சமீபமாக ஒரு வலதுசாரி நண்பருடன் கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற மதக்கலவரங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், உளவியல் அச்சுறுத்தல் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தேன். உடனே அவர் காஷ்மீரத்து இஸ்லாமியர்கள் பூர்வகுடிகளான பண்டிட்டுகளை துரத்தி வெளியேற்றியது மட்டும் நியாயமா, ஏன் அவர்களின் குற்றங்களைப் பேசாமல் தவிர்க்கிறீர்கள், இது ஒரு அரசியல் பாசாங்கு அல்லவா என கொதிக்க ஆரம்பித்தார். இதை அடுத்து அவர் பாபர் மசூதி கட்டப்பட்ட வரலாற்றுக் காலத்துக்குள் சென்றார். ஏன் இஸ்லாமிய படையெடுப்பின்போது நடந்த இந்துக்கோயில் இடிப்புகளைப் பேசாமல் இருக்கிறீர்கள், இந்து மத வழிப்பாட்டுத் தலங்களை அழித்தால் அது தப்பல்ல, ஆனால் ஒரே ஒரு மசூதியை இந்துத்துவ ஆக்கிரமித்து அதை கோயிலாக மாற்ற முனைந்தால் ஒட்டுமொத்த முற்போக்காளர்களும் திரண்டு வந்து வலதுசாரிகளை தாக்குகிறீர்களே, இது பாசாங்கு அல்லவா என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார்.

நண்பர் படித்தவர், புத்திசாலி, மனிதநேயர் கூட. அவர் இப்படியெல்லாம் பொதுவாக உளறுபவர் அல்ல. சமகாலத்தில் நிகழ்ந்த ஒரு குற்றத்தை வரலாற்றில் எப்போதோ நடந்த சில சம்பவங்களைக் கொண்டு நியாயப்படுத்துபவர் அல்ல. ஆனால் தன் தரப்புக்கு நியாயம் தேட முயலும்போது அவருக்கு வலதுசாரி சிந்தனையாளர்கள் எனப்படுவோர் எடுத்து விளங்கும் அபத்தமான வாதங்களே உடனே கிடைக்கின்றன

இப்படி பேசுகிறவர்கள் (உளறுகிறவரக்ள்) இப்போது பெருகி வருகிறார்கள். இதற்கு தற்போதைய வலதுசாரி பாசிச அரசியலின் எழுச்சிதான் காரணமா?

இல்லை. எந்த ஒரு சிந்தனைத் தளமும் / உணர்வு அலையும் அப்படி ஒரு கட்சியின் பிரச்சாரக்கார்களால் தோற்றுவிக்கப்படுவதில்லை. இப்படி உளருகிறவர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நம் அருகிலேயேதான். ஆனால் நாம் தாம் அவர்களைக் கவனித்ததில்லை / பொருட்படுத்தியதில்லை. தர்க்க ஒழுங்குடன் பகுத்தறிவுடன் கவனமாக பொதுத்தளங்களில் பேசுவதே இங்கு ஊக்குவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு பத்தாண்டுகளில் இது முழுக்க மாறிவிட்டது. இன்று ஒரு பக்கம் தெளிவாக நேர்த்தியாக உரையாடுகிறவர்களும் இன்னொரு பக்கம் நேர்த்தியின்றி சான்றுகளின்றி தர்க்க ஒழுங்கின்றி பேசுகிறவர்கள், கத்துகிறவர்கள், உளறுகிறவர்கள் சரிக்கு சமமாய் நம் முன் தோன்றுகிறார்கள். இத்தனைக் காலமும் நம் சமூகத்தில் மக்கள் உளறுவதற்கு அளிக்கப்படாத வாய்ப்பு இப்போது அதிகமாகவே அளிக்கப்படுகிறது. இதற்கு பாஜகவின் மிகப்பெரிய எழுச்சி உதவியுள்ளது. இந்த வாய்ப்புக்காகவேதான் மக்கள் கடந்த இரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு பெரும் வெற்றிகளை அளித்துள்ளதோ என்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறது.

மக்கள் ஏன் உளற வேண்டும்? அதனால் அவர்களுக்கு கிடைப்பதுதான் என்ன?

இன்று நாம் வாழ்வது தெளிவானதாய் தோற்றமளிக்கும், ஆனால் செயற்கையாக ஒருங்கிணைக்கப்பட்ட, எந்திரத்தனமான வாழ்க்கை முறை. இதற்குப் பின்னால் எல்லாம் உடைந்து கலைந்து சிதைவுற்றுக் கிடக்கிறது. குடும்பம், சாதி அடுக்குமுறை, பொருளாதார படிநிலை, நம்பிக்கைகள், லட்சியங்கள் என அனைத்துமே. இந்த உடைவினால் சில அனுகூலங்களும் (பொருளாதார வளர்ச்சி, தனிமனித சுதந்திரம், பால் சமத்துவம்) சில பிரச்சனைகளும் (சாதி, மதக்கலவரங்கள், வலதுசாரி பாசிசம், பொருளாதார நெருக்கடி, விளிம்புநிலையினருக்கான நெருக்கடி) ஏற்பட்டுள்ளன. வாழ்க்கை என சொல்லப்படுவதும் வாழ்வதும் வேறுவேறு எனும் எண்ணம் மக்களுக்கு வலுவாக ஏற்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ளும் பொருட்டு மக்கள் என்ன செய்கிறார்கள்?

மக்கள் இன்று பிளவுபட்ட ஆளுமைகளுடன் செயல்படுகிறார்கள். ஒரு பக்கம் நன்மைக்காக கண்ணீர் சிந்துகிறார்கள், இன்னொரு பக்கம் எந்திரத்தனமாய் எதையும் கவனிக்காமல் வேலை செய்கிறார்கள், மற்றொரு பக்கம் இரு கூறாய் (சாதி, மதம், அரசியல் என) பிரிந்து சமூகவலைதளங்களில், ஊடகங்கள் வழி மோதுகிறார்கள்; மற்றொரு பக்கம் அவர்கள் முழுக்க முழுக்க பொழுதுபோக்குகளில் மூழ்குகிறார்கள்ஜல்லிக்கட்டு போராட்டத்தையே ஒரு ஜாலியான சுற்றுலாவாக ஒரு பக்கம் அவர்கள் மாற்றினார்கள்; போலீசால் அடிக்கப்பட்டு சுடப்பட்டு துரத்தப்படும்போது அதற்காக அழுதார்கள், மற்றொரு பக்கம் போலீசை போற்றவும் அவர்கள் தவற வில்லை. கணவன்மனைவி என இணைந்து வாழ்ந்தபடியே கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தாம்பத்ய நெறிகளை மீறினார்கள்; நூற்றுக்கணக்கான நண்பர்களை நாள்தோறும் ஏற்படுத்திக் கொண்டே யார் நிஜ நண்பர்கள் என குழம்பினார்கள். தம் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை சமூக வலைதளங்கள் வழங்கிய நிலையில் இத்தனைக்காலமாய் எதெல்லாம் நியாயம்அநியாயம், சரிதவறு என பாகுபடுத்தப்பட்டதோ அதையெல்லாம் கலைக்க தொடங்கினர். அப்படி கலைப்பதே தனிமனித அதிகாரம் என உணர்ந்து கொண்டனர். ஒரு கருத்து வைரலாகும்போது தாமும் அதையொட்டி சிந்திக்க பழகினர், ஆனால் அப்படி சிந்திப்பதில் எந்த சுதந்திரமும் இல்லை என உணர்ந்து, அதை தாம் உணரவே கூடாது என பயந்து அடுத்த வைரல் கருத்தின் பின்னால் பாய்ந்து ஓடினர். வேறெந்த காலகட்டத்திலும் இவ்வளவு விரைவில் இவ்வளவு மாற்றங்கள், கருத்துப்பரிமாற்றங்கள், முன்னுக்குப் பின்னான அரசியல் போக்குகள் பொதுத்தளத்தில் மோதியதில்லை.

மக்கள் குழம்பிப் போகிறார்கள். ஆனால் ஜாலியாகவும் இருக்கிறார்கள். இப்போது அவர்கள் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள்தெளிவாக கவனமாக பேசுவதைவிட உளறலாக முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதே ஜாலியானது, சுதந்திரமானது. ஆக அவர்களில் கணிசமானோர் உளறுவதை ஒரு தனிபாணியாக எடுத்துக் கொண்டார்கள். நாம் என்னதான் வலதுசாரி ‘சிந்தனையாளர்களின்’ உளறலைக் கேலி செய்தாலும் அவர்களுக்கு இன்று இணையத்திலும் வெளியிலும் கிடைக்கும் அபாரமான ஆதரவை மறுக்க முடியாது. “ஏன் இப்படி சிந்திக்கக் கூடாது? இது சரிதானே?” என மக்கள் இன்று நினைக்கத் தொடங்குகிறார்கள். உதாரணமாக ஒரு புது வண்டியை வாங்கியதும் நீங்கள் எலுமிச்சம் பழத்தை சக்கரத்தின் கீழே வைத்து நசுக்குகிறீர்கள். அதற்கு ஒரு குறியீட்டு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் அந்த பண்பாட்டுப் போக்கை நீங்கள் நவீன முற்போக்கு, விஞ்ஞான வாழ்வில் பின்பற்றுவதில்லை. நாம் இரு கூறாகப் பிரிந்து செயல்படுகிறோம். இப்போது ராஜ்நாத் சிங் ரபேல் விமானங்களுக்கு அதேபோல எலுமிச்சை நசுக்கி பூஜை செய்யும்போது இந்தக் குறிப்பிட்ட மக்கள்திரள் அதைப் பரவலாக ஆதரிக்கிறார்கள்; அதையே ஒரு பக்கம் கிண்டல் செய்யவும் அவர்கள் தவறவில்லை என்றாலும்கூட அது ஒரு அபத்தமாக அவர்களுக்குத் தோன்றாது. ஏனென்றால் வாழ்வின் உள்முரணை எதிர்கொள்ள சிறந்த வழி தடையின்றி உளறுவதே என அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் எலுமிச்சை நசுக்கி வழிபடுவதை ஏற்கிறார்கள் என இதற்குப் பொருளில்லை. ஏன் இதையும் ஆதரித்துபகுத்தறிவுவாத அதிகாரத்தைஎதிர்க்கக்கூடாது என நினைக்கிறார்கள்.

டி.வி விவாதங்களில் திருப்பதி நாராயணன் போன்றோர் ஆதாரமே இல்லாமல் எடுத்துவிடுவார்கள்; யாராவது சான்று கேட்டால்அதெல்லாம் இல்ல சார், நான் சொல்றது தான் சரிஎன கூலாக சொல்லுவார். ராகுல், ஸ்டாலின் போன்ற பெரிய தலைவர்களைப் பற்றி தயங்காமல்முட்டாள், துரோகி, உளவாளிஎன்றெல்லாம் சொல்லுவார். பாஜக ஆட்சியில் நடந்த நீட், ஜல்லிக்கட்டு சர்ச்சைகளின்போதுஇந்த திட்டங்கள், சட்டங்களை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தானே, பாஜக அல்லவேஎன்பார். ஆனால் இப்போது பாஜக இம்முடிவுகளை ஆதரிக்கிறதா எனும் கேள்விக்கு அவர் என்றுமே பதிலளிக்க மாட்டார். இதுகூட பரவாயில்லை அவரும் அவரைப் போன்ற வலதுசாரி ஆதரவாளர்களும் நம் டிவி சேனல்களில் பேசுவதைக் கேட்டால் தலையில் அடித்துக் கொண்டு அழத் தோன்றும். சமீபமாக மனுஷ்யபுத்திரன் ஒரு நேரலை விவாதத்தில் தன் கட்டுப்பாட்டை இழந்துநான் பொறுக்கிகளுடன் உரையாட விரும்பவில்லைஎனக் கூறிவிட்டார். அப்போதும் அந்த வலதுசாரி ஆதரவாளர் சிரித்த முகத்துடன் அதை ஏற்றுக்கொண்டார். ஏனென்றால் அது விமர்சனம் அல்ல, அப்படி அழைக்கப்படுவதை அவரைப் போன்றோர் விரும்புகிறார்கள். ஒரு நிதானமான ஆளை அசைத்துப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோஷம் இது. இந்த கோணங்கியான, உளறலான விவாதப் போக்கே இந்தியா பூரா பரப்பப்படுகிறது.

நான் முன்பு டிவி விவாதங்களில் திருப்பதி நாராயணனுடன் விவாதித்திருக்கிறேன், காரில் போகும் போது அவருடன் தனிப்பட்ட முறையில் பேசி இருக்கிறேன். டிவியில் வரும்போது அவர் உளறுவார் என்றாலும் நேரில் ரொம்ப தெளிவாகப் பேசுவார். அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்இந்தியாவில் உளற விரும்பும் ஒரு மக்கள் தொகைக்கு அவர் தன்னைப் பிரதிநிதியாக கருதுகிறார்.

பகுத்தறிவுக்கு எதிரான ஒரு கலாச்சார யுத்தம் இன்று நடந்து வருகிறது. அந்த தரப்பை பாஜக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இது புரியாததால்தான் நமக்கு இத்தகைய உளறல்கள் எரிச்சல் தருகின்றன. அமைதியான இடத்தில் விளையாடும் குழந்தைகள் பொருட்களை இட்டு உடைத்து கத்துவதைக் கண்டு பெரியவர்கள் கடுப்பாவதைப் போன்றது இது. இது இப்படித்தான் இருக்கும்!