சரண் பாலச்சந்தரின் பள்ளியிலிருந்து வந்த இயக்குனர். மாபெரும் மர நிழலிலிருந்து அடுத்தது தழைப்பது அரிது. சரண் அரிய வைரம். தனக்கென்று தனித் திரைமொழி கண்டவர் சரண் அவரது படங்கள் அவற்றின் பின்புலங்களுக்காகவே கொண்டாடப்பட்டன. பாலகுமாரனின் நாவல்களில் இந்தத் தன்மையை நம்மால் உணர முடியும். சரண் திரைக்கதையை வழங்குவதில் செய்துகொண்ட நல்லதொரு வித்யாசம் இத்தகைய கதாசொலல் முறை. யாருடைய கதையில் என்னவெல்லாம் எப்படி நிகழ்ந்து என்னவாக நிறைகிறது என்பதில் எங்கே நிகழ்கிறது என்ற ஏரியாவைத் தன்னுடைய ஸ்பெஷாலிடி சர்க்கிளாகவே ஆக்கிக்கொண்டார். சரண் ரசிகர்களின் மனம் அந்தப் புள்ளியில் ஒன்றிப்போன பிற்பாடு கதை வெண்ணையில் இறங்கும் ஊசியெனவே வழுக்கிக் கொண்டு சென்றாக வேண்டுமே அது நியதியல்லவா வேறுவழி ?
அண்ணன் பன்னீர்செல்வம் வக்கீல் (ரகுவரன்). தங்கை பானு மருத்துவக் கல்லூரி மாணவி (சிம்ரன்). இருவரும் பேசிக்கொள்வதில்லை. இவர்களின் வீட்டு மாடி போர்ஷனில் குடியிருப்பவன் பட்டதாரி சங்கர் (ப்ரஷாந்த்). சங்கரும் பானுவும் நெருக்கமான சினேகிதர்கள். அவளிடம் தான் சரிகாவை காதலிப்பதை சொல்லி உருகுபவன் சங்கர். அவன்மீதான தன் காதலை சங்கருக்கே தெரியாமல் தனக்குள் உடைந்து சிதறி நொறுங்குகிறாள் பானு. அவனோடு இருந்துகொண்டே அவன் மீதான தன் காதலை வென்றெடுப்பதற்கான எல்லாமும் செய்கிறாள் பானு. இதை கொஞ்சமும் யூகிக்காதவனாக நட்பும் காதலுமாய்த் தனித்தேங்கும் சங்கர். அவர்கள் வழக்கமாய் பயணிக்கும் பேருந்து வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் மனிதர்கள் தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்துவிடத் தயாரான அண்ணன் எதுவுமறியாத சரிகா எல்லாம் தெரிந்த பானு காதலுக்காகக் கசிந்து கரையும் சங்கர் என மெல்லிய முடிச்சுகளும் நல்ல திருப்பங்களும் திரை மீது லயிக்கும் கண்களும் பதைபதைத்துக் காத்திருக்கும் மனங்களுமாய் சரண் எழுதி இயக்கிய பார்த்தேன் ரசித்தேன் நல்ல முறையில் சொல்லப் பட்ட அழகான காதல் கதை.
பரத்வாஜ் தேர்ந்த இசைஞானமும் பாடல்களை வழமையிலிருந்து விலகி ஒலிக்கச் செய்யும் வல்லமையும் மிகுந்தவர். அவருக்குப் பெரிய பலம் வைரமுத்துவின் சொந்தச்சொற்கள். சரண் முன்வைத்த சூழல்களுக்கு பரத்வாஜ் உண்டுசெய்த பாடல்கள் நல்லிசை மழையாய்ப் பொழிந்தன. தமிழ் திரையிசை சரிதத்தில் மிக உன்னதமான இடம் பரத்வாஜூக்கு அவரது பாடல்களின் வழி கிட்டியது. இந்தப் படம் அவைகளுள் வைரவைடூர்யங்கள். பின் இசைக் கோர்வைகள் உடனொலிகள் இடையிசை இழைதல்கள் உப குரல்கள் என அதுவரைக்குமான திரையிசையைத் தன்னாலான அளவு மடைமாற்றவே செய்தன பரத்வாஜின் பாடல்கள். வெள்ளத்தைத் திசை திருப்புவதை விட பெருங்காற்றைத் திசைதிருப்புவது கடினம். அந்த வேலையைத் திறம்படச் செய்தார் பரத்வாஜ். இந்தப் படத்தின் பின்னணி இசைப்பேழை இன்றும் கேட்கத் திகட்டாத நல்மன மருந்தெனவே எஞ்சுகிறது.
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ பார்த்தேன் பார்த்தேன் ரசித்தேன் ரசித்தேன் கிடைக்கலை கிடைக்கலை பூவே புன்னகை தின்னாதே பாடல்கள் தேன் பாட்டில் தேன் டை தேன் மழை தேன் இத்யாதிகளாகவே ஒலித்தன. இன்னும் தொடர்கின்றன.
இந்தப் படத்தின் பலம் சிம்ரன். நடிப்பில் ராட்சஸத்தை உணரச்செய்தார் சிம்ரன். லைலாவும் பிரஷாந்தும் சிம்ரனுக்கு முன்னால் சின்னஞ்சிறிய பொம்மைகளைப் போலானார்கள். ரகுவரன் வினுச்சக்கரவர்த்தி ஜெய்கணேஷ் ஃபாத்திமா பாபு வையாபுரி சார்லி தாமு ஆகியோர் அவரவர் பங்கை நல்முறையில் நேர்த்தினர். ஒரு பாடலுக்கு ஆடிச் சென்றாலும் லேசான வில்லத்தனத்தை மீறித் தன் புன்னகையால் கவர்ந்தவர் ராகவா லாரன்ஸ்
பார்த்தேன் ரசித்தேன் : தேன் தீராக் கலயம்
முந்தைய தொடர்: https://bit.ly/2X6wlqt