிற்று.

மலையாளத்தில் கதையை எழுதி இயக்கியவர் ஃபாஸில். பாடல்களை எழுதியவர் எஸ்.ரெமேஷன் நாயர். இசை அமைத்தவர் ஔஸ்பச்சன். தன்னால் ஆன அளவுக்குத்தான் மலையாளத்தின் எடுத்த அதே கதையை வகைதொகை வடிவம் எதுவுமே மாற்றாமல் அப்படியே எடுக்க முனைந்தார் ஃபாஸில். ஏற்கனவே அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த நதியாவுக்கு அடுத்து குழந்தை நட்சத்திரமாக நடித்துவிட்டுப் படிப்பை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பிக்கொண்ட ஷாலினியின் மறுவரவாக அனியத்திப்றாவு அமைந்தது. படம் பெருவெற்றி பெற்றது. ஆனால் மலையாளத்தில் செஞ்சுரி என்றால் தமிழில் த்ரிபிள் செஞ்சுரி. காரணம் இளையராஜா பழனிபாரதி ஹரிஹரன்.

இளையராஜாவுக்கு ஒரு பழக்கம். பொதுவாக ரீமேக் படம் அதுவும் பிறமொழியில் வேறொரு இசையமைப்பாளர் இசைத்திருந்தால் அதனை வித்தியாசமாகக் கையாளவே விரும்புவார். இத்தனைக்கும் பாடல்களுக்கான களம் தொடங்கி பல நிர்ப்பந்தங்கள் இருக்கும். அத்தனை கட்டுப்பாடுகளைத் தாண்டித்தான் அந்தப் படத்தை இசைப்பதன் மூலமாக அதன் பழைய சரிதங்கள் அனைத்தையும் திருத்தி எழுத முடியுமா என்பதுதான் ராஜயோசனையாக இருக்கும்.

காதலுக்கு மரியாதை தெலுங்கில் சிற்பியும் இந்தியில் ஏ.ஆர்.ரஹ்மானும் கன்னடத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இசைத்தார்கள். எல்லா மொழிகளிலும் சேர்த்து தமிழின் பாடல்களே முதலாவதாகக் கருதப்பட்டன. அதற்குக் காரணம் இசை.

பஸ் டிக்கட்டின் பின் பகுதியில் எழுதிவிடக்கூடிய காதல் கதை. சின்னத்தம்பி குஷ்பூவின் முரட்டு அண்ணன்களே ஷாலினியின் முரட்டு அண்ணன்கள். வீட்டின் அதே இளவரசிதான் ஷாலினி. அவள்மீது குடும்பமொத்தமும் உயிரையே வைத்திருக்கிறது. ஜீவா என்ற பேரிலான விஜய்க்கும் அவருக்கும் காதல் மலர்கிறது. வீட்டார் எதிர்க்கிறார்கள். ஊரைவிட்டு நண்பனுடைய வீடு தேடி அடைக்கலம் புகும் ஜோடி அமர்ந்து சிந்தித்து இரண்டு குடும்பங்களின் மனக்கொந்தளிப்பினூடாகத் தங்கள் காதலை வெற்றிகொள்ளத் தேவையில்லை என்று முடிவெடுத்து அவரவர் அகம் திரும்புகிறார்கள். இறுதியில் உணர்வுப்பெருக்கெடுக்கும் க்ளைமாக்ஸ் சுபமாக முடிவடைவதாக இப்படி நல்லவர்சூழ் உலகாய் இருந்திராதா இது என்று அன்றைக்கும் ஏங்க வைத்தது. இன்றைக்கும் அதே ஏக்கம் அதேபோல அப்படியே இருந்தாலும் சினிமா ஜிகினா பொய்நிஜம் என்ற அளவில் மக்கள் கொண்டாடினார்கள்.

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்…

கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்…

பழனிபாரதியின் வரிகள் பைத்தியமாக்கின. இளையராஜா ருத்ரதாண்டவம் ஆடினார். அய்யா வீடு திறந்து தான் கிடக்கு பாடல் கடல் பாடல்கள் வரிசையில் கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும் தாலட்டுதே வானம் என இளையராஜாவின் சூப்பர்ஹிட்களைக் கூடுதலாக்கிற்று. இது சங்கீதத் திருநாளோ ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே ஆனந்தக் குயிலின் பாட்டு ‘ஓ பேபி பேபி’ எனப் பலரகம் பலவிதம் என்று எல்லையில்லா இசையின்பத்தை உண்டாக்கினார் ராஜா.

ஸ்ரீவித்யா மணிவண்ணன் சிவக்குமார் ராதாரவி தலைவாசல் விஜய் கேபிஎஸ்ஸி லலிதா சார்லி தாமு என எல்லோரும் உணர்ந்து நடித்திருந்தார்கள். அதுவரைக்குமான இளவட்ட முன்பின் மீறல்களை எல்லாம் இந்த ஒரு படம் மூலமாகத் துடைத்தெறிந்தார் விஜய், எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் பேசும் கண்களால் ரசிக மனங்களை எழுதிவாங்கினார் நடிப்பரசி ஷாலினி. பின்னணி இசைக்கோர்வைகள் விதவிதமான இசை ஏற்பாடுகளுடன் திரும்பத் திரும்பக் கையெழுத்திட்டுப் பழகுகிறாற்போல் இசையை உளியாக்கி செதுக்கியது என்றால் மிகையல்ல.

படத்தின் உயிர் நாடியாகவே கடைசி அரை மணி நேரம் விளங்கியது. உண்மையாகச் சொல்வதானால் விசு டைப் படங்களில் ஒன்றாக மிகச் சாதாரணமாகக் கடந்திருக்க வேண்டிய படம்தான் காதலுக்கு மரியாதை. என்ன ஒன்று இளையராஜா மந்திரித்துவிட்டதும் காண்பவர் எல்லாம் கண்கள் கலங்கி அன்பே கடவுள் என்றெல்லாம் முணுமுணுத்துக்கொண்டு சரி போனால் போகிறது ஒரே ஒரு படம்தானே ஓடிவிட்டுப் போகட்டும் என்று 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 19இல் வெளியான படம் 98 தீபாவளிக்குத்தான் தூக்கினார்கள்.

 

 

 

 

 

 

 

காதலுக்கு மரியாதை – ஒருமுறைப்பூ