சினிமாவில் ஆகச்சிறந்த வில்லன் சூழ்நிலைதான். மனித வில்லத்தனங்கள் யாவற்றையும்விட சூழ்நிலை தன் கருணையற்ற முகத்தோடு வாழ்க்கையை ஊடாடும்போது அபரிமிதமாய்ப் பெருகுகிறது. சினிமா கதைகள் என்றில்லை எந்தக் கலைவடிவமானாலும் கூட மகிழ்ச்சியை சாட்சியம் சொல்கிற படைப்புகள் குறைவாகவே காணப்படும். சோகத்தை துன்பத்தை சாட்சியம் சொல்கிற ஏராளமான படைப்புகள் காணப்படுவது கலையின் தன்மை. துன்பத்தை மீபார்வை பார்க்கிற மனிதன் அன்பை கருணையை நன்மை தீமைகளை எல்லாம் ஆழ்மனதின் கண்களால் காண முயலுகிறான். கலை துன்பத்தின் சாரதியாகவே செயல்படுகிறது. கலையின் பயண சேர்விடம் பண்பாடாகிறது.
வீட்டைக் கட்டிப் பார் என்ற முதுமொழியின் கலையிருப்பு அலாதியானது. மேலோட்டமான நாடக முயல்வுகள் தொடங்கி மறக்க இயலாத படங்கள்வரை இந்த ஒற்றை வரியின் அலைதலும் அடைதலும் மெச்சத்தக்கது. பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான ‘வீடு’ திரைப்படம் அன்றைய நடுத்தர வர்க்கத்தின் பொதுமுதல் கனவான சொந்த வீடு கட்டி வாழ்தல் எனும் பெரும் பற்றுதலின்மீது தன் வினாக்களை நிகழ்த்திய படம். கலை மக்களை அச்சுறுத்துவதன் மூலமாகப் படிப்பிக்கும். படிப்பித்தலின் வழி அச்சுறுத்தல் விலகி வெறுமை பூக்கும். அத்தகைய வெறுமைக்கு அப்பால் கிட்டக்கூடிய வெளிச்சம் இன்றியமையாத வாழ்க்கை இடுபொருளாகவே மாறும்.
நீதிக் கதைகளின் அதே பொறுப்பேற்றலுடன் தன் படத்தை ஆக்கினார் பாலு. குடும்பம் என்பது நாடு எனும் மாபெரிய அம்சத்தின் மாதிரியாகும். அப்படியாக வீடு என்பது சுதா எனும் ஒற்றை மனுஷியின் பிரச்சினையின் படிநிலைகளின் வழியாக அந்தக் காலகட்டத்தில் நாடு எவ்வாறான அரசியல் உச்ச நீச்சங்களுக்கு இடையிலான பரவலைத் தன்னகத்தே கொண்டிருந்தது என்பதை விளக்குகிற மாதிரியாகவும் கொள்ள முடிகிறது. வீடு திரைப்படம் சமூக அரசியலின் நுட்பமான அலசல்களுக்காகவும் முக்கியத்துவம் கொண்டதாகிறது. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் கருணையற்ற சமரசங்களுக்கெதிரான பலவீனமான போராட்டத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் பதிவுசெய்ய முயன்று அதில் வெற்றியும் கண்டார் பாலுமகேந்திரா.
பாலுமகேந்திராவின் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்பேற்றல்கள் மெச்சத்தகுந்த தரத்தில் அமைந்தன. அகிலா மகேந்திரா எழுதிய கதையை வீடு என்று திரைப்படமாக்கிய பாலுவுக்கு சரிநிகர் உபயோகமாகவே தன் பின்னணி இசையை வழங்கினார் இளையராஜா. சொக்கலிங்க பாகவதர், அர்ச்சனா, பானுச்சந்தர், செந்தாமரை ஆகியோரின் நிறைநடிப்பு இப்படத்திற்குப் பெரும்பலம் வீடென்பது கட்டிடம் அல்ல. வீடென்பது குடும்பம். மாதாமாதம் ஒரு தேதிக்கு முன்பின்னாய்க் கிளைத்து இரண்டுபடும் நடுத்தரவர்க்கத்தின் சம்சாரநதியை ஒரே சீராக்கும் மாமருந்து சொந்த வீடு. ஒரு பிடி மண்ணைக்கூட இவ்வுலகிலிருந்து எடுத்துச் செல்ல முடியாதென்ற வேதாந்த சித்தாந்தங்களுக்கு மத்தியில் தன்வழி தோன்றியவர்கள் வசம்விட்டுச் செல்வதற்கான கட்டிடக்கனாவின் பேர்தான் சொந்த வீடு. அதன் சாத்திய அசாத்தியங்களுக்கு நடுவே அல்லாடுவதன் மீதான எந்த ஆட்சேபமும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் எடுத்துக்கொள்ள பழகும் பெருங்கூட்டத்தின் மறுபெயர்தான் சாமான்ய சனம்.
தன் தங்கையுடனும் தாத்தாவுடனும் வாடகை வீட்டில் வசித்து வரும் சுதா தாத்தாவுக்கு சொந்தமாக இருக்கும் இரண்டு மனைகளில் ஒன்றை விற்று மற்றதில் தங்களுக்கென்று சொந்தமாய் ஒரு வீட்டைக் கட்டி அதில் குடியேறிவிட வேண்டுமென்ற லட்சியத்துக்கு வருவதிலிருந்து தன் திரைப்படத்தைத் தொடங்கும் பாலுமகேந்திரா கட்டிடமாக ஒரு வீட்டின் அடுத்தடுத்த நிலைகள் பூர்த்தி வரைக்குமான ஏற்றத்தாழ்வுகள் மனித துரோகங்கள் மரணங்கள் கைவிடுதல் பொய் புரட்டு கடைசியில் எதிர்க்க முடியாத மாபெரும் யானை போல் நீ கட்டி இருக்கும் வீடு இருக்கிற அந்த இடத்தை மெட்ரோ வாட்டர் ப்ராஜெக்டுக்காக அரசாங்கம் கையகப்படுத்திவிட்டது. இதில் வீடு கட்டியது செல்லாது என்று அரசாங்க யானையின் ஒரு முகம் அவளை விரட்டுகிறது. தனக்கு அங்கே வீடு கட்ட அனுமதி அளித்த அதே யானையின் மறுமுகம் அவளைக் கைவிடுகிறது. தன் வீட்டைத் தனக்கே தந்தாக வேண்டுமென்று கையறு நிலையோடு அதே யானையின் கடைசி முகமான நீதிமன்றத்தில் மன்றாடிவிட்டுக் காத்திருப்பதோடு நிறைவடைகிறது பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம்.
வாழ்க்கையின் இடவல மாற்றங்களும் அவற்றின் வருகையின் முன்பின் வித்யாசங்களும்தான் மனித அனுபவத்தின் சாரமாய் எஞ்சுகிறது. சின்னஞ்சிறு வயதில் சமூகத்தின் தனி மனித நம்பகத்தையும் கூட்டு நம்பகத்தையும் ஒருங்கே இழந்த பிறகு கசந்து வழியும் இக்கதையின் முற்றுக் கணத்தினை எதிர்கொண்டபடி வாழ்க்கையை வெறிக்கும் இந்தக் கதையின் நாயகியை மாத்திரம் அல்ல; எண்ணிலடங்கா சுதாக்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்துகொண்டே இருப்பதுதான் மனசாட்சியற்ற மனிதர்களின் சுயநலம். விதிகளைக் கடுமையாக்குவதும் சட்ட திட்டங்களை மேலும் காத்திரமாக்குவதும் தவிர்த்து வேறொன்றும் செய்வதற்கில்லை. இந்தப் படத்தின் ஆகச்சிறப்பாக இதன் க்ளைமாக்ஸ் காட்சியை சொல்ல முடியும்.
செந்தாமரையை வந்து சந்தித்து தான், ஏமாற்றப்பட்டதைக் குமுறலோடு எடுத்துரைப்பார் அர்ச்சனா. உடன் பானுச்சந்தர் இருப்பார். அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று அவர்களை வேறொரு அறைக்கு அழைத்து வந்து அமர்வித்துவிட்டுத் தன் அலுவலக அறைக்குத் திரும்பும் செந்தாமரை தன் கீழ் பணிபுரியும் அலுவலரை வரச்சொல்லுவார். அவர் வந்ததும் செந்தாமரையின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்தது குறித்தும் சட்டவிரோதமாய் அர்ச்சனா வீட்டுக்கு அனுமதி அளித்தது குறித்தும் மெல்லிய குரலில் கடிந்துகொள்வார். அப்போது அந்த அலுவலர் காலில் விழுவதுபோல பாவனை செய்வார். அவரே இத்தனை சீக்கிரம் கண்டுபிடிக்கப் படுவோம் என நினைக்கவில்லை என்றும் அதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்ற நப்பாசையில் செய்துவிட்டதாகவும் சொல்வார். லஞ்சம் என்பதனுள்ளே இயங்கக் கூடிய சூது, வன்மம் அடுத்தவர் எக்கேடு கெட்டாலென்ன என்ற துர் எண்ணம் மேலதிகாரியின் கையொப்பத்தைக் கூடத் தானே போலி செய்யுமளவு தைரியம் எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த அறையில் காத்திருக்கும் சுதாவுக்கு சொல்வதற்கு எதுவுமே தன்னிடத்தில் இல்லை எனத் தெரிந்த பிறகும் அவர்களைக் காத்திருக்க வைக்கும் மேலதிகாரி செந்தாமரையின் கையறு நிலை இவற்றோடு படம் முடியுமிடம் ஒரு கவிதை.
இந்தியாவில் எடுக்கப் பெற்ற உலகப் படம் வீடு: வாழ்க சினிமா!
முந்தைய தொடர்: https://bit.ly/2XHLsuY