சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்-  19 & 20

19 ) சோற்றுக்காக

 நான் என்னைக் கருணை உள்ளவனாக பல காலமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பதால் அவ்வப்போது சிலருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன். சிறு சிறு உதவிகள். நான் போகும் வழியில் இருக்கும் ஒரு இரு சக்கர ஒர்க் ஷாப் இப்போது என்  நினைவுக்கு வந்தது, ஒரு நாள் நான் இந்தப் பக்கம் வந்தபோது என் வாகனம் பஞ்சராகி விட்டது. கடைக்காரரிடம் பஞ்சர் ஓட்ட வண்டியைக் கொடுத்தேன். அவருக்கு காலில் அடிபட்டுக்  கட்டுப் போட்டிருந்தார். நடக்க சிரமப்பட்டார்.

அவருடைய மகன் விருப்பமில்லாமல் அவருக்கு உதவி செய்து கொண்டிருந்தான் என்பது அவன்  முகத்திலேயே தெரிந்தது. பள்ளியில் படிப்பவன். இந்த வேலையில் அவனுக்கு  விருப்பமில்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் அவன் தந்தையிடம் இருந்த வெறுப்பும் அவனுடைய செய்கையில் தெரிந்தது. நான் அவனுடைய பெயரை கேட்டேன், ” சங்கர் ” என்றான். சிறுவர், சிறுமியர் துயரத்தைக் காண்பது என் மனநிலைப்படி மிகுந்த துயரத்தை தருவது. என் பால்ய காலத்தை அத்தகைய காட்சிகள் நினைவூட்டும். பஞ்சர் ஓட்டும் வேலை முடிந்தது. அந்த வேலைக்கான பணத்தை கொடுத்தேன். பின்  அந்தப் பையன் சங்கரிடம் நூறு ரூபாய் கொடுத்தேன். அவன் வாங்கிக் கொண்டான். நான் அந்தக் கடைக்காரரிடம் , இந்தப் பணத்தை அவன் விருப்பப்படி செலவு செய்து  மகிழ்ச்சியாக  இருக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டேன். அவர் தலையாட்டினார். சங்கர் முகத்தில் சிரிப்பு.. இப்போது நான் அந்தப் பக்கமாகப் போகிறேன்.

கடையில் அந்தப் பையன் மட்டும் இருந்தான்.இரு சக்கர  வேலைகளைத் தனியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். கடையில் அவனுடைய தந்தை புகைப்படம் மாட்டப்பட்டு மாலை போடப்பட்டிருந்தது.

20 ) உந்துசக்தி

என் எழுத்துக்கு உந்து சக்தியாக ஒரு பெண் இருக்கிறார். உடனே என்னிடம் நட்பாக உள்ள பெண் எழுத்தாளர்களைப் பற்றி யோசிக்காதீர்கள், அவள் எழுத்தாளரல்ல. கூட வேலை பார்த்தவரே அல்லது பார்ப்பவரோ இல்லை. குடும்பத்தைச் சேர்ந்தவரும் இல்லை. அவர் ஒரு பெண் என்பது மட்டும் நிச்சயம். எல்லா வெற்றிகரமான ஆண்களுக்குப் பின்னும்  ஒரு பெண் இருக்கிறாள் என்ற உளுத்துப்போன தத்துவத்திற்குள் நான் நுழைகிறேன்.  இந்தத் தத்துவம் அல்லது அபிப்ராயம் அல்லது பழகிப்போன சொல்வழக்கில் கற்பனைக்கு நிறைய இடம் உண்டு.அந்தப் பெண் அறிவாளியாகவும்  அழகியாகவும்  இருக்க வேண்டும் என்பது மட்டுமில்லாமல் சுவாரஸ்யமான உரையாடல்காரியாகவும் இருக்க வேண்டும் என்று நம்பி அந்தக் கற்பனை செல்கிறது.  இப்போது அந்தத் தத்துவம் பொய்யானது என்று சொல்கிறேன். பெண்களுக்குச் சிறப்பு செய்வதற்கான சொல்வழக்கு என்றும் சொல்கிறேன். அறிவாளியாகவும் அழகியாகவும் உரையாடல்காரியாகவும் இருப்பது  கேட்பவர்களின் கற்பனை சார்ந்தது.  ஆனால் அது வேறு விஷயம்.

நான் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது எனக்கு முன் ஒரு பெண் செல்வாள். அவள் வேகத்துக்கு என்னால் ஈடு  கொடுக்க முடியாது என்பதால் நான் பின்னால் செல்வேன் . அவளின் பின்புறத்தைப் பார்த்துக் கொண்டே செல்வேன். பின்னால் வரும் என்னை அவள் ஒன்றிரண்டு தடவை திரும்பிப் பார்ப்பாள். இப்போதைய என்னுடைய உந்துசக்தி அவள்தான்.