கரோனா பரவல் உலகம் முழுவதற்கும் கடுமையான அச்சுறுத்தலாகவே உள்ளது. இதையடுத்து, அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலை படு பாதாளத்திற்குச் சென்றது. இந்த நிலையில் அனைத்து நாடுகளிலும் இறக்குமதி குறைந்துள்ளது. இதனால் எண்ணெய் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு 18 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதன் தொடர்ச்சியான இந்த விலை வீழ்ச்சியை தடுக்க கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இந்த நாடுகள் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள  செய்திகளால். இந்த வார பங்குச் சந்தை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் மற்றும் ஊரடங்கால் தனிமைபடுத்தப்பட்டுள்ள மக்களிடையே உண்டாகி வரும் விரக்தியின் காரணமாக  அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் வேலை வேண்டாம் என்று பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அரசு அமைப்புகளால் செயற்கையாக வேலையிழப்பு உருவாக்கப்படலாம் என்ற எண்ணத்தில் அங்குள்ள வேலை இழப்பு குறியீடு அதிகரித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் முதலாவது காலாண்டின் பொருளாதார மந்தநிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பரிதாப நிலையில் உள்ளன. சற்று ஆறுதல் தரும் படியாக இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் மட்டும் உயர்ந்து வருகிறது.

தேசிய அளவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்ட பிறகு சரக்குப் போக்குவரத்து, சேமிப்பு கிடங்கு, டிஜிட்டல் பொழுதுபோக்கு, மருந்துகள், மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் உள்ளிட்ட துறைகள் என்னென்ன துறைகள் உடனடியாக மீண்டெழும் என்ற கோணத்தில் இது சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் கடந்த வாரத்தின் கடைசி 3 நாள்களில் மட்டுமே ரூ.12 லட்சம் கோடி உயா்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த வாரம் வியாழக்கிழமை இறுதி வா்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை 500 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ 500 பட்டியலில் 186 நிறுவனப் பங்குகள் 13 முதல் 43 சதவீதம் வரை உயா்ந்து முதலீட்டாளா்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவா், சோழமண்டலம் இன்வெஸ்ட் மெண்ட்ஸ், மகேந்திரா அண்ட் மகேந்திரா, அசோகா பில்ட் கான், அவந்தி ஃபீல்ட்ஸ், ராஷ்ட்ரீய கெமிக்கல்ஸ், மாருதி சுஸுகி, ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட், குஜராத் மினரல்ஸ், தனுகா அக்ரோ டெக் உள்ளிட்டவை 30 முதல் 45 சதவீதம் வரை உயா்ந்து ஏற்றம் பெற்ற பட்டியலில் முன்னிலை வகித்தன

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக கடந்த வியாழக்கிழமை பெடரல் ரிசர்வ் வங்கி கூடுதலாக 2.3 டிரில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டங்களை அறிவித்தது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தை நாஷ்டாக்கில் உள்ள முக்கிய நிறுவனங்கள் தங்கள் நீண்டகால முதலீடுகளை சிறிய இழப்புடன் வெளிவர போதுமானதாக இருக்கும் என்று தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன‌.

இந்நிலையில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரூ.36 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் தங்கத்தின் கையிருப்பு 34 கோடி டாலா் சரிந்து 3,055 கோடி டாலராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை சார்ந்து முதலீடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகள் நிரந்தரமானது அல்ல என்று கணித்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் தற்போதைய சூழலில் வங்கிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் அதிகரித்துவரும் பொருளாதார மந்தநிலையால் இந்தியா மிக மோசமாக பாதிக்கும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.

தெற்கு ஆசிய பொருளாதார பாதிப்பு எனும் தலைப்பில் உலக வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான பொருளாதார வல்லுனர் ஹன்ஸ் டிம்பர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ‘’ இந்தியப் பொருளாதாரம் 2020-ம் ஆண்டு 5% வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில். 2021 ம் நிதியாண்டில் அது 2.8% ஆக வீழ்ச்சி அடையும்’’ என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2020-ஆம் ஆண்டில் 5.3 சதவீதமாக இருக்கும் என சா்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் குறைத்து மதிப்பிட்டுள்ளது கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019-20 நிதியாண்டில் வரி வருவாய் குறைந்ததால் கடந்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) அதிகபட்சமாக 3.3 சதவீதம் இருக்க வேண்டும் என்று  இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

கடந்த 2008ம் ஆண்டு உலக அளவில் பொருளாதார மந்தநிலை நிலவியபோது, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சி விகிதத்தில் சரியான திட்டமிடல் இருந்தைச் சுட்டிக் காட்டிய அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியா ஒரு வளரும் நாடு அல்ல, ஒரு வளர்ந்த நாடு என்றும் இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கும், உலக நாடுகளுக்கும் உதவும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் தலைகீழ் மாற்றத்திற்கு ஆளாகி உலக நாடுகளின் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.