கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பெலாகவி மாவட்டத்தில் உள்ள மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது குத்துச் சண்டை வீரரான நிஷான் மனோகர் கதம், தான் கலந்துகொள்ளவிருந்த குத்துச்சண்டைப் போட்டிக்காக வெள்ளத்தில் நீந்திச் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் மன்னூரைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் நிஷான் மனோகர் கதம் ஒரு குத்துச்சண்டை வீரர். இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நிஷான் மனோகர் கடந்த 7ஆம் தேதி புறப்படத் தயாரானார். ஆனால் கனமழையின் காரணமாகக் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
சாலைகளும் கடும் சேதம் அடைந்தன.இதனால் செய்வதறியாமல் திகைத்த நிஷானுக்கு அப்போது இருந்த ஒரே வழி வெள்ளத்தில் நீந்திச் சென்று சாலையை அடைவதுதான். இதையடுத்து நிஷான் மனோகரும் அவரது தந்தையும் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரத்தை நீச்சல் அடித்து 45 நிமிடங்களில் வெள்ள நீரைக் கடந்தனர்.
அதன் பின்னர் பெங்களூரு சென்று போட்டியில் கலந்துகொண்ட நிஷான் மனோகர் கதம் வெள்ளிப்பதக்கம் வென்றார்.இந்த வீரருக்குப் பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.