திரைப்பட நடிப்பு என்பதில் மட்டும் தான் நீங்கள் கடினமாக உழைத்தமைக்காகக் கூட விமர்சிக்கப் படுகிற ஒரே ஒரு துறையாக இருக்கும்.வேறு எங்கேயும் கடின உழைப்பென்பது தரமானதாகவும் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது.
– நிகோலஸ் கேஜ்
நடிகர் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்
நிகோலஸ் கேஜ் சொன்ன மேற்காணும் பழமொழிக்கு நிகராகப் பலமொழிகளைச் சொல்வதற்குரிய தகுதிகள் கமல்ஹாஸனுக்கும் உண்டு.
திரைப்படம் என்பது மெனக்கெடுவது எதற்காக என்பதன் வகைமைகள் தான் அவற்றை ஒன்றுக்கொன்று வேறுபடுத்துகின்றன. இயக்குநரின் மனதில் அல்லது கதாசிரியனின் மனதில் பூக்கிற ஒற்றைப் பூவை அப்படியே அவ்வண்ணமே படமாக்குவது எல்லா நேரங்களிலும் சாத்தியமற்றது.திரைப்படம் என்பது கலைகளின் கூட்டுக்களம். அது ஒற்றைக் கலையாகப் பரிசீலிக்கப்படுவது நல்லதோர் ஏற்பாடு.பெரிய கனியை உடைத்தால் கிட்டுகிற பல சுளைகளைப் போல் உள்ளும் புறமுமாய் ஒரு படத்தில் உறைந்திருக்கக் கூடிய உழைத்த கரங்களும் மனங்களுமாய்த் திரளும். கனவின் வலி திரையில் பெயர்க்க சினிமாவாகிறது. கரவொலிகளும் ஈட்டுத் தொகையுமாய் இணைந்து மீள்கையில் கலைஞன் உயிர்த்து அடுத்த படைப்பை நோக்கிச் செல்கிறான்.
கமல்ஹாஸன் சிங்கீதம் சீனிவாசராவ் இருவருக்கும் இடையே நல்லதோர் கூட்டின் வலு இன்றளவும் தொடர்கிறது.முன்னவர் நடிகராகத் தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பெரிய முன் காலத்தில் பின்னவர் அறியப்பட்ட இயக்குனராகத் திகழ்ந்தவர் தான். இருவருமாய் இணைந்தளித்த பல படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாக இன்றளவும் நிலைக்கின்றன. ராஜபார்வை தொடங்கி மும்பை எக்ஸ்பிரஸ் வரைக்கும் கமல் படங்களின் வரிசையில் மிளிர்பவை சிங்கீதம் எடுத்தளித்தவை.
அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். திரைக்கதையைக் கமல்ஹாசன் அளிக்க வசனம் எழுதியவர் க்ரேஸி மோகன்.ஒளிப்பதிவு பிசி.ஸ்ரீராம்.எடிட்டிங் லெனின் விஜயன் நடித்தது கௌதமி ரூபிணி ஸ்ரீவித்யா மனோரமா நாஸர் நாகேஷ் ஜெய்சங்கர் டெல்லிகணேஷ் மௌலி ஆனந்த் ஆகியோர்
மூன்றுவேடப் படம். அப்பா கமல்ஹாஸன் சேதுபதி நியாய போலீஸ்.வில்லன்கள் கொல்கின்றனர்.அம்மா ஸ்ரீவித்யாவுக்கு விஷம் கொடுக்கின்றனர். இரட்டை மகன்களில் ஒருவன் ராஜா.இன்னொருவன் அப்பு விஷம் தரப்பட்டதால் உயரம் குன்றிப் பிறக்கும் பிள்ளை. ராஜாவை மனோரமா எடுத்து வளர்க்க ஸ்ரீவித்யாவோடு அப்பு மட்டும் ஒரு சர்க்கஸ் குழுவில் சேர்ந்து வாழ்கிறார்கள்.நால்வரில் ஒருவரான ஜெய்சங்கரின் மகளுக்கும் மெகானிக் ராஜாவுக்கும் காதல். நாலு பேரும் ஒவ்வொருவராகக் கொல்லப்பட உருவப் பிழை காரணமாக அத்தனை பழியும் அப்புவுக்குப் பதில் ராஜா மீது விழுகிறது. நாலாவது நபரான மெயின் வில்லன் நாகேஷை ராஜா முன்னிலையிலேயே கொன்றுவிட்டு கைதாகிறான் அப்பு.சுபம்.
பழிவாங்கும் கதை தான். சொன்ன விதமும் அடுத்தடுத்த கதை நகர்வுகளும் ரசிக்க வைத்தன. ராஜா கமலை காதலிக்கும் கௌதமிக்கும் கமலுக்கும் இடையிலான காட்சிகள் உலர் நகைச்சுவையின் தோரணமாக அமைந்தன என்றால் அப்பு கமல் சர்க்கஸ் முதலாளி மௌலி இருவருக்கும் இடையே நிகழ்பவை எல்லாம் ஆழமாய்ச் செருகின. கிடைக்கிற இடத்திலெல்லாம் சிக்சர் செய்தார் க்ரேஸி மோகன். நாகேஷ் டெல்லி கணேஷ் உள்ளிட்ட அனுபவஸ்தர்களுக்குக் கிடைத்த சின்னஞ்சிறு வசனங்கள் காண்போரை நகைக்கவைத்தன.
ஸ்ரீவித்யா மற்றும் அப்பு கமல் இருவரின் உலகமும் ராஜா மற்றும் மனோரமா இருவரின் உலகமும் தனித்தனி இழைகளாக அடுத்தடுத்து பயணித்து ஒற்றை முடிவு நோக்கி விரைந்தன. மேற்சொன்ன உலர்தன்மையோடு ராஜாவின் உலகம் இருந்தது என்றால் ஆழச்செருகலாய் அப்புவின் உலகம் அமைந்தது.அப்புவுக்கும் மௌலி மகள் ரூபிணிக்கும் இடையே ஏற்படுகிற மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் கொஞ்சம் தப்பினாலும் படமே கிழிந்திருக்கும். அதை கெட்டிக்காரத் தனமாக மாற்றியது கமலின் சாகசம்.
‘என்னடா இது?’ ‘இதாங்க ராஜா…’ ‘பாதிதான் இருக்கு மீதி எங்கடா!’ என்பது போன்ற இடங்களில் ஹாஸ்ய நாகேஷூக்காக பொறுத்தருளப் பட்டார் வில்லநாகேஷ்.
இன்ஸ்பெக்டராக வரும் ஜனகராஜூக்கும் கான்ஸ்டபிள் ஆர்.எஸ்.சிவாஜிக்கும் இடையிலான பந்தம் சிரிப்புவெடிகளின் மேல் விழுந்த தீப்பந்தமாகவே அதகளம் செய்தது. அதிகாரம் நிறுவனம் ஆகியவற்றில் காணப்படுகிற போலிப் போற்றுதல்களின் குறியீடெனவே ஆர்.எஸ் சிவாஜி அடிக்கடி உதிர்க்கும் ஸார் நீங்க எங்கயோ போயிட்டீங்க என்ற ஜோக் இன்றளவும் தொடர்கிறது.
வாலி தன் எழுத்து வாழ்வில் எத்தனையோ உயரசிகரங்களைப் பார்த்தவர் என்றாலும் இந்தப் படத்தில் இடம்பெறக் கூடிய உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் பாடல் அவருடைய பேனாவால் அவர்தொட்ட மகத்தான உச்சம். இளையராஜாவின் இசை பின்னணியின் மூலமாகவும் பாடல்கள் வழியாகவும் பெரிய கொண்டாட்டத்தை அர்த்தப் படுத்திற்று.
தன் கால்களை மடித்துக் கொண்டு அப்பு கமலாகத் தோன்றுவதற்கு கமல் முன்வைத்த உழைப்பும் மெனக்கெடலும் ஒரு நடிகர் தன் மெய்வருத்திச் செய்த படங்களின் வரிசையில் இதனை இருத்திற்று.
அபூர்வ சகோதரர்கள் செய்நேர்த்திக்காகக் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய எத்தனம்.