சினிமா என்பது சுருக்கப்பட்ட கருத்துகளின் சேகரமல்ல. மாறாக அது தருணங்களைத் தொகுத்தளிக்கிறது.

ழான்-லூக்-கோடார்ட்

மலையாள தேசத்தின் நல்ல தங்காள் கதை என்று கூறத்தக்க படம் துலாபாரம். அதே பெயரில் தமிழில் மீவுரு செய்யப்பட்டது. தொழில்முறை நடிகையாக இந்தப் படத்தின் வத்சலா எனும் பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சாரதாவுக்கு இந்தியாவின் சிறந்த நடிகைக்கான தேசியவிருதான ஊர்வசி விருது மலையாளத்துக்காக வழங்கப்பட்டது. பின்னரும் இருவேறு படங்களுக்காக அதே விருதை மீண்டும் பெற்ற திறன் மிளிர் தாரகையான சாரதாவின் மெச்சத்தக்க நடிப்புக்குப் பெயர்போன படம் துலாபாரம். வாழ்வில் சில படங்களை சின்னஞ்சிறு வயதில் பார்த்த பிற்பாடு அடுத்தமுறை பார்த்திடவே கூடாது என்ற முடிவில் மனம் உறுதி கொள்ளும். அப்படியான படங்களில் ஒன்றெனவே துன்பியல் ஒவ்வாமை கொண்டு தனித்து இருத்திய படங்களில் துலாபாரத்துக்கு முக்கிய இடம் உண்டு.

மானுட வாழ்வின் ஆகப் பெரிய சிக்கல் மிருகங்களைக் கையாள்வதோ விதி அல்லது வாழ்வின் சூதாட்டத்தை எதிர்கொள்வதோ அல்ல. அவற்றைவிடக் கடினமானதும் எவராலும் எளிதில் வரையறுத்துவிட முடியாததுமான ஆகச்சிக்கலான காரியம்தான் சக மனிதர்களைக் கையாள்வது. உலகம் தோன்றிய தினத்திலிருந்து இன்றுவரை அன்பாலும் நட்பாலும் மிளிர்ந்த கதைகளை ஒருபுறம் இட்டால் மறுபுறம் துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் அழிந்த கதைகளை இன்னொரு புறம் குவிக்கலாம். அப்படி எல்லா நன்மை தீமைகளுக்கும் அப்பால் அவரவர் வாழ்வை வாழ்ந்து செல்வதற்கான வாய்ப்புத்தான் இந்த உலகில் மானுட வருகை என்பதன் சாரம். இது ஒருபுறமிருக்க எந்தத் தவறுமே செய்யாமல் சக மனிதர்களின் சதியால் அழிந்த ஒரு குடும்பத்தின் கதைதான் துலாபாரம். தன் கணவனை இழந்தது விதியின் செயல் என்றால் சத்தியம் தவறாத தந்தை சொத்துக்களை எல்லாம் இழந்தது நம்பிய வக்கீல் கைவிட்டதன் பின்னாலான துரோகத்தின் பலன். வாழ்வெனும் நாகம்விடாமல் துரத்தத்தான் பெற்ற குழந்தைகளைத்தானே கொன்றுவிட்டுத்தானும் சாகத் துணிகிற வத்சலாவை சட்டத்தின் பிடிமுன் நிறுத்தி வழக்காடி மரண தண்டனைக்கு ஆளாக்குவதே துலாபாரத்தின் கதை. அதிகாரம் பணம் செல்வாக்கு வளைந்து கொடுக்கும் சட்டம் எதற்கும் ஆதாரத்தை நாடிக் காத்திருக்கும் நீதி சத்தியத்திற்கு நிகழும் சோதனை எதிர்பாராத விதியின் சதி தொடர்ந்து விபரீதத்தை நாடும் அபலைப் பெண்ணின் கையறுநிலை இவற்றைக் கண் முன் நிறுத்திற்று துலாபாரம்

டி.எஸ்.பாலையா, ஏவி.எம்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன் ஆகிய நால்வரோடு காஞ்சனாவும் ஈடு கொடுத்து நடித்திருந்தார் என்றாலும் இந்தத் திரைப்படம் சாரதாவின் பேராற்றலைப் பறைசாற்றுகிற படம். சாரதாவின் அபாரமான நடிப்பின் முன்னே மற்ற எல்லாம் சற்றே தள்ளிக்குறுகவே செய்தது. வாழ்வின் மீதான அச்சத்தை பெண் என்பவளுக்கு இந்தச் சமூகம் வெண்மையும் கருமையுமாகக் கை நிறைய அள்ளி அள்ளிப் பூசக் காத்திருக்கும் துன்பத்தை அலட்சியத்தை அயர்ந்து சலித்த பிறகான விரக்தியை கருணையற்ற இறுதிமுடிவொன்றை எடுத்த பிறகு அவள் கண்டடைகிற நியாயமற்ற ஞானத்தை எனப் பண்பட்ட தன் நடிப்பால் கொண்ட பாத்திரத்துக்குத் தன்னால் ஆன மட்டிலும் நியாயம் செய்தார் சாரதா.

ஜி.தேவராஜன் கேரளத்தின் இசை வைரம். தமிழில் வெகு சில படங்களே இசைத்திருக்கிறார். அவற்றில் கமல்ஹாசனைப் பாடகராக்கிய ஞாயிறு ஒளிமழையில் இடம்பெற்ற படமான அந்தரங்கம் படமும் குறிப்பிடத்தக்கது. பூஞ்சிட்டுக் கன்னங்கள் என்ற துலாபாரம் படத்தின் பாடல் காலம் கடந்து ஒலித்து வருவது. இதே படத்தின் தொடக்கப் பாடலான வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகந்தானா என்ற பாடலை அந்தக் காலத்தின் ஃப்யூஷன் மற்றும் செமி ஜிப்ஸி வகைமைகளில் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

துலாபாரம் படத்தை அதன் கதையை எழுதியவர் தோப்பில் பாஸி. இயக்கியவர் ஒளிப்பதிவு மேதை வின்செண்ட். இசை தேவராஜன் பாடலெழுதியவர் கண்ணதாசன்.

இந்தியத் திரையில் பதிவான துன்பியல் உச்சம். துலாபாரம்.

முந்தைய தொடர்: https://bit.ly/30kHWEu