ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீர்ரான பெடரர் நேற்று விளையாடிய ஆட்டத்தில் வென்றதன் மூலம் விம்பிள்டன் போட்டிகளில் தனது 100வது வெற்றியை பதிவுசெய்துள்ளார். 13வது முறையாக விம்பிள்டன் அரையிறுதிக்குள் நுழையும் பெடரர் 11 முறை விம்பிள்டன் இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்று 8 முறை தொடரைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை விம்பிள்டன் அரையிறுதியில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ரபேல் நடாலை மோத உள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு உள்ளனர்.

மேலும் இந்த விம்பிள்டன் வெற்றியின்மூலம் சுற்றுப்பயணங்களில் புல் தரையில் ஆடப்படும் ஆட்டங்களில் 186வது வெற்றியை பதிவுசெய்து ஜிம்மி கானர்ஸின் சாதனை முறியடித்துள்ளார்.

  • டென்னிஸில் க்ராண்ட் ஸ்லாம் (Grandslam) என்றழைக்கப்படும் பெருவெற்றித் தொடர்களில் ஆண்கள் பிரிவில் 45 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள ஒரே நபர்! 
  • ஆஸ்திரேலிய ஓப்பனில் 97 ஆட்டங்களில் வென்றுள்ள ஒரே வீரர்!
  • 400 க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர்!
  • க்ராண்ட்ஸ்லாம் ஆட்டங்களாகக் கருதப்படும் மற்ற ஆட்டங்களான அமெரிக்க ஓப்பனில் – 85 போட்டிகளிலும் ப்ரெஞ்சு ஓப்பனில் 70 போட்டிகளிலும் வென்றுள்ள ரோஜர், மொத்தம் 352 க்ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த ஒரே நபராகத் திகழ்கிறார்! 

37 வயதான ரோஜர் பெடரர் இதுவரை மொத்தம் 102 ஏ.டி.பி தொடர்களை வென்றுள்ளார். இந்த (2019) ஆண்டில் மட்டும் இதுவரை துபாய், மியாமி, ஹாலே என்று மூன்று ஏ.டி.பி தொடர்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.