மணிரத்னத்தின் வருகைக் காலம் நடுமத்திய எண்பதுகள். நாயகன் அவரது திரைநதியின் திசைவழியைத் தீர்மானித்துத் தந்தது. நிலம் என்பது மனிதனுக்கு இந்தப் பிரபஞ்சத்துக்கும் வாழ்வதற்கும் இடையிலான பற்றுக் கோடாக எப்போதும் விளங்குவது. சொந்த உடலைச் சொந்தம் கொண்டாடுவதைப் போலவே ஊரை இறுக்கமாகத் தழுவிக் கொள்ளுகிறான். எந்த மனிதனும் இதற்கு விதிவிலக்கல்ல. பிறந்த ஊர், வளர்ந்த வீதி, பக்கத்து வீடு, படித்த பள்ளி, எனக் காலம் நினைவுகளாகவும், ஞாபகங்களாகவும் அவரவர் வசம் அலைதீராக் கடலாகிறது.
மொழி, இனம், மதம், என மற்ற பற்றுதல்கள் யாவும் மண்ணுக்குப் பின்னால் மட்டுமே அணிவகுக்கின்றன. ஊரை இழப்பது என்பது எத்தனை தொலைவு தன் ஊரிலிருந்து நகர்கிறானோ அத்தனை பதற்றத்துக்குரியவனாகத் தானற்ற வேறொருவனாக, தனக்குப் பிடிக்காத தன் பிரதியாக மனிதனை ஆக்குகிறது. மேலும், ஞாபக வாஞ்சை சொந்த ஊரைச் சுற்றியே அல்லாடுகிறது. இவை எல்லாமும் வாழ்வதற்காக நிலம் பெயர்ந்த யாவர்க்கும் அப்படியே பொருந்துவதில்லை. சொந்த இடம் அன்றி வந்த இடத்தை இனி வாழ்வதற்கான ஒட்டுமொத்தமாக உணர்கிற மனிதன், மேற்சொன்ன பதற்றங்களோடு கூடவே வாழ்விடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் போராடத் தொடங்குகிறான். இருப்பதும் கசப்பதும் குறைந்தபட்சம் வெவ்வேறாக இருக்க வேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச வித்தியாசத்தைக் கூப்பிய கரங்களின் மன்றாட்டுத் தொடங்கி, குறுவாளின் நுனியில் மினுக்குகிற உயிரச்சம் வரை வெவ்வேறாக வாழ நேர்கையில் தன்னைத் துரத்துபவர்களிடமிருந்து பிடிபட்டு விடாமல் இருப்பதற்காகவும், தான் துரத்துபவர்கள் தன்னிடமிருந்து தப்பிச்செல்லாமல் இருக்கவும், ஒரு ஓட்டத்தின் இருவேறு நோக்கங்களோடு களமாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட வேலு எனும் சாமானியனின் கதை ‘நாயகன்’ என்ற படமானது.
நகர்வதற்கு இனி இடமில்லை எனும்போது திருப்பி அடிக்க ஆரம்பிக்கும் எளிய ஒருவனாக கமலஹாசன்.பிழைப்புக்காகப் புகுந்த ஊரில் வாழ்ந்தே ஆகவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்ட கூட்டத்தில் ஒருவன் மெல்ல எப்படி அந்தக் கூட்டத்திற்கான முதன்மை மனிதனாகிறான் என்பது காலம் காலமாக இருந்துவருகிற கதைமாதிரி எல்லா நிலங்கள் மொழிகளிலும் பல்வேறு பட்ட காலங்களிலும் நிகழ்ந்த கதைகளின் வரிசையில் இப்படியான சம்பவங்களை நிகழ்த்திச் சென்ற பலரது வாழ்வியல் சாட்சியங்களும் நிரம்பியிருப்பது சத்தியம்.அப்படியான கதை எதையும் கண்ணுறுகிற பொது சமூகம் தன் பிரதிநிதியாகவே அந்த மைய மனிதனைக் கண்ணுற விரும்பும்.எல்லோருக்கும் தனக்கான ஒருவன் உருவாவதை விரும்ப மட்டுமே இயலும்.திசைகளெங்கும் யாராவது நமக்காக முன்வர மாட்டனரா என்று ஏங்குவது காலமெல்லாம் சாமான்ய மக்களின் திறந்தவிழிக் கனவு தானே
மும்பை என்றழைக்கப்படுகிற பம்பாய் பெருநகரத்தில் வேலு பிழைக்க வழி தேடுகிறான்.அங்கே ஏற்கனவே முரண்பட்டுக் கிடக்கிற சிலபல தரப்புகளுக்கு மத்தியில் எதுவுமற்ற ஏழைமக்களின் தரப்பாக வேலுவும் அவனது ஆட்களும் உருவாகிறார்கள்.நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல என்பது வேலு கூட்டத்தாரின் தாரகமந்திரம்.மருத்துவம் உணவு உறைவிடம் கல்வி என ஆதாரத் தேவைகளுக்கான பெருங்குரலை எழுப்ப முற்படுவதாகக் கதை கட்டமைக்கப் படுகிறது.தனக்கென்று தனித்த சட்ட திட்டங்களுடன் பம்பாய் நகரத்தின் தவிர்க்க முடியாத மனிதனாக உருவெடுக்கும் வேலு தன் பெயருக்கு மாற்றான நிரந்தர அச்சமொன்றை ஏற்படுத்தி அதனைத் தானும் தன் கூட்டமுமாய்ப் பராமரித்து வருவதாகக் கதையின் அடுத்த கிளைத்தல் தொடங்குகிறது.
தன் உயிரைத் தவிர சகல உடல்பாகங்களிலும் அடித்து நொறுக்கப்படுகிற வேலு தன்னையும் தன்னை ஒத்த எளியமக்கள் கூட்டத்திற்கும் பெரும் சவாலாக பயங்கரமான அச்சுறுத்தலாக விளங்கும் காவலதிகாரியைக் கொல்கிற வேலு தன்னிடம் மறு நாள் பரீட்சை என்பதால் தன்னை சீக்கிரம் விட்டுவிடுமாறு கெஞ்சுகிற சின்னஞ்சிறியவளை பாலியல் விலங்கினின்று விடுவித்துத் தன் இணையாளாக்கிக் கொள்ளும் வேலு தன்னிடம் உதவி எனக் கேட்டுக் கெஞ்சுகிற காவல் உயர் அதிகாரிக்குப் பதிலாக அரசியல் செல்வாக்குள்ள மனிதனை வெட்டுகிற வேலு தன் மகளின் வினாக்களுக்கு பதில் சொல்ல இயலாமல் தவிக்கும் முதிய வேலு கடைசியில் தன்னால் கொல்லப்பட்டவனின் மகனது துப்பாக்கி குண்டுக்கு இரையாகும் வேலு என தன் சுயத்தை பெரிதளவு அழித்து நம் கண்களின் முன்னால் வேலு என்ற வேறொரு புதியமனிதனாகவே தோற்றமளித்தார் கமல்ஹாஸன்.
விஜயன் தாரா நாஸர் கார்த்திகா டெல்லி கணேஷ் ஜனகராஜ் சரண்யா நிழல்கள் ரவி ப்ரதீப்சக்தி டினு ஆனந்த் ஆகியோர் தங்கள் அளவறிந்து வழங்கிய நடிப்பு உறுத்தலற்ற மலர்தலாயிற்று.
ஒளிப்பதிவு பிசி ஸ்ரீராம்.
மணிரத்னம் தன் பாணி கதைசொலல் முறையை இந்தப் படத்தில் வடிவமைத்தார் என்றால் தகும்.அதன் திரையாக்கத்தில் ஸ்ரீராமின் பங்கு மெச்சத் தக்கது.ஒரு காட்சியில் கதையின் நாயகன் கோபமாக ஒரு இடத்திற்குச் செல்கிறான் என்றால் மின்னலாய் இருவேறு பகுப்புகளில் அந்த இடத்தை அடைந்தான் என்று காட்டமுனைவது பெருவாரியான திரையாளர்களின் பாணியாக இருந்தது என்றால் மணிரத்னம் அதில் முற்றிலுமாக மாறுபட்டார்.காத்திருத்தல் கணங்கள் இடைக்கணங்கள் நகர்கணங்கள் ஆகியவற்றுக்கு திரையில் இடமுண்டு என்று நிறுவ விரும்பினார்.படிகளில் வரிசையாக ஏறிவருவது காண்பிக்கப் படும் போது ஒன்றாகவும் படியின் ஆரம்பம் நடு மற்றும் சேர்விடம் எனக் காட்டும் போது வேறொன்றாகவும் இருந்தே தீரும் என்று நம்பினார்.இதனை அவர் பகல் நிலவு படத்தில் இருந்தே தொடங்கினார் என்றாலும் நாயகன் அதை அவருடைய முத்திரையாகவே நிலைநிறுத்திற்று.ராமச்சந்திரபாபு அதை உள்வாங்கி பகல் நிலவு படத்தில் செய்ததை விட ஸ்ரீராம் நாயகனிலும் பின்னதான மணிரத்னத்துடன் கூட்டு சேர்ந்த படங்களிலும் அழகாக அதனை எடுத்தளித்தார் எனலாம்.
பெரிய கட்டிடத்தின் வாசலில் இருந்து கூட்டமாய் ஜனங்கள் நின்றுகொண்டு அய்யா எனக் கத்தி அழைக்கும் போது சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும் பெரியவர் பிறகு மாடி அறையிலிருந்து வெளிப்பட்டு கூடத்தில் நடந்து படிகள் முழுவதிலும் இறங்கி வந்து ஜனங்களை நெருங்கும் வரை துண்டு துளி விடாமல் காட்சியனுபவமாகக் கிட்டியபோது மக்கள் அதனைப் பெரிதும் ரசித்தார்கள்.
புலமைப்பித்தன் எழுதிய பாடல்கள் சாகாவரம் பெற்றன.நீ ஒரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம் பாடல் தமிழ்ச்சமூகத்தின் குரல்பறவையாகவே இன்னும் மன வானமெங்கும் பறந்து திரிகிறது.நான் சிரித்தால் தீபாவளி இன்னொரு மறக்க இயலாத முத்து.தென் பாண்டிச் சீமையிலே நாயகன் படத்தின் கைரேகை போல மாறி ஒலித்தவண்ணம் இருக்கிறது.அந்திமழை மேகம் தங்க மழை தூவும் கூட்டப் பாடல்களின் மழைப்பாடல்களின் வரிசைகளில் தனக்கென்று தனியிடங்களைப் பெற்றிருக்கிறது.நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே இன்றளவும் இசை ஞானியின் ரசிகர்கள் எண்ணிக்கையை அதிகரித்த வண்ணம் உயிர்க்கிறது.
பின்னணி இசை இந்தப் படத்தின் உயிர் பதுங்கிய கிளி.சொல்லித் தீராத மகத்தான கோர்வைகளுக்காகவே இன்றும் திரும்பித் திரும்பிப் பார்க்கப்படுகிற படங்களில் நாயகனுக்கு முக்கிய இடமுண்டு. இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் எப்போதும் இடம் பெறக் கூடிய தமிழ்ப் படங்களில் ஒன்று நாயகன்.