திரைப்படக் கலைதான் இருப்பதிலேயே விபரீதமான கலை. நீங்கள் விரும்புவதை ஒருபோதும் உங்களுக்கு அது தராது. மாறாக அது உங்களுக்கு விரும்புவது எப்படி என்பதைக் கற்றுத் தருகிறது.
-யூகோஸ்லோவிய அறிஞர் ஸ்லாவோஜ் ஜிஸெக்
நாடறிந்த உலகறிந்த கதையின் காலங்காலமாய்த் தொடரும் வெற்றிக்கான காரணம் என்ன? அப்படியான வெற்றியின் பின்னால் ஆழ்ந்திருக்கக்கூடிய மந்திரம் அல்லது சூட்சுமம் என்ன?அப்படி எதுவுமே இல்லை என்று மறுக்க முடியாதல்லவா? அப்படியென்றால் ஏன் அப்படி ஜெயிக்கிறது அந்தக் கதை? எந்தக் கதை? இரட்டை வேடக் கதை ஆள்மாறாட்டக் கதை நல்ல வெர்ஸஸ் கெட்ட நல்ல வெர்ஸஸ் நல்ல கெட்ட வெர்ஸஸ் கெட்ட என்றேல்லாம் எத்தனையோ தூரம் கடந்து வந்த பிறகும் அந்தக் கதைக்குதிரை களையிழக்கவே இல்லை. அப்படிப்பட்ட கதையின் பெருவெற்றிக்குக் காரணம் உலகில் காண வாய்க்கிற சாமான்ய அற்புதமான இரட்டைக் குழந்தைகள்மீது உலகத்திற்கே பொதுவாய் பங்களிக்கப்பட்டிருக்கும் ஆழ்மன ஆசை மற்றும் வியத்தல் காரணமாக அவரவர் மனங்களில் படர்ந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் மீதான மரியாதை. யாருக்குத்தான் பிடிக்காது இரட்டைக் குழந்தைகளை?
ஆச்சர்யம் என்னவெனில் இந்தியாவில் மௌனப்படக் காலத்தில் 1917 ஆமாண்டு உருவான லங்காதகன் என்கிற மராட்டிய நில மௌனப் படத்தில் ஒரே நடிகர் அண்ணா சலூங்கே ராமனாகவும் சீதையாகவும் நடித்ததுதான் முதல் இந்திய இரட்டை வேடப் படமாகக் கருதப்படுகிறது. இரட்டை வேடம் என்பதற்கான திரை தர்க்க நியாயங்களை எல்லாம் மீறியவண்ணமே முதல் படம் உருவாகியது வியப்புக்குரியதுதானே? கடந்த நூற்றிரண்டு ஆண்டுகளில் எத்தனை எத்தனை நடிகர்கள் இரட்டை வேடமேற்று மக்களை மகிழ்வித்திருக்கின்றனர்? எத்தனை பொய்களை நிஜமென்று நம்ப விரும்பச் செய்திருக்கிறது இந்தியத் திரையில் எழுந்த இரட்டையர் கதை?
எந்த அளவுக்கு ஈர்க்கிறதோ அதே அளவுக்கு எளிதில் கடுக்கவும் செய்யும், இது கலைக்கும் பொருந்தும். திரைக்கதை அமைப்பின் சூட்சுமங்கள் இருவேடப் படங்களில் அந்த இரண்டு வேடங்களுக்கு இடையிலான சம்பவ காரண நியாய பொருத்தங்களை கட்டமைப்பதில் பெரிதும் கவனத்தோடு உழைத்தார்கள். நெடுங்காலத்துக்குப் பின்னால் தற்போது லாஜிக் எனப்படுகிற தர்க்க நியாயமோ பின்புலக் காரணமோ எதற்கும் பெரிதாக மெனக்கெடாமல் இதோ பார் இதான் படம் உனக்கு என்ன தோணுதோ நீ யூகிச்சிக்க தம்பி என்று கைகளை உயர்த்தியபடி விலகினார்கள். தற்போதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகருகையில் அதற்கே உரித்தான சிக்கலுடன் இரட்டைவேடப் படங்கள் தத்தமது அடுத்த காலப் பயணத்தினுள் அலையாடும் என்பது திண்ணம்.
இந்தியத் திரையுலகின் இரட்டை வேடப் படங்களின் பொதுவான தர்க்க நியாயம் ஆள் மாறாட்டம். இவன் அவனாகி அவன் இவனாதல் முரணுக்கு அப்பால் சுபம் இதைப் பிரதானமாகக் கொண்டே படங்கள் எழுந்தன. இன்றளவும் இடர் அதிகமற்ற சினிமா முயல்வாக மினிமம் கியாரண்டி சினிமா என்று போற்றப்படுகிறது இருவேடக் கதை சினிமா. உளவியல் காரணங்கள் ஒருபுறம் சரித்திரத்தின் புள்ளிவிபரம் மறுபுறம் நெடிதுயர்ந்தோங்குகிறது இரட்டை வேடக் கொடி.
டிவி நரஸராஜூ எழுதிய மூலக்கதையை செறிவூட்டி வசனம் எழுதியவர் சக்தி கிருஷ்ணசாமி வாலியும் ஆலங்குடி சோமுவும் எழுதிய பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் வின்ஸெண்ட் சுந்தரம் இணைந்து ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்தை நாகிரெட்டி சக்ரபாணி ஆகியோர் தயாரிக்க இயக்கியவர் சாணக்யா. எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு புதிய பூமி படங்களும் சாணக்யாவின் இயக்கத்தில் உருவானவையே.
என்ன லெட்டர்
அது ரகசியம்
பரவாயில்லை சொல்லுங்க
ரகசியத்தை சொல்ற அளவுக்கு நாம இன்னும் பழகல்லியே
ரகசியத்தை சொல்லுங்க அதிலயே பழக்கம் ஆயிடும்.
இதுவொன்றும் நாயக நாயகிக்கிடையிலான காதல் ததும்பும் வசனம் அல்ல. நாகேஷூக்கும் மாதவிக்கும் இடையே பூத்த உரையாடல் மலர் இது. அந்தக் காலம் வசனங்களின் ஆட்சி தழைத்தோங்கியிருந்ததல்லவா?
ஒரு சூலில் உருக்கொண்ட இரட்டையர் எனும் உண்மை தெரியாமல் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்து வரும் ராமுவும் இளங்கோவும் இடம் மாறும் வரை ராமு தாய்மாமன் கஜேந்திரனின் அடிமையாக அச்சத்தில் ஆழ்ந்து வளர்கிறான். இடம்மாறிவந்த இளங்கோ மாமனின் கொட்டத்தை அடக்குகிறான். இறுதியில் எல்லோரும் திருந்தி நல்லவர்களாகி குடும்பம் ஒற்றுமையாகிறது சுபம். கதையாக எழுதினால் இதுதான் எங்க வீட்டுப் பிள்ளையின் ஒன்லைன். படமாக எடுத்ததிலும் பாத்திரமுரண்களைக் கொண்டே திரைக்கதையைத் திருப்ப முயன்ற உத்திகளிலும் எடுத்த விதத்தினாலேயே முழுக்க முழுக்க இந்திய கொண்டாட்ட சினிமாவின் ஒப்பில்லா அற்புதமாக மாறியது. இன்றளவும் திரைக்கதையைப் பாடமாகப் படிப்பவர்களுக்கு இந்திய சினிமாவின் ஆழ அகல உயரங்களத்தனைக்குமான எடுத்துக்காட்டு சினிமாக்களில் ஒன்றாக எங்க வீட்டுப் பிள்ளை விளங்குகிறது.
எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும் அதற்கான அர்த்தங்கள் ஆயிரம் என்ற அளவில் 1965இல் நம்பியாரிடமிருந்து சவுக்கை அதாவது அதிகாரத்தைப் பறிக்கிறார். அதை அவர் மீதே திருப்புகிறார் அதிகாரம் எம்.ஜி.ஆர் கைகளுக்கு வந்த பிறகு அதுவரை பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சாமான்ய ஏழை சனங்கள் நிம்மதி பெறுகிறார்கள் ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்’ என்று கிட்டத்தட்ட உணர்ச்சிகளின்மீதான ஆட்டமாகவே அந்தப் பாடலும் எம்.ஜி.ஆரின் ஒவ்வொரு திரை அசைவுகளும் புரிந்துகொள்ளப்பட்டு அதிலிருந்து ஏழு வருடங்கள் கழித்து அவர் சார்ந்திருந்த கட்சியிலிருந்து வெளியேறி அதன் பின்னர் ஐந்தாண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்ந்த போதும் அதன் பின்னரும் இந்தப் பாடல் இந்தப் படத்தைத் தாண்டி வேறொரு வெளியைத் தனக்கென்று உருவாக்கிக் கொண்டது. எம்.ஜி.ஆர் தெற்காசிய அளவில் மாபெரும் பூடகங்களைக் கையாண்ட நட்சத்திர நடிகராக விளங்கினார். அதற்கான சாட்சியமாக இப்படம் திகழ்கிறது. எத்தனையாவது முறை பார்த்தாலும் தன்னைப் புத்தம்புதியதாக்கிக் கொள்ளும் ஏதோவொன்றை இன்னமும் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது ஒரே தோற்றத்தில் இருவர் என்பதன் அதீதத்தில் விளைந்த கோடிமலர்களில் இன்றும் தன் குன்றாவொளிர்தலுடன் மிளிர்கின்ற அதிசயமலர் எங்கவீட்டுப்பிள்ளை.
காலத்தின் மீது கலை நிகழ்த்திய கண்கட்டு வசியம் வாழ்க சினிமா!
முந்தைய தொடர்: https://bit.ly/2XWLzTe