அவருக்குக் கசகசவென்றிருக்கிறது
பெருந்தாடியை குறைக்கவும்
நீள்முடியை மழிக்கவும்
முடிதிருத்தகத்துக்கு
வருகை தருகிறார்
முடிதிருத்தும் கலைஞருக்கு
பெருமை பிடிபடவில்லை
இவ்வாய்ப்புக்காய் நன்றி கூறி
கத்திரிக்கோலை கையிலெடுக்கும்
கலைஞருடைய கரங்களின்
நூற்றாண்டு லாவகத்தை
வியக்கிறார் அவர்
வியப்பு தீர்வதற்குள்
தாடி குறைக்கப்பட்டு விடுகிறது
சிகைமழிந்த தன் உருவத்தை
நிலைக்கண்ணாடியில் பார்த்து
உதட்டைப் பிதுக்குகிறார்
முடிதிருத்தும் கலைஞர்
தன் வெள்ளைத் தொப்பியை அவருக்குப் பரிசளிக்கிறார்
அதை அணியும் அவருக்கு
தன்னையே அடையாளம் தெரியவில்லை
திருப்தியோடு வெளியேறும் அவரை நோக்கி வருகிறது ஒரு கும்பல்
அதிலொருவன் அவர் பெயரைக் கேட்கிறான்.
சன்னமாய் தன் பெயரைச் சொல்கிறார்.
இன்னொருவன் மேலும்கீழும் பார்த்து
பிறந்த ஊரைக் கேட்கிறான்
சொந்த ஊரின் பெயரைச் சொல்கிறார்
‘அது எங்குள்ளது?
‘இப்பூவுலகில்தான்’
‘ஆவணம் உள்ளதா?’
‘வரலாறே உள்ளது’
‘உளறாதே’
‘காலமே என் பிறப்பைவைத்துத்தான் கணக்கிடப்படுகிறது மகனே’
ரட்சிப்பின் முறுவலோடு விடைசொல்லும்
அவர்முன் வந்து ஒருவன் கேட்கிறான்
‘ நீ முசல்மான்தானே’
‘இல்லை’
‘பொய் சொல்லாதே…வெள்ளைத் தொப்பி, தாடி…’
மறுக்கிறார் அவர்
இப்பொழுது
கும்பல் அவரை மேலும் நெருங்கிவிடுகிறது
முதல் ஆயுதம் அவரை குறிபார்க்கும் நொடியில்
முடிதிருத்தக நாட்காட்டியின் தாள்
படபடத்துக் காட்டுகிறது
இன்று பெரியவெள்ளி என.
–