உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டி நாட்டிங்காம் மைதானத்தில் நேற்று (01.07.2019) நடந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக், ஜமான் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்துவந்த வீரர்களும் சரியாக ஆடாததால் பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களே எடுத்தது.

300 பந்துக்களுக்கு 106 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி பாகீஸ்தான் பவுலர்களை திணறிடத்தினர். தொடக்க வீரர் கிறிஸ் கெயிலின் அதிரடியான ஆட்டத்தால்  7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

மேலும் இந்தப் போட்டியில் 4 விக்கெட்களை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

போட்டிக்குப் பின் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்வி குறித்து கேப்டன் சர்ப்ராஸ் அஹமது கூறும்போது, ‘‘இங்கிலாந்தின் சூழலில் நாங்கள் டாஸை இழந்தால், விக்கெட்களையும் சேர்த்து இழக்க வேண்டிய சூழல் உள்ளது. எங்களால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முயன்றோம். பாகிஸ்தான் பேஸ்ட்மேன்கள் இன்று சிறப்பாக விளையாடவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் அணியினரின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பது கடினமாகத்தான் இருந்தது. ஷாட் பந்துகளை எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை. இன்று எங்களுக்கு மிகவும் மோசமான நாளாக அமைந்துள்ளது. அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்தில் பாகிஸ்தானுக்கு எப்போதும் ரசிகர்கள் ஆதரவு உள்ளது’’ என்றார்.

முன்னதாக நடைபெற்ற உலக கோப்பை முதல் போட்டியில் (30.05.2019) இங்கிலாந்து அணி 311 ரன்கள் எடுத்து சவுத் ஆப்ரிக்காவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது