அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதேயான இந்திய தடகள வீராங்கணை ஹீமா தாஸ் கடந்த 19 நாட்களில் 5 போட்டிகளில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இவற்றில் 4 – 200மீ போட்டிகள் மற்றும் ஒரு 400மீ போட்டியும் அடக்கம்.

ஜூலை 2 ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். அதனை தொடர்ந்து போலாந்தின் குட்னோ தடகள போட்டி, கிளாட்னோவில் நடந்த கிளாட்னோ தடகள போட்டி , செக் குடியரசில் தபோர் அத்லெட்டிக் மீட் ஆகிய 200மீ ஓட்டப்பந்தயங்களிலும் செக் குடியரசு தலைநகரம் பிராக் (Prague) போட்டியில் 400 மீட்டடில் தங்கம் என 15 நாட்களுக்குள் ஐந்து தங்கம் வென்று அசத்தியுள்ளார் ஹீமா தாஸ்.

ஹீமா தாஸின் இந்த சாதனைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஹீமா தாஸ் வெற்றிபெற்ற போட்டிகளின் விபரம்:
200 மீட்டர் ஓட்டம்:
1) ஜூலை 2 – போலந்து ‘போஸ்னான் ’ தடகளம் – 23.65 விநாடிகள்.
2) ஜூலை 7 – போலந்து ‘குட்னோ’ தடகளம் – 23.97 விநாடிகள்.
3) ஜூலை 13 – செக் குடியரசு க்ளாட்னோ தடகளம் – 23.43 விநாடிகள்.
4) ஜூலை 17 – தாபோர் தடகளம் – 23.25 விநாடிகள்.
400 மீட்டர் ஓட்டம்:
5) ஜூலை 20 – நோவ் மெஸ்டோ நாட் மெட்டுஜி கிராண்ட் ப்ரிக்ஸ் (செக் குடியரசு) – 52.09 விநாடிகள்.

ஒலிம்பிக் தகுதிபெற வாய்ப்பு:

ஹீமா தாஸின் இந்த தொடர் வெற்றிகள் மூலம் 2020-ம் ஆண்டு டோக்கியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடருக்கு அவர் தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 மீட்டர் ஓட்டத்தை 22.80 விநாடிகளிலும், 400 மீட்டர் ஓட்டத்தை 51.35 விநாடிகளிலும் கடந்தால் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்ச்சி பெறுவார்.

திங் எக்ஸ்பிரஸ் – ஹீமா தாஸ்:

ஹீமா தாஸ் அசாம் மாநிலம் நவ்காவ் மாவட்டத்தில் உள்ள திங் நகரின் அருகிலுள்ள கண்டுலுரிமாரி என்ற சிறுகிராமத்தில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர் ஹீமா தாஸ். கவுஹாத்தியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது ஓட்டத்திறனைக் கண்டு வியந்த நிபுண் தாஸ் அவருக்கான பயிற்சி செலவுகளை முழுமையாக தானே ஏற்று ஹீமாதாஸைப் பயிற்றுவித்தார்.

2018 ஆசிய போட்டிகளில் 4 X 400மீ பெண்கள் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கமும் 400மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்றார். மேலும் 20 வயதுகுட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றுள்ளார். இவரது சாதனைகளைப் பாராட்டி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் HR அதிகாரியாக பணி வழங்கப்பட்டது. திங் நகரைச் சேர்ந்தவர் என்பதால் ஹீமாதாஸை செல்லமாக திங் எக்ஸ்பிரஸ் என்று பலரும் அழைக்கின்றனர்.

மேலும் அவரது சாதனைகளைக் கவுரவிக்கும்விதமாக இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

அசாமின் குரல்:

இதற்கிடையே அசாமில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் அம்மாநிலத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரண நிதியாக தனது சம்பளத்தில் பாதியைக் கொடுத்துள்ளார் ஹீமா தாஸ். மேலும் பெருநிறுவனங்களை நிதி வழங்குமாறு தனது ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.