சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்-  33 & 34

33 ) இளவரசி கண்ட வாள் போர்

வீரமும் பெருந்தன்மையும் உடைய அரசனாகிய எனக்கு  நேர்ந்த சிக்கல்களைக் கூறுகிறேன். இந்திரதேசத்து இளவரசியை அடைவதற்கான வாள்  சண்டையில்  நான் அங்காரா தேசத்து அரசனுடன் மோத  வேண்டியிருந்தது. சண்டையில் ஒருவர்  மற்றவரைக் கொல்லக்கூடாது. லேசான காயம் ஏற்படலாம்.  ஒருவர் சண்டையின்போது விலகிக்  கொள்ளலாம். அவர் தோற்றவராகக் கருதப்படுவார். மற்றவர் வெற்றி பெற்றதாகக் கருதப்படுவார். ஒருவரைக் கீழே தள்ளி நெஞ்சில் கத்தியை வைப்பவர் வெற்றியைப் பெற்றவர் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தன. வெற்றி பெற்றவர் இளவரசியை அடையலாம். இளவரசி பேரழகியாக இருந்தாள். எனக்குப்  பெண்களின் அழகை வர்ணிக்கத் தெரியாது. இந்திர தேசத்து அரசனுக்கு அருகில் அவள் அமர்ந்திருந்தாள். அவர்கள் கொடுக்கும்  வாள்களை வைத்துத்தான் சண்டையிட வேண்டும். அந்த இளவரசி இருக்கையிலிருந்து எழுந்தாள் . எனக்கு அவளை அடையவேண்டும் என்ற வேட்கை ஏற்பட்டது. அவள் நடந்து வந்து ஒரு வாளை என் கையிலும் இன்னொரு வாளை அங்காரா தேசத்து அரசனிடமும் கொடுத்தாள் . மெல்லிய முகத்திரை அணிந்திருந்தாள். சண்டையிடத்  தெரியாத அந்த அரசனை சற்று நேரத்திலேயே பின்வாங்கச் செய்தேன். என்னுடைய பலமான அடியில் அவன் வாள் கீழே விழுந்தது. அந்த வாளை அவன் எடுக்க முடியாதபடி காலில் மிதித்து அந்த வாளையும் கையில் எடுத்துக் கொண்டேன். என் கையில் இரு வாள்கள். அந்த அழகான அரசன் தோல்வியை ஒப்புக்கொண்டான். எல்லோரும் பார்க்க அந்த இளவரசியை இந்திரதேசத்து அரசன் என் கையில் அவள் கையைச் சேர்த்து வைக்க வேண்டும். அரசன் எழுந்துவிட்டான். இளவரசி ஓடிப் போய் தோல்வி அடைந்த அந்த அழகான  அரசனின் அருகில் சென்று அவன்  கையைப் பற்றிக்கொண்டாள். எனக்கு அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்திரதேசத்து அரசன் கெஞ்சக் கெஞ்ச நான் அந்த இடத்தைவிட்டு அகன்றேன்.

அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததை அறிந்தேன். சில காலத்தில் அங்காரா தேசத்து அரசன் – அகந்தை  சீண்டப்பட்டிருந்தவன் – என் நாட்டின் மீது படை எடுத்து வந்தான். நான் போரில் அவன் தலையைக் கொய்தேன். அவன் படைகள் பின்வாங்கி ஓடின. சில காலத்தில் அந்த இளவரசி என் மீது படை எடுத்து வந்தாள். நான் அவளை சிறைப்  பிடித்தேன். அன்று வாள் போரில் நான் வெற்றி பெற்றதுதான் இவ்வளவுக்கும் காரணமா என்று கேட்டேன்.அவள்  என் காலில் விழுந்து   மன்னிப்புக் கேட்டாள் .நான் அவளை  மன்னித்துப் போகச் சொன்னேன்.சில காலம் கழித்து அவள் மீண்டும் படை எடுத்து வந்தாள். இந்த முறையும் அவளை சிறைப் பிடித்தேன். இந்த முறை நான் மன்னிப்பு வழங்கவில்லை. என் இரக்கமற்ற கைகளினால் அவளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

 

34 ) அவர்கள் சினிமாவிற்குச் செல்கிறார்கள்

மருமகளை மாமியார் சுந்தரி திட்டிக்கொண்டிருந்தாள். மருமகள் பெயர் கனகவல்லி. அவள் தரையில் உட்கார்ந்திருந்தாள். அவள் தலையில் தன் அம்மா கொண்டுவந்திருந்த சாணிக்கரைசலை அவள் கணவன் கந்தன்  ஊற்றினான். கனகவல்லி அசையாமல் உட்கார்ந்திருந்தாள் . அதை பார்த்து சுந்தரிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. விளக்குமாறை   எடுத்து வந்தாள். கந்தனிடம் கொடுத்து அடிக்கச் சொன்னாள். அவன் அந்த விளக்குமாறை  வாங்கி அடித்தான். அவள் கல் மாதிரி  உட்கார்ந்திருந்தாள். கந்தன் அடிப்பதை நிறுத்தினான். சாணிக்கரைசல் அவள்  தலையிலிருந்து  சொட்டி தரையில் விழுந்தது. கண்டபடி திட்டிவிட்டு இரண்டு வீடுகள் தள்ளியிருந்த தன்னுடைய வீட்டிற்கு சுந்தரி சென்றாள்.கனகவல்லியும் கந்தனும் மட்டும் இருந்தார்கள். சாணிக்கரைசல் வழியும் அவளை பார்க்கும்போது கந்தனுக்கு ஏதோ போலிருந்தது. இரக்கமற்ற காமம் கொண்ட அவன் வாசல் திண்ணைக்கு வந்தான். அவள் எழுந்து குளிப்பதற்காகப் பின்பக்கம் சென்றாள்.

 

சாயந்திரம் சுந்தரி திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். கனகவல்லியும் கந்தனும் வீட்டிலிருந்து இறங்கித் தெருவில் நடந்தார்கள். கனகவல்லி முகம் நிறையப்  பவுடர் போட்டிருந்தாள். சுந்தரியைப் பார்த்து ” நாங்க சினிமாவுக்குப் போயிட்டு வாரோம் ” என்றான் கந்தன். சுந்தரி மறு  பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அவர்கள் இருவரும் சினிமாவிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.