இந்தியா போன்ற பெரும்  ஜனத்தொகைக் கொண்ட நாடுகளை இயக்குவது பொதுத் துறை நிறுவனங்கள். ஆனால், ‘மேக் இன் இந்தியா’ நாயகன்(?) மோடி ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. காரணம் எந்த ஒரு காட்சி  ஊடகமும் இந்த செய்தியை பெரிதாக வெளியிடுவதில்லை.

சுதந்திரநாள் தொட்டு   காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை தன் வேர்க்கால்களை அகலப்பரப்பி மக்களின் உயிரோடு கலந்துவிட்ட நிறுவனம் பி.எஸ்.என்.எல். ஒரு பி.எஸ்.என்.எல் தரை வழி பேசி வீட்டில் இருந்தால் அவன்தான் அந்த ஊருக்கே ராஜா. நம் தாத்தாக்களின் அப்பாக்களின் வீடு அத்தகையப் பெருமை வாய்ந்தது.

இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள், லட்சக்கணக்கான ஊழியர்களைக்கொண்ட மாபெரும் பொதுத்துறை நிறுவனம் பி.எஸ்.என்.எல்.அதன் இன்றைய நிலவரம் என்ன ?

சில மாதங்களுக்கு முன்பு தின இதழில் ஒரு செய்தி. ” மின் கட்டணம் செலுத்தாததால் சென்னை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது!”

இந்தச்செய்தியை நாம் மிக எளிதாக கடந்துவிட்டோம்.

ஒரு பக்கம் பிரதமர் மோடி ” மேக் இன் இந்தியா ” ” ஸ்டார்ட் அப் இந்தியா ” என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். ஆனால், முழுக்க முழுக்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம், அதுவும் தகவல் தொழில் நுட்பத்தின் தாயாகக்கருதப்படும் பி.எஸ்.என்.எல் கடந்த ஆறு ஆண்டுகளாக திட்டமிட்டுக் கொல்லப்படுவது ஏன் ?

என்றைக்கு ஜியோ வந்ததோ அன்னைக்கே பி.எஸ்.என்.எல் குறிவைக்கப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏற்கனவே பி.எஸ்.என்.எல்தான் முதன்மையானது. அதற்குப்பின் வந்த  ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் போன்ற நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துடன் நெட் ஒர்க் ஷேரிங் செய்தே தங்கள் நிறுவனங்களை நடத்துகின்றன. பல கோடிகள் செலவு செய்து ஒரு இடத்தில் டவர் அமைப்பதை விட ஏற்கனவே உள்ள பி.எஸ்.என்.எல் டவரில் அவர்களின் நெட் ஒர்க் கருவிகளைப் பொருத்திக்கொள்வார்கள். இதற்கு பி.எஸ்.என்.எல்க்கு கணிசமான வருமானமும் வரும். ரிலையன்ஸ் நிறுவனமும் பி.எஸ்.என்.எல்னின் ஷேரிங் பார்ட்னர்தான்.

பிரச்சனை எங்கு வந்தது என்றால்…லாபக் கணக்கில். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடத்துவது லாபம் எதிர்பார்க்கும் தொழில். பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனம் நடத்துவது சேவை. தொழிலுக்கும் சேவைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் ஆட்சியில் வந்து அமர்ந்ததால் வந்தக்குழப்பம் இது.

சம்பளம் தர முடியவில்லை, அலுவலக வாடகை தர முடியவில்லை, டவர் அமைக்க தங்கள் இடங்களை தந்த மக்களுக்கு பல மாதங்களாக வாடகைத்தர முடியவில்லை என்று மத்திய அரசிடம் பி.எஸ்.என்.எல்  உயர் அதிகாரிகள் பணம் கேட்டால், ‘ முடிந்தால் லாபத்துடன் நிறுவனத்தை நடத்துங்கள். இல்லையேல் கிளம்புங்கள் ‘ என்று பதில் வருகிறது.

இதற்குமேல் மத்திய அரசு உதவி செய்யாது என்ற நிலையில் நடைபெற்றப் பேச்சுவார்த்தையில் விருப்ப ஓய்வுத்திட்டம் அறிவிக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிகாரிகள் வெளியேறினர். வெளியேற்றப்பட்டனர்.

இந்தக்கொரோனா கால சூழலிலும் ஜியோ நிறுவனத்தால் தன் கணிசமான பங்குகளை முகநூல் நிறுவனத்திடம் விற்று லாபம் பார்க்க முடிகிறது. ஆனால் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் கிட்டத்தட்ட உயிரிழந்து விட்டது.

இந்த ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களை அழித்து ஜியோ போன்ற நிறுவனங்களை எப்படி வளர்த்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இரண்டு.

  1. நேற்று வந்த ஐடியா நிறுவனம் கூட 4 ஜியில் இயங்குகிறது. ஏர்டெல் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5 ஜி தொழில் நுட்பத்தை இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்ய உள்ளன.ஆனால், இந்தியாவின் இதயமான பி.எஸ்.என்.எல்லுக்கு இன்னும் முழுமையாக 4 ஜியே வழங்கப்படவில்லை. எப்படி அவர்களால் லாபம் காட்ட முடியும்?
  2. தன்னை பாரத மாதாவின் மூத்த மகனாக உலகுக்கு காட்டும் மேக் இன் இந்தியா புகழ் மோடி உண்மையில் என்ன செய்திருக்க வேண்டும்? நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைத் தானே முகநூல் நிறுவனத்துடன் இணைத்து காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால், ஜியோ நிறுவனம் தற்போது முகநூலுடன் இணைந்துவிட்டது. யாருக்கெல்லாம் முகநூல் மற்றும் வாட்சேப் கணக்கு உள்ளதோ அவர்கள் இனி ஜியோ சிம்கார்டு வாங்கியே ஆக வேண்டும்.

நாங்கள் பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் ஊழியர்கள் மத்திய அரசு தரும் தொகையை வாங்கிக்கொண்டு சாகும்வரை ஓய்வூதியம் பெறுவோம். தேவைப்பட்டால் தனியார் கைபேசி நிறுவனங்களில் நல்ல சம்பளத்துக்கு வேலைக்குப் போவோம்….பாவம் எங்களை நம்பி தங்கள் வீட்டின் மொட்டை மாடியை, வீட்டு மனையை, விளை நிலத்தை பி.எஸ்.என்.எல் டவர் அமைக்க  வாடகைக்கு தந்துள்ள ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதி?

வாடகை தரவில்லை என்றால் காலி செய்யுங்கள் என்று அவர்கள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் சொல்ல முடியுமா? பல கோடிகள் செலவு செய்து அமைக்கப்பட்ட டவர்களை அத்தனை எளிதாக பி.எஸ்.என்.எல்  கழற்றி விடுமா?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் டவர்களை அமைக்க மக்களிடம் போடும் ஒப்பந்தத்தை பார்த்தால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்.

“எதிர்பாரத விதமாக இந்த டவர் விழுந்துவிட்டால் அதற்கு எங்கள் நிறுவனம் பொறுப்பேற்காது. அது கடவுள் செயல்(Gods Act). இதனால் ஏற்படும் நட்டத்திற்கு எங்கள் நிறுவனம் பொறுப்பேற்காது.”

ஒப்பந்தம் முழுவதும் Gods Act தான்.

தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் டவர் அமைக்க இடம் தரும் வாடிக்கையாளர்களுக்கு பல லட்சம் முன் பணம் தருகின்றன. 25000 முதல் ஒரு லட்சம் வரை வாடகை தருகின்றன.

பி.எஸ்.என்.எல் முன் பணம் தராது. தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் நான்கில் ஒரு மடங்குதான் வாடகை தருகிறார்கள்.

மத்திய அரசு நிறுவனம் நேர்மையாக வாடகை தரும் என்ற ஒரே நம்பிக்கையில் பொது  மக்கள் தங்கள் வீடுகளை மனைகளை எங்கள் டவர்களுக்கு வாடகைக்கு தந்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு வருடமாக பி.எஸ்.என். எல்  அவர்களுக்கு வாடகை வழங்கவில்லை.

செல்வாக்கு மிக்க சிலர் மட்டுமே வாடகையை சண்டைப்போட்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை வாங்கிக்கொள்கின்றனர். 95 % வாடகைதாரர்கள் வாடகை கேட்டு கண்ணீர் விடுகின்றனர்

ஊழியர்களுக்கே  சம்பளம் தரவே பணமில்லாதபோது நாங்கள் எங்கிருந்து வாடகைத் தருவது?

ஒரு நாள் திடீரென்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் ஜியோவாக மாறும். ஆனால், தங்கள் இடங்களை டவர் அமைக்க வாடகைக்கு தந்துள்ள  அப்பாவி பொதுமக்களால் அந்த நிறுவனத்துடன்  இயங்க முடியுமா?