இருபது ஆண்டுகளுக்கு முன்னால் மணிரத்னம் உருவாக்கிய இருவர் தமிழ் சினிமாவின் நெடுவரலாற்றில் நினைவுகூரத்தக்க ஒரு முக்கிய சினிமா. புனைவுக்கும் நிஜத்துக்கும் நடு இழையை நிரடுவதன் மூலம் சிற்சில இடவல மாற்றங்கள் சாத்தியப்படும். அதனூடாக, ஒரு சிறப்பான திரைக்கதையை எழுதிவிட முடியும் என்பதற்கான உதாரணம் ’இருவர்’. பயோபிக் எனப்படுகிற அப்படியே தனிமனித வரலாற்றைத் துல்லியம் குன்றாமல் திரைப்படுத்துகிற படங்கள் யூகத்துக்கு அப்பாற்பட்ட சலிப்பொன்றை நிகழ்த்துவது தவிர்க்க முடியாதது. பாரதியின் வாழ்க்கையைப் படமாக்கும்போது சுதந்திரத்துக்குப் பின் அமைந்த அமைச்சரவையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார் என்று எடுக்க முடியாது. அல்லது அப்படி எடுப்பதற்கான கதா நியாயத்தைச் சரிவரச் செய்யவாவது வேண்டும். புனைவென்பது இனி நிகழப்போகும் உண்மையாகக் கூட இருக்கலாம் என்பது அதன் வசீகரம்.
கொட்டை எழுத்துக்களில் இது உண்மைக் கதை அல்ல என்றுதான் படத்தை ஆரம்பித்தார் மணிரத்னம். புனைவு இங்கே திருத்தம் செய்யப்பட்ட உண்மையாக இருந்தது. மகா மனிதர்களின் வாழ்வை அவற்றின் பக்கவாட்டுப் பின்புலங்களுக்குள் சென்று பார்ப்பதான நுட்பமான அனுபவமாக இருவர் படத்தைச் சொல்ல முடியும். Nuances எனப்படுகிற நுண்வெளிகளை எல்லாம் அழகான மாலை போல் கோர்த்திருந்தார் மணிரத்னம். சர்வ நிச்சயமாய் இருந்த ஒருவரும் அப்போது விஞ்சிய ஒருவரும் மொத்தத்தில் ஆகச் செல்வாக்கான இரண்டு நபர்களே இருவர். மன ஓட்டங்கள், பாவனைகள், பழக்க வழக்கங்கள், முகக் குறி, மற்றும் தனக்கு மிக நெருக்கமானவர்களுக்கு மட்டும் கிடைக்கச் செய்கிற சொந்த உளவியலின் அசல் வெளிப்பாடுகள். இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து வழங்கினார் இயக்குனர்.
ப்ரகாஷ் ராஜ் மற்றும் மோகன்லால் இருவருக்குமிடையிலான நட்பும் நெருக்கமும் மெல்ல விரிசலாக மாறுவதாகட்டும் முரண்களும் அடுத்தடுத்த நகர்தல்களும் பிரிதலை நோக்கி இருவரையும் செலுத்தும் போது கையறு நிலையில் தவிக்கும் மௌனமாகட்டும் உறவுகளும் திசைகளும் வெவ்வேறான பிறகு யதார்த்தமான சந்திப்புக்களின் எதிர்பாரமையைக் கண்களில் பிரதிபலிப்பதாகட்டும் கடைசியில் ஒருவரை ஒருவர் இழந்த பிறகு தனியே தவிக்கும் தமிழ்ச்செல்வனாக ஆர்ப்பரிக்கும் மனதின் நினைவுகளின் அலையாட்டத்தில் தானும் தனிமையுமாய்த் தகிக்கும் நட்பின் வெம்மை தாளாமல் தவித்துருகுவதிலாகட்டும் ப்ரகாஷ் ராஜ் தனக்குக் கிடைத்த பாத்திரத்தின் நுட்பமான குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதில் வென்றார் என்றால் தகும்.
உடனிருந்த நண்பனை எதிராட வேண்டிய நிர்ப்பந்தம் தொடங்கி விதியின் வழி நகரும் நதியென்றே தன் வாழ்வு மீதான பற்றுதலைக் கொண்ட ஆனந்தனாகத் தன் கேசம் தொடங்கிக் கண்புருவம் வரைக்கும் உடல்மொழியாலும் முகவன்மையாலும் பாத்திரத்துக்கு நியாயம் செய்தார் மோகன்லால்.மேலும் அவரது இதழ்களும் ஓரக்குறுநகையும் கூட இந்தப் படத்தில் பெருஞ்சுமை கடத்திற்று என்பது நிசம்.அடுத்த நிலத்தின் தமிழ் உச்சரிப்பும் எல்லாவற்றிலும் வென்றான் என்று கோடியில் ஒருவனுக்குக் கிடைக்கும் பெருவரம் தன் வாழ்வு என்பதை உள்ளார உணர்ந்த நாயகராஜாவாக மோகன்லால் ஆனந்தனாகவே மாறினார்.
நாசர், ஐஷ்வர்யா ராய், தபு, ரேவதி, ராஜேஷ், மேஜர் சுந்தரராஜன், என்று ஆனமட்டும் தங்கள் பிரபல செல்வாக்கை அழிக்க முயற்சித்து வென்ற நட்சத்திரப் பட்டாளம் இந்தப் படத்தின் பலம். சாபு சிரிலின் கலை இயக்கம். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, சுகாசினி, சுசி கணேசன் ஆகியோரின் வசனங்கள், வைரமுத்துவின் கவிதைகள் மற்றும் பாடல்கள் இவற்றோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசைத்தவற்றில் அதுவரைக்குமான ஆகச்சிறந்த படம் என்று நான் இருவரை முன்வைப்பேன். ஒரு கடிதத்தின் தபால் தலையைப் போல இந்தத் திரைப்படத்தின் மகா அடையாளம் இசை. எழுத்தின் மூலமாக மிக எளிதாகத் தொகுக்கப்பட்ட ஒரு நெடிய காலத்தின் உப அடுக்குகளை எல்லாம் நிரூபிக்க வேண்டிய பெரும் பொறுப்பு, கலை மற்றும் ஒளிப்பதிவு இரண்டு துறைகளைச் சாரும். ஒரு உப்புக் கூடினாலும் சுவை கெடும் என்கிற அளவுக்கு பயப் பெருக்கெடுத்தலாகவே இப்படியான படங்களுக்கு இசைக்க முடியும். பாடல்கள், வரிகள், பாடல் இசை, பாடிய குரல்கள், பின்னணி இசை, என எல்லாமுமே இட்டு நிரப்பாமல், முடிந்தவரை முயன்று பார்க்காமல், பார்ப்பவர்கள் கண்ணைக் கட்டி, மாபெரிய அனுபவ நம்பகத்தைத் தன் இசைக் குறிப்புகளால் நிகழ்த்தினார் ஏஆர்ரகுமான்.
இசை என்பது உண்மையேதுமற்ற பொய். புனைவு என்று வருகையில் ஒரு செவிலித் தாய் போல், தேவைக்கு அதிகமான ஆதுரத்தைப் படைப்பின் மீது பொழியத் தலைப்படுவது அதன் இயல்பு. சரிபார்த்தலுக்குப் பின்னதான யூகத்துக்கு அப்பாற்பட்ட மற்றும் தவிர்க்க முடியாத நேர்தல் பிழையாகவே இசையின் திரிபுகள் பலமுறை நிகழ்ந்ததை உணர முடியும். அந்த அடிப்படையில் இந்தியத் திரையிசை முயல்வுகளில் அரிதான உன்னதங்களில் ஒன்றெனவே ’இருவர்’ ஆல்பத்தைச் சொல்ல முடியும். புனைய முடியாத ஒற்றைகளில் ஒன்றுதான் குரல் என்பது. மனோ, ஹரிஹரன் ஆகிய இரு குரல்களை இந்தத் திரைப்படம் கையாண்டிருப்பதன் திசைவழிகளை ஆராய்ந்தால் ஒரு அபாரம் புரிபடும். பிரகாஷ்ராஜ் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், அவரது கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருந்தால் இந்தப் படம் இன்னும் சிறந்திருக்கும் என்பது என் எளிய அபிப்ராயம். நாடறிந்த நிஜங்களைக் கையிலெடுத்துக் கொண்டு திரையரங்கத்துக்கு வந்த பொதுமக்கள் திருத்தி அமைக்கப்பட்ட புனைவின் மலர்களை ஏமாற்றங்களாக உணர்ந்தது இந்தப் படத்தின் வணிக வருகையைத் தோல்விக்கு உட்படுத்தியது. ஆனாலும் உன்னதம் அடுத்த காலத்தின் ஆராதனையாக இந்தத் திரைப்படத்தை மாற்றி வைத்திருக்கிறது.
இருவர் நிஜத்தின் நிழலுரு